முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாஸிட்டிவ்வாக யோசிப்பது


மாதாமாதம் சென்னைக்கு வருவது பெரும் அலுப்பாக, பொருட்செலவாக இருந்தாலும் அதை பாஸிட்டிவ்வாக பார்க்க பழகிவிட்டேன். 
ஒவ்வொரு முறையும் நண்பர்களை சந்திக்க திட்டமிட்டு விடுகிறேன். கடந்த முறை மனுஷ்யபுத்திரனுடன் நிறைய நேரம் செலவிட்டால் இந்த முறை பா ராகவன், செல்வேந்திரன், ராம்ஜி, காயத்ரியுடன் பொழுது ஜாலியாகப் போனது. 

காலையில் காயத்ரியின் வீட்டுக்கு சென்று ரிப்ரெஷ் பண்ணி அங்கேயே உட்கார்ந்து இரண்டு மணிநேரங்கள் என் நாவலில் திருத்தங்கள் செய்தேன், எழுதினேன். அவ்வளவு அமைதியான ஒரு இடத்தில் நான் இதுவரை இருந்ததில்லை. பொதுவாக ஹெட்போன் அணிந்தால் தான் எனக்கு அழுதும் மனநிலை கிடைக்கும். சின்னச்சின்ன அசைவுகள், சத்தங்கள் என் கவனத்தை சிதைக்காதிருக்க வேண்டும். ஆனால் இங்கே எனக்கு எதுவும் தேவைப்படவில்லை. இசையின் பூரண அமைதி இசையின்றியே அமைந்திருக்கும் வீடு. சாரு போன் செய்து முன்னரே சொல்லியிருந்தால் நான் பார்க்க வந்திருப்பேனே என்றார். அடுத்த முறை சாருவிடம் சொல்லிக்கொண்டு செல்ல வேண்டும் என நினைத்துக்கொண்டேன். 
காயத்ரி வீட்டிலேயே காலையுணவை (குழந்தைக் கன்னம் போல மெதுமெதுவான இட்லி) முடித்துக்கொண்டு நீதிமன்றம் போனால் நீதிபதி விடுப்பில் போய் விட்டார். ஹியரிங் இல்லை. ஒரு உதவியாளரே அட்டெண்டென்ஸ் எடுத்தார். அடுத்த ஹியரிங்கை அடுத்த மாதம் போடுங்கள், அலைய முடியல என்று சொல்லி ஜனவரிக்கு வாங்கினேன்.
அங்கேயே சற்று நேரம் அமர்ந்து என் நாவலைத் திருத்தினேன். அதன் பிறகு ஜீரோ டிகிரி பதிக்கம் போய் பா.ரா, செல்வேந்திரன், ராம்ஜி, காயத்ரியுடன் அளவளாவி விட்டு, அவர்களுடன் க்ரீம் செண்டர் உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டேன். புத்தகக் கண்காட்சியிலும் ஜீரோ டிகிரி ஸ்டாலில்  இப்படித்தான் - நொறுக்குத்தீனி, சாப்பாடு வந்துகொண்டே இருக்கும். ராம்ஜியே பரிமாறினார், ரசித்து ரசித்து உணவுகளை ஆர்டர் செய்தார். சென்சார் இல்லாத 90ஸ் பார்த்திபன் படம் போல இருக்கும் ராம்ஜியின் உரையாடல். அன்றும் அப்படித்தான். அவ்வப்போது தாய்மை உணர்வு கொண்ட பதிப்பாளர் ஆகி விடுவார். அன்று அவருக்கு செல்வேந்திரன் துணையாக ஒரு வடிவேலுவாக காயத்ரி சிக்கிக்கொள்ள சிரிப்புவெடி தான். நானும் பா.ராவும் புயலின் மையம் போல அமைதியாக இருக்கிறோம் என நினைத்தால் பூஜா ஹெக்டே பெயரை எடுத்ததும் பா.ரா ஒரு பெரிய சிரிப்புடன் களத்தில் இறங்கிவிட்டார். 

மதியம் மூன்று மணிநேரங்கள் அவர்களுடைய அலுவலகத்தில் ஒரு அறைக்குள் இருந்து என் நாவலைத் திருத்தினேன். இப்படித்தான் தினமும் 5-6 மணிநேரங்களாவது நாவலைத் திருத்தி ஒழுங்குபடுத்த செலவிடுகிறேன். இன்றைக்கு 50 பக்கங்களாவது முடிக்க வேண்டும் என கச்சை கட்டிக்கொண்டு இறங்கினால் பத்து பக்கங்கள் முடியவே நாக்கு தள்ளிவிடும். நாவலை எழுதுவதை விட திருத்துவது மிகப்பெரிய அளவுக்கு நேரத்தைப் பிடிக்கிறது. மணல் நீரை இழுப்பதைப் போல இந்நாவல் என் நேரத்தை உறிஞ்சிக்கொண்டே இருக்கிறது. கடந்த இரு ஆண்டுகளில் நான் நாவலை எடிட் செய்வது பற்றி, அதன் வடிவம் பற்றி நிறைய படித்தேன், அது இப்போது இந்நாவலில் வேலை செய்யும் போது (புதிய நாவலை எழுதும்போதும்) உதவுகிறது. ஆனால் அதுவே பாதகமாகவும் இருக்கிறது - இப்போது எனக்கு சின்னச்சின்ன குறைகள் பெரிதாகத் தெரிகின்றன. ஒரு பாத்திரத்தின் இயல்பை மாற்றி, வேறு புது பாத்திரங்களைக் கொண்டு வந்து, புதிய சவால்களை அறிமுகப்படுத்தி, சில அத்தியாயங்களை மொத்தமாகத் தூக்கி, புதியனவற்றை எழுதி சேர்த்து, நாவலின் தொனியை, வாக்கியங்களின் அமைப்பை மாற்றி … நாக்குத் தள்ளி விடுகிறது. நான் மட்டும் வெண்முரசு நாவல்களை எழுதி இருந்தால் அவற்றை எடிட் செய்ய 30 ஆண்டுகள் எடுத்திருப்பேன். ரிப் வேன் விங்கிள் போல அறை முழுக்க நிரம்பிய நாவல்களுடன் ‘இப்போ பிரசுரிக்க தயாராக இருக்கிறது’ என நான் வெளிவரும் போது என் வாசகர்கள் வயதாகியிருப்பார்கள், பதிப்பாளர்கள் ஊரைவிட்டே போயிருப்பார்கள், உலகமே மாறி இருக்கும். நல்லவேளை நான் அவ்வளவு பெரிய நாவலை எழுதவில்லை!

ஜீரோ டிகிரி அலுவலகத்துக்குக் கீழே ஒரு புல்லட் ஷோரூம் இருக்கிறது. அதன் காவலாளி நான் ஒரு எழுத்தாளன் என அறிந்துகொண்டு என்னிடம் வந்து அன்பாகப் பேசினார். தான் முன்பு சாண்டில்யன், கல்கி, கண்ணதாசன், பாலகுமாரன் வாசகனாக இருந்ததாகவும், மூன்று பெரிய மூட்டைகள் நிறைய புத்தகங்கள் வைத்திருந்ததாகவும், அவரது மனைவி அவற்றை அள்ளி காய்லாங்கடையில் எடைக்கு விற்றுவிட்டதாகவும் வேதனையுடன் சொன்னார். பாவமாக இருந்தது. “இப்போ படிக்க முடியல, பணம் தான் வாழ்க்கையில் பெரிசா இருக்கு” என்றார். “நீங்க சொல்லுவது 100% உண்மை, பணம் தான் கூட இருக்கும் குடும்பத்து மனிதர்கள் நம்மை எப்படி நடத்துவார்கள் என்பதைத் தீர்மானிக்கிறது” என்று ஆமோதித்தேன். என்னிடம் கூடுதலாக சில லட்சங்கள் இருந்திருந்தால் இந்த வழக்குக்காக நான் அலைந்திருக்க மாட்டேன், என் பிரச்சினைகள் ஒரே நாளில் தீர்ந்திருக்கும். நான் முன்பு அன்றன்றைக்கான தேவைக்கு பணம் போதும் என நம்பினேன். லௌகீகத் தேவைகளை பெரிசுபடுத்த மாட்டேன். இன்று அது தப்பு எனப் புரிகிறது. ஒரு ‘விபத்து’ நம் மொத்த உலகையும் உருக்குலைக்கும் போது பணம் எவ்வளவு பெரிய விசயம் எனப் புரிகிறது.
 ஏனென்று தெரியவில்லை - ரொம்ப வயதானவர்களுடன், பணமில்லாத வயசாளிகளுடன் என்னுடைய வேவ்லெங்க்த் செட்டாகி விடுகிறது. இளைஞர்களையும் பிடிக்கிறது. என்னைப் போன்ற மத்திய வயதினர் அந்நியமாகத் தோன்றுகிறார்கள். 

நண்பர் கண்ணன் என்னை அன்று காலையிலே தன் ஆட்டோவில் பிக் அப் பண்ணி காயத்ரியின் வீட்டிலும், அங்கிருந்து நீதிமன்றத்திற்கும் அழைத்துப் போனார். அவருடன் பேசிக்கொண்டே பயணிப்பது ஒரு சிறந்த அனுபவம். அதைவிட சிறப்பானது மாலை நேரத்தில் நாங்கள் சேர்ந்து ஒரு பியர் அடித்துக்கொண்டு இலக்கியம், சினிமா, பெண்கள், குடிப்பழக்கத்தின் தீங்குகள் பற்றி பேசுவது. நாங்கள் இருவரும் குடிகார தகப்பன்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் பொதுவான ஒருசில அனுபவங்கள் எங்களுக்கு உண்டு. அப்புறம் எங்களை இணைக்கும் இன்னொரு விசயம் சாருவின் எழுத்தின் மீதுள்ள பற்று. கண்ணனின் அளப்பரிய அன்பு, ஒரு குழந்தையைப் போன்ற மனம். நேற்று கண்ணனின் நண்பர் அஜித்தும் எங்களுடன் இணைந்துகொண்டார். அவர்கள் இருவருமாக என்னை பஸ் ஏற்றி விடும் முன்பு ஆட்டோவில் இருந்து சிறிய கேக்கை எடுத்து மெழுகுவர்த்திகளை ஏற்றி “ஊதுங்க அண்ணே” என்றார்கள். அட இதை எப்போ ஏற்பாடு பண்ணினார்கள் என வியப்பாக இருந்தது. இப்படி என் பிறந்தாளை இரண்டாவது முறையாக நேற்று கொண்டாடிய போது மிக நெகிழ்வாக உணர்ந்தேன். 

ஆரம்பத்தில் சொன்னதைப் போல எரிமலையிலும் பூக்கள் மலரத்தான் செய்கின்றன. நான் முன்பு போல அதிகமாக இப்போது புலம்புவதில்லை. இந்த அலைச்சலின் போது புதுப்புது நண்பர்களின் வீடுகளில் சில மணிநேரங்கள் இருக்கிறேன், பிரியமான அன்னை மனம் கொண்ட சக எழுத்தாளர்கள், பதிப்பாள நண்பர்கள், கண்ணனைப் போன்ற குழந்தை மன அன்பர்கள் இருக்கிறார்கள், இந்த மாதம் ஒருநாள் என் வாழ்வின் மறக்க முடியாத தினமாகி விடுகிறது. நீதிமன்றத்தில் நான் முழுங்கும் கசப்பை இவர்கள் அமிர்தமாக்கி விடுகிறார்கள். நரகத்தில் இருந்து நேரே சொர்க்கத்துக்கு லேண்ட் ஆகி விடுகிறேன். யோசித்துப் பார்த்தால் இந்த நரகம் இல்லாவிடில் சொர்க்கத்தையும் நான் பார்க்க மாட்டேன் அல்லவா! எப்படி பாஸிட்டிவ்வா யோசிக்க கத்துக்கிட்டேனா!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...