முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அழிவை நோக்கி செல்லும் நாவலின் பாத்திரங்கள்




பாரிஸ் ரெவ்யூ Writers at Work எனும் ஒரு புத்தகத் தொடரை பிரசுரித்தது. எழுத்தாளர்களுடனான பேட்டி, அதிலும் குறிப்பாக எழுத்தாளனின் நடைமுறை, அன்றாட வாழ்க்கை, அவனது நம்பிக்கைகள், தொழில்நுட்பம், உளவியல் குறித்து பேசுகிற மிக சுவாரஸ்யமான விவாதங்கள். நம்மூரில் எடுக்கப்படுவது போலஉங்கள் இளமைக்காலம் பற்றி சொல்லுங்கள்வகையறா கேள்விகள் இருக்காது. நேற்று இத்தொடரின் முதல் பாகத்தில் போவெஸ்வா மொயக் (François Mauriac) எனும் புனைவாசிரியரின் பேட்டியைப் படித்தேன். இவரைப் பற்றி நாம் தமிழில் அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். ஆனாலும் பிரஞ்சு மொழியில் ஒரு முக்கிய படைப்பாளி. 1952இல் நோபல் பரிசைப் பெற்றவர்.  


1953 இந்த பேட்டி எடுக்கப்படுகிறது. இதன் பிற்பகுதியில் தான் சில ஆர்வமூட்டும் கருத்துக்கள் வருகின்றன. “ஐம்பதுகளில் பிரெஞ்சு இலக்கியத்தில் நாவலுக்கான இடம் குறைந்து வருகிறதே, இதற்கு அப்போதுள்ள அரசியல், சமூக நிலையில் உள்ள கொந்தளிப்புகள் (அல்ஜீரியா சார்ந்து) ஒரு காரணமா? அதாவது மக்கள் அப்போது அரசியல், தத்துவக் கருத்துக்களை விவாதிப்பதில் அதிக ஆர்வம் கொள்ளுகிறார்களா, அது நாவலுக்கான முக்கியத்துவத்தை குறைக்கிறதா?” எனக் கேட்கிறார்கள். அதற்கு மொயெக்தற்சமயம் நாவல் பிரசுரம் அதிகமாகி உள்ளதேஎனச் சொல்கிறார். மாறாக, நாவல் இன்று ஒரு வேறுவகையான நெருக்கடியை எதிர்கொள்வதாக சொல்கிறார்.


 செவ்வியல் நாவல்களில் ஒரு பாத்திரத்துக்கு என ஒரு அடிப்படையான, நிரந்தரமான இயல்பு இருக்கும். அது பெரிதாக மாறுவதில்லை, ஆனால் அப்பாத்திரங்கள் இருக்கிற சூழல் மாறும், அது எதிர்கொள்ளும் சவால்களும், அச்சவால்களில் அது வெல்வதும் தோற்பதும் மாறும். (வந்தியத் தேவன்பொன்னியின் செல்வன்முடிகிற போதும் அதே வந்தியத் தேவன் தான்.) ஒரு தாமரைப் பூவை கற்பனை பண்ணுங்கள். அதை நீங்கள் ஒரு ஜாடியில் போட்டு வீட்டுக்குள் வைக்கலாம். தடாகத்தில் மிதக்க விடலாம். அதை சாக்கடை நீரில் போடலாம். குப்பைத் தொட்டியில் வீசலாம். தாமரை அப்போதும் தாமரையாக இருக்கும் (நான் அந்ததாமரையைசொல்ல வில்லை.) தாமரையின் அடிப்படையான குணநலன் அல்ல, அது எங்கு எப்படி இருக்கிறது என்பது மட்டுமே மாறுகின்றன. ஐரோப்பிய செவ்வியல் நாவல்களானஅன்னா கரெனினா”, “கரமசோவ் சகோதரர்களைஎடுத்துக் கொண்டு பார்த்தால் இது துலங்கும். இதனாலே அந்த காலத்தில் இப்பாத்திரங்கள் நீண்ட காலம் வாசகர்களின் மனத்தில் தங்கி இருந்தன. இப்பாத்திரங்களை சுவாசிக்க, உரையாட, செயல்பட அனுமதிக்கும் அவகாசமும், பொறுமையும், நம்பிக்கையும் அந்த கால வாசகர்களுக்கு இருந்தது; ஆனால் இன்றைய நவீன நாவலோ துவக்கத்தில் இருந்தே சீரழிகிற, ஒரு சூடத்தைப் போல காற்றில் கரைந்து போகும் பாத்திரங்களையே கொண்டிருக்கின்றன என்கிறார் மொயெக். இதற்கு பிரதான காரணமாக இன்றைய வாழ்வில் மக்களுக்கு சாராம்சமான உண்மைகளில், நிலைகளில், கடவுள் போன்ற கருத்துருக்களில் நம்பிக்கை இல்லாமல் ஆகி வருவதை மொயெக் குறிப்பிடுகிறார்


நவீன நாவலைப் பொறுத்தமட்டில் மொயெக் சொல்வது முழுக்க உண்மை என்றே சொல்லியாக வேண்டும். நவீன காலத்தில் ஏற்பட்ட ஏந்திரமயமாக்கல், அறிவியல் வளர்ச்சி, தனிமனிதவாதம், விழுமியங்களின் வீழ்ச்சி, மனிதநேயம் மீதான அவநம்பிக்கை, ஒட்டுமொத்தமாக மனிதனை ஒரு புள்ளியில் வகுத்து நிறுத்தி விட முடியாது எனும் பரவலான எண்ணம் ஆகியவை இந்த மனப்போக்கை ஏற்படுத்தி விட்டது. நவீன உளவியலின் பிதாமகரான பிராயிட மனிதனை ஆழ்மன, உபமனம், பிரக்ஞை மனம் என உடைந்து போன, எந்த இடத்திலும் தன்னை நிலைப்படுத்த முடியாதவனாகத் தான் சித்தரித்தார். அவன் மகத்தானதாக நினைத்து ஒன்றை செய்யும் போது அதன் பின்னால் மரண பிரக்ஞை, அடக்கப்பட்ட பாலியல் விழைவுகள், சமூக விலக்கம் குறித்த அச்சம் செயல்படுன்றன என்றார். இது மனிதன் வீழ்ந்தவன் எனும் எண்ணத்தை பரவலாக்கியது. இது புனைவிலக்கியத்தையும் பாதித்திட உளவியல் எதார்த்தவாதம் தோன்றுகிறது. மொயெக் இதற்கு உதாரணமாக காப்காவின் நாவல் பாத்திரங்களைக் குறிப்பிடுகிறார். இப்பாத்திரங்களை நாம் மனத்தில் நிறுத்தி சிந்திக்க முடியாது. அவர்கள் தெளிவான குணநலன் வரையறையோ, செயல்பாட்டு உறுதியோ அற்றவர்களாக, நிலையற்றவர்களாக இருக்கிறார்கள். இவ்வகை நாவல்கள் ஆரம்பிப்பதே அவர்களின் சரிவில், வீழ்ச்சியில், அழிவில் இருந்து தான். இது ஒரு ஐஸ்கட்டி மெல்ல மெல்ல கரைவதைப் போலாகி விடுகிறது. நீங்கள் உள்ளங்கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அது கரைந்து ஓடி விடும். தமிழில் பார்த்தோமானால் நவீன புனைவாசிரியர்களின் பலரது பாத்திரங்களுக்கும் இந்தஅழிகிறஇயல்பு உண்டு. நவீன நாவலாக இருப்பினும் நிறையவே செவ்வியல்தன்மை கொண்டது தி.ஜாவின் நாவல்கள். குறிப்பாக, “மோகமுள்”. இதன் யமுனா, பாபு ஆகியோர் நமது மனத்தில் தங்கியிருக்க ஒரு காரணம் தெளிவான உறுதியான வரைமுறை கொண்ட பாத்திரங்களாக அவர்கள் இருப்பது. இதே யமுனாவை அசோகமித்திரன் தனதுதண்ணீர்நாவலில் ஒரு நவீன பாத்திரமாக ஜமுனாவாக மாற்றியிருப்பார். அந்நாவலில் ஜமுனா அழிவின் விளிம்பில் இருந்து தான் துவங்குகிறாள். மெல்ல மெல்ல ஒரு ஐஸ் கட்டியாக கரைந்து கொண்டே இருக்கிறாள். நாவல் முடியும் போது தான் எதுவாக இருக்கிறோமோ அதுவாக இருப்பது, அன்றாடங்களின் இருப்பில் தன்னை அறிவதே தன் மீட்பு எனப் புரிந்து கொண்டு அவள் மீட்சியடைவாள். யமுனா அளவுக்கு ஜமுனா நம் மனத்தில் தங்காததற்கு காரணம் யமுனா கற்பனாவாதமான பாத்திரம் என்பது மட்டுமல்ல, அவள் இன்னும் நிலையான குணநலன் கொண்டவள் என்பதும் தான். பாத்திர அமைப்பில் இது முக்கியமான ஒரு வித்தியாசம்


தமிழ் நவீன நாவலாசிரியர்களான சு.ரா, ஜெயமோகன், (சற்றே பின்நவீன நாவலாசிரியருமான) எஸ்.ராமகிருஷ்ணன், இமையம், இன்றைய படைப்பாளிகளான லஷ்மி சரவணகுமார், ஜெ.பி சாணக்யா போன்ற பலரும் இதற்கு உதாரணங்களே. (சாரு, பா.வெங்கடேசன் போன்றவர்கள் இதே பாத்திரங்களின் அழிவை ஒரு கொண்டாட்டமாக மாற்றி விடுகிறார்கள்). ஜெயமோகனின் அநேகமாக எல்லா நாவல்களுக்கும் இது பொருந்தும். அவரது பிரதான பாத்திரங்கள் அன்றி, துணைப்பாத்திரங்களே நம் மனத்தில் அழுத்தமாய் பதிந்து தங்கி விடுவதற்கு அவை மட்டுமே செவ்வியல் தன்மையுடன், உறுதிப்பட்ட நிலையான குணநலன்களுடன் படைக்கப்படுகின்றன என்பதே காரணம். ஷோபாசக்தியின் பின்நவீனப் புனைவுகளிலும் இப்படி துணைப்பாத்திரங்கள் மட்டுமே செவ்வியல் தன்மையுடன் உருவாக்கப்படுவதுண்டு (கொரில்லா, “இச்சாவில்வரும் பெத்தப்பா).


மொயெக் சொல்லுகிற இன்னொரு விசயம் இன்றைய உளவியல் எதார்த்த நாவல்களில் (அதாவது பெரும்பாலான நவீன நாவல்களில்) எழுத்தாளனின் குரல் வலுத்து ஒலிக்கிறது, இந்த குரலே அவனது பாத்திரமாகிறது, அதன் வசீகரத்துக்காகவே அவர்களைப் படிக்கிறோம் என்பது. (இதை நாம் எழுத்துப் பிரசங்கி ஜெயகாந்தன் பாணியிலான எழுத்து என புரிந்து கொள்ளக் கூடாது. இதை இன்னும் நுட்பமான அளவில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.) பெரும்பாலான நவீன நாவல்களில் பாத்திரங்களின் ஊடோட்டமாக எழுத்தாளனின் உணர்வுகள், எண்ணங்கள் வந்தே விடுகின்றன. இதுவே எழுத்தின் தொனியும் ஸ்டைலுமாக மாறி விடுகிறது. ஒரு கதையைப் படித்ததும் இது சு.ராவின், எஸ்.ராவின் மொழியல்லவா எனத் தோன்றுவது இதனால் தான். ரஷ்ய இலக்கியத்தில் இதன் மையம் நிச்சயமாக தஸ்தாவஸ்கி தான்


மொயெக் சொல்வதிலிருந்து ஓரிடத்தில் நான் மாறுபடுகிறேன் - செவ்வியல் படைப்பாளிகளின் தன்னியல்பான பாத்திரங்கள் கூட அக்காலத்தைய மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் ஆனது என அவர் சொல்லுகிறார். இது ஏற்புடையதல்ல. செவ்வியல் காலத்தில் மக்கள் எப்படி தம்மை கற்பித்துக் கொண்டார்களோ அதைப் பொறுத்ததே இது என நினைக்கிறேன். மனிதன் ஒரு காலத்தில் உறுதியானவனாகவும், அதன் பிறகு அவன் தன் சாரத்தை இழந்து ஒருநாள் வெற்றானவனாகவும் மாறி விடவில்லை. மனிதன் என்றுமே சாரமற்றவன் தான். அவன் தன்னை எப்படி கற்பிக்கிறான் என்பது மட்டும் காலங்காலமாக மாறி வந்துள்ளது.   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...