கார்த்திக் சுப்புராஜின் "மகான்" அதன் அரசியலைக் கருத்திற் கொண்டால் ஒரு முக்கியமான படம் என்று கூறுவேன். குறிப்பாக, அரசியல் சரிநிலைகளின் உச்சக்கட்டத்தை தமிழ் சினிமா இன்று எட்டியிருக்கும் போது அப்படியான சில புனிதங்களை அடித்து நொறுக்கியிருக்கிறது "மகான்". குறிப்பாக காந்தியம் பற்றி அது எழுப்பும் கேள்விகள்.
காந்தியின் வன்முறை தவிர்ப்பு, சமரசப் போக்கு ஆகியவை இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க பரவியதற்கு ஒரு முக்கிய காரணம் மத்திய வர்க்க எழுச்சியும், அதைக் கட்டுப்படுத்தி வந்த முதலீட்டியத்துக்கும் அது வசதியாக இருந்தது என்பதே. உள்ளுக்குள் ஆயிரம் பாசாங்குகளை, தீமைகளை வைத்துக் கொண்டு வெளியே நல்லவனாக குழந்தை முகத்துடன் பவனி வர காந்தி குல்லா வெகுவாக உதவியது. அக்டோபர் 2021 ராகுல் காந்தி ஒரு முக்கியமான கேள்வியை காங்கிரசை நோக்கி வைத்தார்: நமது நிர்வாகிகளில் எத்தனை பேருக்கு மதுப்பழக்கம் இல்லை? காங்கிரஸ் உறுப்பினராக ஒருவர் மதுவருந்தக் கூடாது, காதி உடைகள் அணிய வேண்டும் என்பன விதிமுறைகள். இதை கணிசமானோர் இன்று பின்பற்றுவதில்லை என்பது ராகுல் காந்தியின் வாதம். அந்த காலத்தில் நிலைமை எப்படி?
காந்தியின் காலத்தில் மதுப்பழக்கம் பரவலாக இருந்தது. 1920இல் காந்தி திடீரென மது ஒழிப்பை ஒரு முக்கிய கொள்கையாக அறிமுகப்படுத்தி தீவிரமாக பிரச்சாரம் செய்தார். அதே நேரம் காந்தியின் கொள்கையானது எதையொன்றையும் மக்கள் மீது திணிக்காமல், சரியானதொன்றை தேர்ந்தெடுக்கும் உரிமையை அவர்களுக்கே அளிக்க வேண்டும் என்பது. எனில் மதுவை தடை செய்வது அந்த கொள்கைக்கு விரோதமானது அல்லவா? ஆம், ஆனால் காந்தியின் அரசியல் என்பது முழுக்க முழுக்க அந்தந்த சமயத்து அரசியல் தேவைகளை ஒட்டியே அமைந்தது என்பதால் இப்படி பல முரண்கள் நிறைந்ததாகவே காந்தியம் இருந்தது. காந்தி ஆப்பிரிக்காவில் இருந்த போது கறுப்பர்கள் ஆரிய இந்துக்களை விட தாழ்ந்தவர்கள் என்று எழுதினார். இந்தியாவிலும் அவர் மேல்சாதி இந்துக்களுக்காகவே பேசினார், ஆனால் அம்பேத்கர் தலித்துகளுக்கான முக்கிய தலைவராக உயர்ந்த போது காந்தி நடுங்கினார், ஏனென்றால் தலித்துகள் அவரது இயக்கத்தின் முக்கிய தூண்களாக இருந்தார்கள். அவர் உடனே தீண்டாமை ஒழிப்பை ஒரு கொள்கையாக்கி அப்பொறுப்பை உயர்சாதி இந்துக்களிடம் ஒப்படைத்தார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் - உயர்சாதி இந்துக்களையும் தலித் பாதுகாவலர்களாக்கி அவர்களுடைய ஈகோவை திருப்திப்படுத்தி அதிகாரத்தை அவர்களிடம் கொடுத்தாயிற்று, அதன் வழி சாதி அமைப்பையும் மறைமுகமாக பாதுகாப்போம் என உறுதிப்படுத்தியாயிற்று, தலித்துகளுக்கும் தாம் காவலன் எனக் காட்டியாயிற்று. அதே போலத்தான் ஜின்னாவின் முஸ்லீம் லீக் வளர்ந்து இஸ்லாமியர்களின் குரலானதும் காந்தி இஸ்லாமியர்களுக்காகவும் பேச ஆரம்பித்தார். இப்படி இருந்த காந்தி ஒரு விசயத்தை இருபதுகளில் புரிந்து கொண்டார் - அன்றைய பிரித்தானிய அரசின் முக்கியமான வருவாய் மார்க்கமாக மது விற்பனை இருந்து வந்தது. ஆகையால் மக்களை மதுவை கைவிட பிரச்சாரம் பண்ணுவது, மதுவை தடை செய்ய வேண்டும் எனக் கோருவது பிரித்தானிய அரசின் வருவாய்க்கு வேட்டு வைக்கும் என அவர் கணித்தார். கூடவே இதன் மூலம் பெண்களின் பலமான ஆதரவும் தனக்குக் கிடைக்கும் என்று நினைத்தார். (இன்னொரு பக்கம் இஸ்லாமியர்களையும் தன் பக்கம் இழுத்துக் கொள்ளலாம்.)
வரலாற்று ஆசிரியர் கேதரின் டிரிட்ரிக் 1920இல் அமெரிக்காவில் கிறித்துவ எவேஞ்சலிக்க குழுக்கள் மது ஒழிப்புக்காக தீவிர பிரச்சாரம் செய்து அதை சட்டமாகவும் கொண்டு வந்திருந்ததால், இந்தியாவில் மது ஒழிப்புக்காக பேசுவது அமெரிக்கர்களின் ஆதரவைப் பெறவும் தனக்கு உதவும் என காந்தி நினைத்திருக்கலாம் எனக் கூறுகிறார். ஆனால் காந்தி இங்கு அடித்தட்டு மக்களுக்கு, கடுமையான உடலுழைப்பை மேற்கொள்ளும் தொழிலாளிகளுக்கு உடல் அலுப்பை களைய நாட்டுச்சாராயம் அவசியமாக இருந்தது என்பதைப் பற்றி யோசிக்கவில்லை - ஏனென்றால் அவரைப் பொறுத்தமட்டில் இந்து மத்திய வர்க்கமே முக்கியம், கீழ்த்தட்டினர் அவர் சொல்லுவதைக் கேட்டு வாய்பொத்தி பின்னாலே வர வேண்டும். வடகிழக்கு மற்றும் வட இந்திய பழங்குடியினரின் சடங்குகள் மற்றும் நாட்டார் தெய்வ வழிபாடுகளில் அரிசியில் இருந்து செய்யப்பட்டும் பியரும் நாட்டுச்சாராயமும் முக்கியமான பங்களிக்கின்றன. அது மட்டுமல்ல, கால்நடைகளை பலி கொடுப்பதும் தான் முக்கியமாக இருக்கின்றன. ஆனால் காந்தியின் மனத்தில் வைணவத்தைத் தவிர பிற மதங்கள் பொருட்படுத்தத் தக்கவை அல்ல. அதுவும் கிறுத்துவம், இஸ்லாம் போன்ற நிறுவனமயமாக்கப்பட மதங்களை அவர் ஓரளவுக்காவது ஏற்றுக்கொள்வார், நாட்டார் சடங்குசார் மதங்கள் அவருக்கு அற்பமே. அன்றைய காந்தியவாதிகளும் கணிசமாக இவ்வாறே நம்பினர்.
1948இல் இந்திய பாராளுமன்றத்தில் இதைப் பற்றி ஒரு விவாதம் நடந்தது - கார்தெகர் எனும் கோலாபூரை சேர்ந்த பிரதிநிதி மது ஒழிப்பு கொள்கையின் பாதகங்களைப் பற்றி பேசும் போது அது எப்படி அடித்தட்டு மக்களுக்கு விரோதமாக இருக்கக் கூடும் என்று விளக்கினார். பீகாரில் உள்ள பழங்குடிகளின் தலைவரான ஜெய்பால் சிங் என்பவரும் அவரை சேர்ந்த பழங்குடிகளுக்கு மது தவிர்க்க முடியாத ஒன்று என்று வாதிட்டார். அப்போது பேசிய அம்பேத்கர் மது ஒழிப்பு ஒரு தேவையில்லாத ஆணி, அதனால் தான் மதுவொழிப்பை ஒரு சட்டமாக நமது அரசியலமைப்பு அங்கீகரிக்கவில்லை, மதுவை ஒழிப்பது மாநில அரசின் தீர்மானம் மட்டுமே என்று அவ்விவாதத்துக்கு முடிவு கட்டினார்.
இது ஒரு தேவையில்லாத ஆணி என்று காந்திக்குத் தெரியாதா? அவர் ஏன் சாதி, மத ஒழிப்புக்கு, பொருளாதார சமத்துவத்துகாக போராடாமல் இது போன்ற உப்புசப்பில்லாத பிரச்சனைக்காக போராடினார்? ஏனென்றால் மதுப்பழக்கம் சில இடங்களில் மத்திய வர்க்கத்தின் பொருளாதாரத்தை சீர்குலைத்து வந்தது. மத்திய வர்க்க ஆண்களில் ஒரு பகுதியினருக்கு அளவாகக் குடிக்கத் தெரியவில்லை. அதனால் மதுப்பழக்கத்தை ஒரு ஒழுக்க சீர்கேடாக மத்திய வர்க்கம் கண்டு அஞ்சியது. பொதுவாக ஒழுக்கம் சம்மந்தப்பட்ட மக்களின் அச்சங்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்தால் அதற்கு பெரிய கவனமும் ஆதரவும் கிடைக்கும். (ஆனால் மக்கள் ஒரு பக்கம் தனிமனித ஒழுக்கத்துக்காக போராடியபடியே குடித்துக் கொண்டும் தான் இருப்பார்கள்.) அதனால் காந்தி அப்போது அதைக் கையில் எடுத்தார். ஏனென்றால் அவர் ஒரு கடைந்தெடுத்த அரசியல்வாதி. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு பல மாநிலங்களில் மதுவைத் தடை செய்து பார்த்தது, ஆனால் மது ஒழிப்பு தோல்வி அடைந்தது.
இன்றைய நிலைமையைப் பாருங்கள் - சுயமாக சம்பாதிக்கும் பெண்கள் மத்திய வர்க்கத்திலும் மேல்மத்திய வர்க்கத்திலும் பெரிய அளவில் குடிக்கிறார்கள். கணவன் குடித்தால் அது குடும்பத்தை அழிக்கும் என்று இன்றைய மனைவியர் நினைப்பதில்லை, அளவோடு இருந்தாலும் போதும், எங்களுக்கும் ஊற்றிக் கொடுத்தால் போதும் என கோருகிறார்கள்.
அடுத்து காந்தியின் அஹிம்சை கொள்கை - ஒரு பக்கம் அவர் யாரையும் நாம் திரும்ப அடிக்கக் கூடாது, கொல்லக் கூடாது என்று கோரிக் கொண்டே இரண்டாம் முதலாம் இந்தியர்கள் அதிகமாக பிரிட்டனுக்காக யுத்தம் செய்ய வேண்டும் என்று தீவிரமாக பிரச்சாரம் செய்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் தான் வினோதமானது - சுயராஜ்ஜியம் கிடைத்த பிறகு நமக்கு ராணுவ ஆற்றல் தேவைப்படும், ஆகையால் உலகப்போரில் பங்கெடுப்பது நமது பயிற்சி அளிக்கும் என்றார். சரி இந்த லாஜிக் சரி என்றால் சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா ஒவ்வொரு பத்தாண்டும் எதாவது ஒரு நாட்டுடன் போருக்கு செல்ல வேண்டுமே, இல்லாவிட்டால் நமது ராணுவத்திற்கு எப்படி பயிற்சி கிடைக்கும்? தோட்டாக்கள் துருபிடித்து போய் விடாதா? அட தேவுடா!
அது மட்டுமல்ல, தனது சபர்மதி ஆசிரமத்தில் ஒரு இளம்பெண்ணும் ஆணும் காதலிக்க அவர்களை அழைத்து கண்டித்த காந்தி அப்பெண்ணை மொட்டையடிக்கும்படி கேட்டுக் கொண்டார் என்று லூயிஸ் பிஷர் தனது Life of Gandhi நூலில் எழுதுகிறார். அதுவே அவர்களுக்கு சுயக்கட்டுப்பாட்டை எதிர்காலத்தில் கொண்டு வருமென நினைத்தார். அவர் ஏன் அந்த ஆணை மொட்டையடிக்கும்படி சொல்லவில்லை? ஏனென்றால், பெண்ணின் அழகு கூந்தலில் இருக்கிறது, பெண்ணின் அழகைக் குறைப்பதே ஆணுக்கு தன் இச்சையை கட்டுப்படுத்த உதவும் என அவர் நினைத்தார். எவ்வளவு பிற்போக்கான சிந்தனை, எவ்வளவு மோசமான மறைமுக வன்முறை பாருங்கள். காந்தியின் காலத்தில் அவரை விட புகழ்பெற்றிருந்த இளம் தலைவர் பகத் சிங் ஆவார். பகத் சிங் சிறைப்பட்டிருந்த போது அவர் மீதான தூக்குதண்டனைக்கு காந்தி எதிர்ப்பு தெரிவித்து, அதை ரத்து செய்யும்படி கோரிக்கை வைக்கும்படி அவரது ஆதரவாளர்கள் காந்தியைக் கேட்டார்கள். ஒரு வறட்டு நியாயத்தை சொல்லி அவர் அதை மறுத்து விட்டார். காந்தியும் காந்தியவாதிகளும் பிறர் மீது நேரடியான வன்முறையை பிரயோகிக்க மாட்டார்கள். அவர்களுடைய வன்முறை மறைமுகமானது, கலாச்சாரரீதியானது. நக்சலைட்டுகளை விட மோசமான வன்முறையாளர்கள் காந்தியர்களே. அது மட்டுமல்ல, காந்திக்கும் காந்தியவாதிகளுக்கும் தமது கொள்கையில் அசலான பிடிப்போ ஆழமான புரிதலோ இருந்தாகத் தெரியவில்லை. கடுமை காட்டக் கூடாது என்பது அவர்களுடைய கொள்கை என்றால் அடுத்தவர்கள் கடுமை காட்டுவதை 'கடுமையாகவே' எதிர்ப்பார்கள். அஹிம்சையை நிறுவ சட்டப்படி ஹிம்சிக்கலாம், ஒருவரைக் கொல்லலாம் என்பது அவர்களுடைய கொள்கை. எப்படி இருக்கிறது?
இந்த மது ஒழிப்பு ஒழுக்கவாதத்தின், அஹிம்சையின் ஆபாசத்தை, அபத்தத்தை, பாசாங்கை கார்த்திக் சுப்புராஜ் தனது படத்தில் அற்புதமாக அம்பலப்படுத்தி இருக்கிறார். அதாவது இவர்களுக்கு வருமானத்துக்கு மதுவிற்பனை வேண்டும், ஆனால் மக்கள் குடிப்பது ஒழுக்கக் கேடானது, அவர்களை மட்டும் தண்டிக்க வேண்டும், ஆனால் அரசை ஆதரிக்க வேண்டும். எப்படி இருக்கிற கொள்கைப் பிடிப்பு? இந்த படத்தில் விக்ரமின் காந்தி பாத்திரத்தின் மனைவி (சிம்ரன்), மகன், மாமனார், மனைவியின் சகோதரன் ஆகியோர் இப்படியான குழப்பமான முரணான கொள்கை கொண்டவர்களே. அவர்கள் மதுவருந்தியதற்காக விக்ரமை தண்டிப்பார்கள், ஆனால் மதுவை விற்று அரசாங்கம் நடத்தும் அரசின் ராணுவத்தில் விக்ரமின் மகன் தாதாபாய் நவ்ரோஜியை (துருவ் விக்ரம்) சேர்த்து பயிற்சி அளிக்கிறார்கள். அவனுடைய ஒரே நோக்கம் மதுவை விற்று ராஜாங்கம் நடத்தும் தன் அப்பாவை முறியடித்து அவரது நண்பனையும் நண்பனின் மகனையும் கொல்லுவது. அதுவும் தாதா பாய் படம் முழுக்க ஒரு சைக்கோவைப் போன்றே நடந்து கொள்கிறான். தன் மகனின் இந்த மிருகத்தனத்தை சிம்ரனின் பாத்திரம் எந்த இடத்திலும் கண்டிப்பதில்லை. மது ஒழிப்புக்காக, சாராய லாபியை ஒழிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லலாம் என்பது அவரது நம்பிக்கை. எந்த இடத்திலும் சிம்ரன் தன் மகனை கண்டிப்பதில்லை. (அவரை கடைசி காட்சியில் கஞ்சா கொடுத்து உறங்க வைக்கிற காட்சி செம பஞ்ச்.) எனக்குத் தெரிந்து முதன்முதலாக போலிசாரின் என்கவுண்டர் கொலைகளை ரொமாண்டிசைஸ் பண்ணாமல் அதன் அத்தனை கொடூரங்களுடனும் இப்படத்தில் காட்டி இருக்கிறார்கள்.
‘இந்த லட்சியவாதம், ஒழுக்கவாதம் போன்ற விழுமியங்கள் எவற்றையும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்காமல் ஒருவன் தன் விருப்பப்படி வாழ நினைத்தால் அது தப்பா?’ என விக்ரம் இப்படத்தில் கேட்கிற கேள்வி முக்கியமானது. ஏனென்றால் மிக மோசமான வன்முறை தீவிர ஒழுக்கவாதத்தில் இருந்தே எப்போதும் பிறக்கிறது.
இப்படத்தில் நான் மேலும் ரசித்த விசயங்களின் ஒன்று அதன் காட்சிபூர்வமான நகைமுரணான மொழி - காந்தி தன் வீட்டை, குடும்பத்தை இழந்த நிலையில் ஒரு பெரிய காந்தி சிலையை கையில் ஏந்தியபடி சாலையில் நிற்கும் காட்சி தமிழ் சினிமாவின் சிறந்த காட்சிகளில் ஒன்று. அவன் பெரிய சாராய வியாபாரி ஆகிவிட்ட பிறகும் தன் வீட்டில் காந்தியின் சிலையை, ராட்டையை வைத்திருக்கிறான். துணை முதல்வரைக் கொல்ல முடிவெடுத்து அவன் வீட்டை விட்டுக் கிளம்பும்போது அந்த ராட்டையை போகிற போக்கில் சுற்றி விடுகிறான். அதுவும் ஒரு அழகான பஞ்ச். இப்படி பல காட்சிகள் படம் முழுக்க நிறைந்து கிடக்கின்றன.
மற்றொரு ரசனைக்குரிய விசயம் தமிழக அரசியல் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களுக்கு ஏற்ப இன்னொரு பக்கம் சாராய, சூதாட்ட வியாபாரமும் வளர்ந்து கொண்டே வந்ததைக் காட்டியதும், கதையை ஒரு தனிமனிதனின் குடும்பக் கதையாக மட்டும் சித்தரிக்காமல் அதை சமூக அரசியல் மாற்றங்களின் ஊடே ஒரு மாற்றுக்கதையாடலாக மாற்றியதும்.
விக்ரமின் மகனாக வரும் தாதாபாய் நவ்ரோஜியின் பெயர்த் தேர்வும் சுவாரஸ்யமானது. இந்த தாதாபாய் நவ்ரோஜி பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த காங்கிரஸ் தலைவர்களுள் முக்கியமானவர். பொருளாதார நிபுணர். எழுத்தாளர். பிரிட்டனுக்கு சென்று எம்.பியாக தேர்வாகி இந்தியர்களுக்காக பேசியவர், போராடியவர். முக்கியமாக, இவர் காந்தியின் ஆசானாகக் கருதப்படுபவர். காந்தி தேசத் தந்தை என்றால் இவர் தேசத்தின் தாதா என்றறியப்படுபவர். ஆக, காந்தி எனும் சாராய வியாபாரியான, ஆற்றல் மிக்க நாயகனை ஒழிக்கப் புறப்படும் பாத்திரத்துக்கு தாதாபாயின் பெயரை சூட்டியதன் பின்னால் அப்பனை முறியடிக்க தாத்தன் தான் வர வேண்டும் எனும் மொழிவிளையாட்டு இருக்கிறது. ஒருவேளை அப்பெயரில் உள்ள "தாதாவும்" கார்த்திக் சுப்புராஜின் கவனத்தை ஈர்த்திருக்கலாம் - ஒரு தீவிர காந்தியவாதியும், இன்றைய காங்கிரஸ் காலத்து காந்திய தேசியவாதிகளின் பிரதிநிதியுமானவன் எப்படியான வன்முறையாளனாக இருக்கிறான், ரௌடிகளுக்கே தாதாவாக இருக்கிறான், இவர்கள் எப்படி அண்டை நாடுகளில் ராணுவத்தை அனுப்பி மக்களைக் கொல்லுபவர்களாக இருந்துகொண்டே இன்னொரு பக்கம் கதர், ராட்டை என ஜல்லியடிக்கிறார்கள் என்று காட்ட இப்பெயரை அவரை தேர்ந்திருக்கலாம். இந்த பின்நவீன விளையாட்டையும் நான் ரசித்தேன்.
இப்படத்தின் திரைக்கதையில் சில குறைகள் உண்டு; அவை இப்படத்தை சற்று தொய்வடைய செய்கின்றன. அவற்றைப் பற்றி மற்றொரு பதிவில் எழுதுகிறேன்.
கார்த்திக் சுப்புராஜுக்கு இது ஒரு முக்கியமான படம். அவர் இது போன்ற வேறு பரிசோதனை முயற்சிகளை, அரசியல் பகடிகளை எதிர்காலத்திலும் செய்ய வேண்டும்.
கருத்துகள்
இப்பதிவிற்கு காரணம் இதன் உள்ளடக்கம் அல்ல. அதன் பின்னுள்ள திரைப்படம்.
மகான் படத்தை முன்வைத்து காந்தியையும் அவரது அரசியல் சமூக கருத்துக்களையும், காந்தியையும் காந்தியவாதத்தையும் இக்கட்டுரையில் அலசியுள்ளீர்கள். காந்திக்கு இருக்கும் இருவேறு நிலைகளை - சமூகம் சார்ந்த மற்றும் அரசியல் சார்ந்த பார்வை – கூறியுள்ளீர்கள். ஆனால் காந்தியவாதிகளின் குழப்பமான முரணான கொள்கைகளைப் போலவே குழம்பி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தை முன் வைத்து அவ்வாறு கூறியது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த ஓட்டுமொத்த படத்திற்கும் அடிசரடாக உள்ள ஒரு வசனம்:
‘இந்த லட்சியவாதம், ஒழுக்கவாதம் போன்ற விழுமியங்கள் எவற்றையும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்காமல் ஒருவன் தன் விருப்பப்படி வாழ நினைத்தால் அது தப்பா?’
இந்த வசனத்தின் கனம் அல்லது ஆழம், அதன் மூலம் ஒரு திரைக்கதாசியராக அவர் எழுப்பும் கேள்விக்கு அடிகோலும் தளம் படத்தில் இல்லை. ஒரு குப்பையான gangster( ஜகமே தந்திரம் !?) படம் ஒன்றாகவே எஞ்சுகிறது. அரசியல் சரிநிலைகளை நோக்கி அதன் உச்சத்தை நோக்கி ஒரே திசையில் பயணிக்கையில் இது ஒரு எதிர் திசையில் ஒரு விவாதத்தை கிளப்பியிருக்க வேண்டிய படம். ஆனால் மற்றொரு சுமாரான படமாக கடந்து விடும் வகையில் மட்டுமே இருக்கிறது. மற்றபடி ஒரு பரிசோதனை முயற்சி என்று சொல்லும் அளவுக்கு எந்த மெனக்கெடலும் தெரியவில்லை. எழுத்திலும் சரி, கட்சி பூர்வமாகவும் சரி. படத்தை விட அதை முன்வைத்து எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை மிக சிறப்பாக உள்ளது. என்னவொன்று படத்தில் எடுத்தாள நினைத்தது என்னவோ இதைத் தான். ஆனால் அது திரைகதையாகவோ காட்சியாகவோ உருபெறவில்லை.
மற்றபடி இப்படம் குறித்து எழுதப்பட்டுள்ள அனைத்தும் அபத்தமாக தெரிகிறது. தங்களது கட்டுரையை வாசித்து விட்டு படம் பார்பவர்களுக்காக பரிதாபம் கொள்கிறேன்.
- நேஹால்