முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜான்டி ரோட்ஸ்கள் இனித் தேவையில்லை!


 

இன்றைய இந்தியா-தென்னாப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் முன்னாள் களத்தடுப்பு பயிற்சியாளரும் தற்போது தமிழ் வர்ணனையாளராக இருப்பவருமான ஶ்ரீதர் "தென்னாப்பிரிக்கா 20 ரன்களையாவது களத்தடுப்பில் சேமிப்பார்கள், ஆகையால் 280 எனும் இலக்கானது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆடும் போது 300ஆகிறது" என்று சொன்னார். இது ஒரு காலாவதியாக கருத்து என்று எனக்கு அப்போதே தோன்றியது. ஶ்ரீதர் சொன்னதைப் போல தென்னாப்பிரிக்க தடுப்பாளர்கள் பாய்ந்து விழுந்து உருண்டு புரண்டு களத்தடுப்பு பண்ணினார்கள். நான்கு, மூன்று ஓட்டங்கள் எனத் தடுத்தார்கள். ஆனால் மட்டையாடி விரட்டி சென்ற இந்தியா வெகு சுலபமாக போட்டியில் வென்றது. ஏன் எப்படி?

ஶ்ரீதர் சொல்லும் விதி 2010 வரையிலான கிரிக்கெட்டில் மட்டுமே செல்லுபடியானது. இன்று மட்டையாளர்களால் எப்போது வேண்டுமெனிலும் சிக்ஸர் அடிக்க முடியும். அதனால் ஸ்டிரைக் ரேட் பற்றி அவர்கள் துவக்கத்தில் கவலைப்படுவதில்லை. தேவையான ரன் ரேட் 7-8 போனாலும் அது அவர்களை அலட்டுவதில்லை. பந்தை எப்போது வேண்டுமெனிலும் மைதானத்துக்கு வெளியே அடிக்கலாம் எனும் போது களத்தடுப்பாளர்கள் அசகாய சூரர்களாக இருந்தாலும் பயனில்லை. எல்லைக் கோட்டுக்கு வெளியே 5-6 களத்தடுப்பாளர்களை நிறுத்தினால் தான் உண்டு.

கட்டுப்பாடான, வேகமான களத்தடுப்பு எல்லைக் கோட்டிலோ உள்வட்டத்தில் குறிப்பாகவோ 90களில் ரன் ரேட்டை வெகுவாகக் குறைத்து பல விக்கெட்டுகள் விழக் காரண்மாகியது. அதுவே இலங்கை, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளை இரும்புக் கோட்டைகள் ஆக்கின. அந்த காலம் முடிந்து விட்டது. இப்போது பந்து வீச்சாளர் இந்த களத்தடுப்பின் அழுத்தத்தை பயன்படுத்தி நன்றாக வீசி விக்கெட்டும் எடுக்க வேண்டும். உயரக் கேட்சுகள் வரும் போது அவற்றைப் பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் மூன்று ஓவர்களில் 10 ஓட்டங்களில் எடுத்து விட்டு அடுத்த இரண்டு ஓவர்களில் மூன்று சிக்ஸர்கள் அடித்து ரன் ரேட்டை இயல்பாக்கி விடுவார்கள்.

இன்று சிக்ஸர் அடிக்கும் மட்டையாட்ட பாணியானது கிரிக்கெட்டை தலைகீழாக மாற்றி உள்ளது. 5வது நாள் டெஸ்ட் போட்டியில் 350 ஓட்டங்களை இலக்காக வைத்தால் கூட அடித்து விடுகிறார்கள். இருபது ஓவர்களில் 12 சிக்ஸர்கள் அடிக்க முடிந்தால் போதும் ஆட்டத்தின் போக்கே மாறி விடும். Bazball! டி20யில் எல்லாம் சொல்லவே வேண்டாம் - எல்லைக்கோட்டுக்கு வெளியே போகும் பந்தை ஒருவர் பாய்ந்து தட்டி விட இன்னொருவர் பிடிக்கிற கேட்சுகள் கூட அவை விக்கெட்டுகள் என்பதாலே முக்கியமாகின்றன. இன்று ஓட்டங்களைத் தடுக்கும் களத்தடுப்பல்ல, உயரக் கேட்சுகளை எடுக்கும் தடுப்பாளர்களே அவசியமாகிறார்கள். அவர்களே வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள். ஏனென்றால் விக்கெட் எடுக்காமல் இன்று ரன்களின் பொழிவைத் தடுக்க முடியாது. இன்றைய போட்டியில் கூட இஷான் கிஷன் மகராஜின் பந்து வீச்சில் சிக்ஸர்கள் அடித்ததும் போட்டி திசை மாறி விட்டது. களத்தடுப்பாளர்கள் உயிரைக் கொடுத்து பவுண்டரிகளைத் தடுத்தது வீணாகி விட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...