முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய அணி எனும் நடமாடும் மருத்துவமனை



நடந்து கொண்டிருக்கும் இந்தியா-ஆஸி தொடரைப் போல் வேறெந்த தொடரிலும் இத்தனை வீரர்கள், அதுவும் ஒரு அணியில் இருந்து மிக அதிகமாக, காயம் காரணமாக விலகுவதை நான் பார்த்ததில்லை. அண்மையில் தென்னாப்பிரிக்க-இலங்கை டெஸ்ட் தொடரை ஓரளவு ஒப்பிடலாம் தான். ஆனால் இவ்வளவு பணமும் அதிகாரமும் படைத்த இந்திய கிரிக்கெட் வாரியத்தால் உடல்தகுதி கொண்ட ஒரு ஸ்குவாடை அனுப்ப முடியவில்லை என்பது வெட்கக்கேடானது. ஏன் இந்த அவல நிலை?


1) ஆஸி அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் கூறியிருப்பதைப் போல ஐ.பி.எல் தொடர் முடிந்த பின் இத்தொடர் ஆரம்பித்தது ஒரு காரணம். ஐ.பி.எல்லின் போது கூட ரோஹித் எப்படி ஒரு பலூன் போல இருந்தார் என நாம் பார்த்தோம் தானே. ரிஷப் பண்ட் இப்போதும் வீங்கித் தான் தெரிகிறார். சென்னை அணியின் வீரர்கள் ஏதோ அர்ஜுன ரணதுங்கே குளோன்களைப் போலத் தெரிந்தார்கள். களத்தடுப்பு அநேகமாய் எல்லா அணிகள் விசயத்திலும் மோசமாக இருந்தது. இதை ஒரு சமிக்ஞையாக எடுத்துக் கொண்டு இந்த ஆஸ்திரேலிய பயணத்தொடரை நாம் தள்ளிப் போட்டிருக்க வேண்டும். அல்லது நமது ரஞ்சிக் கோப்பை உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளை முதலில் நடத்தி, அதன் பிறகு வீரர்களின் உடற்தகுதியை சோதித்து விட்டு, அவர்கள் மேம்பட ஆறு மாதங்கள் அளித்து விட்டு ஐ.பி.எல் தொடரை இந்தியாவிலேயே நடத்தியிருக்கலாம். ஆனால் நமது வாரியத்தின் பண வெறியோ எந்த தொலைநோக்கு இல்லாமல் மோசமாய் திட்டமிட்டு சொதப்பிட காரணமாகியது.


2) நமக்கு முன்பே இங்கிலாந்து கிரிக்கெட் ஆட ஆரம்பித்திருந்தது. ஆனால் அவர்களுடைய வீரர்கள் நம்மவர்களைப் போல வாத்துக்கூட்டமாக இல்லை. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்த ஊரடங்கின் போதும் தம் உடற்தகுதியை தக்க வைக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களது பயிற்சியாளர்களும் தொடர்ந்து அவர்களை மேற்பார்வையில் வைத்திருந்தார்கள். இந்திய பயிற்சியாளர்கள் ஏதோ இணையம் வழியாக அறிவுறுத்துவதாக சொன்னார்கள். ஆனால் விராத் கோலி தன் மனைவியின் பந்து வீச்சைக் கொண்டு பயிற்சி எடுத்த அளவுக்குக் கூட மற்ற இந்திய வீரர்கள் எடுத்ததாகத் தெரியவில்லை (நிறைய வீரர்களுடைய மனைவிகள் கர்ப்பிணிகள் ஆனதைப் பார்க்கும் போது....) உடற்தகுதி என்பது முழுக்க வீரர்களின் சொந்த முயற்சியும் பொறுப்புமே என நமது கிரிக்கெட் வாரியம் கைவிட்ட நிலையில் விராத் கோலி மட்டுமே ஒழுக்கமும் பொறுப்பும் கொண்டு பயிற்சி எடுத்ததில் முதன்மையானவர். அடுத்து அஷ்வின் - அவர் எடையைக் குறைத்து உடலை வலுப்படுத்தினதாலேயே இந்த ஆஸி தொடரில் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே வழக்கம் போல காயப்படாமல் தொடர்ந்து ஆட முடிந்தது. அவரது பந்து வீச்சும் சிறப்பாக இருந்தது. அடுத்து ரவீந்திர ஜடேஜா எப்போதும் போல நல்ல தகுதியுடன் இருந்தார். அடுத்து ராகுலையும், நடராஜனையும் குறிப்பிடலாம். ஆக, இது பிரதானமாக நமது பயிற்சியாளர்கள் மற்றும் வாரிய நிர்வாகிகளின் தவறு தான். தொடர்ந்து எல்லா ஒருநாள், டெஸ்ட் போட்டிகளிலும் வீசி வருகிற ஆஸி வேக வீச்சாளர்கள் எப்படி உடற்தகுதியை இழக்காமல் ஆடுகிறார்கள் பாருங்கள்! உமேஷ் யாதவ், ஷாமி (அவருக்கு கைக்காயம் ஏற்படும் முன்பே முட்டியில் பிரச்சனை இருந்தது), செய்னி ஆகியோரை இவர்களுடன் ஒப்பிடுங்கள்.


3) விஹாரி, செயினி ஆகியோருக்கு ஏற்பட்ட ஹேம்ஸ்டிரிங் காயம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தீவிரமாக கிரிக்கெட் ஆடுவதனால் ஏற்பட்டதாக இருக்க வேண்டும். இதற்குப் பொறுப்பு நம் வாரியமே அன்றி வீரர்கள் அல்ல.


4) இத்தொடரில் நம் வீரர்கள் நிறைய கேட்சுகளை கோட்டை விட்டதைப் பார்த்தோம். இதற்கு முன்பு ஐ.பி.எல்லிலும் இதுவே நடந்தது. மோசமான உடற்தகுதி இருந்தால் உங்களால் களத்தில் துடிப்பாக இயங்கவோ தொடர்ந்து கவனம் செலுத்தவோ இயலாது.  


5) ஹர்த்திக் பாண்டியா பந்து வீசாத பட்சத்திலும் கூட டெஸ்ட் தொடரில் மட்டையாளராக மட்டும் ஆடுவதற்காக மிச்ச ஸ்குவாடுடன் தங்கியிருந்திருக்க வேண்டும். கோலி இந்தியாவுக்குத் திரும்பின பின்னர் அவர் நிச்சயமாக ஐந்தாவது / ஆறாவது எண்ணில் மட்டையாடியிருக்கலாம். ஏன் இதை முன்யோசனையுடன் நமது வாரியம் செய்யவில்லை? ஏன் இப்போது துவக்க வீரரான மயங்க் அகர்வாலை மத்திய வரிசையில் ஆட வைக்க வேண்டும்? ஹர்த்திக் நல்ல ஆட்டநிலையில் இருந்தார் எனும் போது இது ஒரு மோசமான முடிவாகவே தோன்றுகிறது. இது யாருடைய நிர்வாகத் தவறு? ஹர்த்திக்கே தன் குடும்பத்தை பார்ப்பதற்காக கேட்டு கொண்டாரா அல்லது பந்து வீசாத பட்சத்தில் அவரால் டெஸ்ட் அணியில் பலனில்லை என இவர்களே நினைத்தார்களா? தொடர்ந்து காயம் காரணமாய் வீரர்கள் வெளியேறும் தொடரில் ஒரு வீரரரை இப்படி திரும்ப அனுப்பியது ஒரு மோசமான முடிவே.


6) அடுத்த மாதம் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு தொடர் ஆட வருகிறது. அப்போது நம் அணியில் பும்ரா, ஜடேஜா, அஷ்வின், ஷாமி ஆடுவார்களா என்பது சந்தேகமே. இந்தியாவின் வெற்றி வாய்ப்பை இது நிச்சயமாக பாதிக்கும். இதனால் தான் பும்ராவை மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆட வைத்ததற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் நமது பயிற்சியாளர்கள் மீது செம கடுப்பில் இருப்பதாக ஒரு செய்தியைப் படித்தேன். எனக்கென்னவோ கோலி தன்னுடைய தனிப்பட்ட ஏமாற்றத்தை, கோபத்தை வாரிய நிர்வாகிகள் வழியாக வெளிப்படுத்தி இருக்கிறார் என் தோன்றுகிறது. அடுத்து கோலி இந்தியாவில் தலைமை வகிக்கும் போது இங்கிலாந்தை சுலபத்தில் தோற்கடித்து தன்னை ரஹானேவை விட சிறந்த தலைவர் என நிரூபிக்கும் ஆவேசத்துடன் இருப்பார். ஆனால் இலவு காத்த ‘குருமூர்த்தி’ போன்ற நிலையே அவருக்கு அப்போது ஏற்படும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...