முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீதியும், நீதிவானும் - சாக்ரடீஸின் வாதங்கள்


நீதி குறித்ததெளிவானஎளிய விளக்கங்கள் நம்மிடையே உள்ளன. சமத்துவம் நீதிக்கு ஒரு உதாரணம். ஒரு ஏழையை பணக்காரன் ஒடுக்கும் போது நாம் ஏழை ஜெயிப்பதே நீதி என்கிறோம். அந்த ஏழை ஒரு மேல்சாதிக்காரனாக இருந்து ஒரு தலித்தை ஒடுக்கும் போது நாம் தலித் ஜெயிப்பது நீதி என்கிறோம். இப்போது இந்த ஏழையானவன் தன் தேசத்துக்கு துரோகம் இழைத்து விடுகிறான். அதற்குக் காரணம் ஏற்றத்தாழ்வு தான். ஏற்றத்தாழ்வு உண்டு பண்ணின கோபத்தால், தன்னை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் அவன் தன் தேசத்துக்கே துரோகம் இழைத்து விடுகிறான். இப்போது அவன் செய்வது அநீதி. அவனை அரசு கைது செய்து சிறையில் வைத்து வதைக்கிறது. அவனுடைய வழக்கு நீண்ட படியே செல்கிறது. அவன் துரோகம் இழைத்தான் என்பதற்கான சான்றுகள் தெளிவாக சீராக சமர்ப்பிக்கப்படவில்லை. குற்றத்தை நிரூபிப்பதை விட அவனை சிறையில் தொடர்ந்து வைத்திருப்பதையே அரசு விரும்புகிறது எனத் தெரிகிறது. இப்போது அவன் மீது நம்மில் சிலருக்கு இரக்கம் தோன்றலாம். அவனுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் - ஒன்று அவன் மீதான விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு அவனுக்கு தெளிவான தண்டனை வழங்கப்பட வேண்டும் அல்லது அவன் விடுவிக்கப்பட வேண்டும் - எனக் கோருகிறோம். நகைமுரணை கவனியுங்கள் - முந்தின சந்தர்பத்தில் அவன் செய்வது அநீதி என்பது தெளிவாக இருக்க, நீதி என்பது அவன் கைதாவதுடன் நிறைவேறுகிறது. ஆனால் அடுத்ததிலோ, அவனுக்கான விசாரணை நியாயமாக நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுவதே அவனுக்கான நீதியாகிறது, ஏனென்றால் அவன் இப்போது அநீதிவான் என்பது தெளிவாக இல்லை. அவன் நீதிவானா என்பதும் தெரியவில்லை. மாறாக, இப்போது அரசு இப்போது அநீதி இழைக்கிறதாக மாறுகிறது. இப்படி நீதியின் பொருளானது அதிகார சமநிலை, சமத்துவம் என்பதில் இருந்து ஒரு அமைப்பின் நடைமுறை பின்பற்றுப்படுவதாக ஆகிறது.

இன்றைக்கு நீதி அதிகமும் பேசப்படுகிற மற்றொரு இடம் வாடிக்கையாளர்-விற்பனையாளர் வணிக பரிவர்த்தனை. ஒருவர் தூக்கு மாட்டிக் கொள்வதற்காக ஒரு வலுவான கயிறை வாங்குகிறார். கடையில் ரொம்ப நல்ல கயிறு சார் எனச் சொல்லி ஒன்றைக் கொடுக்கிறார்கள். ஆனால் அதை மாட்டித் தொங்கினால் பட்டென அறுந்து விடுகிறது. வாடிக்கையாளருக்கு கீழே விழுந்ததில் முட்டியில் அடி. முழங்கையில் சிராய்ப்பு. அத்தோடு அவரது திட்டம் வேறு தோல்வியடைந்து விட்டது. அவர் கடைக்கு சென்று கத்துகிறார். “கடைக்காரர் இது நல்ல கயிறு தான் சார்என நியாயப்படுத்துகிறார். அது இவரை இன்னும் கடுப்பாக்குகிறது. தனது அநீதி இழைக்கப்பட்டதாகக் கருதுகிறார். நியாயம் தானே? ஆனால் இது அநீதி என நீங்கள் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள். தரமற்ற கயிறை விற்பது அநீதியே. ஒரு மலையேற்றத்தின் போது இந்த கயிறு அறுந்து விழுந்து ஒருவருக்கு காயம் படுகிறது. கொஞ்சம் தப்பியிருந்தால் அவர் இறந்தும் போயிருக்கலாம். ஆனால் கயிறை ஏன் பயன்படுத்துகிறார் என்பதே நீதியின் பொருளை அங்கு தீர்மானிக்கிறது. தரமற்ற கயிறு அல்ல


நீதி குறித்து மேலே நான் குறிப்பிட்டுள்ளதை விட சுவாரஸ்யமான சிக்கலான வாதங்கள் பிளேட்டோவின் Dialogues நூலின் ஒரு பகுதியான Republicஇல் வருகிறது. இதில் பிளேட்டோவின் குருவான சாக்ரடீஸ் ஒரு பாத்திரமாக வருகிறார். சாக்ரடீஸின் நோக்கம் ஒரு தத்துவக் கோட்பாட்டை உருவாக்குவதோ அதன் கோணத்தில் ஒரு விசயத்தை விளக்குவதோ அல்ல. சாக்ரடீஸ் இந்த பொருளில் ஒரு தத்துவஞானியே அல்ல. அவர் எதையும் தனது நம்பிக்கை, கருத்து, கோட்பாடு என முன்வைத்ததில்லை. இது தவறு, இதற்கு மாறான மேம்பட்ட பார்வை இது என சொன்னதில்லை. மாறாக, அவர் அனைத்து கருத்துருக்களையும் நாம் புரிந்து கொண்டுள்ள விதத்தின் பிழைகளை சுட்டுகிறார். சுட்டும் போதும் அவரது நோக்கம் சரியாக எப்படி புரிந்து கொள்வது எனக் காட்டுவதல்ல. நாம் எதையும் சாராம்சமாக உறுதியுடன் முன்வைக்கும் போது உண்மையில் அது நிறைய உள்முரண்களுடன் குழப்பங்களுடன் இருக்கிறது எனப் பார்ப்பதில்லை. நமது சட்டையில் உள்ள கறை நமக்குத் தெரிவதில்லை, அடுத்தவர்களின் கறைகளைப் பற்றி மட்டுமே பேசுகிறோம். சாக்ரடீஸ் நமது புரிதல்களின் தர்க்கப்பிழைகளை அம்பலப்படுத்தி எதையொன்றையும் அவ்வளவு நம்பிக்கையுடன் பிடிவாதத்துடன் சாராம்சமாக நாம் முன்வைக்க வேண்டியதில்லை, அர்த்தங்கள் எப்போதும் எதிர்-அர்த்தங்களின் துணையுடனே உயிர்த்திருக்கின்றன என அவர் காட்டுகிறார். நம்பிக்கைகள், கருத்தாக்கங்கள், அவற்றைக் கொண்டு ஏற்படும் புரிதல்களின் ஓட்டைகளை இவ்வாறு அம்பலப்படுத்தினால் அது மனிதனை விடுவிக்கும் என அவர் நம்பினார்

சரி, இப்போதுரிபப்ளிக்கில்எப்படியான வாதங்கள் வருகின்றன எனப் பார்ப்போம். சாக்ரடீஸ் ஒரு விழா நாள் மாலையில் தனது பணக்கார நண்பரான செபலஸ் மற்றும் அவரது மகன் பொலிமார்க்கஸ் ஆகியோரை தன் நண்பர்கள் சூழ போய் பார்க்கிறார். அப்போது ஒரு கேள்வி-பதில் விவாதம் துவங்குகிறது:

 செபலஸ் தான் வயோதிகக் காலத்திலும் மகிழ்ச்சியாக இருப்பதாக, அதற்கு தனது மன-அமைப்பும் இயல்புமே காரணம் என்கிறார். அதற்கு சாக்ரடீஸ் ஒருவேளை நீங்கள் செல்வந்தராக இருப்பதும் உங்கள் வயோதிகக் கால நிம்மதிக்கு காரணமாக இருக்கலாமோ எனக் கேட்கிறார். செபலஸ் அதற்கு பணமும் தனது மகிழ்ச்சிக்கு காரணமே என ஏற்கிறார். ஆனால் அது மட்டுமல்ல என சொல்லும் அவர்ஒரு நல்லவன் வயோதிகத்தில் பணமில்லாமல் கஷ்டப்படலாம். ஆனால் ஒரு தீயவன் வயோதிகத்தில் தன்வசம் எவ்வளவு செல்வம் இருந்தால் துன்பப்படவே செய்வான்என்று சொல்லி பணம் உதவுமெனிலும், நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்கு ஆதாரமாக இருப்பது அதுவல்ல, மனித இயல்பே என வலியுறுத்துகிறார். இப்போது சாக்ரடீஸ் மேலும் சில கேள்விகளை இதை ஒட்டி கேட்கிறார்:

1) செபலஸிடம் உள்ள செல்வமானதுஅவர் சம்பாதித்தா அல்லது வாரிசு வழியாக கிடைத்தா?” அதற்கு செபலஸ்இரண்டாவது வழியில் வந்ததுஎன்கிறார்.

2) செல்வத்தினால் கிடைக்கும் பலன்களில் பிரதானமானது எதுவென வினவுகிறார்? இதற்கு செபலஸ்பணம் படைத்தவர்கள் பணத்துக்காக ஒழுக்கக் கேடுகளில், தவறுகளில் ஈடுபட அவசியமிருக்காது. அவர்கள் கடவுளுக்கு செய்யும் நேர்ச்சைகளில் குறை வைக்க தேவையிராது. யாருக்கும் கடன்பட்டிருக்க வேண்டியிராது, இதனான் வயோதிகத்தில் குற்றவுணர்வுடன், மரணத்துக்குப் பின்பான நகர தண்டனைகள் குறித்த அச்சத்துடன் வாழ வேண்டியிராதுஎன்கிறார்.

இந்த இரண்டாவது பதிலை சாக்ரடீஸ்ஒருவர் செல்வம் படைத்தவர் எனில் அவர் நீதிவானாக வாழலாம்என சொல்வதாக சுருக்கிக் கொள்கிறார். பணம் படைத்தவர்களும் தவறு செய்கிறார்களே என மறுவாதத்தை அவர் வைப்பதில்லை. மாறாக, நீதி என்றால் என்ன எனக் கேட்கிறார். ஏனென்றால் இதுவே சாக்ரடீஸுக்கு முக்கியமான ஒரு விவாதப்புள்ளியாகப் படுகிறது. வேறு பல சந்தர்பங்களிலும் சாக்ரடீஸ் பொது விவாதங்களை பக்தி என்றால் என்ன எனும் முக்கியமான வினாக்களை நோக்கி திருப்புவதை நாம் பார்க்கிறோம் (.தா., “யுதிப்ரோ”). இங்கு தான் விவாதம் சூடு பிடிக்கிறது.

செபலஸ்உண்மையை சொல்வதும், கடன்களை திருப்பி அளித்தலுமே (கடமையை நிறைவேற்றுவது)” நீதி என்கிறார். இது ஒரு சரியான விளக்கம் அல்ல என்கிறார் சாக்ரடீஸ். உதாரணத்திற்கு ஒரு நண்பர் நம்மிடம் கொலைக்கருவிகளை ஒப்படைத்து விட்டு பிறகு வாங்கிக் கொள்வதாக சொல்லிவிட்டுப் போகிறார். இடையே அவருக்கு பைத்தியம் பிடித்து விடுகிறது. இப்போது அவர் உங்களிடம் திரும்ப வந்து ஆயுதங்களைக் கேட்கும் போது நீங்கள் கொடுப்பதே உங்கள் கடமை. அப்படி செய்வதே உண்மையாக இருப்பது. ஆனால அதைச் செய்தால் சமூகத்துக்கு நீங்கள் கடமை பிழைத்தவர் ஆவீர்கள், நடக்கப் போகும் கொலைக்கு உதவியர் ஆவீர்கள். அந்த இடத்தில் உண்மைக்கு மாறாக செயல்படுவதே நீதியாக இருக்கிறது. செபலஸ் இப்போது தனக்கு வெளியே செல்ல வேண்டி இருப்பதால் தன் மகனாகிய பொலிமார்க்கஸ் விளக்கத்தை அளிப்பார் என சொல்லி விடைபெறுகிறார். விவாதம் இப்போது சாக்ரடீஸுக்கும் பொலிமார்க்கஸுக்கும் இடையிலானதாக மாறுகிறது.

பொலிமார்க்கஸ் தன் தந்தையின் விளக்கத்தின் போதாமையை ஒப்புக் கொள்கிறார். “பொதுவாக நண்பர்கள் நல்லவர்கள், விரோதிகள் கெட்டவர்கள் எனும் அர்த்தத்திலேயே அந்த விளக்கம் தரப்பட்டதுஎன்கிறார் அவர். “ஒருவருக்கு எது பொருத்தமோ அதை அளிப்பதே நீதி என வகுத்துக் கொள்ளலாமா?” என சாக்ரடீஸ் கேட்க, அதை பொலிமார்க்கஸ் ஏற்கிறார். இந்த விளக்கமானது சரியானதா எனப் பார்ப்பதற்காக சாக்ரடீஸ் சில உவமைகளை எடுத்துக் கொண்டு பரிசீலிக்கிறார். மருத்துவமானது உடலுக்கு மருந்தை அளிப்பது. சமையலானது மனித உடலுக்கு சாப்பிடும்படியாய் உணவை தயாரித்து அளிப்பது எனும் விளக்கங்களுக்கு வரும் சாக்ரடீஸ் இதையே நீதிக்கும் சொல்ல முடியுமா எனக் கேட்க பொலிமார்க்கஸ் ஏற்கிறார். அப்போதுநீதியானது நண்பர்களுக்கு பலன்களையும் விரோதிகளுக்கு கெடுதியையும் அளிப்பதுஎன ஒரு விளக்கத்துக்கு பொலிமார்க்கஸ் வருகிறார்.

 இதுவரை சந்தர்பத்தை பொறுத்து நீதியின் பொருள் மாறுவதைக் காட்டிய சாக்ரடீஸ் இப்போது நீதி என்பது அது யாருக்கு கொடுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்ததா எனும் கேள்வியை எழுப்புகிறார். இந்த இடத்தில் இருந்து சாக்ரடீஸ் அடுத்தடுத்த கேள்விகளுக்கு வருகிறார்.


இந்த விளக்கமானது சந்தர்பங்களை சார்ந்தே உள்ளது என சாக்ரடீஸ் காட்டுகிறார். ஒரு கப்பல் கேப்டனைப் பொறுத்தமட்டில் அவரது நீதியானது தன் பணியை நேர்த்தியாக செய்வதே. ஒரு மருத்துவர்கள் பொறுத்தமட்டில் (அந்த கால நடைமுறையைப் பொறுத்து, அவர் சிகிச்சையளிப்பதுநல்லவர்களுக்குமட்டுமே என்றாலும்) ஒரு நோயுற்ற உடலுக்கு மருந்து வழங்குவதே நீதி. ஒருவர் கப்பல் பயணம் போகாத போது கப்பல் கேப்டனுக்கு பணி இல்லை. ஒருவருக்கு நோய் ஏற்படாத போது மருத்துவருக்கு பணி இல்லை. “எனில் அப்போது நீதி பயனற்றதா?” என சாக்ரடீஸ் கேட்கிறார். அதாவது நீதியை அதன் பயன்மதிப்பை மட்டும் வைத்து விளக்கலாமா என சாக்ரடீஸ் கேட்கிறார்.


(இது விதண்டாவாதம் என உங்களுக்கு ஆரம்பத்தில் படலாம். ஆனால் உற்று கவனித்தால் சாக்ரடீஸின் நோக்கம் நீதியானது முதல்முழுமையாக, சார்பற்றதாக இல்லை எனக் காட்டுவதே.) 


இல்லை, நீதி பயனுள்ளதே, வெவ்வேறு சந்தர்பங்களில் அதனால் மக்களுக்கு பயனிருக்கலாம்என்கிறார் பொலிமார்க்கஸ். உதாரணத்திற்கு, ஒப்பந்தங்களில் நீதி பயன்படும் என்கிறார். அவர் சொல்ல வருவது இரு தனிநபர்களுக்கு இடையிலான கூட்டணியைத் தானே என சாக்ரடீஸ் உறுதிப்படுத்திக் கொள்கிறார். எடப்பாடிக்கும் .பி.எஸ்ஸுக்குமான தற்காலிக அரசியல் புரிந்துணர்வு நமது சூழலில் ஒரு உதாரணம். அவர்களுடைய நீதியானது பரஸ்பரம் அதிகார எல்லைகளை மீறக் கூடாது என்பது. எப்போது மீறுகிறார்களோ அப்போது நீதி அநீதியாகிறது. இப்போதுநீதியுடன் ஒப்பந்தம் இடுகிறவர் வலிமையானவராக இருக்க வேண்டுமா அல்லது திறமையானவராக இருக்க வேண்டுமா?” என சாக்ரடீஸ் கேட்கிறார். “ஒரு சதிராட்டத்தில் நமது பார்ட்னர் திறன் படைத்தவராக இருக்க வேண்டுமா?”

 “ஆம், அங்கு திறன் பயன்படும்.”

ஒரு கட்டிட வேலை செய்யும் போது நமது பார்ட்னர் ஆனவர் உடல் வலிமை படைத்தவராக இருக்க வேண்டுமா?” 

ஆம், வலிமை மட்டுமே அங்கு பயன்படும்.”

 (எடப்பாடி-.பி.எஸ் விவகாரத்தில் தற்காலிக தன்னலமே நீதியின் பயன்.)  

இப்போதுதிறனையும் வலிமையையும் நீதியின் அளவுகோலாகக் கொள்ள முடியுமா?” என சாக்ரடீஸ் கேட்கிறார். நீதியும் திறன் போன்ற தகுதியும் வேறுவேறல்லவா? இப்போதுஒரு கூட்டணியின் போது, ஒப்பந்தத்தின் போது பயனுள்ளது நீதியா தகுதியா?” எனும் கேள்விக்கு சாக்ரடீஸ் வருகிறார். “ஒரு கட்டிட வேலை செய்கிறவர் நீதிவானாக இருப்பதை விடவும் தன் தொழிலை சிறப்பாக செய்வது தானே அவசியம்? ஒரு நல்ல புல்லாங்குழல் கலைஞன் நீதிவானாக இருக்க வேண்டியதில்லையே?” 


இப்போது பொலிமார்க்கஸ் இன்னும் குறிப்பானதாக தன் விளக்கத்தை மாற்றிக் கொள்கிறார்: “பண விவகாரத்தில் மட்டும் நீதி பயனுள்ளதாக இருக்கும்.” உடனே சாக்ரடீஸ்நீங்கள் ஒரு குதிரையை வாங்க பேரம் பேசும் போது நீதிவானை நம்புவீர்களா அல்லது குதிரைகள் பற்றி அறிவு படைத்தவரை நம்புவீர்களா?” எனக் கேட்கிறார். “அறிவு படைத்தவரைத் தான்என்கிறார் பொலிமார்க்கஸ். இப்போது அவர் சாக்ரடீஸுக்கு மேலும் குறிப்பான மற்றொரு விளக்கத்தை தருகிறார்: “பணப் பரிமாற்றத்தின் போதல்ல, ஒன்றை பாதுகாப்பாய் வைப்பதற்கு நாம் நீதிவானையே நம்புவோம்.”

 “அதாவது, ஒன்று பயன்பாட்டுக்கு வரும் போது நீதி பயனற்று போகிறது இல்லையா?” என சாக்ரடீஸ் கேட்கிறார். “ஒரு கேடயத்தை பாதுகாத்து வைத்திட நீதிவானிடமும், அதை பயன்படுத்துவதற்கு ஒரு வீரனிடமும் செல்வோம். ஒரு இசைக்கருவியையும் பயன்படுத்த அல்ல பயன்படுத்தாமல் பாதுகாத்து வைக்கவே நீதிவானிடம் செல்வோம். இதில் இருந்து நீதி என்பது பயனற்ற போது பயனுள்ளது, பயனுள்ள போது பயனற்றது என சொல்லலாமா?” என சாக்ரடீஸ் கேட்கஆம்என பொலிமார்க்கஸ் சொல்லுகிறார். (எவ்வளவு ஆபத்தான விளக்கம் பாருங்கள்! ஆனால் சாக்ரடீஸின் நோக்கம் நம் விளக்கங்களின் அபத்தத்தை சுட்டுவதே.)


அடுத்து இந்தபயன்மதிப்பு வாதத்தின்அபத்தத்தை சாக்ரடீஸ் காட்டுகிறார். “ஒரு நல்ல குத்துசண்டை வீரரானவர் எதிராளியை நோக்கி ஒரு குத்து விட மட்டுமல்ல அவரது குத்துகளில் இருந்து தப்பிக்கவும் தெரிந்தவரே. இது சரியெனில் ஒரு மருத்துவர் என்பவர் நோயில் இருந்து பாதுகாக்க மட்டுமல்ல அதை பிறருக்குத் தெரியாமல் பரப்பவும் தெரிந்தவர் தானே?” என சாக்ரடீஸ் கேட்கிறார். யோசித்துப் பார்த்தால் வேறு யாரை விடவும் உயிரைக் காக்கிறவர்களுக்கே அதை பிறர் அறியாதமட்டில் உயிரை எடுக்கும் திறனும் அதிகம் இருக்கிறது. ஜெயலலிதா-அப்போலோ மருத்துவமனை விவகாரம் ஒரு உதாரணம். ஜான் டேவிட் மற்றொரு உதாரணம். ஒரு சிறந்த இசைக்கலைஞனுக்கு வேண்டுமென்றே தவறாக வாசிக்கவும் தெரிந்திருக்கும் (நமக்கு தெரியாமலே தவறாக வாசிக்கத் தான் தெரிந்திருக்கும்.) திறன் என ஒன்றை நாம் வகுக்கும் போது அதை எவ்விதமும் பயன்படுத்துகிற திறனும் தான் நமக்கு உண்டெனப் பொருள் வருகிறது. இது சரியென பொலிமார்க்கஸ் ஏற்க சாக்ரடீஸ், “பணத்தை பயன்படுத்தாமல் வைத்துக் கொள்ளும் ஒருவருக்கு அதைத் திருடும் திறனும் தானே இருந்தாக வேண்டும்?” என்கிறார். (.தா., பணத்தை வாங்கி வைத்துக் கொண்டவர் அதை புதைத்து விட்டு காணாமல் போய் விட்டதென்றோ தனக்கு அது தரப்படவே இல்லையென்றோ பின்னர் சொல்வது.) ஆம், என்கிறார் பொலிமார்க்கஸ். இதில் இருந்துநீதியானது நண்பர்களுக்கு நன்மையும், பகைவர்களுக்கு தீமையும் செய்யும் பொருட்டு செய்யப்படும் ஒரு திருட்டுஎன வகுக்கிறார் சாக்ரடீஸ்

இப்போது குழம்பிப் போகும் டெலிமார்க்கஸ்உங்கள் விளக்கத்தை நான் ஏற்கவில்லை, நீதியென்பது நண்பர்களுக்கு நன்மையும், பகைவர்களுக்கு கெடுதியும் செய்வது என்பதை மட்டும் ஏற்கிறேன்.” என்கிறார். சரி என ஏற்கும் சாக்ரடீஸ் யார் நண்பர் எனும் புள்ளியை நோக்கி விவாதத்தை நகர்த்துகிறார் (அதுவே இங்கு நீதியின் அடிப்படையாக இருப்பதனால்.)


அடுத்து சாக்ரடீஸ்சந்தர்ப்பமே நண்பர்கள் யார் என தீர்மானிக்கிறது. நாம் நல்லவர்கள் என நம்புகிறவர்கள் கெட்டவர்களாகவும் கெட்டவர்கள் என நினைக்கிறவர்கள் நல்லவர்களாகவும் இருப்பதைக் காண்கிறோம் இல்லையா?” எனக் கேட்கிறார். ஆம் என்கிறார் டெலிமார்க்கஸ். “இது சரி எனில் (சில சந்தர்பங்களில்) கெட்டவர்களுக்கு நன்மையும் நல்லவர்களுக்கு கெடுதியும் நாம் செய்ய வேண்டியதாகிறது அல்லவா?” என சாக்ரடீஸ் கேடஅது சரிதான்என டெலிமார்க்கஸ் ஏற்க, “பிறகு, நல்லவர்கள் நீதிவான்கள் என சொல்வதை எப்படி ஏற்க முடியும்?” என வாதத்தை திருப்புகிறார் சாக்ரடீஸ்.


 அடுத்து மற்றொரு விளக்கத்தை சாக்ரடீஸ் தாக்குகிறார் - “நல்லவர்கள் என்போர் நம் பகைவரிடத்தும் இருக்கலாம். கெட்டவர்கள் நண்பர்களிடத்தும் இருக்கலாம். இப்போது நாம் பகைவருக்கு செய்வது நீதியாகவும் நண்பர்களுக்கு செய்வது அநீதியாகவும் ஆகலாம் இல்லையா?” எனக் கேட்கிறார். இப்போது டெலிமார்க்கஸ் சுதாரித்துக் கொள்கிறார். நண்பர்கள் குறித்த விளக்கத்தை மாற்ற வேண்டும் என்கிறார் - “நல்லவர்களாகத் தெரிகிறவர்கள் அல்ல, நல்லவர்களாக இருப்பவர்களே நண்பர்கள்”. சாக்ரடீஸும் இதற்கு ஏற்ப நீதி குறித்த தன் விளக்கத்தை மாற்றுகிறார்: “நண்பர்கள் நல்லவர்களாக இருக்கும் போது அவர்களுக்கு நாம் நன்மை அளிப்பது நீதி. நண்பர்கள் கெட்டவர்களாக இருக்கும் போது அவர்களுக்கு கெடுதி செய்தால் அதுவும் நீதி. சரியா?”  இவ்விளக்கத்தை டெலிமார்க்கஸ் ஏற்கிறார்.


இதுவரை நீதியானது சந்தர்ப்பவசமாகத் தோன்றுவது என நிறுவி வந்த சாக்ரடீஸ் நீதியின் சாராம்சம் குறித்து கேட்கிறார். “ஒரு குதிரையின் சாராம்சமான இயல்பு வேகமாய் ஓடுவது. அதை அடித்து துன்புறுத்தினால் அதன் ஓடுகின்ற வேகம் மட்டுப்படும். அதே போலத்தான், நீதி என்பது மனிதனின் அடிப்படையான, சாராம்சமான இயல்பு. அது ஒவ்வொருவருக்குள்ளும் இருக்க வேண்டுமே. (அதனால் தானே ஒருவனால் நல்லவாக, அதனாலே நம் நண்பனாகவும், கெட்டவனாக, அதனாலே நம் பகைவனாகவும் ஆக முடிகிறது). இது சரி என்றால், ஒரு கெட்டவனுக்கு நாம் கெடுதி செய்தால், ஒரு மனிதனாக நீதியை தனக்குள் சாராம்சமாகக் கொண்டிருந்து, சந்தர்ப்பசமாக கெட்டவனாக இருக்கும் அவனது நீதியானது மட்டுப்படாதா?” என சாக்ரடீஸ் வினவுகிறார். அப்படி ஆகக் கூடும் என டெலிமார்க்கஸ் ஏற்கிறார். (நீதி சாராம்சமான மனித இயல்பு என டெலிமார்க்கஸ் மட்டுமல்ல சிறைத்தண்டனையை ஏற்படுத்தி அதை ஆதரிக்கும் நாம் அனைவரும்தான் ஏற்கிறோம். நீதி மனிதனுடைய ஆதார இயல்பு என்பதாலே ஒரு குற்றவாளிக்கு மறுவாய்ப்பை, திருந்தும் வாய்ப்பை, நாம் சிறைத்தண்டனை வழி அளிக்கிறோம். கொல்லாமல் இருக்க முயல்கிறோம்.) “இது சரி என்றால், ஒருவருக்குள் இருக்கும் நீதியை நம்மால் மட்டுப்படுத்த முடியும் எனில், ஒரு இசைக்கலைஞனால் தன் ரசிகனது ரசனையை குறைக்க முடியுமா?” என சாக்ரடீஸ் கேட்க, “முடியாதுஎன டெலிமார்க்கஸ் கூறுகிறார் (இந்த பதிலே முன்னுக்குப் பின் முரணானதே.) இப்போதுநீதியினால் அநீதி செய்ய முடியாதுஎனும் இடத்துக்கு டெலிமார்க்கஸ் வருகிறார்.


இப்போது டெலிமார்க்கஸ் மீண்டும் சாக்ரடீஸின் பொறியில் வசமாக மாட்டிக் கொள்கிறார். முதலில்நீதியானது சந்தர்ப்பவசமானது, சார்புநிலையினால் தோன்றுவதுஎனப் பேசிய அவர் - நீதி என்பது நண்பனுக்கு நன்மையும், பகைவனுக்கு கெடுதியும் பண்ணுவது - இப்போதுஅது சாராம்சமானதுஎனும் தரப்பை எடுத்துக் கொள்வதால் தான் சொன்னதற்கு முரணாகநீதியானது நல்லவனுக்கு நன்மை செய்வது மட்டுமேஎனும் இடத்துக்கு வந்து சேர்கிறார். இது சரியெனில் இதன் முரணும் சரியாகவே இருந்தாக வேண்டுமே - “கெட்டவனுக்கு கெடுதி செய்வதே நீதி.” நீதி சாராம்சமானது என சொல்லும் டெலிமார்க்கஸால் இதையும் ஏற்க முடியாமல் போகிறது. இப்போது டெலிமார்க்கஸ் சாக்ரடீஸின் வாதங்களை ஏற்றுஉங்கள் பக்கமே நிற்கிறேன்என்கிறார். ஆனால் இந்த விவாதத்துக்குள் திராசிமேக்கஸ் எனும் ஒரு முரட்டு ஆள் புகுந்து சாக்ரடீஸை சாடுகிறார். “நீங்களாக எந்த விளக்கத்தையும் தர மாட்டீங்கள். அடுத்தவர்களை விளக்க சொல்லி அதில் பிழை காண்பதே உங்கள் பிழைப்பு. நீதி என்றால் என்ன என நீங்களே விளக்குங்கஎன்கிறார் அவர். அதற்கு சாக்ரடீஸ் தன்னிடம் எந்த தெளிவான விளக்கமும் இல்லை, நீதியை அறிந்து கொள்ளவே தான் முயல்வதாகவும், இன்னும் தனக்கு வெற்றி கிடைக்கவில்லை என்று சொல்கிறார். (இப்படி பணிவாக நடிப்பதை சாக்ரடிய நகைமுரண் என்கிறார்கள்.) ஆரம்பத்தில் பிகு பண்ணுகிற திராசிமேக்கஸ் தன் விளக்கத்தை சொல்ல முன்வருகிறார்: “வலுத்தவனுக்கு ஆதாயம் அளிப்பது எதுவோ அதுவே நீதி.”


இதை ஏற்கும் சாக்ரடீஸ் இதிலுள்ள பிழைகளைக் காட்டுகிறார். “ஒரு பயில்வானுக்குத் தேவை பலம். அதை அவன் மாட்டுக்கறியை சாப்பிட்டுப் பெறுகிறான். இப்போது மாட்டுக்கறி சாப்பிடுவதே நீதி என நாம் சொல்ல முடியுமா?”

இந்த உதாரணம் தவறானது என மறுக்கும் திராசிமேக்கஸ் மற்றொரு உதாரணத்தை தருகிறார்: “ஆட்சியாளர்கள். ஒரு மக்களாட்சியின் தலைவர் ஒரு சட்டத்தை பின்பற்றினால் சர்வாதிகாரம் உள்ள நாட்டிலோ அத்தலைவர் மற்றொரு சட்டத்தை பின்பற்றுகிறார். ஆட்சியாளர்கள் வலுத்தவர்களாகவும், தம் சாதகத்துக்காக ஆட்சி பண்ணுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். இதில் இருந்து நீதியானது வலுத்தவனுக்கு ஆதாயம் தருவது மட்டுமே.” என திராசிமேக்கஸ் கூறுகிறார். இந்த விளக்கத்தின் பிரச்சனை அவ்வாறு சாராம்சப்படுத்துவதில் உள்ளது என சாக்ரடீஸ் கண்டு கொள்கிறார். உடனே, அவர் இந்தபழுதைத்தாக்குகிறார்.

 “ஒரு மருத்துவன் என்கிறவன் பணம் சம்பாதிக்கிறவன் அல்ல, மருத்துவம் செய்கிறவன். மருத்துவனின் நோக்கம் பணம் சம்பாதிப்பது எனில் அவன் மருத்துவனாகவே இருக்க முடியாது. இதுவே ஒவ்வொரு துறைசார் வல்லுனருக்கும் பொருந்தும். பணம் சம்பாதிப்பது அவர்களுக்கு உள்ள ஒரு பொது இயல்பு - தம் திறனைக் கொண்டு பணம் சம்பாதிக்கும் இயல்பு. அது அல்ல அவர்களை மருத்துவனோ ஆட்சியாளனோ ஆக்குவது. இரண்டும் வெவ்வேறு விசயங்கள். அவ்வாறே, ஒரு ஆட்சியாளனும் ஆட்சி செய்வதனால் - பலம் பொருந்தியனவனையும் பலமற்றவனையும் சமமாக மதித்து ஆட்சி செய்வதாலே - ‘ஆட்சியாளன்ஆகிறான், தனக்கு ஆதாயம் கிடைக்கும்படி ஆட்சி செய்வதால் அல்ல.” இவ்வாறு திராசிமேக்கஸின் வாதத்தை அவர் முறியடிக்கிறார்

இங்கு சாக்ரடீஸ் தனக்கு பிரியமான கருத்துமுதல்வாதத்துக்கு (idealism) செல்வதை கவனியுங்கள். ஆட்சியாளர்கள், திராசிமேக்கஸ் சொல்வதைப் போல ஊழல் பேர்வழிகளாக, அதிகார வெறியர்களாக இருப்பதை சாக்ரடீஸ் அறிவார். ஆனால் தெளிவாக சிந்திக்கும் போது ஒருவரால் ஒரு நல்ல ஆட்சியாளராக இருக்க முடியும் என அவர் நம்புகிறார். இந்த இடத்தில் தான் ஒரு தத்துவாதியாக சாக்ரடீஸின் பலவீனம் தென்படுகிறது. திராசிமேக்கஸ் சொல்வது உண்மை தான் எனத் தோன்றுகிறது - அடுத்தவர்களின் விளக்கங்களில் உள்ள பழுதுகளை தோலுரித்துக் காட்டும் போது சாக்ரடீஸ் மேதையாக தெரிகிறார். ஆனால் சொந்த விளக்கங்களை அவர் வாதங்களின் முடிவில் தரும் போது சறுக்கி விடுகிறார்


.தா., ஒரு உன்னதமான நல்லவனான ஆட்சியாளனை அவர் இந்த உலகில் உள்ள ஆட்சியாளர்களில் இருந்து வேறுபட்ட ஒரு மீபொருண்மை (metaphysical) கருத்துருவாக, ஒரு லட்சியமாக உருவாக்கி மேலே தூக்கி வைக்கிறார். மற்றவர்களிடம் வாதிடும் போது எதார்த்த உதாரணங்களை எடுக்கும் சாக்ரடீஸ் தன்னுடைய லட்சியவாதத்தை மட்டும் இவ்வுலகால் சீண்டப்படாத ஒன்றாக உருமாற்றுவது முரணானது. இல்லையென்றால், தெளிவான சிந்தனையாளனான ஒரு லட்சிய ஆட்சியாளன் எந்த சந்தர்பத்தில் அப்படி இருக்கிறான், ஒரு சந்தர்பத்தில் இருந்தபடி அதனை சாராது இருப்பவன் எப்படி அதில் இருக்க முடியும், அப்படி சார்ந்திருப்பவன் எப்படி லட்சியமானவனாக இருக்க முடியும் என அவர் பிறரிடம் எழுப்பக்கூடிய ஏகப்பட்ட கேள்விகளை நாம் அவரை நோக்கி வீச முடியும். துரதிஷ்டவசமாக அத்தகைய அவகாசங்களில் இருந்து தப்பித்துக் கொள்பவராகவே அவர் எப்போதும் இருக்கிறார். அவர் ஒவ்வொரு கேள்வி-பதில் விவாதத்தின் போதுநான் இப்படி ஒரு விளக்கத்தைத் தருகிறேன்என நேரடியாகக் கோராமல் தன் தரப்பை மறைமுகமாக ஏதோ விவாதத்தின் வழியாக தானே உருப்பெற்ற ஒன்றைப் போல நமக்கு சுட்டிக் காட்டி ஏமாற்றப் பார்க்கிறார். இன்று ஊடகங்களில் அரசியல் சமூகப் பின்னணியில் நீதி / அறம் குறித்த பல விவாதங்கள் எழுப்பபடுவதைப் பார்க்கிறோம். ஒவ்வொரு கோரலும் ஏதாவது ஒரு சந்தர்பத்தை ஒட்டி, ஒற்றை சார்பான பார்வையுடன், பிழையான தர்க்கத்துடனே உள்ளது. அவ்வாறே இருக்க முடியும் எனத் தோன்றுகிறது. ஏனென்றால் அனைவருக்குமான, எல்லா சந்தர்பங்களுக்குமான சாராம்சமான நீதி ஒன்றை நம்மால் வரையறுக்க ஒரு போதும் முடியாது


நீதிவானாக இருப்பவன் நீதி எனும் உயர் லட்சியம் ஒன்றை, முழுமுதல் கருத்தொன்றை நாடிச் செல்வதாலே அவ்வாறு நீதிவானாகிறான் என்று சாக்ரடீஸ் சொல்லும் போது நாம் எழுப்ப வேண்டிய கேள்வி - “உன்னதமான நீதி எனும் அந்த  கருத்துநிலை எப்படி முதன்முதலில் தோன்றியிருக்க முடியும்?” நீதியை ஒரு மீபொருண்மை உண்மையாக சாகர்டீஸும் பிளேட்டோவும் மாற்றியதன் விளைவே இன்றும் இதுவே நீதி, இதுவே அறம் என அதிகார மையத்தில் உள்ளோர் நமக்கு கற்பித்து, அதன்படி நம்மை ஒழுக வைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒருவர் துன்பப்படும் போது, ஒரு மிகச்சிறிய குற்றத்துக்காக தம் வாழ்நாளையே சிறையில் கழிக்க நேரும் போது, அங்கு அறம் பிழைத்துப் போகிறதா எனும் கேள்வியை நாம் எழுப்பினால் அதிகாரமும் சமூக மனசாட்சியும் ஆமாம், இல்லை என்று இருவிதங்களாக அதற்குப் பதிலளிக்கும். மனசாட்சியிடம் கேட்டுப் பார்த்து விட்டு அதன் பதில் நமது ஏற்றுக்கொள்ளப் பட்ட நம்பிக்கைகளுக்கு, அரசியல் சரிநிலைகளுக்கு ஏற்ப இருக்கிறதா எனப் பரிசீலித்து அனைவரும் ஏற்றுக் கொள்ளத் தக்க பதில் ஒன்றை அளிக்கிறோம். இந்த பரிசீலனைகளின் மத்தியில் நீதி தொலைந்து போய் விடுகிறது.


(நன்றி: அகநாழிகை, ஏப்ரல் 2022)



    



  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...