முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடவுளும் பேயும் ஏன் எதார்த்த உலகில் இல்லை?



இமானுவல் காண்ட் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு ஜெர்மானிய தத்துவவாதி. அவர் ஒரு விசயம் உண்மையில் இருப்பதற்கும் மீபொருண்மையாய், மனதளவில் இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன என விவாதித்திருக்கிறார். எளிதாக நேரடியாக சொல்வதென்றால், பார்க்க, தொட்டுணர, கேட்டுணர முடியாத கடவுளின் இருப்பை எப்படி உணர்கிறோம்? அந்த கால கிறுத்துவர்களுக்கு இது முக்கியமான கேள்வியாக இருந்தது. ஏனென்றால் அறிவியலின் எழுச்சி பல மத நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்கின. வாழ்க்கையை நடைமுறை சார்ந்து சித்தரிக்கும் கோட்பாடுகள் தத்துவத்திலேயே பிரசித்தம் பெற்றன. தேவாலயம் ஒரு பக்கம் பாவம், புண்ணியம், வானுலகம், தேவன் எனப் பேசிக்கொண்டிருந்தது; உலகம் அதற்கு நேர்கீழாக செயல்பட்டு வந்தது. இந்த இரண்டுக்குமான முரணை எதிர்கொள்வது அந்த கால தத்துவ சிந்தனையாளர்களுக்கு அவசியமாக இருந்தது. இமானுவல் காண்ட் நடப்பியல் தத்துவத்தின் பால் ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்டவர். ஆனால் மீபொருண்மை உலகையும் முழுக்க நிராகரிக்க முடியாது என நினைக்கிற அவர் அவை இருக்கின்றனவா இல்லையா எனக் கேட்காமல் அவற்றை எப்படி புரிந்து கொள்வது எனக் கேட்டார். என் கண்முன்னே ஒரு பூனை இருக்கிறது. அதை எப்படி அறிகிறேன்? 1) அதன் அசைவுகளைப் பார்த்து, 2) வருடிக் கொடுத்து, 3) அது ஏற்படுத்தும் சப்தங்களைக் கேட்டு, 4) சில நேரங்களில் அதன் வாசனையற்ற வாசனையை உணர்ந்து. ஆனால் இது மட்டும் அல்லதானே! பூனை என்றதுமே என் கண்முன், என் மனக்கண் முன், ஒரு பூனை தோன்றுகிறது. அது எப்படி? கற்பனையில் என்றால் அது எந்தளவுக்குக் கற்பனை, எந்தளவுக்கு எதார்த்தம்? பெருமளவு எதார்த்தமாகவே அது உள்ளது. யாரும் யானையைப் போல் ஒரு பூனையை நினைப்பதில்லையே. மனக்கண்ணில் தோன்றுவது ஒரு காட்சி எனில், புலன்களால் காணும் காட்சியில் இருந்து அது எப்படி வேறுபட்டிருக்கிறது? ஒரே விசயத்தில் - மனக்கண்ணில் வருகிறவற்றை பிரக்ஞையால் கட்டுப்படுத்த முடியும். புலன் காட்சிகளில் ஒரு வெள்ளைப் பூனையை கறுப்புப் பூனையாக முடியாது. இன்னொரு பக்கம், புலன் காட்சிகளில் நம் மனக்கண்னின் தாக்கமும் உண்டு. பூனையே இல்லாத ஒரு உலகில் வேற்று கிரகத்தில் இருந்து ஒரு பூனை வந்து குதித்தால் அதை மனிதர்களால் பார்க்க முடியுமா? அப்படியே முடியாது. ஏற்கனவே உள்ள ஒரு மிருகத்தின் சாயலில் இந்த பூனையை வைத்து தான் பார்க்க முடியும் (ஏலியன்களைப் போல). இதில் இருந்து காண்ட் ஒரு புரிதலுக்கு வருகிறார் - மொழிக்குள் பல வார்ப்புருக்கள் (templates) உள்ளன. 


ஒரு குழந்தை முதன் முதலில் பூனையைப் பார்க்கும் போது அதை பூனை என்றல்ல எதுவோ என்று தான் புரிந்து கொள்கிறது. பின்னர் பெற்றோர், தாத்தா, பாட்டி அதை ‘பூனை’ என அறிமுகப்படுத்துகிறார்கள். அது அடுத்து பூனைக் காணொலிகளை, பூனைக் கதைகளை, பூனைச் சித்திரங்களை அறிய நேர்கிறது. ஒவ்வொன்றாக படிவங்களாக அது ஏற்கனவே அறிந்த பூனையுடன் சேர்ந்து கொள்கிறது. பிரக்ஞைக்கு சம்மந்தமில்லாத வார்ப்புருக்களும் உண்டு - பாலூட்டும் முலை. அதை எப்படி குழந்தை ஏற்கனவே அறிந்து வைத்திருக்கிறது? நமது நரம்பணுக்களில் இந்த மொழி வார்ப்புருக்கள் இருக்கின்றனவா? - இதை காண்ட் எவ்விதம் புரிந்து கொண்டார்? அவர் நமது மொழிக்குள் பல வார்ப்புருக்கள் உண்டு, அவை நம்மால் உருவாக்கப்பட்டிருக்க அவசியமில்லை என்றார். பேயை எடுத்துக் கொள்வோம். யாரும் பேயைப் பார்த்ததில்லை. ஆனால் எல்லாருக்கும் பேயைத் தெரியும். பேயைத் தெரிந்து கொள்ளும் முன்பே நமக்கு எப்படி பேயின் ஆதாரமான பேய் பயத்தைத் தெரியும்? இதுவும் நம் மொழியில் உள்ள ஒரு அனுபவ வார்ப்புருவாகவே இருக்க வேண்டும்.


இப்படி நமது புலனனுபவம், நமது மனக்கண் அனுபவம், நமது மொழியின் வார்ப்புருக்களால் முழுமையாக சாத்தியமாகும் கற்பனாதீத அனுபவங்கள் அத்தனையும் கிட்டத்தட்ட சமானமானவை என காண்ட் கருதுகிறார். புலனனுபவத்தின் சாயல் சிறிதாவது இருக்க வேண்டிய அனுபவங்கள் இவை. ஆனால் கடவுள் போன்ற ஒரு இருப்புக்கு, அறம் போன்ற லட்சியங்களுக்கு இந்த சாயல் தேவையில்லை எனும் முடிவுக்கு காண்ட் வந்து சேர்கிறார். 


அதாவது கடவுள் இருக்கிறார் என அவர் ஒப்புக் கொள்ளவில்லை, அதே நேரம் நடப்புலக அனுபவங்கள் தம்மளவில் சாராம்சமாக உண்மையானவை என்றும் சொல்லவில்லை. 


இங்கிருந்து Habib Haadi கற்பனைக்கும் புலனுணர்வு தோற்றங்களுக்குமான தொடர்பு பற்றி எழுதியுள்ளதைப் படியுங்கள்.


“நாகர்ஜுனரின் 4 நிலைகளில் முதன்மையாக கருத்தில் கொள்ளவேண்டியது பார்வை உணர் நிலை அல்லது பொருள் உணர் நிலை என்று நினைக்கிறேன். ஏனென்றால் பார்வை அல்லது பொருள் உணர்நிலை என்ற ஒன்று இருப்பதனாலேயே மீதமுள்ள காரண காரியத்தின் மீது நாட்டம் கொள்ளமுடிகிறது. புலனுணர்வின் பொருள் சார்ந்த அனுமானங்களை கொண்டு மட்டும் தானே இன்னது இருக்கிறது இல்லை என்று சொல்ல முடியும்? நாகர்ஜுனரையே கருத்தளவில் சாராம்சப்படுத்தி தான் புரிந்து கொள்ள முடியும். அதுவிருக்க, விவாதத்தின் போது மனக் காட்சி பற்றி பேசப்பட்டது. மிகவும் ஸ்வரசியாமாக இருந்தது. எனக்கு புரிந்த அளவில் மனதில் தோன்றும் காட்சிகளை பௌதீகமாக காணவே முடியாது. காண முடிந்ததுமில்லை. அது கனவாக இருக்கலாம். வினோதமான காட்சியாக இருக்கலாம். அல்லது (பவுதீகமாகவே உள்ள) நாளை நான் பல் துலக்கினால் எப்படி துலக்குவேன் எங்கு எந்த திசையில் நின்று எதை பரர்த்தபடி துலக்குவேன் என்ற காட்சிகூட மனதில் இருக்கும். ஆனால் நாளை பல் துலக்குவதையே வேறுமாதிரி செய்வேன் வேறுமாதிரி நிற்பேன். சாதாரணமான இந்த கற்பனை திட்டமிடலை யதார்த்தில் அச்சு அசலாக காண முடிந்ததில்லை. ஆனால், கண்ட காட்சிகளின் சில துண்டுகள் உள்ளன. உதாரணத்திற்கு பல் துலக்கும் பிரஷ், பேஸ்ட், பாத்ரூம், இதை வைத்து நினைத்ததை உரிய இடத்தில் செய்து விட்டோம் என்று சொல்லலாம். இதுபோல் தான் எல்லாவற்றிற்கும். கற்பனை யதார்த்தத்தில் இல்லை. ஆனால், இந்த கற்பனை(உணர்திறன்) நிலை மட்டும் தான் கண்ட பொருளின் அல்லது காணும் பொருளின் கருத்தாகவும் உள்ளது. பௌதீகமாக அல்ல?


ஒருமுறை என் அண்ணனிடம் பேசிக்கொண்டிருந்த போது  ஏதோவொரு விஷயத்தை குறித்து அச்சத்துடன் நாளை அது அசம்பாவிதமாக நடந்துவிடுமோ? என்று  சொன்னார். "நீங்கள் கற்பனை செய்வது மாதிரி அன்றாடம் செய்யும் பழக்கமான செயல்கள் கூட உங்கள் வாழ்க்கையில் நாளை வேறுமாதிரி நடக்கும்" நடப்பது வேறு என்னமோ! நாம கம்முன்னு பார்க்கலாம் என்று சொன்னேன்.”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...