முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதல் தோல்வியுற்ற பெண்களின் உளவியல்




காதல் தோல்வியுற்ற இளம்பெண்களைப் பற்றின இவ்வார நீயா நானாவில் நிறைய சுவாரஸ்யமான உண்மைகள் வெளிப்பட்டன.


ஆண்களை விட சுலபமாக பெண்களே தோல்வியின் கசப்பை, ஏமாற்றத்தை தாங்குகிறார்கள். ஒரு பெண்ணைத் தவிர பிறர் காதல் தோல்வியின் வருத்தத்தை எதிர்கொள்ள “நெடிய பயணம் செல்வேன், டாட்டூ குத்திக் கொள்வேன், ஒருநாள் முழுக்க பாட்டுக் கேட்டுக் கொண்டே பஸ்ஸில் போவேன், வித்தியாசமாக ஹேர்கட் பண்ணிக் கொண்டு தோற்றத்தை மாற்றுவேன்” என்றெல்லாம் சொன்னார்கள். ஒட்டுமொத்தமாக காதல் தோல்வியை ஒரு ஐ.பி.எல் ஸ்டிரேடெஜிக் பிரேக் / ஷார்ட் கமர்ஷியல் பிரேக் போல அவர்கள் பயன்படுத்துகிறார்கள். காதல் தோல்வி ஒரு கொண்டாட்டத்திற்கான துவக்கக் காட்சியாக அவர்களுக்கு உள்ளது. இழந்த உறவின் துக்கத்தில் அப்படியே மூழ்கிப் போவது, இழந்த காதலனை புனிதப்படுத்தி தன்னிரக்கத்தில் தாடி வளர்த்து, குடித்து, சோம்பித் திரிவது அவர்களுடைய அகராதியிலே இல்லை.


 சமூகம் அதற்கான அவகாசத்தை அவர்களுக்கு அளிப்பதில்லை என்று இதை நியாயப்படுத்த சொல்ல முடியாது - சமூகம் ஒருவேளை வாய்ப்பளித்தாலும் பெண்கள் அதை செய்ய மாட்டார்கள். விவாகரத்தின் போது கூட பெண்களே சுலபத்தில் துக்கத்தில் இருந்து மீண்டு வந்து நிறைவாக மகிழ்ச்சியாக அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்கிறார்கள், ஆனால் ஆண்களோ முறிவின் வலியில் சிக்கில் நெடுங்காலம் சீரழிகிறார்கள் என ஆய்வுகள் சொல்லுகின்றன. 


இன்னொரு சுவாரஸ்யமான விசயம் இப்பெண்கள் clear out, flush out மாதிரியான சொற்களை காதல் தோல்வி அனுபவங்களை விவரிக்கும் போது தன்னிச்சையாக பயன்படுத்தினார்கள் என்பது. அதாவது மோசமான தோல்வி அனுபவத்தை, அதைத் தந்த பழைய காதலனை / கணவனை உடம்பில் ஒட்டிய ஒருவித அழுக்கைப் போல அவர்கள் பார்க்கிறார்கள். அழுவது, பேசுவது, பாட்டு கேட்பது, பயணிப்பது, புதிய ஆடைகள் வாங்கி, புதிய ஊருக்கு இடம்பெயர்ந்து, புதிய வேலையை செய்வது அவர்களுக்கு flush tankஐ திறந்து கக்கூஸை சுத்தமாக்குவதைப் போல அவர்களுக்கு உள்ளது. ஒரு ஆணை flush out பண்ணின பிறகு முழுக்க தம்மால் மற்றொரு பெண்ணாக புதுருவாக்கம் பெற முடியும் என அவர்கள் நம்புகிறார்கள்.


சாஸ்வதக் காதல், “காலமெல்லாம் காதல் வாழ்க” போன்ற ஜவ்வுகளை இப்பெண்கள் நம்பவில்லை. என்னதான் நாம் அதை விரும்பாவிட்டாலும் பெண்களைப் பொறுத்தமட்டில் ஆண்கள் வெறும் கழிவு தான். பயனுள்ள, அழகான கழிவாக இருக்கும் வரையில் பொறுப்பார்கள், ரசிப்பார்கள், ஆனால் நாற்றமெடுக்க துவங்கியதும் flushஐ திறந்து விடுவார்கள்.


ஆண்கள் பெண்களை பெரும்பாலும் உடலளவிலும், அவர்களுடைய தாம்பத்ய இருப்பு, பயன்கள் காரணமாகவும் நேசிக்கிறார்கள். ஆனால் பெண்கள் ஆண்களை நம்பி இருப்பதை விட அதிகமாக ஆண்கள் பெண்களை நம்பி இருக்கிறார்கள். ஒரு நீடித்த உறவை முறித்துக் கொள்ள பெரும்பாலும் ஆண்கள் முன்வருவதில்லை என்பது இந்த சார்புநிலையினாலும், உணர்வுரீதியாக அவர்கள் பலவீனமானவர்கள் என்பதாலுமே. இன்னொரு பெண்ணிடம் விருப்பம் ஏற்பட்டாலும் முந்தின காதலியையும் கூட வைத்துக் கொள்ள முடியுமா என்றே அவன் சிந்திப்பான். அது இன்பத்துக்காக அல்ல. அவளுக்கு அவன் உணர்வுரீதியாக பழகிப் போயிருப்பான்.

ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு குறைவாக மாரடைப்பு வருவதற்கும், அவர்களுடைய நீடித்த ஆயுளுக்கும் இந்த உணர்வு சமநிலை, சாமர்த்தியம், உறவுகளை ஒவ்வொருமுறையும் உத்தமாக அழித்து புதிதாக ஆரம்பிப்பது போல நம்பி செயல்படும் பாங்கும் காரணங்கள் எனத் தோன்றுகிறது. உ.தா., மனைவி இறந்ததும் விரைவில் கட்டையை போடும் கிழடுகள் நிறைய. ஆனால் தாத்தா இறந்த பின்னாலும் கிண்ணென்று நீண்ட நாள் வாழுகிற பாட்டிகள் ஏராளம். இது பெண்களுக்கு இயற்கை அளித்துள்ள ஒரு தனித்திறன்.


உ.தா, பல பூச்சியினங்களில் உடலுறவுடன் ஆண் இறந்து விட பெண் தொடர்ந்து வாழ்கிறது. கும்பிடுபூச்சி, சிலந்தி போன்றவற்றிடையே செக்ஸ் முடிந்ததும் ஆணை பெண் தின்று விடும். 

இதைப் பற்றி உயிரியல் சார்ந்து மற்றொரு கோணத்தையும் இங்கு பரிசீலிக்க வேண்டும்: ஆண்களுடன் ஒப்பிடுகையில் குழந்தைப் பேறைப் பொறுத்து பெண்களுக்கு சில கூடுதல் கட்டுப்பாடுகளை இயற்கை விதித்துள்ளது. பெண்களின் கருவுறு திறன் பதின்வயதில் ஆரம்பித்து இருபதுகள் வரை உச்சத்தில் இருந்து, பின்னர் முப்பதுகளின் மத்திய பகுதியில் இருந்து மெல்ல குறைந்து கொண்டே வந்து 45இல் முடிந்து போகிறது என அறிவியல் சொல்லுகிறது (சில விதிவிலக்குகள் இருக்கலாம்.) ஆண்களுக்கு இத்தடைகள் உடல் சார்ந்து பெரும்பாலும் இல்லை. இயற்கையில் பண்டைய காலத்தில் ஒரு பெண் இந்த சுமார் 30 ஆண்டுகளுக்குள் இருபது குழந்தைகளைப் பெற்றால் அவர்களில் இரண்டு மூன்று பேர் தேறுவார்கள். அறுபதாண்டுகளுக்கு முன் வரை பத்து குழந்தைகளைப் பெறுவது ஒரு சாதாரணமான விசயம். இந்த பத்தில் இரண்டே பிழைக்கும். மருத்துவ வசதிகள் வந்த பிறகே மத்திய வர்க்க குடும்பங்களில் பத்துமே பிழைக்கும் நிலை வந்தது. ஒரு கட்டுப்பெட்டியான சூழலில் ஒரு கணவனுடன் இருந்து இந்த பிள்ளைகளைப் பெற்று வளர்த்து அவர்கள் 40 வயதில் ஓய்ந்து விடுவார்கள். ஆனால் நாகரிகமடையாத இனக்குழுக்களாக நாம் வாழ்ந்திருந்த போதும், இன்றைய சுதந்திரமான நவீன சூழலிலிலும் நிரந்தரமான ஒற்றை ஆண் துணை எனும் கட்டாயம் இல்லை. அப்போது அவர்கள் ஒரு ஆண் தம்மை விட்டுச் சென்றாலோ, அல்லது அவனை தாமே பிடிக்காமல் விட்டுவிட்டாலோ அடுத்த ஆணைத் தேடிச் செல்வது மிக முக்கியம். இல்லாவிட்டால் தம் கருவுறு திறனை உச்சபட்சமாக நாற்பது வயதுக்குள் அவர்கள் பயன்படுத்த முடியாது. இந்த உயிரியல் விழைவே கருவுறு திறனுக்கு மதிப்பு குறைந்த இன்றைய சூழலிலும் பெண்களை தீவிரமாக replacement நோக்கி செலுத்துகிறது (இதுவும் அந்த நீயா நானா நானாவில் ஒரு பெண் பயன்படுத்திய சொல்லே). காதல் முறிவு என்பது அவர்களுக்கு ஒரு பொம்மை விழுந்து உடைவது மட்டுமே. அடுத்த பொம்மையை வாங்க உடனடியாக தயாராகி விடுகிறார்கள். அப்படித் தயாராகும்படி உயிரியல் அவர்களைத் தூண்டுகிறது. 


இந்த நீயா நானா அத்தியாயத்தை அவர்கள் பெண்களின் காதல் தோல்வியை முக்கியப்படுத்தி அவர்களை இரக்கத்துடன் நாம் பார்க்க வேண்டும் எனக் காண்பிக்கும் நோக்கிலே இயக்குநர் திட்டமிட்டிருக்க வேண்டும். ஆனால் நடந்ததோ வேறு - காதல் தோல்வியை இந்த பெண்கள் கூலாக டீல் செய்வது, ஜாலியாக எடுத்துக் கொள்வதைக் கண்டு கோபிநாத்தே திகைத்தும் குழம்பியும் போனார். அதிலும் ரொம்பவே சிறப்பு முதலில் காதல் தோல்வியின் வலியில் இருந்து தாம் எப்படி மீண்டோம் என உருக்கமாக பேசிய பெண்களில் கணிசமானோர் யார் உறவை முறித்தது எனும் கேள்விக்கு தாமே என பதிலளித்ததே.


 ஏன் காதலை முறித்தோம் என்பதற்கு அவர்கள் ரொம்ப சாதாரணமான காரணங்களையே தந்தார்கள் - ஒருவர் “நான் ஊடகத்தில் பணியாற்ற விரும்பினேன், அதை என் காதலன் ஏற்கவில்லை, அதனால் அவனுடனான உறவை முறித்துக் கொண்டேன்” என்றார். இன்னொரு பெண்ணோ “வெளிநாட்டுக்கு புது வேலை கிடைத்துப் போகும் போது இதற்கு மேல் இந்த காதலையும் விடுவதே எதிர்காலத்துக்கு நல்லது என முடிவெடுத்தேன்” என நெத்தியடி அடித்தார். இது தான் எதார்த்தம். இதை நாம் பாராட்ட வேண்டும். ஏனென்றால் பெண்கள் மிக மிக அற்பமான காரணத்துக்காக காதலை முறிக்கிறார்கள்.

இந்த உண்மை தெரியாமல் நம்முடைய தமிழ் சினிமா இத் இப்பெண்களை ரொம்ப தவறாக சித்தரித்து வந்துள்ளது. ஏனென்றால் நம்முடைய இயக்குநர்களுக்கு பெண் உளவியல் பற்றி ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது. சாஸ்வத காதல், புனித காதல் போன்ற கற்பிதங்களை அவர்களே ஆண்ளின் குற்றவுணர்வை சொறிந்து கொடுக்க உருவாக்கினார்கள். எந்த காலத்திலும் பெண்கள் அதை நம்பியதோ பின்பற்றியதோ இல்லை. இன்னும் சொல்லப் போனால் பெண்களுக்கு இந்த காதலில் நம்பிக்கையே இல்லை எனத் தோன்றுகிறது. அவர்கள் காதலை நடைமுறை சார்ந்தே பார்க்கிறார்கள். நாம் ஒரு செல்போனை, பிரியாணியை, ஏஸியைப் பார்ப்பது போல.


ஒரு ஆண் ஒரு பெண்ணின் உடலினால் தனக்கு இன்பம் கிடைக்குமா என்று மட்டும் யோசிக்கிறான் என்றால் ஒரு பெண் ஒரு ஆண் உடலினால் தனக்கு சமூக மதிப்பு, பண்பாட்டு மதிப்பு, பொருளாதார பயன், உணர்வு ரீதியான ஆறுதல்கள், கிளர்ச்சிகள், காமம் போன்ற பல பிரதிபலன்கள் உண்டா என சதா பரிசீலித்தபடியே இருக்கிறார்கள். அதனாலே ஒரு உறவில் முதலில் ஏமாற்றமடைகிறவர்களாகவும் கூடுதலாகவே கோருகிறவர்களாகவும் பெண்களே இருக்கிறார்கள். அதை முதலில் உடைக்கிறவர்களாகவும் அவர்களே இருக்கிறார்கள்.


 ஆணுக்கு தான் பெண்ணுடலில் தேடுவது காமத்தை மட்டுமல்ல என ஆறுதல் கொள்ள காதல் எனும் பொய் அவசியமாக உள்ளது. பெண்களுக்கு இயற்கையாகவே அது தேவையில்லை. நம்ப வில்லையா? ஒரு பெண்ணிடம் போய் ஐ லவ் யூ சொல்லிப் பாருங்கள். நம்ப மாட்டார்கள். ஏன், எப்படி எனக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அதை நீங்கள் மொழியில் சித்தரிக்க சித்தரிக்க இன்பமடைவார்கள். ஆனால் நீங்கள் நிறுத்தியதும் “உன் காதல் ஒரு பொய்” என சொல்லி முகம் திருப்பிக் கொள்வார்கள். ஏனென்றால் பொய்யின் பின்னால் ஒளிந்து கொள்ளும் 96 ராம்களே ஆண்கள் என அவர்கள் அறிவார்கள். அவர்கள் அந்த விதத்தில் அதிர்ஷ்டசாலிகள். இயற்கையாகவே புத்திசாலிகள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...