2011இல் ராஜஸ்தான் ராயல்ஸுக்காக ஐ.பி.எல் ஆடிய போது ஒரு போட்டியில் டக்கில் அவுட் ஆனதற்காக தனது அணியின் உரிமையாளர் தன்னை தொடர்ந்து கன்னத்தில் அறைந்ததாக நியுசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர் இப்போது தன் சுயசரிதையில் எழுதி இருக்கிறார். இதைப் படித்த போது எனக்கு எனது நண்பரான ஒரு சமூகவியல் பேராசிரியர் சொன்னது நினைவுக்கு வந்தது: "இந்திய முதலாளிகள் கார்ப்பரேட் நிறுவனங்களை நடத்தினாலும் அங்கும் பணியாளர்களை விவசாயக் கூலிகளைப் போலவே நடத்துவார்கள். மேற்கில் உள்ளதைப் போல முதலாளியும் பணியாளர்களும் தோழமையுடன் பழகுவது அல்லது குறைந்தது அவ்வாறு நடிப்பது இங்கு சாத்தியமல்ல. அரிதினும் அரிதாகவே அத்தகைய மேலாளர்களை, உரிமையாளர்களைக் காண்கிறோம். அவர்களின் அடிமனதில் இன்னும் நாம் கூலிகள், பண்ணையடிமைகள் தாம். டை கட்டி, நன்றாக ஆடையணிந்த அடிமைகள் தாம். நாம் சிரித்தாலோ சற்று நேரம் ஓய்வாக இருந்தாலோ அவர்களால் பொறுக்க முடியாது. ஓடு ஓடு என விரட்டிக் கொண்டிருப்பார்கள். நமக்கான முடிவுகளை அவர்களே எடுத்து விட்டு அதைத் தெரிவிக்க மட்டும் கூட்டம் நடத்துவார்கள். ஆமாம் சார் என்று சொல்ல மட்டுமே நமக்கு உரிமையுண்டு. "நான்கு பேர் வேலையை ஒருவரால் செய்ய முடியுமா? முடியுமென்றால் எட்டு பேர் வேலையைக் கொடு." நிர்வாகவியலில் பெரும் படிப்புகள் படித்தவர்கள் கோட்பாட்டுச் சொற்களை பயன்படுத்தி இதைத்தான் திரும்பத் திரும்ப சொல்கிறார்கள். ஒருவருடைய தனித்திறனை அடையாளப்படுத்தி ஒரு பணியில் அவர் சிறந்து வெளிப்பட சாத்தியங்களை ஏற்படுத்துவதைப் பற்றி நவீன முதலாளிகளோ நவீன கண்காணிகளோ சிந்திப்பதே இல்லை. நவமுதலாளிகள் ஏஸி அறையில் வீற்றிருந்து கணினியில் நிர்வாகவியல் பயிலும் நிலச்சுவான்தார்கள்!"
நான் அவரிடம் சொன்னேன், "அவர்களுக்கு நாம் பண்ணையடிமைகள் கூட அல்ல. வெறும் எருமை மாடுகள் மட்டுமே."
கருத்துகள்