நான் ஜெயமோகனின் மணிவிழாவை ஒட்டி அவரைப் பாராட்டி எழுதுகையில் அவருக்குத் தன் பணியில் உள்ள மகத்தான ஈடுபாடு, கவனம், ஊக்கம், அவரது ஒழுக்கம், உழைப்பு ஒரு எழுத்தாளனாக என்னைப் போன்றோருக்கு ஊக்கமளிப்பது என சொல்லியிருந்தேன். உடனே சிலர் பேஸ்புக்கில் “ராஜேஷ் குமாரும் கடும் உழைப்பாளி தான்” என்று அபத்தமாக இதைப் புரிந்து கொண்டு இதை மலினப்படுத்த முயன்றார்கள். எனக்கு இதைப் படித்த போது 24 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயமோகனை தக்கலையில் சந்தித்து பேசிய நாளொன்றில் அவர் சொன்னது நினைவுக்கு வந்தது: “என்னுடைய படைப்பின் வீச்சை, என் திறமையை அங்கீகரிக்க மனமில்லாதவர்கள் ‘அவர் ஒரு சிறந்த உழைப்பாளி’ என்று சொல்லி கடந்து விடுகிறார்கள். அது என்னை அவமதிக்கும் முயற்சி மட்டுமே.” ஆக, இப்போதும் நிலைமை மாறிவிட வில்லை. ஒருவருடைய நல்லியல்பை பாராட்டினால் அதை வைத்தே அவர் மீது சாணியடிக்கிற கெட்ட பழக்கம் நம் ஆட்கள் தலைமுறை தலைமுறையாக வருகிறது போலும். ஆகையால் நான் மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்: அவருடைய அபாரமான திறமையை குறிப்பிட அவசியமே இல்லை என்பதால் தான் அவருடைய மற்றொரு பக்கமான எழுத்தாள ஒழுங்கு, கவனம், அர்ப்பணிப்புணர்வை கவனப்படுத்தினேன்.
இந்த குழப்பங்கள் வேண்டாம் என்பதால் மேலும் சில விசயங்களைக் குறிப்பிடுகிறேன்:
ஜெயமோகன் அளவுக்கு மொழியாளுமை கொண்டவர்கள் வெகு சிலரே. அவருடைய நினைவுத்திறன் அபாரமானது. அதனாலே அவருடைய புலத்துக்குள் இயங்கும் கதைகளை, நாவல்களை எழுதும் போது அதற்கே உரித்தான பிரத்யேக சொற்களை, நுண்விவரணைகளை அள்ளிக் கொட்டுவார். திகைக்க திகைக்க சொற்களின் அருவியில் குளிக்கும் அனுபவம் இருக்கும். இது அவருடைய “விஷ்ணுபுரம்” போன்ற காவியத் தன்மை கொண்ட அல்லது “பின் தொடரும் நிழலின் குரல்” போன்ற அரசியல் தன்மை கொண்ட பின்நவீன நாவல்களாகட்டும், ஒவ்வொரு நாவலுக்கும் ஒரு தனி நிறத்தை அளிக்கிறது. இதற்காக அவர் நிறைய மெனெக்கெடுகிறார். இதுவும் தமிழ் எழுத்தாளர்கள் மட்டுமல்ல இந்திய அளவில் நான் படித்த படைப்பாளிகளிலேயே ஜெயமோகனுக்கு உள்ள தனித்தன்மையாகும்.
ஜெயமோகன் அளவுக்கு சுவாரஸ்யமாக ஒரு கதைக்குள் நம்மை இழுத்துப் போகும் கதைசொல்லிகளும் மிகவும் அரிதே. அதாவது அவருடைய சுமாரான கதைகள் கூட வாசிக்கத்தக்கவையே. ஜெயமோகனுடைய அரசியல், பண்பாட்டு கருத்தியலுடன் முரண்படுகிறவர்களும் அவரை ரசித்து வாசிப்பது இந்த வாசிப்பின்பத்தினாலே. இது எளிதாக வருவதல்ல. ஒரு கதையை எங்கு எப்படி ஆரம்பிக்க வேண்டும், அதன் முடிச்சை அறிமுகப்படுத்தி கிளைமேக்ஸ் நோக்கி எப்படி நகர்த்த வேண்டும் என்பது அவருக்கு ஏகப்பட்ட கதைகளை எழுதி எழுதி கைவந்த கலை. அதே நேரம் எந்த கதையையும் அவர் ஒரு வணிக மதிப்புக்காக எழுதுவதும் இல்லை. ஆழத்தை நோக்கிப் போகாத ஒரு கதையில் கூட தீவிரமும் சுவாரஸ்யமும் இருக்கும். எந்த கதையிலும் அவருடைய மனம் தோய்ந்திருக்கும். ஈடுபாடின்றி எழுதியிருக்கிறார் எனும் எண்ணம் நமக்கு ஒரு கதையிலும் வராது.
ஜெயமோகனின் படைப்புலகை பத்து பத்து ஆண்டுகளாக வகுத்து ஆராய்ந்தால் அவர் ஒவ்வொரு கட்டத்திலும் இங்குள்ள இலக்கிய சூழல், நம்பிக்கைகளுடன் மோதி ஒரு மொழியை, எழுதும் முறையை வெளிப்படுத்தி இருக்கிறார், அவரது கதைகள் அதைப் பொறுத்து தொனி, உள்ளுடுங்கும் போக்கு, வெளிப்பாயும் ஆர்ப்பாட்டம், உணர்ச்சிகரம், தீவிரம் என ஒவ்வொன்றும் மாறி வந்திருப்பதைக் காணலாம். ஜெயமோகனுடன் எழுத ஆரம்பித்த வெகுசிலர் தான் இப்படி தம்மை தக்க வைத்துள்ளார்கள். பெரும்பாலானவர்கள் ஒரு காலகட்டம் அளித்த அக ஊக்கம் காலியானதும் அப்படியே தங்கி விட்டார்கள். ஜெயமோகனின் அரசியல், சமூகப் பண்பாட்டுப் பார்வை, கருத்தியலானது (நவ-செவ்வியல், கலாச்சார திருத்தல்வாதம்) ரெண்டாயிரத்தின் கடைசி 15 ஆண்டுகளில் தான் முழுமையாக வெளிப்படுகிறது. அப்போதே அவர் நம்பிக்கைகளின் படி நாவல்களை எழுதுவது (“வெண்முரசு”), இலக்கிய அமைப்பு, விமர்சனம், பேச்சு மூலம் ஒரு தனி பள்ளியை உருவாக்குவது என விஸ்வரூபமெடுக்கிறார். நமக்கு இந்த செயல்பாடுகள், கருத்தியல், அரசியலில் உடன்பாடில்லாமல் இருக்கலாம். நான் அவருடன் முரண்பட்ட போதெல்லாம் விரிவாகவே அதைப் பற்றி எழுதி இருக்கிறேன். (ஆனால் அதுவே பிழைப்பாகி விடக் கூடாது என பின்னாளில் நிறுத்தி விட்டேன்.) அதே நேரம், இந்த அரசியல் அடுக்குகளை உடைத்து விட்டுப் பார்த்தால் அவற்றின் பின்னால் ஒரு மகத்தான படைப்பாளி இருப்பதையும் நாம் மறுத்து விட முடியாது.
ஜெயமோகனை இந்த அரசியலன்றி வாசிக்க, மதிப்பிட முடியுமா? அதாவது வெறும் கலைஞனாக? முடியும் என்றே நினைக்கிறேன். அரசியலும் வெறும் கதையாடலாக மாறி விடக் கூடிய எழுத்துண்டு. அது ஜெயமோகனில் நிகழும் போதெல்லாம் அவர் நம்மை உடைந்தழ வைக்கிறார், இன்பத்தில் திளைக்க, நெகிழ்ச்சியில் மெய்மறக்க வைக்கிறார். சொல்லப் போனால் அப்போதெல்லாம் ஜெயமோகன் தன்னையே கடந்து, மீறிப் போகிறார். அது அவருக்கு இயலாத போது அவரது குரல் நமக்கு கீச்சிடலாக ஒலிக்கிறது. அப்போது நாம் அவருடன் முரண்பட்டு யோசிக்கிறோம், விவாதிக்கிறோம், மறுக்கிறோம், ஏற்கிறோம். ஆனால் இந்த ஜெயமோகன் சூன்யமாகும் இடங்களில் அவர் ஒரு சிறந்த கதைசொல்லியாக மலர்கிறார். அவரது படைப்புலகில் இது போல ஏராளமான இடங்கள் உண்டு. இதை நான் பாராட்டும் விதமாக இங்கு சொல்லவில்லை; ஜெயமோகனின் பலவிதமான வாசகர்களின் தரப்பில் இருந்து இதை சொல்கிறேன்.
ஜெயமோகனின் பல பாத்திரங்களில் ஒலிப்பது அவரது குரலே தான் எனும் உணர்வு எனக்குண்டு. இதை நான் தல்ஸ்தாயின் பாத்திரங்களுக்கும் சொல்வேன். அதே நேரம் கதையுடன் ஒன்றி அப்பாத்திரங்கள் தமக்கென ஒரு தனி ஆளுமையைப் பெறும் போது அவை நமக்கு உயிருள்ள மனிதர்களாகத் தோன்றுகிறார்கள். அப்படி ஏராளமான பாத்திரங்களை அவர் உருவாக்கி இருக்கிறார்.
பெரும் நாவல்களை எழுதுவதில் உள்ள முக்கிய சவாலே சிறிய பாத்திரங்களை, அவர்களுடைய தனியியல்புகளை நினைவு வைத்திருந்து படைப்பு முழுக்க தேவையான இடத்தில் அவர்களை அழைத்து வந்து சரியான இடத்தில் அவர்களை நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பதே. “ரப்பர்” “காடு”, “ஏழாம் உலகம் போன்ற சிறிய நாவல்களில் இருந்து “வெண் முரசு” ஒரு நவ செவ்வியல் நாவல் தொடர்கள் வரை நம்மால் மறக்க முடியாத ஏராளமான இரண்டாம் நிலை பாத்திரங்கள் உண்டு. அவர்கள் நாவலின் பரப்புக்கு உதிரியாகவே தெரிய மாட்டார்கள். நாவலின் களத்துடன், கருப்பொருளுடன் ஒரு நெருக்கமான தொடர்புள்ளவர்களாக இருப்பார்கள். சில நேரம் முக்கிய பாத்திரங்களை விட சிறப்பாக அமைந்திருப்பார்கள்.
பெரும் நாவல்களை எழுதுவதன் மற்றொரு சிரமம் சிக்கலான கதைக்களம் அமைந்தால் அதை குழப்பமின்றி அலுப்பின்றி நகர்த்தி சென்று உக்கிரமான தருணங்களை உருவாக்கி மெல்ல மெல்ல சிக்கல்களை அவிழ்ப்பதே. அவரது சிறிய நாவலான “ரப்பரில்” துவங்கி “விஷ்ணுபுரம்”, “பின் தொடரும் நிழலின் குரல்” “வெள்ளை யானை” போன்ற விரிவான நாவல்கள் வரை சிக்கலான கதையமைப்புகளை அனாயசமாக, திறம்பட கையாண்டிருப்பார். கொஞ்சம் பிசகினால் அரசியல் ரீதியாகவோ வேறு விதங்களிலோ கடும் ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடிய கதைக்களங்களை வெகு சாமர்த்தியமாக உணர்வு மோதலை, நாடகீய தருணங்களின் முறுகலை நோக்கி கொண்டு சென்று அதை தளர்த்தி ஒரு புரிதலை நோக்கி நகர்த்தி இருப்பார். இவ்விதத்தில் பார்க்கையில் ஜெயமோகன் நாவலாசிரியரின் வேடமணிந்த ஒரு செவ்வியல் நாடகாசிரியரோ என எனக்குத் தோன்றும். ஏனெனில் அவர்களே (கிரேக்க நாடகாசிரியர்கள், ஷேக்ஸ்பியர் போன்றோர்) இந்த முறைமையை கதைகூறலில் பயன்படுத்துவதில் பெயர் பெற்றவர்கள். தமிழில் இப்போதைக்கு இதைச் செய்கிற மிகச்சில நாவலாசிரியர்களில் ஜெயமோகனும் ஒருவர்; பிறர் ஒரு சிறிய வட்டத்துக்குள் ஒரே வகையான நெருக்கடியை எதிர்கொள்ளுகிறவர்களின் பிரச்சனையை பேசுகிற கதைக்களத்தை எடுத்துக் கொள்ளுவதால் அல்லது எந்த அரசியலுக்குள்ளும் போகாததால் இப்படியான சவால்களுக்குள்ளே முதலில் போவதில்லை.
இங்கிருந்தே இறுதியாக மற்றொரு முக்கியமான சிறப்பை (அல்லது சிக்கலை) எடுத்தியம்ப வேண்டும் - நாவலானது ஒரு பாத்திரத்தின் அல்லது குடும்பத்தின் கதை எனும் இடத்தில் இருந்து அதை தத்துவ / அரசியல் சித்தாந்த மோதல்களின், வரலாற்றியலின், புராணிக மறுகூறலின் களமாக மாற்ற வேண்டும் எனும் ஆசையும் நம்பிக்கையும் கொண்டு எழுத வந்தவர் ஜெயமோகன். அவர் தான் நம்பிய இதை துணிந்து எழுதியும் சாதித்தார். அவர் இதை எப்படி செய்தார் என்பதில் எனக்கோ உங்களுக்கோ மாறுபட்ட கருத்திருக்கலாம். ஜெயமோகனின் முனைப்புகள், கனவுகளின் தாக்கம் என்ன என்பதை அரை நூற்றாண்டுக்குப் பிறகே ஒருவரால் மதிப்பிட முடியும். ஆனால் தமிழ் நாவலின் போக்கை மற்றொரு தளத்துக்கு நகர்த்த விரும்பி அவர் செய்த அசுர முயற்சிகள் பாராட்டத்தக்கவை.
இவ்வளவையும் கருத்திற் கொண்டே ஜெயமோகனின் மாபெரும் இலக்கிய பங்களிப்பை பாராட்ட விழைகிறேன். மற்றொரு பண்பாட்டில் நான் இதை எழுத வேண்டிய அவசியமே இருக்காது. ஆனால் இங்கே அவரது அரசியல் மற்றும் அதிரடிக் கருத்துக்கள் மீது தமக்குள்ள ஒவ்வாமையால் அல்லது சம்மந்தப்பட்டவரின் வாசிப்பின்மையின் போதாமையால் ஜெயமோகனை ராஜேஷ் குமாருடன் எல்லாம் ஒப்பிடுகிறவர்கள் இருக்கிறார்கள் எனும் போது ஒவ்வொரு அம்சமாக விளக்கி இங்கே எழுத வேண்டி இருக்கிறது. ஒரு படைப்பாளியாக ஜெயமோகன் மீது மிகுந்த மரியாதை கொண்ட எத்தனையோ அடுத்த தலைமுறை படைப்பாளிகளின் குரலாகவே இங்கு ஒலிக்கிறேன். இதில் எந்த சமரசமும் இல்லை. குழப்பங்களும் இல்லை. நான் எங்கு நிற்கிறேன், எந்த மதிப்பீட்டின் படி பேசுகிறேன் என அறிந்தே பேசுகிறேன்: ஜெயமோகன் நம் காலத்தின் மகத்தான படைப்பாளிகளில் ஒருவரே. அதை மறுப்பது யாருக்கும் சாத்தியமல்ல!

கருத்துகள்