முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“காலா” எனும் கண்ணில் அடங்கா வியப்பு


(இது ஒரு மீள்பிரசுரம்)

ஒரு நல்ல படம் பார்வையாளனை திகைக்க வைக்க வேண்டும் என சொல்வார்கள். அது “செவன் சாமுராய்” மாதிரி சாகச படமாகவோ “பதேர் பாஞ்சாலி” மாதிரி மென்மையான எளிய கிராம வாழ்க்கையை பேசும் படமாகவோ இருக்கலாம். எதிர்பாராத கலைநுணிக்கத்துடன் காட்சிகள் முன்வரும் போது வாசகன் திகைக்கிறான். அத்தனை லாவகத்தையும், அழகையும், உயிரோட்டத்தையும் தன் கண்களுக்குள் நிறைக்க இயலாமல் விக்கித்துப் போகிறான். “காலாவில்” ரஞ்சித் வண்ணங்களை இவ்வளவு கற்பனையுடன் பயன்படுத்திய ஸ்டைலாகட்டும், கிராபிக் நாவல் போன்ற காட்சி சித்திரங்களை எழுப்பும் விதமாகட்டும் நீங்கள் வாய்பிளந்து அமராமல் இப்படத்தை பார்க்கவே முடியாது. 

அதுவும் அந்த கிளைமேக்ஸ் காட்சி. கடவுளே! தமிழில் இப்படி ஒரு காட்சியை இதுவரை எவருமே சித்தரித்ததில்லை. பிரதான வில்லன் நானா படேகர் காலாவின் பிம்பத்தை எங்கங்கும் கண்டு அஞ்சி மனம் சிதறுகிறார். கரிய வண்ணத்தூளை ஒரு குழந்தை முதலில் அவர் மீது அள்ளி வீசுகிறது. இதை அடுத்து பல இடங்களில் இருந்து கரிய துகள்கள் காற்றில் பறந்து பரவ திரை வண்ணங்களின் கடல் ஆகிறது. நான் இமைக்க மறந்து அமர்ந்திருந்தேன். 

கிளைமேக்ஸில் வில்லனை ரஜினி அடித்து நொறுக்காத ஒரே படம் இது தான். கிளைமேக்ஸில் பஞ்ச் வசனங்களோ குடும்ப உறுப்பினர்கள் பரஸ்பரம் கட்டித் தழுவி பாட்டுப் பாடாமலோ நீதி சொல்லாமலோ பிரதான பாத்திரங்கள் உணர்ச்சிவசப்பட்டு கண்கள் பூரிப்பதை குளோசப்பில் காட்டாமலோ முடிகிற ஒரே தமிழ்ப்படம் இது தான். அந்த கடைசிக் காட்சி முழுக்க முழுக்க மிகை கற்பனையாக (fantasy), உருவகமாய் மாற்றப்பட்டுள்ளது. இந்த ஒரு காட்சிக்காகவே ரஞ்சித் நம் திரை வரலாற்றில் தொடர்ந்து கொண்டாடப்படுவார். எனக்கு இந்த இடம் Kill Bill படத்தின் வர்ணங்கள் ததும்பும் காட்சி அமைப்புகளை நினைவுபடுத்தியது. “காலா” முழுக்க இது போன்ற அபாரமான கலை நுணுக்கங்களை காணலாம். படம் முடிந்து வீட்டுக்கு வந்த பின்னரும் முழுக்க படத்தை ஜீரணிக்காமல் ஒவ்வொரு காட்சியாய் கண்ணில் தோன்றி மறைய ஒருவித லயிப்பில் இருந்தேன்.

படத்தின் இறுதிக் காட்சிக்கு முன்பு ரஜினி வில்லனின் குண்டர்களை எதிர்கொள்ள செல்வார். அவரது நண்பர்களும் காதலியும் அவரைத் தடுப்பார்கள்: “நீங்கள் தான் அவர்களின் இலக்கு. உங்களைக் கொன்று விடுவார்கள். இந்த ஒரு இரவு நீங்கள் தாக்குப்பிடித்தால் நாளை நாம் வென்று விடுவோம்.” ஆனால் ரஜினிக்குத் தெரியும் எதிரியின் தாக்குதலைத் தடுக்க வில்லை எனில் தாராவியில் அவரது அரணைத் தகர்த்து ஊரையே அழித்து விடுவார்கள் என. ஆக, அவர் தன் உயிரை பணயம் வைத்து சண்டையிட செல்வார். போகுமுன் அவர் சொல்வார், “நான் இறந்தாலும் இறக்க மாட்டேன். இங்கே இருக்கும் ஒவ்வொருவரிலும் காலா இருப்பான். எனக்கு மரணமில்லை”. இது வெறும் பஞ்ச் வசனம் என நமக்கு ஆரம்பத்தில் தோன்றும். ஆனால் சண்டையின் போது காலா சுட்டு வீழ்த்தப்படுகிறார். அவர் மரணமடைவதாய் ஊரே நம்புகிறது. ஆனால் கிளைமேக்ஸில் அவர் உயிர்த்தெழுந்து வருகிறார். இந்த உயிர்த்தெழுதல் இப்படத்தில் ரஜினி எனும் தொன்மத்தை மீறி வேறுவிதமாய் அமைந்திருக்கிறது. அதுவே சிறப்பு. எப்படி என சொல்கிறேன்.

வழக்கமான ரஜினி படங்களில் அவர் தன் பாத்திரத்தை அல்ல தன் தொன்மத்தை மீள மீள நடித்து உயிர்கொடுப்பார். பாஷாவும் படையப்பாவும் சிவாஜியும் அடிப்படையில் ஒரே தொன்மம் தானே. ஆக அவர்களால் எந்த எதிரியையும் வெல்ல முடியும்; அவர்களை எந்த எதிரியாலும் முறியடிக்கவோ கொல்லவோ இயலாது. “சிவாஜியில்” ரஜினி ஒரு ஐ.டி அம்பியில் இருந்து ஆக்ரோஷமான எம்.ஜி.ஆராக மாறுவதற்கு முகாந்திரமோ லாஜிக்கோ இல்லை. அது படம் பார்க்கும் நமக்கு தேவைப்படுவதில்லை. ஏனெனில் ரஜினி எனும் தொன்மத்திற்கு பல முகங்கள். ஒவ்வொரு காட்சியிலும் ரஜினி ஒரு முகத்தை அணிந்து தோன்ற முடியும். அதை நாம் ரசித்து கை தட்டுவோம். ஒரு முகம் விடலைப் பையனுக்கானது, இன்னொன்று அப்பாவியான வேடிக்கை மனிதனுக்கானது, இன்னொன்று காதல் செய்யும் இளைஞனுக்கானது, இன்னொன்று எதிரிகளை வதம் செய்து சமூக பிரச்சனைகளை தீர்க்கும் அதிநாயகனுக்கானது. ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு ரஜினி உருமாறும் போது அதன் லாஜிக்கை நாம் கோருவதில்லை. பல படங்களிலாய் உருப்பெற்று விட்ட தொன்மம் அது. ரஜினி அதற்கு உயிர் தந்தால் மட்டும் போதும். 

”காலாவில்” ஒரு பாதியில் வழக்கமான ரஜினி தொன்மம் ஆதிக்கம் செலுத்துகிறது. “எஜமான்”, “முத்து”, “அண்ணாமலை”, “பாஷா” என பல பழைய ரஜினிக்கள் நினைவுக்கு வருகிறார்கள். ஆனால் இன்னொரு பாதியில் காலாவின் தொன்மம் வலுப்பெறுகிறது. தலித்துகளின், ஒடுக்கப்பட்டோரின் குலசாமி தொன்மம் இது. 

நமது நாட்டார் பண்பாடுகளில் காலமான மனிதர்களை நடுகல் நட்டு தெய்வமாக்கும் வழமை உண்டு என அறிவீர்கள். மனிதர்கள் பலிகொடுக்கப்படுவதும் அவர்களே தெய்வமாகி நம்முடனே வாழ்வதும் நமக்கு பகுத்தறிவை மீறின செயல் அல்ல. நமது பண்பாடு இத்தகைய மிகைகற்பனை போக்குகளை உள்ளடக்கியது.

 மேலாங்கோட்டு நீலி என்பது வெறும் கற்பனை தெய்வமா நிஜமாய் வாழ்ந்த பல்வேறு நீலிகள் குறித்த வாழும் தொன்மமா? என்.டி ராஜ்குமாரின் கவிதைகளில் காலமான அவரது அப்பா ஆவியுருவில் சாதாரணமாய் வந்து நடப்பு வாழ்வினோடு ஒன்று கலக்கிறார். கிராம வாழ்வில் நடப்புக்கும் மிகை கற்பனைக்கும் இடையிலான கோடு மிக மிக மெல்லியது என அந்த பின்னணியில் இருந்து வந்தால் என்னால் அனுபவரீதியாய் கூற முடியாது. “காலாவில்” இந்த புள்ளியை ரஞ்சித் அழகாய் தொட்டிருக்கிறார்.

 ஒடுக்கப்படும் மக்கள் சமூகத்தை காக்கும் வாழும் தெய்வமாய் வரும் காலா மக்களை ஒன்றிணைக்கும் உணர்வெழுச்சி கொள்ள வைக்கும் ஒரு தொன்மமும் தான் என ரஞ்சித் சுட்டுகிறார். மக்களின் ஆழ்மனத்தில் கனலும் ஒரு நெருப்பாய் அவர் நீடிப்பார். ஆகையால் தான் அவர் கொல்லப்பட்ட பின்னரும் கிளைமேக்ஸில் ஒரு பூதத்தானைப் போல், மாடன் சாமியைப் போல் தோன்றி வில்லனை அழிக்கிறார். இந்த முக்கியமான சேதியை பலரும் கவனித்ததாய் தெரியவில்லை. ரஜினி மீண்டு வருவது அவரது வழக்கமான இதுவரையிலான மசாலா படங்களில் வருவது போல் அல்ல. அப்படங்களில் இருந்து ஒரு நுட்பமான காத்திரமான வித்தியாசம் அவர் “காலாவில்” புத்தியிர்த்து வருவதில் உண்டு.

 தலித்தியத்தை பொறுத்த மட்டில், நட. சிவகுமார், என்.டி ராஜ்குமார் ஆகியோரின் கவிதைகளில் நாட்டார் தெய்வங்கள் நோக்கி ஒரு வேண்டுதல் தொடர்ந்து முன்வைக்கப்படும். சமூகத் தீங்குகளை, ஏற்றத்தாழ்வுகளை, சாதிய ஒடுக்குமுறையை தம் குலசாமிகள் உயிர்பெற்று வந்து அழிக்க வேண்டும் என இக்கவிஞர்கள் கோருவதை நாம் காணலாம். ரஞ்சித்தின் “காலாவில்” இக்கோரிக்கை விஷுவலாகிறது. கிளைமேக்ஸில் அக்குழந்தை முதலில் கறுப்பு வண்ணப்பொடியை அள்ளி வில்லன் மீது வீசுகிறது. இது முக்கிய துவக்கம். அடுத்த தலைமுறையினரில் இருந்து போராட்டம் முக்கிய எழுச்சி பெறும் எனும் உருவகம் இது. இதை அடுத்து ஒவ்வொரு அடித்தட்டு மனிதனிடமும் காலா உருப்பெற்று வில்லனைத் தாக்குகிறான்; உருக்குலைய வைக்கிறான். நாட்டார் வழிபாடுகளில் பூசை செய்யும் ஒருவர் சட்டென சன்னதம் பெற்று ஆடுவதைப் பார்த்திருப்பீர்கள். ஊரில் பொறுக்கியாக குடிகாரனாய் தெரியும் ஒரு ஆணோ, ஒரு சாதாரண குடும்பப் பெண்ணோ இந்த சந்தர்பத்தில் சன்னதம் பெற்று, சாமி உடம்பில் குடிகொள்ள, துள்ளி ஆடலாம். அப்போது அவர் சாமியாகிறார். இப்படி தெய்வமாகும் சாத்தியத்தை நாட்டார் வழிபாடு – நாட்டார் பண்பாடு – யாருக்கும் அளிக்கிறது. அதற்கு நீங்கள் வருடக்கணக்காய் தியானிக்க, மந்திரங்களை உருப்போட, விரதங்கள் அனுஷ்டிக்க அவசியமில்லை.

 இப்படி மனிதர்கள் நாட்டார் தெய்வங்களாகும் உருமாற்றத்தை ரஞ்சித் “காலாவில்” சித்தரிக்கிறார் – வெகு கவித்துவமாக நளினமாக காட்சிபூர்வமாக. இதை அவர் ஒரு அரசியல் விழிப்புணர்வு மாற்றமாக சித்தரிக்கிறார். இதுவரை நாம் தமிழ் கவிதையில் மட்டும் பார்த்திருந்த ஒரு அழகியல் நுணுக்கத்தை இப்போது சினிமாவிலும் நாம் காண்பது சிலாக்கியமானது. வண்ணகுழம்பாய் திரை உறைய படம் முடிவுக்கு வரும் தருணத்தில் நான் புளகாங்கிதமடைந்தேன். 

ரஞ்சித் சொல்வது போல் எத்தனை எத்தனை மாமனிதர்கள், அவர்களின் சிந்தனைகள், கோட்பாடுகள், கொள்கைகள், சொற்கள் நம் ஒவ்வொருவரின் மூச்சிலும் இதயத்துடிப்பிலும் சொற்களிலும் உணர்வுகளிலும் ஒவ்வொரு நொடியும் உயிர்த்தெழுகிறார்கள். ஒரு தியாகத்தை செய்கையில், மக்களுக்காய் சிந்திக்கையில், வருந்துகையில், கலைக்காக, அறிவியக்கத்துக்காக நம்மில் ஒவ்வொருவரும் செயல்படுகையில் நாம் தனியாக இல்லை எனும் பிரக்ஞை நமக்கு ஏற்படுகிறது. நம்முடன் யார் இருக்கிறார்கள் அப்போது? சமூகமா? நண்பர்களா? இல்லை. நம்முடன் இதுவரையில் வரலாற்றில் நம்மைப் போல் சிந்தித்த அத்தனை பேரும் இருக்கிறார்கள். 

“காலா” எனும் அந்த தலைப்பே எவ்வளவு பொருத்தமாயுள்ளது! காலா காலன் மட்டுமல்ல, அவன் காலமும் தான். காலம் ஒரு சுழற்சி எந்திரம். அது துவங்கும் இடத்தில் முடிகிறது; முடியும் இடத்தில் துவங்குகிறது. ஆகவே காலா இறப்பதில்லை எனும் வசனம் அவ்வளவு அர்த்தம் பொருந்தியதாக உள்ளது!

 

கூடுதலாய், சுருக்கமாய், இப்படம் பற்றி வேறு சில கருத்துக்களையும் நான் இங்கு கூற வேண்டும்.

  1. சேரி மக்களின் வாழ்விடங்கள் இப்படத்தின் காட்சிமொழிக்கு ஒரு தனி வண்ணத்தை அளிக்கின்றன. நாம் தமிழ் சினிமாவில் இதுவரை கண்டறியாத புது உலகம் இது. ரஞ்சித் தனது “அட்டகத்தியில்” இது போன்ற ஒரு புத்துணர்ச்சியூட்டும் திரைமொழியை பயன்படுத்தி இருந்தது நினைவுக்கு வருகிறது. அதுவும் அவர் இயல்பில் ஒரு ஓவியர் என்பதால் ஒவ்வொரு காட்சிக்கும் பின்னணியை அவ்வளவு நுணுக்கமாய் படலம் படலமாய் உருவாக்கி இருக்கிறார். ஒருமுறை மட்டும் பார்த்து நீங்கள் இதை மொத்தமும் உள்வாங்க இயலாது.

  2. ரஜினி அட்டகாசமாய் நடித்திருக்கிறார். அவருக்கு ஈடுகொடுத்து ஈஸ்வரி ராவும் நானா படேகரும் இன்னொரு பக்கம் காட்சிக்கு காட்சி தத்ரூபமாய் நடிக்கிறார்கள். 

  3. தனது முந்தைய படங்களை விட இதில் ரஞ்சித் துணை பாத்திரங்களின் அமைப்பில் தனி கவனம் செலுத்தி இருக்கிறார். ஈஸ்வரி ராவ், சமுத்திர கனி ஆகியோரின் உயிரோட்டமான பாத்திரங்களை சொல்லலாம். ஒரு இயக்குநராக ரஞ்சித்தின் வளர்ச்சிக்கு இது சான்று.

  4. சாருவும் அராத்தும் தம் விமர்சனங்களில் சொல்வது போல ஒரு வணிகப் படமாக இதன் திரைக்கதையில் ஓட்டைகள் உள்ளன. சில இடங்களில் கதை வேகம் கொண்ட பின் உடனடியாய் தொய்வடைகிறது. ஏன் இப்படி? தனக்கான மையப் போக்கை ரஞ்சித் கண்டறிய இயலாமல் திணறுகிறாரா? இது சீரியஸான படமா வணிக படமா என சாரு கேட்கிறார். இது பெருமளவு சீரியஸான படமாகவே உள்ளது; வழக்கமான ரஜினி பட மசாலா சமாச்சாரங்கள், தேய்வழக்குகள், நாயகன், “காட்பாதர்” தாக்கங்கள் இப்படத்தை வணிக படமாக தக்க வைக்கின்றன. ஆனால் ரஞ்சித் தன்னை உணர்த்தும் இடங்களில் படம் சீரியஸாகிறது. இப்படி ஒரு படத்தை சமநிலைப்படுத்துவது எளிதல்ல. நான் இவ்விசயத்தில் ரஞ்சித்தை குறைகூற மாட்டேன். ஏனெனில், இப்படத்தின் சீரியஸான அம்சங்கள் அவ்வளவு பாராட்டத்தக்கதாய் உள்ளன.

  5. தமிழின் மிக ஸ்டைலான படங்களில் ஒன்று “அக்னி நட்சத்திரம்”. அதை அடுத்து மிக ஸ்டைலிஷாக எடுக்கப்பட்ட படம் என “காலாவை” குறிப்பிடலாம். அதென்ன ஸ்டைலிஷ்? காட்சியில் framing, ஒளி, பின்னணி ஆகியவற்றை கதை சொல்ல அன்றி பாத்திரங்களின் சுபாவத்தை, ஆளுமையை உணர்த்த, பாத்திரங்களின் பிரதான உணர்வை, படத்தின் மைய கருத்தை சித்தரிக்க பயன்படுத்துவது. மணி ரத்னம் இதில் வல்லவர். “அக்னி நட்சத்திரத்தில்” ஒளியும் இருளும் மாறி மாறியும் கலந்தும் வரும் பாணியை பின் தொடர்ந்தால் அப்படத்தினுள் இன்னொரு படம் உங்கள் பார்வைக்குப் படும். “தளபதி” மற்றும் “அலை பாயுதேவில்” அவர் இது போல் வண்ணங்களை பயன்படுத்தி இருந்தாலும் “அக்னி நட்சத்திரம்” தான் அவர் கதையை விட ஸ்டைலுக்கு அதிக முக்கியத்துவம் அளித்த படம். அதற்கு அடுத்த படியாய் நான் “காலாவை” வைப்பேன். சங்கரின் “சிவாஜியும்” ரஜினியை வெகு ஸ்டைலாக காட்டியது; ஆனால் அதில் கலையுணர்வு இல்லை.

  6. ”காலா” எனும் கேங்ஸ்டரின் வாழ்வை முடிந்தளவு எதார்த்தமாய் காட்ட ரஞ்சித் முயல்கிறார். வழக்கமாய் சினிமா கேங்ஸ்டர்கள் கொலை ஆணைகள் பிறப்பிக்கிறவர்களாய் மட்டும் இருப்பார்கள். காலாவோ முதல் காட்சியில் குழந்தைகளோடு கிரிக்கெட் ஆடி தோற்கிறவராக வருகிறார். (இதனை சாரு விமர்சிப்பதில் எனக்கு உடன்பாடில்லை; சாரு இந்த இடத்தின் நுட்பத்தை கவனிக்கவில்லை.) காலாவை ஒரு பக்கம் ஆதிக்க சக்திகள் அஞ்சுகின்றன. இன்னொரு பக்கம் அவரை நண்பர்களும் குழந்தைகளும் மனைவியும் ஆளாளுக்கு கலாய்த்தபடி இருக்கிறார்கள். ஒரு பக்கம் அன்பிலும் காதலிலும் மருகி தவிக்கிறவராக குழந்தைத்தனமாக, இன்னொரு பக்கம் கடுமையான நிலைப்பாடு எடுக்கும் போராளியாக, தாதாவாக வருகிறார். தான் எந்த ஆள் என்பதை காலா தெளிவாக சொல்வதில்லை. தன் உணர்ச்சிகளை மறைத்து சூழலுக்கு ஏற்ப, மக்கள் நலனுக்கு ஏற்ப, தன்னை வெளிப்படுத்துகிறவராக அவர் வருகிறார். அதனாலே தன் மகனும் மனைவியும் கொல்லப்பட்ட பின் அவர் ஹரி தாதாவை காண செல்கையில் உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்து விட்டு நார்மலாக பேசுகிறார். இந்த சுபாவ தெளிவின்மை (ambiguity) இப்பாத்திரத்தின் அடிப்படை சுபாவம். ஏனென்று விளக்குகிறேன்:

காலாவை ரஞ்சித் ராவணன் என்றே அடையாளப்படுத்துகிறார். பத்து தலை ராவணன் பக்தனா, இசைக்கலைஞனா, அறிஞனா, பெண் மோகியா, பிரசித்தமான ஆட்சியாளனா, சகோதரிக்காக ஒரு தவறை செய்யும் பிரியமான சகோதரனா, சிறந்த வீரனா, மந்திர தந்திரங்கள் அறிந்த வித்தகனா? அவனது எந்த தலை யோசித்து சீதையை கடத்த சொன்னது? சீதையை கடத்தி வந்த பின் அது தவறு என இன்னொரு தலை அவனிடம் சொல்லி இருக்குமா? அப்படி எனில் ராவணன் யார்? 

“அட்டகத்திக்குப்” பின் ரஞ்சித் சற்றே வழி தவறி விட்டார் என்ற எண்ணம் எனக்கிருந்தது. ஆனால் அவர் அதை விட மேலான இடத்தை ஒரு இயக்குநராக எட்டி இருக்கிறார் என்பதை “காலா” மூலம் நிரூபித்திருக்கிறார். ரஞ்சித், நீங்கள் ரஜினியை உதறி விட்டு வணிகப் படங்கள் எடுப்பதை கைவிட்டு விட்டு மாற்று சினிமாவுக்கு நகர வேண்டும் எனும் விமர்சகர்களை பொருட்படுத்தாதீர்கள். வணிக சினிமாவுக்கு நீங்கள் அளிக்கும் புத்துணர்ச்சியை இப்போதைக்கு வேறு யாராலும் செய்ய இயலாது. உங்களது தலித் அரசியலுக்கு ரஜினி கைகொடுத்திருக்கிறாரா இல்லையா எனும் வாதங்களும் அர்த்தமற்றவை. இவ்வளவு அபாரமான காட்சிமொழி கொண்ட படத்தில் செய்தியும் நடிகர்களும் காட்சி சித்தரிப்புகளும் திரைமொழியின் நுணுக்கங்களும் வேறுவேறல்ல. இதை ரஜினி படம், தனுஷ் தயாரிப்பு எனும் துண்டுத்துண்டாய் யோசிப்பதே அபத்தம். 

ரஞ்சித், இது உங்கள் படம். இதன் வழி ஒரு தனி சாதனையை செய்திருக்கிறீர்கள். “அட்டகத்தியில்” நான் உங்களை கவனித்து ஆர்வமாய் பின் தொடரத் துவங்கினேன். ஆனால் “காலாவில்” நான் உங்கள் ரசிகன் ஆகி விட்டேன். சல்யூட் ரஞ்சித்!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...