முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாவலைத் திருத்துகிற மேஜிக், அதன் இன்பம்!

ஒரு நாவலை நான்கைந்து முறையாவது திருத்துவது மிக மிக அவசியமான ஒன்று. அதனால் நாவல் வெளியிடுவது தாமதமாகலாம். சில நேரங்களில் கதையமைப்பிலோ முக்கியமான காட்சிகளிலோ பாத்திரங்களின் இயல்பிலோ உள்ள ஒரு அடிப்படையான தவறு நம் கவனத்துக்கு வராமல் தப்பி விடும். அது கண்ணில் படவே ஓராண்டுக்கு மேல் ஆகும். ஏனென்றால் எழுத எழுத அந்நாவல் குறித்தொரு புகைமூட்டம் நம் மனதில் உண்டாகும். நாம் அந்த மூட்டத்தின் வழியே கலங்கலாகத் தான் நாவலை நோக்குவோம். 


திரும்பத் திரும்ப திருத்துவதன் ஒரு முக்கிய அனுகூலம் நாவலுக்கு புதிய புதிய அர்த்த அடுக்குகளை உருவாக்க முடியும் என்பது. முதல் பிரதியில் பெரும்பாலும் ஒற்றைப் பொருளே வரும். அல்லது அதிகமாக சில விசயங்களை அழுத்தி சொல்லியிருப்போம். சில விவரணைகளை, நீளமான வசனங்களை முடிதிருத்துநர் கொத்தாக மயிரை எடுத்து நைசாக வெட்டுவதைப் போல நாம் நீக்கிவிட்டால் அந்த இடத்தில் ஒரு வெளிச்சம் வருவதைப் பார்க்க அழகாக இருக்கும். நாவல் நன்றாக மூச்சு விடுவதைப் பார்க்க நமக்கும் நிம்மதி கிடைக்கும். சில அத்தியாயங்களை நீக்கினால் கதை இன்னும் சரளமாக ஒழுகுவதைப் பார்க்க முடியும். இதையெல்லாம் எழுதுகையில் துல்லியமாக திட்டமிட்டு செய்வது கடினம்.

ஒரு நாவலுக்குள் தோன்றும் ஜீவனை, உயிர்த்துடிப்பை, ஆத்மார்த்தமான கேவலை நீங்கள் எடிட்டிங்கின் போது உருவாக்க முடியாது. ஆனால் அது மட்டுமே நாவல் அல்ல. எப்படி ஒரு குழந்தைக்கு நாம் உணவுண்ண, குளிக்க, கக்கா போக, கழுவ, ஆடையணிய, நடக்க, பேச, பழக சொல்லித் தர வேண்டுமோ அப்படியே நாவலுக்கும் செய்ய வேண்டி இருக்கிறது. குழந்தையின் உயிரோட்டம் தான் நம்மைக் கவர்கிறது, குழந்தையின் பாசாங்கின்மையை நாம் வருவிக்க முடியாது தான், ஆனால் டர்ஜான் போன்றொரு குழந்தையை யாராலும் டீல் பண்ணவோ குரங்கு போல பரணிலும் மேஜையிலும் தாவி பற்களைக் காட்டி சீறும் ஒரு குழந்தையைக் கொஞ்சி ரசிக்கவோ முடியாது. திருத்துதல் நாவலைப் பண்படுத்தும் பணி. திருத்தத் திருத்த ஒரு நாவல் செயற்கையாகி விடுமோ, பிளாஸ்டிக்காகி விடுமோ எனும் அச்சம் தமிழில் பலருக்கும் உண்டு. அதைப் புரிந்து கொள்கிறேன். ஆனால் ஒரு நாவலின் மொழியை நாம் முழுக்க மாற்றி, கட் ஆண்ட் பேஸ்ட் பணிகளை அதிகமாகப் பண்ணாத பட்சத்தில் பிளாஸ்டிக் ஆகும் ஆபத்து இல்லை. அப்படி பிளாஸ்டிக்கான படைப்புகள் எழுதப்படும் போதே அப்படித்தான் இருக்கும். எடிட்டிங்கின் போதும் அது இறந்து பிறந்த குழந்தை போலிருக்கும் என நினைக்கிறேன்.

நான் விரைவில் வெளியிடப் போகும் நாவலை ஒரு தொடராக எழுதினேன். இப்போது அதைத் திருத்துகையில் 40% மேல் மாற்றுகிறேன். முக்கியமாக ஒரு எதிர்பாரா திருப்பம் வேண்டும், அது என்னவாக இருக்க வேண்டும் என யோசித்துக் கொண்டிருந்தேன். நேற்று நள்ளிரவு ஒரு அத்தியாயத்தை திருத்துகையில் ஒரு புது ஐடியா கிடைத்தது. அதை நீட்டித்தால் சுவாரஸ்யமான திருப்பம் கிடைத்தது. அது மட்டுமல்ல, நாவலின் வடிவத்தை மிகவும் புதுமையாக மாற்றுவதற்கான ஒரு ஐடியாவும் கிடைத்தது. அது நாவலின் தலைப்புக்கு பொருந்தியும் வந்தது. ஒருவேளை நான் நேற்று நள்ளிரவு உட்காராவிட்டால் இது நடந்திருக்காது. இது தான் எடிட்டிங்கின் மேஜிக்.

தொடராக எழுதும் போது நமக்கு இந்தளவுக்கு அவகாசம் நிச்சயம் இருக்காது. அதனாலே தொடராக எழுதப்பட்டு அப்படியே பதிப்பிக்கப்படும் நாவல்களில் நிறைய குறைகள் நிச்சயம் இருக்கும். அந்த குறைகளையும் மீறியே அவை ரசிக்கப்படும். நானே சில தொடர்களைப் படிக்கையில் சம்மந்தப்பட்ட எழுத்தாளர்களை அழைத்து 18வது அத்தியாயத்தை முதல் அத்தியாயமாக கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும் என்பது போல சொல்லியிருக்கிறேன். ஆனால் என்ன பயன்?

அசோகமித்திரன் தனது நாவல்களை மிக மிக சுருக்கமாக எழுதுபவர். ஆனால் அவற்றைக் கூட கையெழுத்துப் பிரதியாகவே நான்கைந்து முறை திரும்பத் திரும்ப எழுதுவார் என என்னிடம் கூறியிருக்கிறார். 5-10 வருடங்கள் கூட அவர் எடுத்துக் கொள்வதுண்டு. சு.ரா தன் நாவல்களை மிகக்கராறாகத் திட்டமிட்டு எழுதுவார். இமையமும் அபாரமாக தன் நாவல்களைத் திருத்தும் திறன் பெற்றவர். பா.வெங்கடேசன் தன் நாவல்களை அவற்றின் கதையமைப்பில் மாற்றம் கொண்டு வருவதற்காக ஒட்டுமொத்தமாக திரும்ப எழுதக் கூடியவர். ஆனால் அசோகமித்திரனை, சு.ராவை, இமையத்தை, பா.வெயைப் போன்றவர்கள் தமிழில் அரிதானவர்கள். அப்படியே எழுதி பதிப்பது தான் இங்கு பிரசித்தமான முறை. இதனால் அந்நாவல்கள் மோசமானவை அல்ல. ஒரு நல்ல நாவலை திருத்துகையில் அது ஒரு படி தரத்தில் உயரும். ஒரு மோசமான நாவலை எவ்வளவு திருத்தினாலும் காப்பாற்ற முடியாது. சார்லஸ் டிக்கன்ஸின் நாவல்களில் வரும் அனாதை இல்லக் குழந்தைகளைப் போன்றவை நமது நாவல்கள். சில பிச்சைக்காரனாகும், சில தெருவில் திருடும், சில படித்து உழைத்து பெரிய ஆளாகி சமூகம் நன்மதிப்பு பெறும்,  தக்கன பிழைக்கும்.

ஒரு நண்பர் என்னிடம் இதைப் பற்றி கேட்கையில் திருத்திக் கொண்டே இருந்தால் அதிலேயே பல வருடங்கள் போய் விடாதா என்று கவலை தெரிவித்தார். ஒரு எல்லை உண்டு. ஒரு நாவலின் முடிவு சரியாக அமைகையில் அந்த எல்லை நமக்குப் புலப்பட்டு விடும். அங்கு நிறுத்தி விட வேண்டும் என நினைக்கிறேன். ஆம், சொல்லமைவுகளை, வாக்கியங்களை மேலும் மேலும் திருத்தலாம், மாற்றி மாற்றி அமைக்கலாம், தொனியை மாற்றலாம், ஆனால் அத்தகையை திருத்தங்கள் ஒரு நாவலுக்கு இரண்டாம் பட்சமானவை. ஒரு அளவுக்கு மேல் அவ்வகை பிழைகளை அனுமதித்து விடலாம்.

தகவல் பிழைகள்? அவற்றை ஒரு நண்பரோ வெளி எடிட்டரோ தான் சரியாகக் கண்டுபிடித்து சொல்ல முடியும். 

இன்னொரு விசயம், நீங்கள் என்னதான் சொன்னாலும் நான்கைந்து முறையாவது ஆற அமர ஒரு நாவலைத் திருத்தி அதில் விளையாடி, அதனால் விளைந்த நல்ல மாற்றங்களை அனுபவித்த ஒருவருக்குத் தான் நான் இங்கு சொல்லியுள்ள விசயங்களை மனதார ஏற்றுக் கொள்ள முடியும். எப்படி புரியாத வரை ஒரு மொழியின் மீது ஆர்வம் வராதோ அப்படித்தான் இவ்விசயமும். நாவலைத் திருத்தும் பணியில் ஒரு மேஜிக் நிகழும். அப்போது அது ஒரு கலையாகும். அதை ரசித்துணர்ந்த ஒருவருக்கு அது ஒரு படைப்பனுபவத்துக்கு ஓரளவுக்கு அருகில் வரும் மகிழ்ச்சியைத் தரும். அவர்கள் இந்த நேரத்தைக் கொண்டு இன்னொரு நாவலை எழுதியிருக்கலாம் என புலம்ப மாட்டார்கள். எண்ணிக்கையில் என்ன இருக்கிறது?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.