டிரெண்ட் பிரிட்ஜில் நடக்கும் இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரைப் பார்க்கையில் என்னை ஆச்சரியப்படுத்தும் அம்சம் இங்கிலாந்து ஆதரவு பார்வையாளர்களின் வயது - 60 சதவீதத்துக்கு மேல் வயசாளிகள். மிச்ச ஆட்கள் நாற்பது வயதுக்கு மேலானவர்கள். இதுவே இந்திய பார்வையாளர்கள் என்றால் பெரும்பாலும் 40 வயதுக்குக் கீழானவர்கள். ஆனால் இங்கிலாந்தில் நடக்கும் டி-20 போட்டிகளில் நிறைய இளைஞர்கள் அரங்குக்கு வந்து வண்ணமயமாக குதூலகமாக இருப்பதை காண்கிறேன். டெஸ்டைப் பொறுத்தமட்டில் இங்கிலாந்தின் ஆதரவாளர்கள் தாத்தாக்களும் பாட்டிகளுமே. இதுவே இந்திய விளையாட்டரங்குகளில் டெஸ்ட் போட்டிகளிலும் முப்பது வயதுக்கு கீழானவர்களே அதிகம் வருகிறார்கள் என்பது தொடர்ந்து நேரடியாக டெஸ்ட் போட்டிகளை அரங்கத்துக்கு சென்று கண்டவன் என்ற முறையிலும் டிவியில் நிறைய பார்க்கிறவன் எனும் வகையிலும் சொல்லலாம். ஏன் இந்த வித்தியாசம்? இத்தனைக்கும் இந்தியாவில் பழைய ஆட்கள் இன்னும் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவர்களே. ஒருவேளை அவர்கள் சமகால கிர்க்கெட்டில் இருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறார்களா, அதே கவாஸ்கர், குண்டப்பா விஸ்வநாத்தின் நினைவுகளில் இருந்து மீளவில்லையா அல்லது அவர்கள் வந்து பொறுமையாக அமர்ந்து பார்க்கும் படி இந்தியாவின் விளையாட்டு அரங்குகளின் கட்டமைப்பும், கட்டணமும் இல்லையா?
இங்கிலாந்தின் வயசாளி பார்வையாளர்களிடம் இன்னொரு சுவாரஸ்யம் ஆண்களுக்கு இணையாக நிறைய பெண்களும் புள்ளிபோட்ட கவுன், செயின் கண்ணாடி அணிந்த, கையில் கேக்கை வைத்து அமர்ந்திருக்கும் காட்சி தான். ஏதோ ஒரு மகிழ்ச்சியான முதியோர் பூங்காவைப் போல தோற்றமளிக்கிறது மைதானமே.
இன்னொரு அழகான விசயம் - இந்த வயசான பார்வையாளர்கள் சுலபத்தில் உணர்வுவயப்படுவதில்லை. இங்கிலாந்தின் விக்கெட் விழும்போது தலையில் கை வைப்பதில்லை. சிலைபோல அமர்ந்திருக்கிறார்கள். முகத்தில் சலனமின்றி பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு அழகிய ஷாட் இங்கிலாந்து வீரரரால் அடிக்கப்படும் போது அவர்கள் அதே சலனமற்ற பாவனையுடன் கைகளை மென்மையாகத் தட்டுகிறார்கள். ஏதோ புறாக்கள் பறந்தெழும் மெல்லோசை மைதானத்தில் பரவுகிறது. ஷாட் அடிக்கப்பட்ட சப்தம் அதைவிட மேலாக ஒலிக்கிறது. இதுவே இந்திய மைதானம் என்றால் 90% ஆட்கள் ஆட்டத்தையே பார்க்காமல் பரஸ்பரம் பேசுவது, போனில் யாரிடமோ கதையளப்பது, குதிப்பது, குறுக்குமறுக்குமாய் ஓடுவது, மெக்ஸிக்கன் வேவ் பண்ணுவது, எல்லைக்கோட்டில் களத்தடுப்பு பண்ணும் வீரர்களை நோக்கி கூவுவது என ஒரே அல்லோலப்படுவார்கள். 10% ஆட்களே ஆட்டத்தை கவனிப்பார்கள். அதுவும் ஒரு ஷாட் அடிக்கப்பட்டதும் அதை கவனிக்காதவரே உள்ளுணர்வால் அறிந்து ஓவெகக் கத்தி எழுந்து துள்ளுவார்கள். அவர்களைக் கடந்து அமர்ந்திருப்பவர்களால் பந்து எங்கே போகிறது எனப் பார்க்க முடியாது. அடுத்து பேட்ஸ்மேன் ரெண்டு பந்தை கட்டை வைக்கும் வரை உட்கார மாட்டார்கள். நான் சொல்வது டெஸ்ட் ஆட்டங்களில் தான், ஒருநாள், டி-20 போட்டிகளில் அல்ல.
இந்திய மைதானங்களில் இருக்கும் போது நமக்கு ரொம்ப வயசாயிடுச்சோ என எனக்கு அடிக்கடித் தோன்றும். நானெல்லாம் இங்கிலாந்தில் பிறந்து பக்கத்தில் ஒரு பாட்டியுடன் கேக், வைன் என வைத்துக் கொண்டு கிரிக்கெட் பார்க்க வேண்டியவன்.

கருத்துகள்