முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதவாதத்தில் காந்தியும் சாவர்க்கரும்: ஒற்றுமையும் வேற்றுமையும்


சாதியை ஒழிக்காமலே “சாதியை ஒழிப்பது” பற்றி சாவர்க்கர் பேசியிருப்பதை பார்த்தால் அப்படியே காந்தி பேசியதைப் போன்றே இருக்கிறது.

தீண்டாமை ஒழிப்பு, சாதிய ஒடுக்குமுறையை ஒழித்து சமத்துவத்தை கொண்டு வருவது, அதே நேரம் சாதிய சனாதன அமைப்பை தக்க வைப்பது, சாதி ஒழிப்பில் மத்திய, மேல்மத்திய சாதியினரே அதிகம் பங்கெடுக்க வேண்டும், சாதிய சீரழிவுக்கான பொறுப்பை மேல்சாதியினர் (பிராமணர்கள்) மீது மட்டும் சுமத்தக் கூடாது ஆகிய பல கருத்துக்களில் இருவருக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. இருவருமே சாதியத்தை தோற்றுவித்தது பார்ப்பனியமும் வைதீகமும் என்பதை ஏற்கவில்லை. எந்த காரணம் கொண்டும் பிராமணர்களை கேள்விக்குள்ளாக்கக் கூடாது என்றே வலியுறுத்தினர்.

 அது மட்டுமல்ல, சாவர்க்கர் சாதீய ஏற்றத்தாழ்வை, தீண்டாமையை அவை தவறென்பதால் அல்ல அழிக்க வேண்டும் என நினைத்தது, மாறாக தீண்டப்படாதோர் மாற்று மதங்களுக்கு மாறி சென்றால் அது இந்து சமூகத்தை பெருமளவு பலவீனப்படுத்தி விடும் என தான் அஞ்சுவதாக, அதனாலே சீர்திருத்தம் உடனடியாக தேவை என அவர் கூறினார். காந்தி இதையே தான் மறைமுகமாக, “இருக்கு ஆனா இல்ல” என்பது போல சொன்னார். இருவருமே தம்மை இந்துமத சீர்திருத்தவாதிகளாக கருதினர், இருவருமே இந்தியா என்றால் இந்துக்களின் நாடு என்றே நம்பினர். இரண்டே வித்தியாசங்கள்: 

1) சாவர்க்கர் நம்முடைய சீமான் தன் பேச்சில் நெய்தல் படை, பச்சை வாழைமட்டை என்றெல்லாம் அவிழ்த்து விடுவதைப் போல பிரித்தானிய அரசுக்கு எதிராக வன்முறையை கையில் எடுப்பேன் என உக்கிரமான தொனியில் அவ்வப்போது பேசுவார். மற்றபடி அவர் யாரையும் கொன்றதில்லை. அவருடைய வன்முறை முயற்சிகளும் பெரும்பாலும் தோல்வியிலே முடிந்தன. அவருக்கு அதற்கான ஆற்றலோ உடல்வலுவோ இருந்ததில்லை. காந்தியோ ஆரம்பத்தில் (தென்னாப்ப்ரிக்க நாட்களில்) இருந்தே வலிமையானவர் தரப்பில் இருந்து சமரசம் பேசி வலுவற்றவருக்கு குறைந்த நன்மைகளும் வலிமையானவர்களுக்கு அதிக நன்மைகளும் பெற்றுத்தரும் பேச்சுவார்த்தை நிபுணராக இருந்ததார். இந்தியா வந்த பிறகு அவர் இதே சமரச பேச்சு வார்த்தையின் போது தன் செல்வாக்கை அதிகமாக்க போராட்டங்களின் பெயரில் மக்கள் திரளை உணர்ச்சிகரமாக திரட்டி பகடைகாயாக பயன்படுத்தும் உத்தியை வளர்த்தெடுத்தார். அதற்கு அகிம்சை போராட்டம் எனப் பெயரிட்டார். சாவர்க்கருக்கு இந்த நுட்பம், சாமர்த்தியம், போராட்டத்தில் உடலை பயன்படுத்தும் புத்திசாலித்தனம் இல்லை. அதனால் வரலாற்றில் ஹிம்சைக்கும் அஹிம்சைக்கும் நடுவில் உழலும் ஒரு ஜோக்கராக அவர் இருந்து முடிந்து போனார். 

2) சாவர்க்கர் இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே எனறு வெளிப்படையாக கோரினார். இந்த வெள்ளாந்தி இயல்பு காந்தியிடம் இல்லை. அவர் இந்தியாவில் வாழும் கிறித்துவர்களும் இஸ்லாமியரும் மனதளவில் இந்துக்களே, அவர்கள் விரும்பினாலும் இல்லாவிடிலும் பண்பாட்டளவில் இந்து ஆன்மா அவர்களுக்குள் குடிகொண்டிருக்கும் என ஒரு விசித்திரமான விளக்கத்தை அளித்தார். இது ஜெ.மோ இன்று தொல்படிமம் என்ற பெயரில் வைக்கும் பண்பாட்டு இந்துத்துவாவின் அன்றைய வடிவம். அது மட்டுமல்ல 1934இல் பேசும் போது “எனக்கு சட்டமியற்றும் அதிகாரம் இருந்தால் நான் முதலில் தடை செய்வது மதமாற்றத்தையே” என்று சிறுபான்மையினரை மிரட்டும் விதத்தில் ஒரு ரத்தினத்தை உதிர்த்தவரே காந்தி. ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டால் நான் வலுக்கட்டாய மதமாற்றத்தையே சொன்னேன் என்று கூறினார் அவர். அதன் தொனி பெரும்பாலான கிறித்துவ, இஸ்லாமிய மதமாற்றங்கள் வலுக்கட்டாயமாக நடந்தேறுகின்றன என்பதே. சரி இதற்கு ஆதாரம் உண்டா என்று கேட்டால் இல்லை. ஒன்று தாழ்த்தப்பட்டவர்களின் பலவீனங்களை பயன்படுத்தி அவர்களை இந்துமதத்தில் இருந்து சிறுபான்மை போதகர்கள் மதமாற்றுகிறார்கள் என்று காந்தி நம்பினார். அடுத்து, இவ்வாறு சிறுபான்மையினருக்கு எதிராக அரசியல் பண்ணும் இந்துத்துவர்களை குளிர வைக்கவும் இவ்வாறு அவர் பேசினார். அதே நேரம் மேற்கத்திய முற்போக்கு ஊடகங்களை குளிர வைக்க வேறு விதமாகவும் பேசுவார் காந்தி. இது என் அவதானிப்பு அல்ல, அம்பேத்கருடையது.


ஆக, சாதி, மத விசயத்தில் பட்டென்று கையில் வந்து விழும் மீன் சாவர்க்கர், பட்டும்படாமல் நழுவிச்செல்லும் மீன் காந்தி. 


குறிப்பு: Savarkar: A Contested Legacy, Vikram Sampath, பக் - 12-14

நான் இங்கே தந்துள்ளவை சம்பத்தின் கருத்துக்கள் அல்ல. அவர் அளிக்கிற சில தரவுகளை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறேன்.


சம்பத் அவ்வப்போது சாவர்க்கரை புகழுகிற வேடிக்கையை, பத்தாம்பசலித்தனத்தை தவிர்த்துப் பார்த்தால் ஓரு சுவாரஸ்மான புத்தகம் இது. எனக்கு சாவர்க்கரின் சித்திரம் செர்வண்டஸின் “டான் குவிக்சாட்டின்” ஆளுமையை நினைவுபடுத்துகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.