முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹைடெக்கரின் அறம் என்ன?



இன்றைய கிளப் ஹவுஸ் (சொல்லக) உரையாடலில் மைக்கேல் இன்வுட் எழுதிய Heidegger: A Very Short Introduction நூலில் இருந்து முதல் இரு அத்தியாயங்களைப் படித்து விவாதித்தோம். சிமியும், வின்சுவும் ஹைடெக்கரின் நாஜிக் கட்சி ஆதரவைப் பற்றி கேட்டனர். ஹைடெக்கர் ஏன் ஹிட்லரின் இனவாதத்தை ஆதரித்தார் என்பது இன்றும் பூடகமாக உள்ள ஒரு சங்கதி - ஹைடெக்கர் இதைப் பற்றி இறுதி வரை வாய் திறக்கவில்லை என நினைக்கிறேன். ஆனால் ஹைடெக்கருக்கு நாஜி கொள்கை, ஆட்சி மீது ஏமாற்றம் இருந்ததாக, ஹிட்லர் ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் அவர் அதில் இருந்து விலகி இருக்க விரும்பியதாகத் தெரிகிறது. ஆனால் என்ன குறிப்பாக நினைத்தார், தன் அரசியல் தொடர்பு குறித்து குற்றவுணர்வு கொண்டாரா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. நானும் ஆயுஷும் ஒரு குறிப்பிட்ட பார்வையை வைத்தோம் -


 நவீன வாழ்க்கையின் மிதமிஞ்சிய நுகர்வுப்பண்பாடு, மரபில், இயற்கையில் இருந்து துண்டிக்கப்பட்ட தனிமனிதவாதம், எந்திரத்தனமான வாழ்வு ஆகியவை மீது ஹைடெக்கருக்கு ஏமாற்றமும் அவநம்பிக்கையும் இருந்தது. தொழில்நுட்பம் என்பதை ஹைடெக்கர் ஒருவித நவீன இடையூறாகக் கண்டார் - வாழ்க்கையின் சடங்குகள், நடைமுறைகள், சமூக பரிவர்த்தனைகள் நாம் இந்த உலகுடன் இயல்பாக உறவாடுவதற்காக தடையாக உள்ளன என்று கருதிய அவர் அவற்றையும் “தொழில்நுட்பம்” என்றே அழைத்தார் (இது லக்கானில் வரும் symbolic orderஐ போன்றது). ஒருவேளை இது பழமைவாதத்தை கொண்டாடிய நாஜி சித்தாந்தத்தின் முன்நவீனப் போக்கை நோக்கி அவர் ஈர்க்கப்பட காரணமாகியதா? அறியோம்? இது ஒரு ஊகம் மட்டுமே, ஆனால் ஹைடெக்கரை வாசிக்கையில் இத்தகைய ஊகங்கள் மட்டுமே அவருடைய அரசியல் கருத்தியலை அறிய நமக்கு உதவக் கூடும் என நான் கூறினேன்.

 ஹைடெக்கரின் தத்துவத்தில் ஏதாவது அடிப்படையான பிழை இருந்ததா? அல்லாவிடில் அவர் ஏன் நாஜி சித்தாந்தத்தை ஏற்றிருக்க வேண்டும் என வின்சு கேட்டார். இதற்கு ஆம் என சுலபத்தில் சொல்லி விடவும் முடியாது - ஒரு பிரச்சனை ஹைடெக்கரின் தத்துவ நோக்கானது ஹிட்லரின் நாஜி கருத்தியலை விட பல மடங்கு ஆழமானது என்பது. ஹிட்லரின் பரப்பியல் கருத்துக்களை அப்படியே ஹைடெக்கர் ஏற்றுக் கொண்டார் என சொல்ல முடியாது தானே? ஆயுஷ் இதைப் பற்றி பேசும் போது ஹைடெக்கரின் தத்துவத்தில் அக்கறை (care) என்பது ஒரு முக்கியமான கருதுகோள் என்றார் - இந்த உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும், உயிரும் மனிதனுக்கு முக்கியமானவையே. அப்படி உணர்வதனால் மட்டுமே அவனால் இருத்தலை அறிய முடிகிறது என்கிறார் ஹைடெக்கர். ஒருவர் சாலையில் நடந்து செல்லும் போது அங்கு பாவப்பட்டிருக்கும் ஒவ்வொரு சரளைக் கல்லும் அவனுக்கு தன் உடல் அளவுக்கு முக்கியமானது. அரசியலும் சுயநலமும் பயமும் கவலையும் இல்லாத நிலையிலே ஒரு மனிதன் தன்னை ஒரு இருப்பை உணரும் பிரகிருதியாக உலகில் முன்வைக்கிறான்; அப்போது அவனுலகில் படிநிலைகள் இல்லை. அதிகாரம் இல்லை. அதனாலே ஒரு மரமும் ஒரு மனிதனும் ஒன்றே என ஹைடெக்கர் நினைக்கிறார். மனிதனும் மரமும் பயன் மதிப்பளவில் வேறு வேறு என நம்மை நம்ப வைப்பது முதலாளித்துவம். மரத்திற்கு மனிதனைப் போல அறிவோ பிரக்ஞையோ வலி உணரும் திறனோ இல்லை என மதிப்பிடுவதே அறிவியல். இரண்டையும் ஹைடெக்கர் தொழில்நுட்பம் என சாடுகிறார். உயிருள்ள, உயிரற்ற பொருட்களை சமமாக பாவிக்கும் ஹைடெக்கரைப் போன்ற ஒரு தத்துவ ஞானியால் எப்படி யூதர்களை அஃறிணை என கருதியிருக்க முடியும், அவர்களுடைய இனப்படுகொலையை ஆதரித்திருக்க என ஆயுஷ் எழுப்பிய கேள்வி முக்கியமானது.

அவரைப் படிக்கும் தோறெல்லாம் அவர் அப்படி செய்திருக்க மாட்டார் என்றே நம்பத் தோன்றுகிறது.

நாளை Being, Dasein எனும் அத்தியாயங்கள் 3 மற்றும் 4ஐ வாசிக்கப் போகிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...