முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சம்பத்தின் “இடைவெளி” - ஒரு உரையாடல்



வரும் ஞாயிறுக்கு அடுத்த ஞாயிறு பாலம் அமைப்பு நடத்தும் இணைய வழி உரையாடலில் பங்கேற்று பேசுகிறேன். அவர்கள் என்னிடம் உங்களுடைய அண்மையில் வெளியான நூல் பற்றிக் கூட பேசலாம் என்றார்கள். அது ரொம்ப அலுப்பாக இருக்கும் என்பதால் (எனக்கு புத்தகத்தை கூவி விற்கும் திறமை எல்லாம் இல்லை) மற்றொருவருடைய நூலைப் பற்றி பேசலாம் என முடிவெடுத்தேன். உடனடியாக மனத்தில் வந்து நின்றது சம்பத்தின் “இடைவெளி”.  


“இடைவெளி” தமிழில் வெகுவாக கொண்டாடப்பட்ட நாவல். இணையத்திலேயே நிறைய விமர்சனக் குறிப்புகளை காணக் கிடைக்கிறது. நிறைய பேர் சம்பத்துக்கு மரணம் என்பது ஒரு உளவியல் ஆட்கொள்ளலாக மாறியது, அதனால் அவர் நெருக்கடிக்கு ஆட்பட்டது பற்றி இக்குறிப்புகளில் பரவலாக பேசுகிறார்கள். ஆனால் எனக்கு முற்றிலும் மாறுபட்ட பார்வை ஒன்று - அது சம்பத்துக்கு மரணம் குறித்த சிந்தனை கடும் தவிப்பை தந்தாலும் அது அவனுக்கு மிகுந்த களிப்பை தந்தது என்பதே. மரணத்தை ஒரு கவித்துவமான கண்டுபிடிப்பாக இந்நாவல் முன்வைக்கிறது என்பதே.


நாவலில் சம்பத் தான் ஒரு கண்டுபிடிப்பை செய்ததாக சொல்லுகிறார். அது மரணம் என்பது ஒரு “இடைவெளி” என்பது. ஏன் மரணத்தை அப்படி உருவகிக்கிறார்? நான் இதைப் பற்றியே பேசலாம் என இருக்கிறேன். குறிப்பாக தத்துவார்த்த தளத்தில் வைத்து.


“இடைவெளியின்” மற்றொரு சிறப்பு தமிழில் - என்னுடைய வாசிப்பில் - இத்தகைய நாவலொன்று வேறில்லை என்பது. ஜெயமோகனின் “விஷ்ணுபுரம்” கூட வரலாற்று தொன்ம நாவலே அன்றி தத்துவ நாவல் அல்ல. ஆல்பர்ட் காமு, சார்த்தர போன்றவர்கள் தத்துவ நாவல் எழுதும் போது தமது தத்துவ கோட்பாட்டின் அடிப்படையில் எழுதினார்கள். ஆனால் சம்பத் இந்த தத்துவப் பயிற்சி பின்புலம் இல்லாமல், கவித்துவமான மன எழுச்சியால் மரணம் என்கிற உருவகத்தை எட்டித் தொட்டிருக்கிறார். அல்லது அப்படி ‘வெள்ளந்தியாக’ மரணத்தைப் பற்றி பேச முயன்று தான் தத்தளிப்பதாக சித்தரித்திருக்கிறார். 


ஆனால் நான் என் வாசிப்பில் தெளிவான ஒரு தத்துவ கட்டமைப்புக்குள் வைத்தே விவாதிக்கிறேன். அதற்கு எழுதும் குறிப்புகளையும் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் கொண்டு வாருங்கள். விவாதிப்போம்.


ஒருமுறை வாசித்துப் பார்க்க விரும்பும் நண்பர்களுக்காக: நாவலின் அச்சுப்பிரதி இப்போது வாங்கக் கிடைக்கிறது. மென்பிரதியும் ரொம்ப நாளாக சுற்றில் இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...