இந்த முறை சென்னை வந்திருந்த போது ஒரு அறிமுக இயக்குனரை சந்தித்து உரையாடினேன். அவர் எடுக்கப்போகும் ஒரு சுவாரஸ்யமான துப்பறியும் படத்தின் திரைக்கதையில் பங்களிக்க இருக்கிறேன். அவர் என்னிடம் இப்போது திரைத்துறையில் டிஜிட்டல்மயத்தால் வந்துள்ள ஒரு மாற்றத்தைப் பற்றி குறிப்பிட்டார்.
இப்போது புதிய படங்களுக்கு தயாரிப்பாளர்கள் அலுவலகம் அமைத்து ஆறு மாதம் திரைக்கதையை விவாதிக்க செலவு செய்ய தயாராக இல்லை. அவர்கள் முடிந்தளவுக்கு தயாரிப்பு செலவை குறைக்க உத்தேசிப்பதால் திரைக்கதை பணியை மொத்தமாக இயக்குநரின் தலையில் சுமத்தி விடுகிறார்கள். இப்போதுள்ள நடைமுறைப்படி திரைக்கதையை இயக்குநரே தனியாக வீட்டில் அமர்ந்து எழுதி தயாரிப்பாளரிடம் அனைத்து தயாரிப்புகளுடன் சென்று விட அவர் அடுத்த கட்ட வேலைகளுக்கான நிதியை அளிப்பார். அதுவரை தயாரிப்பாளர் திரைக்கதை உருவாக்கத்துக்கான செலவுகளில் எந்த உதவியும் பண்ண மாட்டார். இதன் விளைவு திரைக்கதையில் முன்புள்ள ஆழமும் நுட்பமும் இப்போது இருப்பதில்லை. சில இயக்குநர்கள் அயல்மொழிப் படங்களில் இருந்து காட்சிகளை உருவி அவியல் போல ஒரு திரைக்கதையை உருவாக்கி கொண்டு கொடுக்கிறார்கள். அதிலுள்ள தர்க்க குழப்பங்களை விவாதித்து சரி செய்யும் அவகாசம், நிதி, ஆதரவு அவர்களுக்கு இருப்பதில்லை. இதன் விளைவுகளை இன்று ஓ.டி.டியில் வெளியாகும் படங்களின் இறுதி வடிவில் காண்கிறோம். ஆனால் வெற்றி பெற்ற இயக்குநர்களுக்கு மட்டும் திரைக்கதையாளர்களை அணுகி முன்பணம் கொடுத்து அவர்களுடன் விவாதித்து கதையை நெறிப்படுத்தி செம்மையாக்கி பக்காவாகவோ அல்லது தவிர்க்க இயலாத குறைகளுடனோ தயாரிப்புக்கு செல்ல முடிகிறது.
கருத்துகள்