முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எடை குறைப்பு புராணம் - 10 புரிதல்கள்

கடந்த நவம்பரில் தான் எடை என் கையை மீறி சென்று கொண்டிருப்பதை அதிர்ச்சியுடன் உணர்ந்தேன் எனச் சொல்ல மாட்டேன். மாறாக நன்கு தெரிந்திருக்கும் பாராமுகமாக இருந்தேன் என்பதே நிஜம். குறிப்பாக லாக் டவுன் நாட்களில் என் எடை 10 கிலோ அதிகமான போது நான் செய்வதறியாமல் இருந்தேன்.
லாக் டவுன் முடிந்த போது கூட நேரம் இருக்கவில்லை. எடையைக் குறைக்க நிறைய மெனெக்கெட, உறுதி பாராட்ட வேண்டும், நேரம் செலவழிக்க வேண்டும். கடந்த ஆண்டு இரண்டு நாவல்களை மும்முரமாக எழுதி வந்தேன். தினமும் 4-7 மணிநேரங்களாவது எழுத்து வேலை. காலையில் எழுந்ததும் உடல் வலிக்கும். மனம் முழுக்க எழுத்து மட்டுமே என்பதே அன்றாட பிரச்சினைகள் ஒரு பொருட்டாகவே தெரியாது. ஆக நாவல்களில் ஒன்றை அனேகமாக எழுதி முடித்து, மற்றதை பாதியில் விட்ட பின்னரே டயட், உடற்பயிற்சி என கவனம் செலுத்த முடியும் எனத் தோன்றியதால் அதுவரை உடலைப் பற்றி கவலையில்லாமல் ஜாலியாக இருந்தேன். 98 கிலோவை எட்டியதை சற்று பீதியுடன் ஒருநாள் பார்த்தேன். ஒரு நாவலை முடித்ததும் டயட்டில் இறங்கினேன். உணவுமுறை வழிகாட்டிகள், உடற்பயிற்சியாளர்கள் என பலரும் உதவினார்கள். இன்று 71 கிலோவைத் தொட்டு விட்டேன். 11 மாதங்களில் 27 கிலோ எடை! இவ்வருட நிறைவுக்குள் இன்னும் 6-8 கிலோ குறைத்தாலே நிறைவு கொள்வேன்.
பெரும் எடையைத் தூக்கி வாழ்வதில் நிறைய சிரமங்கள். நிமிர்ந்து உட்கார்வதில், நிற்பதில், திரும்புவதில், நடப்பதில், குனிந்து நகம் வெட்டுவது, லேஸ் கட்டுவதில் என்ன எதாவது கீழே விழுந்து விட்டால் அதை எடுக்க யார் உதவியையாவது நாடுவதில் என ஏகப்பட்ட தலைவலிகள். ஒன்றரை ஆண்டுகளாக நான் வகுப்பில் உட்கார்ந்து தன் பாடமெடுத்தேன். அதில் ஒரு கொடுமை நாம் உளவியல் ரீதியாக ஒரு படி கீழாக உணர்வோம், எல்லா மாணவர்களின் முகங்களையும் அமர்ந்த நிலையில் காண முடியாது என்பது. இந்த வருடம் ஏப்ரலுக்கு மேல் தான் என்னால் மீண்டும் நின்றபடியும் நடந்தும் வகுப்பெடுக்க முடிந்தது. இது எனக்கு அளித்த மனநிறைவு ஒப்பற்றது.
உடல் எடை காரணமாக நான் எங்கு போனாலும் மடித்து திறக்கிற சக்கர நாற்காலி ஒன்றை எடுத்துப் போக வேண்டி வந்தது. அதைத் தள்ள ஒரு ஆளின் உதவி வேண்டும். சென்னைக்கு நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டி வந்த போதெல்லாம் இது ஒரு பெரும் சிக்கலானது. லாக் டவுன் முடிந்து வேலைக்கு கிளம்பிய நாள் நினைவுக்கு வருகிறது - என்னால் நாலடி கூட எடுத்து வைக்க முடியாது. மெல்ல மெல்ல சுவரைப் பற்றியவாறு நடந்து என் ஸ்கூட்டரை அடைவேன். மூச்சு வாங்கும். வீட்டுக்குள்ளேயே நடக்க முடியவில்லையே என நொந்து போவேன்.
மெல்ல மெல்ல எடை குறைந்த பின்னர் என்னால் சக்கர நாற்காலி இல்லாமலே நடக்க, படிக்கட்டுகளில் சிரமமின்றி ஏற முடிந்தது. வகுப்பில் இரண்டு மூன்று மணிநேரங்கள் சேர்ந்தாற் போல நின்றும் சற்று நடந்தும் பேச முடிந்தது. தினமும் நடைப்பயிற்சி செய்ய முடிந்தது. நீதிமன்றத்திற்கு செல்லும் போது சக்கர நாற்காலியைத் தூக்கிப் போக வேண்டியிருக்கவில்லை. இது என் தன்னம்பிக்கையை மீட்டது. நிமிர்ந்து நிற்பதற்கு, நடப்பதற்கு அமர்ந்தே இருப்பதற்கு இடையில் உளவியல் ரீதியான மாற்றங்கள் நமக்குள் ஏற்படுவதை கவனிக்கலாம். அதை நான் காத்திரமாக உணர்ந்தேன். மற்றவர்களுக்கு எப்படி எனத் தெரியாது, ஆனால் இந்த சின்னச்சின்ன விசயங்களே எனக்கு வாழ்க்கையை புரட்டிப் போடுகிற சாதனைகள்!
இறுதியாக, எழுத்தைப் போன்றே உடற்தகுதியும் என் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மிகச்சில விசயங்களுள் ஒன்று. கடந்த ஐந்தாண்டுகளாக என் வாழ்க்கை அலங்கோலமாகி விட்டது. சோதனை மேல் சோதனை. முழுக்க கைவிடப்பட்ட நிலையில் நிர்கதியாக இருந்தேன். அப்போது எடை குறைப்பு, எழுத்து ஆகிய இரண்டுமே என் வாழ்க்கை என் கையில் எனும் நம்பிக்கையை, திருப்தியைக் கொடுத்தன. வேறென்ன இல்லாவிடினும் நம் எழுத்தும், உடலும் நம் வசம் இருக்கும் எனும் உத்தரவாதம் என்னை தன்னிறைவு பெற்றவாக்கியது. இந்த தத்தளிபான வாழ்வில் எனக்கு ஒரு பிடிமானமாகியது.
இந்த எடை குறைப்பு சவாலின் போது சில விசயங்களைப் புரிந்து கொண்டேன்:
1) எடையை நாமளே குறைக்கிறோம் என களத்தில் குதிக்கக் கூடாது. பயிற்சி பெற்ற நிபுணர்களின் அறிவுறுத்தலின் படியே உணவுமுறையைப் பின்பற்ற வேண்டும்.
2) 70% உணவுப்பழக்கம் என்றால் 30% உடற்பயிற்சி. உணவுமுறையினால் மட்டுமே கூட எடையைக் குறைக்கலாம். ஆனால் அது ஆரோக்கியத்தைத் தராது. சரியான எடை குறைப்பென்பது கொழுப்பைக் குறைத்து தசைகளைப் பெருக்குவதே. அதற்குத் தான் உடற்பயிற்சி அவசியம்.
3) குறைவாக சாப்பிடுவதை விட சரியாக சாப்பிடுவதே முக்கியம். ஒரு உதாரானத்திற்கு, சராசரி உயரமும் 80 கிலோவுக்கு மேல் எடையும் கொண்ட ஒருவர் எனில் அவர் தினமும் 1600-1800 கலோரிகள் சாப்பிட்டால் எடை குறையும் என வையுங்கள். அவர் தினமும் 80-100 கிராம் புரோட்டீன், 60 கிராம் நல்ல கொழுப்பு, 80 கிராமுக்குள் மாவுச்சத்து என பார்த்துப் பார்த்து எடுத்துக் கொள்ளுதல் அவசியம். காய்கறிகள், குறைந்த அளவில் பழம், நட்ஸ், விதைகள் சாப்பிடுவதும் தண்ணீர் அருந்துவதும் அவசியம். சத்துக்கள் சரியான விகிதத்தில் உள்ளே போகாவிடில் எடையிழப்பு இருக்கும், ஆனால் உடல் பலவீனமாகி விடும்.
4) கீட்டோ, 18 மணிநேர உண்ணாநோன்பு, அளந்துண்பது, 800 கலோரிகள் மட்டுமே ஒருநாள் உண்பது என எந்த முறையும் எடையைக் குறைக்க உதவும். நான் அநேகமாக அத்தனையையும் முயன்று பார்த்தேன். இவற்றில் அளந்து உண்பதே - portion control diet - பின்பற்ற வசதியானது எனத் தோன்றுகிறது. எனென்றால் இதில் மட்டுமே அனைத்து ஆரோக்கியம் தரும் உணவுகளையும் குறைந்த அளவில் சாப்பிடலாம் என்பதால் உணவுப்போதாமை உணர்வு, ஏக்கம் இருக்காது. ஆனால் இதில் மெல்ல மெல்லவே எடை குறையும்.
5) சோற்றையும் சர்க்கரையையும் நொறுக்குத் தீனியையும் குறைப்பது மட்டுமே டயட் அல்ல. அறிவியல்பூர்வமாக உண்ண வேண்டும். அதுவே வெற்றியைத் தரும்.
6) மனதைக் கட்டுப்படுத்துவதே சூத்திரம் என்று என் நண்பர் ஒருவர் சொல்லுவார். மறுநாள் சாப்பிடப் போவதை முன்கூட்டியே தீர்மானித்து விட்டால் எடை குறைப்பு சுலபம். என்ன பிரச்சினை என்றால் நாம் அவ்வப்போதைய மனநிலையைப் பொறுத்து கிடைத்ததை சாப்பிடுகிறோம். அதிகமாக வெளியே சாப்பிடுகிறோம். முன்னறிந்து உண்டால் எடை நம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
7) ஒல்லியாக இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என நான் முன்பு நினைத்திருந்தேன். ஆனால் உடற்பயிற்சி நிலையத்திற்கு ஒல்லியானவர்கள் வரும் போது இவர்கள் ஏன் இப்படி கஷ்டப்படுகிறார்கள் என வியப்பேன். பின்னர் இவர்கள் 2 கிலோ டம்பல்ஸைக் கூட தூக்க முடியாது, சில பெண்களால் தம் எடையையே சுமக்க முடியாது எனத் தெரியவந்த போது அது என் அறுவுக்கண்னைத் திறந்தது. எடை குறைப்பல்ல சரியான எடையைத் தக்க வைப்பதும், தசைகளை வளர்ப்பதுமே முக்கியம்! குண்டாக இருந்தால் என்ன ஒல்லியாக இருந்தால் என்ன வலுவாக இருப்பவரே உடற்தகுதியானவர்!
8) சரியான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி எல்லாம் ஒரு தவம் போல பயிலப்பட வேண்டியவை. கடும் நெருக்கடிக்குள், அலைச்சல், பதற்றம் என வாழ்பவர்களால் இது முடியாது. அவர்கள் தமக்கு அவகாசம் வாய்க்கும் வரை எடைகுறைப்புக்குள் குதிக்கக் கூடாது. அரைகிணற்றைத் தாண்டுவதால் பலனில்லை. ஒரு சில மாதங்கள் வாயைக் கட்டி 8 கிலோ குறைத்து மீண்டும் தடாலடியாக ஒழுங்கற்ற வாழ்க்கைமுறைக்குள் போனால் 12 கிலோவாக திரும்ப ஏறும். இப்படி எடை ஏறி ஏறி இறங்கினால் அது நம் உடலில் சக்தியை எரிக்கும் ஆற்றலைக் (metabolism) குறைத்து விடும். பின்னர் டயட் இருந்தாலும் சுலபத்தில் எடை இறங்காது. அதாவது எதை செய்தாலும் நேரம் எடுத்து ஒழுங்காக செய்ய வேண்டும். அல்லாவிடில் செய்யவே கூடாது. தற்காலிக எடை குறைப்பு, எடை ஏற்றம் எனும் மாறுபட்ட நிலை உடல் ஆரோக்கியத்துக்கு கேடானது. அதற்கு குண்டாகவே இருந்து தொலைக்கலாம். 1-2 ஆண்டுகளாவது மெனெக்கெட சாவகாசமில்லை எனில் முயற்சி பண்ணவே கூடாது.
9) உங்கள் எடை 70 கிலோவை எட்டும்போதே சுதாரித்து முயன்றால் மூன்று மாதங்களில் 5-6 கிலோக்களை இழந்து விடலாம். அது 80-90 கிலோ அளவுக்கு வளர விட்டால் பிறகு எடை இயல்பாக ஒரு வருடம் போராட வேண்டி இருக்கும்.
10) பெரும்பாலும் நமக்கு நம் உடம்பை கவனிக்க நேரமிருப்பதில்லை. அது நம்மைத் தனியாக கவனிக்கிறது. ஒரு கட்டத்தில் உடல் வெறுத்துப் போய் உன்னை விட்டுப் போகிறேன் என கடிதம் கொடுக்கிறது. அது தான் எடை அதிகரிப்பும் அதை ஒட்டிய பிரச்சனைகளும். உடற்தகுதியைப் பெறுதல் என்பது உடலுடன் நாம் இணக்கமாவதன் முதல் அறிகுறி. பிரிந்து போனவள் திரும்ப வீட்டுக்கு வருவதைப் போல. சரியாக கவனிக்காவிடில் அவள் மீண்டும் பெட்டியைத் தூக்கிக் கொண்டு போக 6 மாதங்கள் போதும். ஆக உடலைக் காதலிப்பதே முழுமுற்றான தீர்வு!
1 நபர், நிற்கும் நிலை மற்றும் உட்புறம் இன் படமாக இருக்கக்கூடும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...