சல்மான் ரஷ்டி மீதான தாக்குதலையும் அதை நம் முற்போக்கு முகமூடிகள் பார்க்கும் விதம் பற்றியும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். கட்டுரையின் முடிவில் 'ஒரு மனிதனை மனிதனாக மட்டுமே பார்க்கிற ஒரு நிலை வர வேண்டும்' எனக் கோருகிறேன். அக்கட்டுரை உயிர்மையில் வெளிவரும். அதில் இருந்து சில வரிகள்:
"இந்த தேசத்தில் பெரும்பான்மை மக்களுக்கு எப்போதும் சிறுபான்மை மதத்தவர்கள் மீது ஒரு மற்றமை உணர்வு, அவநம்பிக்கை, வெறுப்பு, அச்சம் என கலவையாக உள்ளது. அதனாலே ஒரு முஸ்லீம் பயங்கரவாதத்தில் ஈடுபட்டால் மொத்த இஸ்லாமிய சமூகமும் அவருக்காக மன்னிப்புக் கோர வேண்டும் என இந்துக்கள் தம்மை அறியாமலே எதிர்பார்க்கிறார்கள். அதையே “இந்த பழியையும் இஸ்லாமியர் சுமக்க வேண்டும், இதன் விளைவாக இந்துத்துவ இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் வலுப்பெறக் கூடும்” என பூச்சாண்டி காட்டிக் கொண்டே “அதனால் இஸ்லாமியர் இதை பெருவாரியாகக் கண்டிக்க வேண்டும், பயங்கரவாதத்தை தம் சமூகத்தில் இருந்து களையெடுக்க வேண்டும்.” என எழுதுகிறார்கள். ஆனால் தமது சமூகத்தில் இருந்து ஒரு குழுவினர் திட்டமிட்டு பல்லாயிரம் இஸ்லாமியரை குத்தியும் வெட்டியும் எரித்தும் கொல்லும் போது அவர்களுக்காக மன்னிப்புக் கேட்க அவர்கள் நினைப்பதில்லை.
இந்த போக்கை நீங்கள் அவர்கள் தலித்துகளை பார்க்கும் விதத்திலும் கவனிக்கலாம். ஒரு தலித் இந்து மதவாதியாக, இந்துத்துவாதியாக இருந்தால் அது கடும் கண்டனத்துக்கு உள்ளாகிறது. ஆனால் ஒரு மத்திய சாதி இந்து, ஒரு சூத்திரர் இந்துத்துவவாதியாகும் போது அதை ஒரு குற்றமாக, வீழ்ச்சியாக முற்போக்கு இந்துக்கள் பார்ப்பதில்லை. இது ஏன்? “தலித்துகள் சனாதனத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அதனால் அவர்கள் சாதியமைப்பை தக்க வைக்கும் சனாதனத்தை ஆதரிக்கும் இந்துத்துவத்தை ஆதரிக்கலாமா?” என ஒரு நீண்ட விளக்கத்தைக் கொடுப்பார்கள். இது ஒரு பச்சை பொய்யாகும். சனாதனம் என்பது இந்துத்துவா அல்ல, இந்து மதம் தான். அவ்வளவு பொறுப்புள்ளவர்கள் முதலில் இந்து மதத்தில் இருந்து வெளியேற வேண்டும். அதை செய்ய முன்வராதவர்கள் ‘தலித்துகள் மட்டுமே இந்து மத சனாதன எதிர்ப்பில் மும்முரமாக இருக்க வேண்டும்’ என்பர். என்னவொரு அபத்தம்! "
Comments