மாநிலத்தில் செயல்படும் சாமியார்களுக்கு என ஒரு தரமதிப்பீட்டுக் குழுவை ஏன் திமுக அரசு உருவாக்கக் கூடாது?
இக்குழுவானது சமூக செயல்பாட்டாளர்கள், ஒரு அரசு அதிகாரி, ஒரு தத்துவ அறிஞர் ஆகியோரால் உருவாக்கப்படலாம். இவர்களின் பரிந்துரையின் பேரில் ஒரு நுழைவுத் தேர்வை சாமியார்களுக்கு உருவாக்கலாம். காவி அணிகிற யாரும் இத்தேர்வை எழுதி சான்றிதழ் பெற வேண்டும். இத்தேர்வில் இந்திய, ஐரோப்பிய தத்துவக் கேள்விகளைக் கேட்கலாம். (ஏன் ஐரோப்பிய தத்துவத்தை கொண்டு வர வேண்டும் என்றால் இன்று சாமியார்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகிறார்கள்.) சரியான பதிலை டிக் செய்கிற முறை அல்லாமல், 50 மதிப்பெண்களுக்கு நீண்ட விடைகளை எழுதும் வகையில் அமைக்கலாம். 25 மதிப்பெண்களுக்கு ஒரு ஆய்வேட்டை சமர்ப்பிக்க வேண்டும். மிச்ச 25 மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வு. மொத்தமாய் 100 மதிப்பெண்கள். குறைந்தது 50 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே தேர்வாக முடியும்.
சான்றிதழ் இன்றி சாமியாராக பயில்வது 5 வருட சிறைத்தண்டனைக்குரிய குற்றம்.
அடுத்து, சான்றிதழை பதிவு செய்கிற சாமியார்களுக்கு என ஒரு மையப்படுத்தப்பட்ட வாரியம். இந்த சாமியார் மைய வாரியம் அறநிலையத் துறையின் கீழ் இயங்கலாம்.
இதன் மூலம் சாமியார்கள் அரசியல்வாதிகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என விதிமுறை இயற்றிட முடியும். அவர்களுக்கு வருகிற நிதியை சோதிக்க முடியும். முக்கியமாக, சிறு குழந்தைகளை ஆசிரமத்தில் சேர்ப்பதை தடை செய்யலாம். சாமியார்கள் பற்றின புகார்களை தெரிவிக்க ஒரு குறைதீர்ப்பு குழுவை உருவாக்க முடியும்.
இதன் முக்கிய நோக்கம் இந்து மதத்தின் தத்துவங்கள் குறித்த எந்த பயிற்சியும் இன்றி ஒருநாள் தன்னை துறவி என அறிவித்துக் கொண்டு, ஏற்கனவே பொதுத்தளத்தில் உள்ள தகவல்களை தமக்கு ஏற்ப மாற்றி பிரச்சாரம் செய்கிற போலிகளை களையெடுப்பதும், குற்றவாளிகள் காஷாயத்தின் பின்னால் ஒளிந்து கொள்வதைத் தடுப்பதுமே. ஓஷோ போன்ற ஒருவர் மோசமான நடத்தைகளைக் கொண்டிருந்தாலும் அவருடைய சிந்தனைகள் இன்றும் மக்களுக்கு பயன்படுகின்றன. ஆனால் அவருக்கு அடுத்து வந்த பல சுதந்திர சாமியார்களுக்கு அந்த தகுதி இல்லை. ஊரை ஏமாற்றுவதை அன்றி அவர்களுக்கு வேறெந்த நோக்கமும் இல்லை.
1) சாமியார்களின் பணி கூட்டம் சேர்த்து ஒரு மதத்தின் தத்துவங்ளை மக்களுக்கு பயிற்றுவிப்பதாக இருக்க வேண்டும். வித்தை காட்டுவது, அதிசயங்களை நிகழ்த்துவது, சொஸ்தப்படுத்துவது அல்ல. ஏனென்றால் அவை ஜெப்படி வித்தைகள் மட்டுமே. ஒருவர் 9-6 ரியல் எஸ்டேட் முகவராகவும் மாலையில் சாமியாராகவும் இருப்பது சரி அல்ல. முழுநேர சாமியாராக அதன் அறிவுத் தகுதியுடன் ஒழுக்கத்துடன் இருக்கட்டும்.
2) சாமியார்கள் மணமுடிப்பதுடனும் எனக்கு உடன்பாடில்லை. மனித மனம் ஒரு குரங்கு. அல்லது ஒன்றை பத்தாகக் காட்டும் கண்ணாடி. விலகி இருப்பதே மனித மனத்துக்கு ஓர்நிலையைத் தரும். ஆண் சாமியார்கள் பெண்களை சந்திப்பதை அறவே தவிர்க்க வேண்டும். பெண் பக்தையர் பெண் சாமியார்களிடம் செல்லட்டும். அதுவே ஆரோக்கியமானது. தற்பால் ஆர்வலராக இருப்போருக்கு இந்த விதிமுறைகள் மாற்றப்பட வேண்டும் (அமிர்தானந்த மயியைப் போல).
3) அடுத்து சாமியார்கள் வாரம் ஒருநாள் ஒருமுறை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும் (மாதத்துக்கு 4 முறைகள், வருடத்திற்கு 48 முறைகள் மட்டுமே உணவு). ஏனென்றால் மூன்று வேளை உணவு அவர்களை சோர்வடைய செய்வதுடன் நோய்களை உண்டுபண்ணி, இச்சைகளைத் தூண்டும். குறைவான உணவுடன் வாழும் போது அளப்பரிய ஆற்றலும் மனக்கூர்மையும் இருக்கும்.
4) அந்த வாரம் ஒருமுறை உணவையும் அவர்கள் இரந்து மட்டுமே பெற வேண்டும். மொட்டையடிக்க வேண்டும். விலையுயர்ந்த ஆடைகள் அணியக் கூடாது. பைக், கார், பேருந்து, விமானத்தில் பயணிக்கக் கூடாது. நடந்தோ சைக்கிளிலோ செல்லலாம்.
5) சிறுபான்மை மதங்களில் உள்ள இத்தகைய சுதந்திர சாமியார்கள், போதகர்களுக்கும் இத்தகைய சட்டங்களும் வாரியங்களும் வகுக்கப்பட வேண்டும்.
உங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் எழுதுங்கள்!



கருத்துகள்