முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கலை எனும் ‘போதைப்பழக்கம்’


லட்சியவாதத்துக்காக வாழ்க்கையை தொலைத்த போன தலைமுறை சிறுபத்திரிகையாளர்களைப் பற்றின இந்திரனின் பதிவில் நான் எழுதிய குறிப்பை ஒட்டி ஒரு நண்பர் சில கேள்விகளை எழுப்பி இருந்தார். அவருடனான என் விவாதத்தை சற்று எடிட் பண்ணி கீழே தந்திருக்கிறேன்:

கேள்வி: இந்த இலட்சியவாத தீவிர தன்மை உடையவர்களின் தியாகத்தினாலும் தானே இன்று நவீன இலக்கியம் செழித்திருக்கிறது?

பதில்: அப்படி யாரும் தம் ரத்தத்தை வார்க்கத் தேவையில்லை. நமக்கு எல்லாம் இருப்பது ஒரு வாழ்க்கை!

கேள்வி: நான் சராசரி மனிதர்களை பற்றி கூறவில்லை. இலட்சியவாதம் இன்று வீழ்ச்சி அடைந்து விட்டாலும் அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைவது இந்த வகை ஆட்களால் தானே?

பதில்: அது ஒரு பொய். எல்லா துறைகளும் மனித உழைப்பாலும் அந்தந்த நேரத்து பொருளியல் தேவைகளாலுமே வளர்கின்றன. இதுதான் எதார்த்தம். நம் எழுத்தாளர்கள் இந்த வளர்ச்சிக்குப் பின்னால் ஒரு கருத்தியலை சுமத்துகிறார்கள். இது ஒரு ஹெகலிய ஏமாற்றுத் தந்திரம். ஜெயமோகனும் சில திராவிட சிந்தனையாளர்களும் இதை செய்வார்கள்.

அது மட்டுமல்ல, லட்சியவாதத்தை முன்னெடுப்பவர்கள் அடிப்படையில் ஒருவித தேசியவாதிகள் அல்லது முதலீட்டியத்தின் ஆதரவாளர்கள் என்பதை கவனிக்கலாம். சாக்ரடீஸ், பிளேட்டோவின் காலத்தில் இருந்தே இதுவே நிலைமை. ஏனென்றால் லட்சியவாதமானது இவ்வாழ்க்கை பொருளியல் சார்ந்து இயங்குவது மட்டுமே எனும் அடிப்படையான உண்மையில் இருந்து நம் கவனத்தை திருப்பி நம்மை கனவுகளை நெசவு செய்கிறவர்களாக மாற்றும் நோக்கம் கொண்டது. அதற்காகவே மத்திய வர்க்கத்துக்கும், ஏழை வர்க்கத்துக்கும் லட்சியம் எனும் போதை அதிகமாக ஊட்டப்படுகிறது. இந்த போதை இல்லாத வியாபாரிகளும் அரசியல்வாதிகளும் மிக சௌகர்யமாக தம் வாழ்க்கையை அமைத்திருப்பதைப் பாருங்கள். அவர்களிடம் நம்மிடம் ஒரு போதும் வராத இரு விசயங்கள் அபரிதமாக உள்ளன - பணமும் அதிகாரமும். அது மட்டுமல்ல லட்சியவாதத்தை நம் நரம்புகளில் ஏற்றுகிற கருவிகளான ஊடகம், மதம், எழுத்து போன்வற்றின் மீதான முழுமையான கட்டுப்பாட்டையும் அவர்களே வைத்திருக்கிறார்கள். ஒரு ஆசிரியரின் மகன் தான் வேலை செய்யாமல் முழுநேர கலைஞனாகப் போவதாகக் கூறலாம். ஆனால் ஒரு அமைச்சராகவோ ரிலையன்ஸ் போன்ற சாம்ராஜ்ஜியத்தின் உரிமையாளராகவோ ஆகப் போகிற ஒரு வாரிசு அப்படி பொருளியல் வேண்டாம், கலை மட்டும் போதும் என தியாகம் பண்ணுவது அரிதாகவே நடக்கும். எங்காவது ஒரு முதல்வரின் மகன் தனக்கு வரப் போகும் அரியணையை விட்டுவிட்டு எழுத்தாளனாவது நடந்ததுண்டா? எனக்குத் தெரிந்து உலக வரலாற்றிலேயே அப்படி ஒருபோதும் நடந்ததில்லை? லட்சியவாதம் பிச்சைக்காரன் தன் கனவில் விருந்து சாப்பாடு உண்பதைப் போல. நிஜத்தில் விருந்துண்ண வாய்ப்புள்ளவர்கள் கனவு காண்பதில்லை. (உடனே புத்தரின் கதையை கொண்டு வராதீர்கள். அவரே அன்றுள்ள அரசியல் சிக்கலினால் தான் அரியணையைத் துறந்தார், ஆன்மீக நாட்டதினால் மட்டுமல்ல.)

லட்சியவாதம் என்பது உயர்வான விழுமியங்களுக்காக நம்மை தியாகம் செய்யக் கோரும் ஒரு கருத்தியல் மட்டும் அல்ல. எந்த ஒரு அரூபமான சங்கதி புலனனுபவத்தை விட மேலானது எனும் எண்ணம் நமக்கு தூக்கலாக ஏற்பட்டாலும் - தத்துவார்த்தமாகப் பார்த்தால் - அது லட்சியவாதமே. இப்படி இல்லாத ஒன்றுக்காக வாழ்க்கையில் அல்லல்படுவதே துக்கம் என்று புத்தர் சொன்னார். நாகார்ஜுனரும் அதையே தன் “மூலமத்யமகாகாரிகையில்” திரும்பத் திரும்ப கூறுகிறார். அதனாலே பணமும் அதிகாரமும் படைத்தவர்கள் கூட ஏதாவது ஒரு லட்சியத்துக்காக (வாழ்க்கையின் அர்த்தம், ஆன்மா என்று விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் பேசுவதை கேட்டு வருத்தப்பட்டேன். இந்த எண்ணங்கள் இனி அவரை நிம்மதியற்றவராக்கும்.) துன்புறுவதைப் பார்க்கலாம். இதை நியாயப்படுத்த சிலர் ‘வாழ்க்கை அதனளவில் அழகானதோ ஆழமானதோ அல்ல, இலக்கியம், கலை உள்ளிட்ட பண்பாட்டு அசைவுகளே வாழ்க்கையை மேம்படுத்துகிறது, இவை இல்லாவிட்டால் நாம் மிருகங்களாகி விடுவோம்’ என்று ஜல்லியடிக்கிறார்கள். இது ஒரு அபத்தமான காலனிய சிந்தனை. புலனனுபவ வாழ்க்கை அதனளவில் அழகானது, நிறைவானது. சொல்லப் போனால் ஒரு மிருகத்தை போல அந்தந்த நொடியில் நம்மால் எளிதாக வாழ முடிந்தாலே போதும். அதை ஏற்க முடியாதபடி ஊடகங்களும் மதமும் நவீன கல்வியும் நம்மை குழப்புவதாலே பணம் படைத்தவர்கள் கூட அமைதியற்றிருக்கிறார்கள், ஆன்மீகம், போதை என அலைகிறார்கள். 

மனித வாழ்க்கையின் மிகப்பெரிய விரோதியாக நான் அரூபவாதத்தை, லட்சியவாதத்தை கருதுகிறேன்.

கேள்வி: சரிதான். சி.சு.செ., கா நா. சு, பிரமிள், தஞ்சை பிரகாஷ் போன்ற கலைஞர்களின் வாழ்க்கையில் உள்ள சராசரி தன்மை மீறிய ஒரு சில விஷயங்கள் போன்றவற்றிற்கு இன்று உள்ள மதிப்பு என்ன?

பதில்: அவர்களுடைய எழுத்தைக் கடந்து எந்த மதிப்பும் இல்லை. கா.நா.சுவும், சி.சு செல்லப்பாவும் மிகப்பெரிய தியாகிகள். ஆனால் அவர்களை இன்று பெரும்பாலான இலக்கிய எழுத்தாளர்கள் கூட பொருட்படுத்துவதில்லை. நான் பல தியாகங்களை பண்ணி ஒரு மோசமான நாவலை எழுதினால் என் தியாகத்துக்காக மட்டும் அதை வாங்கிப் படிப்பீங்களா? மாட்டீர்கள்.

நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதல்ல, எழுத்தில் என்ன செய்தீர்கள் என்பதே வாசகனுக்கு முக்கியம். 

இந்த தியாகிகள் தமது செயல்பாட்டால் ஒருவித நம்பிக்கையை நமக்கு அளித்தார்கள் என்பது உண்மை தான். சற்று வசதி இருந்திருந்தால் அவர்கள் இதைவிட பெருங்காரியங்களை செய்திருக்க முடியும். ஜெயமோகன் இதற்கு சிறந்த உதாரணம் - சினிமாவில் சம்பாதிக்கத் தொடங்கிய பின்னரே அவரால் வாசகர் வட்டம், விருதுகள், பதிப்பகம் என பரவலாக வேலை செய்யவும் நிறைய பதிப்பிக்கவும் பயணம் செய்யவும் முடிந்திருக்கிறது என அவரே சொல்லி இருக்கிறார். ஜெயமோகன் என்னதான் லட்சியவாதம் பேசி இளைஞர்களைக் கெடுத்தாலும் அவர் தன்னளவில் மிகச்சிறந்த நடைமுறைவாதி, பண நிர்வாகத்தில் தலைசிறந்தவர். அவருக்கு முன்பு சு.ராவும் அப்படியே சரியாக தன் வியாபாரத்தை நிர்வகித்து பொருளியல் சார்ந்து நிலைபெற்றார், அதன் பிறகே எழுத்திலும் அவரால் பதிப்பு, வாசகர் உரையாடல்கள், இதழியல் என்று செழிப்பாக செயல்பட முடிந்தது. அவர் ஒரு இயக்கமாக மாற முடிந்தது. அவருக்குக் கீழே எத்தனையோ இளம் படைப்பாளிகள் தோன்று வளர முடிந்தது. துணிக்கடையும் சொத்துக்களும் இல்லாதிருந்தால் அவர் இந்த பணிகளை செய்ய ஊர் ஊராக பிச்சையெடுத்து தன் குடும்பத்தையும் அழித்திருக்க வேண்டியிருந்திருக்கும், அப்போதும் தன் வாழ்நாளில் சாதித்ததில் 20% தான் அடைந்திருப்பார். இலக்கியத்துக்காக பிச்சையெடுப்பது, தன்னையே எரித்து அழிப்பது இலக்கியத்தில் மிதமிஞ்சி ரொமாண்டிசைஸ் பண்ணப்படுகிறது. இதையெல்லாம் பார்த்து ஒரு சில இளைஞர்களாவது தம் வாழ்க்கையை வீணடித்து விடுவார்களோ என அச்சம் ஏற்படுகிறது. ஏற்கனவே அப்படி இருக்கிற சிலரை அறிவேன். 

அவர்களிடம் நான் சொல்ல விரும்புவது ஒன்றே - உங்களால் தொட்டு, பார்த்து, கேட்டு, சுவைத்து உணர முடியாத எதையும் முதன்மையான இலக்காக வைக்காதீர்கள். நன்றாக சாப்பிடுவது, ஓய்வெடுப்பது, போகிப்பதே முதன்மை நோக்கம், இலக்கியம், கலை நாட்டம் போன்ற ‘போதைப் பழக்கங்கள்’ இரண்டாவது நோக்கமாக இருக்க வேண்டும். அக விடுதலை என்பது ஒருநாள் இந்த ‘போதைப்பழக்கங்களில்’ இருந்து நம்மை முழுமையாக விடுவித்துக் கொள்வதே. இந்த ‘போதைப் பழக்கமானது’ ஒரு புகைமூட்டம். அதற்கு அப்பாலே நிஜ உலகம் இருக்கிறது. கலை மனம் கொண்டோர் அடிப்படையில் வியாதிஸ்தர்கள் என நான் நினைக்கிறேன். நாம் துர்பாக்கியசாலிகள். கலை நம்மை ஆசுவாசப்படுத்தும். மறுக்கவில்லை. ஆனால் அது செயற்கையான ஆறுதலே. 
நிஜத்தைக் காண்பது சாத்தியமாகும் வரை இலக்கிய / கலை வாசனை இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அதற்காக வாழ்க்கையை தொலைக்க கூடாது. 

வேலூர் இப்ராஹிமே சரணம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...