ஷேன் வார்ன் (இதில் ‘ர்ர்ரை’ சற்று அழுத்தாமல் சொல்ல வேண்டும். அதுவே சரியான உச்சரிப்பு, வார்னே அல்ல) தன் உருண்டையான தேகத்துடன் ஒரு ரோட் ரோலரை தள்ளி வருவதைப் போல நடுவரை அடைந்து அனாயசமாக பந்தை சுழற்றி விடுகையில் அப்பந்து ஒரு பறவையைப் போல விருட்டென பறந்து வெளிப்பட்டு காற்றில் நின்று சிறகடிக்கும். எத்திசையில் அது பறந்து தன்னை நோக்கி வரப் போகிறது என பெரும்பாலான மட்டையாளர்கள் குழம்புவர். அவர்கள் ஒருவிதமாக கணித்து அப்பறவையை எதிர்கொள்ள நினைக்கும் போது அது சற்றே நெளிந்து வேறிடத்தில் வந்து அமரும். மீண்டும் அது ஒரு சாதாரணப் பந்தாகும். விக்கெட் அல்லது மட்டையாளரின் முகத்தில் மொக்கை வாங்கிய சங்கடம் தோன்றும். ஒரு நூல் கண்டின் ஒரு நுனியைப் பற்றி எதிரே இருப்பவரை நோக்கி நூல் பிரியுமாறு வீசுவதை வார்னின் சுழல் பந்தின் வெளிப்பாட்டுடன் ஒப்பிடலாம். ஏனென்றால் நூற்கண்டு எப்போது எங்கு விழும் என நீங்கள் நூலின் பாதையை வைத்து கணிக்க முடியாது; அதே போல வார்னின் பந்து காற்றில் சுழன்று மிதந்து (flight) சில மைக்ரோ நொடிகள் நின்று எதிர்பாராத நீளத்தில் விழுவதையும் கணிப்பது சிரமம். கிரிக்கெட் சொல்லாடலில் இதை லூப் மற்றும் டிராப் என்கிறார்கள். இது இன்று அனேகமாக மறக்கப்பட்ட கலையாக உள்ளது. இன்றைய கணிசமான சுழலர்கள் பந்தை நூறில் இருந்து நூற்று பத்து கிலோ மீட்டர் வேகத்தில் தள்ளுபவர்கள், ரன்களை கட்டுப்படுத்துபவர்கள், டெஸ்ட் போட்டிகளில் ஆடுதளத்தின் மாறுபட்ட தன்மைகளை பயன்படுத்தி பந்தை திருப்புகிறவர்கள், எகிற வைப்பவர்கள் (ரவீந்திர ஜடேஜா, ரோஸ்டர் சேஸ்), இவர்கள் அதன் அசலான பொருளில் சுழலர்கள் அல்ல. ஏனென்றால் சுழல் பந்தானது பந்தை வெறுமனே திருப்பி விக்கெட் எடுப்பது அல்ல; அது வனத்தில் சென்று விலங்குகளின் பொறி வைத்து பிடிப்பதைப் போன்றதொரு கலை. அதற்கு மதிநுட்பம், மட்டையாளன் என்ன சிந்திக்கிறான், எதைத் திட்டமிடுகிறான் என்பதை மனதில் காட்சிப்படுத்தும் கற்பனை, அதற்கேற்ப களத்தை அமைத்து அவனது மனதோடு விளையாடும் குறும்பு, விளையாட்டு என்பதில் அதன் முடிவு அல்ல தருணங்களும், சாகசமுமே முக்கியம் எனும் புரிதல், பொறுமை, பந்தின் நீளம், திசை, சுழற்சி ஆகியவற்றை விருப்பத்திற்கு ஏற்ப கட்டுப்படுத்தும் திறமை எல்லாம் ஒருசேர அமைய வேண்டும். ஷேன் வார்ன் அதில் ஒரு மேதையாகத் திகழ்ந்தார். (இன்றைய உலகக் கிரிக்கெட்டில் அஷ்வினை ஓரளவுக்கு இதில் வார்னின் வாரிசாகப் பார்க்கலாம்.)
வார்ன் பந்தை வீசும் போது மட்டையாளர்களின் காலாட்டத்தை கவனிப்பது ஒரு தனி சுவாரஸ்யம் - சச்சின், லாரா போன்ற மிகச்சிலரைத் தவிர கணிசமானோருக்கு பந்தின் நீளத்தை கணிப்பது சிரமம் என்பதால் ஒரு சிறிய தடுமாற்றத்துடனே தயாராவர். தொண்ணூறுகளின் இங்கிலாந்தின் மட்டையாளர்களுக்கு அவரது பந்துகளின் திசையை கணிப்பதே அசாத்தியமாக இருந்திருக்கும் என்பதால் வெளியே போகும் பந்தென எண்ணி உள்ளே வரும் பந்தை ஆடி கோமாளிகளாகத் தோற்றமளிப்பார்கள். பந்து எந்தளவுக்குத் திரும்புகிறது என்பதைக் கொண்டல்ல (மைக் கேட்டிங்கை அவர் வீழ்த்திய நூற்றாண்டின் பந்து) மட்டையாளர்களை எந்தளவுக்கு தடுமாற வைத்தார் என்பதைக் கொண்டே நாம் வார்னை மதிப்பிட வேண்டும்.
நியுசிலாந்தில் அந்நாட்டுக்கு எதிராக ஆஸ்திரேலியா ஆடிய ஒரு போட்டியில் மெக்மில்லனுக்கு வார்ன் வீசிய ஓவர் ஒன்றை உதாரணமாக இங்கே அலசலாம். நான்காவது இன்னிங்ஸில் நியுசிலாந்து மூன்று விக்கெட்டுகளை இழந்து 79 ரன்களுக்கு முன்னிலையில் இருக்கிறது. இன்னொரு இருநூறு ரன்களை அடித்தால் நல்லதொரு இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு நான்காவது இன்னிங்ஸில் நிர்ணயிக்கலாம். மெக்மில்லன் விக்கெட்டில் இருக்கிறார். அவர் அதிரடி மட்டையாளர். வார்னை அதற்கு முன்பு நன்றாக ஆடியுள்ளவர். வார்ன் வழக்கம் போல தனது கள அமைப்பாலும் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதன் வழியாகவும் மெக்மில்லனின் மனதில் சந்தேகத்தை, அச்சத்தை விதைக்கிறார். “எதையோ பயங்கரமா பிளான் பண்ணுறாங்க போல, கைப்புள்ள உஷாரு” என மெக்மில்லன் மனதில் நினைத்திருக்கலாம். அவரது இடது காலுக்கு வெளியே ஆடுதளத்தில் ஒரு கரடுமுரடான பகுதி தென்படுகிறது. அங்கு மண் சற்று இளகியதாக இருக்கும் என்பதால் பந்து பட்டால் எகிறும், சுழலும். வார்ன் களத்தடுப்பாளர்களை off sideஇல் வெகுவாக குறைத்து கால் பக்கமாக அதிகமாக நிறுத்துகிறார். ஒரு ஸ்கொயர் லெக் வேறு இருக்கிறது. ஆகையால் பந்தை கண்டிப்பாக இளகின மண்ணுள்ள பகுதியில் போட்டு பயங்கரமாகத் திருப்ப முயல்கிறார், ஒரு போதும் மட்டையை வைத்து தடுத்தாடி எட்ஜ் கொடுத்து விடக் கூடாது என நினைக்கும் மெக்மில்லன் வார்ன் வீசும் முதல் மூன்று பந்துகளை தன் பேடால் தடுக்கிறார். அதாவது காலால் தடுக்கிறார், மட்டையால் அல்ல. ஆனாலும் அவருக்கு பந்து எங்கே விழுகிறது என்பதில் குழப்பமிருப்பதால் பின்னங்காலுக்கோ முன்னங்காலுக்கோ முழுசாக வராமல் தடுமாறியபடி ஆடுகிறார். அதாவது சென்னையில் பெருமழை பெய்து குண்டு குழியான சாலையில் நீர் வேறு தேங்கியிருக்கும் போது நாம் பள்ளம் ஏது மேடு ஏதெனத் தெரியாமல் பேண்டைத் தூக்கிக் கொண்டு நடப்போமே அதே போலத் தான் மெக்மில்லன் ஆடுகிறார். வார்ன் இப்போது ஒரு காரியத்தை செய்கிறார். அவர் காலால் தடுப்பதை நிறுத்தும் நோக்கில் பந்தை அதன் மிதப்பில் முழுநீளமாக விழும்படி பண்ணுகிறார். அத்தகைய பந்துகளை மட்டையால் தடுத்தாக வேண்டும் என்பது அவரது எண்ணம். ஆனால் இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகள் புல் டாஸ்களாக விழுகின்றன. மெக்மில்லன் தனது பதற்றத்தில் அவற்றை பவுண்டரிக்கு அடிக்காமல் பேடால் தடுத்து விட பின்னிருந்து விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் சத்தமாக சிரிக்கிறார். சீண்டுகிறார். ஆனால் வார்ன் அவ்வாறு கலாய்க்கவில்லை. அவர் வெகு சீரியஸாக மற்றொரு திட்டமிடுகிறார். பந்தை சற்று தள்ளி கால் பக்கத்துக்கு வெளியே போடுகிறார். அதை ஒரு மட்டையாளர் விட்டு விட்டாலும் ஒன்றுமாகாது. ஆனால் சில நேரம் மட்டையாளர் பந்து உள்ளே வந்து விடும் என அஞ்சியோ அது தனது பார்வை வட்டத்துக்கு வெளியே விழுகிறது எனும் எண்ணம் ஏற்படுத்தும் தடுமாற்றத்தில் மட்டையாலே ஆட முனைவார்கள். அப்போது அவர்களுடைய தலையின் நிலையமைதி இல்லாமல் ஆகும், பந்தை கட்டுப்படுத்த முடியாது. மெக்மில்லன் அப்படியே பந்தை நேராக ஸ்கொயர் லெக் தடுப்பாளரின் கையில் அடித்துக் கொடுத்து விட்டு அவுட் ஆகிறார். வார்ன் அவரைத் தனது கள அமைப்பால், கற்பனையால், சூழ்ச்சியால் முழு முட்டாளாக்கி விட்டார். இப்படி வார்னின் பெரும்பாலான பந்துகளைப் பற்றி நான் ஒவ்வொரு பத்தி எழுத முடியும். அந்தளவுக்கு கிரிக்கெட்டை ஒரு சதுரங்கமாகக் கண்டவர் வார்ன். 2020இல் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு சென்று டெஸ்ட் போட்டித்தொடரை வென்றதே நினைவுள்ளதா? ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் தனது எல்லா பந்துகளையும் ஆப் ஸ்டம்புக்கு வெளியே சென்று நின்று கொண்டு ஆடுபவர். அவரை கட்டுப்படுத்தும் நோக்கில் பந்து வீச்சாளர்கள் ஆப் ஸ்டம்புக்கு வெளியே வைடாகவே வீசுவது வழக்கம். ஆனால் அஷ்வினோ மற்றொரு வியூகம் வகுத்தார். கால் ஸ்டம்பில் இருந்து வெளியே (வைடாக) பந்தைக் கொண்டு போனார். இது ஸ்மித்தின் தலையின் நிலையமைதியை, காலாட்டத்தை குலைத்திட அவர் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இது அப்படியே வார்னின் ஆட்டநூலின் வியூகம் ஒன்றை அஷ்வின் கடன் வாங்கியதாகவே தெரிகிறது.
வார்ன் தனது ‘வேட்டை இலக்குகளை’ சொல்லி வைத்துப் ‘வீழ்த்துவதும்’ ஒரு கண்கொள்ளாத காட்சியாகும். குறிப்பாக ஒருநாள், டி-20 போட்டிகளில் அவர் குறிப்பிட்ட இடங்களில் தடுப்பாளர்களை நிறுத்தி அங்கே சரியாக கேட்ச் விழும்படி பண்ணுவார். ஒரு ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் அணியின் தலைவராக அவர் ஆடிய போது ஒரு சிறிய இலக்கை சிறப்பாக வீசி தடுத்தாடி வென்றார். குறிப்பாக கெய்ல் மட்டையாடிய போது பந்து வீச வந்த வார்ன் ஒரு ஷார்ட் மிட்விக்கெட்டை வைத்து பந்தை பிளைட் செய்து கெய்லுக்கு உள்ளாகக் கொண்டு வந்தார். அதாவது வழக்கமான கால்சுழல் பந்தை வீசினார். ஆனால் பந்து மிதந்து வரும் போது கெயிலுக்கு அது அடிக்கும் வாகில் சரியான திசையில் விழுவதாக ஒரு மயக்கத்தை ஏற்படுத்தினார். கெயில் முட்டியை மடித்து அடித்த போதோ பந்து அவருக்கு ரொம்ப நெருக்கமாக வந்து விழ அவரால் வசதியாக வீசி அடிக்கும் அளவுக்கு இடமிருக்கவில்லை. விளைவாக பந்து மட்டையின் ஒரு பாதியில் மட்டுமே பட அவர் எங்கே தடுப்பாளரை வைத்தாரோ அங்கே கேட்ச் சென்றது. “சொன்னேன் பார்த்தியா?” என்று அவர் தன் அணியினரிடம் சைகை செய்து அந்த வெற்றியைக் கொண்டாடினார். இதே போல பிக்பேஷ் தொடரில் ஆடும் போது வார்ன் இயர்போனை மாட்டிக் கொண்டு டிவியில் பார்வையாளர்களிடம் தனது திட்டமென்ன, எப்படி மட்டையாளரை வீழ்த்தப் போகிறேன் எனப் பேசிய படியே அவ்வாறே மெக்மில்லனை ஸ்வீப் செய்ய வைத்து பவுல்ட் ஆக்கிக் காட்டினார். அதனால் தான் அவரை ஒரு மாய வித்தைக்காரர் என்று அழைக்கிறார்கள். உண்மையில் இதில் மாயமந்திரம் ஒன்றுமில்லை - தொடர்ச்சியான பயிற்சியாலும் பொறுமையாலும் தன்னம்பிக்கையாலும் அவர் பெற்றுள்ள நீளம், திசை மீது பெற்றுள் இருக்கும் கட்டுப்பாடு, பிளைட், லூப் மீது உள்ள ஆளுமையே அவரை முழுக்க மட்டையாளர்க்ளை தன் கடிவாளத்தில் வைத்திருக்க உதவியது.
கூடவே அவரது வலுவான தோள்களும் பந்துக்கு அதிக சுழற்சியைக் கொடுக்க, அதிக ஆற்றலை அளிக்க உதவியது. உதாரணமாக இடதுகை கால்சுழலரான குல்தீப் யாதவ் டெஸ்ட் போட்டிகளில் வீசும் போது கணிசமான பந்துகள் முழுநீளத்தில் விழுவதைப் பார்க்கிறோம். இது அவர் திட்டமிட்டு செய்வதல்ல, பிளைட் மீது கட்டுப்பாடு இல்லாததால் வரும் சிக்கலே. அதே போல குல்தீப், சஹல், அஷ்வின் போன்றோர் பந்து சுழன்று விழுந்த பின் அதற்குக் கிடைக்கும் வேகமான திருப்பத்துக்கு ஆடுதளத்தை நம்பியிருப்பதைக் காண்கிறோம். ஆனால் வார்னால் எந்த ஆடுதளத்திலும் பந்தை தான் விரும்பும் வேகத்தில் வர வைக்கவும், சுழலுக்கு எந்த பாதகம் வராமல் பார்க்கவும் முடியும். அந்தளவுக்கு தன் மொத்த உடலையும் அவர் பந்துவீச்சு ஆக்ஷனில், பந்தின் வெளிப்பாட்டில் செலுத்தினார். அது மட்டுமல்ல வார்னைப் பொறுத்தவரையில் பெரும்பாலான பந்துகள் விழும் விதம் அவரது வியூகத்தில் வரும் காய்நகர்த்தலாகவே இருக்கும்; எல்லா கால்சுழலர்களையும் போல அவரது சில பந்துகளை குறைநீளத்தில், ரொம்ப ஷார்ட்டாக விழுவதுண்டு, ஆனால் தனது அடிப்படைகளில் அவர் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தார். ஒரு பார்வையற்ற பியானோ கலைஞனைப் போல ஆடுதளத்தை, சூழலை, எதிரணியை முழுக்க பொருட்படுத்தாமல் தன்னுடைய ஆக்ஞைக்கு ஏற்ப ஆட்டத்தை நடத்த அவரால் முடிந்தது. மட்டையாளரையும் களத்தடுப்பாளர்களையும் உள்ளடக்கி பன்னிரெண்டு பேர்களின் அசைவுகளையும் ஒரே நேரத்தில் துல்லியமாகத் திட்டமிட்டு நகர்த்த முடிந்தது.
வார்னின் இந்த ஆளுமைக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அன்றைய (தொண்ணூறுகளில் இருந்து ரெண்டாயிரத்தின் இறுதி வரை) அதிரடியான, பிரச்சனைகளின் முன்பு பின்வாங்காத கலாச்சாரத்துக்கும், வார்னுடன் ஆடிய மிகத்திறமையான மட்டையாளர்கள் மற்றும் வேக வீச்சாளர்கள் எதிரணி மீது ஏற்படுத்தும் அழுத்தத்துக்கும் ஒரு தொடர்பு உள்ளது. பிற மட்டையாளர்களும் வீச்சாளர்களும் ஒரு படையை துப்பாக்கிகளாலும் ஏவுகணைகளாலும் தாக்கி எதிரிப் படையில் பெரும்பாலானோரை அழித்து விட்ட நிலையில் ஷேன் வார்ன் ஒரு புல்டோசரைக் கொண்டு வந்து மீதமுள்ளோரை நசுக்கி தரையோடு தரையாக்குவார். அப்படித் தான் அந்த காலத்தில் ஆஸ்திரேலிய ஆதிக்கம் இருந்தது. வார்ன் விக்கெட் எடுக்காவிடினும் கணிசமான போட்டிகளில் அவர்கள் வெல்லத்தான் போகிறார்கள் என்பது அவரை இன்னும் ஆபத்தான ஆயுதமாக்கியது. ஒருவேளை அவர் இங்கிலாந்து, இலங்கை, நியுசிலாந்து போன்ற அணிகளில் ஆடியிருந்தால் இந்தளவுக்கு சுதந்திரமாக, ஆட்ட சுதந்திரத்துடன் இருந்திருக்க முடியாது தான்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் வார்ன் லாஸ் வெகோஸின் காஸினோ விடுதிகளில் சூதாட்டத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார் என்றும், சில நாட்களில் பெரும் பணத்தை இழப்பதைப் பற்றி கவலையில்லாமல், தனது மோசமான ஆட்டத்தின் பின்விளைவாகவே நட்டமடைகிறோம் எனப் புரியாமல், தான் சிறப்பாகவே சூதாடுகிறோம் என அவர் நம்புகிறவராக இருந்தார் என பத்திரிகையாளர் ஆண்டிரூ மில்லர் கூறுகிறார். அவர் வார்னின் சூதாட்ட போதைப்பழக்கத்தைப் பற்றி விவரிக்கையில் நமக்கு தஸ்தாவஸ்கியின் “சூதாடி” நாவல் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலாது.
வார்னைப் போன்ற ஒரு மேதை விளையாட்டை மட்டுமல்லாமல் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக பெரும் சாகச வெளியாக, கொண்டாட்ட களமாகப் பார்ப்பவராகவும் இருக்கையில் சிக்கல்கள் மிகுந்ததாக, சர்ச்சைகளால் வண்ணமூட்டப்பட்டதாக அது மாறுவதை தவிர்க்க முடியாது. கையில் பந்துடன் மட்டையாளர்களை துவம்சம் செய்யும், தொடர்ந்து அதிர்ஷ்டத்துடன் ஜல்லிக்கட்டு ஆடும் ‘பிளேபாயாக’ அவரால் இருக்க முடிந்தது. வெளியே மட்டையாளர்களின் இடத்தை பெண்கள் எடுத்துக் கொண்டார்கள் என நினைக்கிறேன். செவிலியரில் இருந்து ஹாலிவுட் நடிகையர் வரை அவர் யாரையும் விட்டு வைக்கவில்லை. திருமண உறவில் இருக்கையில் தன்னைக் கவர்ந்த, தன்னால் ஈர்க்கப்பட்ட பெண்களுடன் காதல் விளையாட்டை ஆடுவதில் எந்த தவறும் இல்லை என அவர் நினைத்திருக்கலாம். ஒரு கிரிக்கெட் வீரராக அவர் விதிகளை உடைப்பவராக, அதில் திகைப்பை, திளைப்பை அடைபவராக இருக்க, உறவுகளில் மட்டும் ஒழுக்க விதிகளைப் பொருட்படுத்துவாரா என்ன? இத்துடன் அவரது தொடர்ந்த குடிப்பழக்கமும் சேர்ந்து கொள்ள அவரது மனைவியுடன் முதல் மனைவியுடன் பிரிய நேர்ந்தது. ஆனாலும் பிறழ் உறவுகளை சற்றே நிறுத்தி வைத்து மனைவியுடன் சமரசம் பண்ணிக் கொண்டு சேர்ந்தார். ஆறு மாதங்களில் அந்த சமாதான உடன்படிக்கை முறிந்தது. காரணம்? நீங்கள் எதிர்பார்த்தது தான் - வேறு ஒரு பெண்ணுக்கு அனுப்ப வேண்டி குறுஞ்செய்தியை தன் மனைவிக்கே அனுப்பி விட்டார். அதன் பின்னரே ஹாலிவுட் நடிகை எலிசபெத் ஹர்ளியுடன் வார்னுக்கு காதல் உறவு ஆரம்பிக்கிறது. இருவரும் சில காலம் சேர்ந்து வாழ்ந்தார்கள். வேறெந்த பெண்ணையும் போல ஹர்ளிக்கும் வார்னின் காதல் சதிராட்டத்தின் ஏற்றத்தாழ்வுகளை, எதிர்பாராத நிலைமாற்றங்களை சகித்துக் கொள்ள முடியாமல் போயிருக்கலாம். அல்லது அவரது காதலே மிகையின் உச்சத்தில் நின்று நர்த்தனமாடும் மூச்சுத்திணற வைக்கும் உணர்வுப்போராட்டமாக இருந்திருக்கலாம். அவருக்கு திகட்டிப் போயிருக்கலாம். எப்படியோ ஹர்ளியை விட்டுப் பிரிந்த பின்னர் வார்ன் சொன்னார், “அவருடன் இருந்தது என் வாழ்வின் சிறந்த பருவங்களில் ஒன்று; நான் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தேன். அவரைப் பிரிந்த பின்னரே அவரை நான் உண்மையிலே நேசித்தேன் என்று புரிந்து கொண்டேன்.” ஒருவேளை இது கூட அவர் ஹர்ளிக்கும் மீண்டும் வீசிய தூண்டிலாக இருந்திருக்கலாம். அல்லது வேறு பலரிடமும் அவர் சொல்லிய ஒரு பழைய வசனமாக இருக்கலாம். அல்லது ஒரு வேட்டையாளி தான் நீண்ட தூரம் துரத்தி பின்னர் இழக்க நேர்ந்த அழகிய இரை ஒன்றின் மீதான ஏக்கமாக இருக்கலாம்.
கவாஸ்கர் வார்னின் துரித மரணத்தைப் பற்றி பேசுகையில் “அவர் வாழ்வை முழுமையாக வாழ்ந்தார், ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடினார், வாழ்க்கையை ஒரு மிடறு மிச்சம் வைக்காமல் அருந்தி விட வேண்டும் எனத் தவித்தார், ஒருவேளை அவரது இதயத்தால் அந்தளவுக்கு கிளர்ச்சியை, ஆவேசத்தை, உணர்ச்சி வேகத்தை தாள முடியாமல் போய் அது வெடித்திருக்கலாம்” என்றார். 52 வயதில் அவர் விடைபெற்ற போது உலகம் முழுக்க அவரது ரசிகர்களால் அதைத் தாங்க முடியாமல் போனது கடைசி வரை ஒரு குழந்தையாகவே அவர் தன்னை முன்வைத்ததால் இருக்கலாம், அவரது நீடித்த குழந்தைமையைக் கண்டு நமக்கு அவருடைய 52 ஆண்டுகள் கூட 12 வயதைப் போலத் தோன்றியிருக்கலாம்.
வளர்ந்தவர்களின் ஆட்டத்தில் ஒரு குழந்தையின் சாகச உணர்வை, விளையாட்டுத்தனத்தை, குறும்புகளை, தன்னை முரட்டுத்தனமாக காட்டிக் கொள்ளும் சிறுப்பிள்ளைத்தனத்தை, அபாரமான திறமையை அவரைப் போல மற்றொரு வீரரால் காட்ட இயலாது. அதனாலே மற்றொரு வளர்ந்த குழந்தையான சச்சின் அவரை எதிர்கொண்டு துவம்சம் செய்த போது மொத்த உலகும் எழுந்து நின்று கைதட்டியது. வார்ன் போன பின்னர் கிரிக்கெட் மீண்டும் ஒரு முதிர்ச்சியான நிதானமான வரைமுறைகளுக்கு உட்பட்ட வறட்சியான ஒரு போட்டியாகி விட்டது. கண்ணன் துவாரகைக்கு சென்ற பின்னர் கோகுலத்து பசுக்களும் கோபிகையரும் தனியாகி விட்டதைப் போல ரசிகர்கள் உணர்கிறோம். இது வெறுமனே ஒரு பந்து வீச்சாளரின் முடிவல்ல, இது ஒரு லீலையின் முடிவு!

கருத்துகள்