முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜெயமோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

 ஜெயமோகனைப் போல நேர மேலாண்மை செய்ய வேண்டும், எழுத்து, அது குறித்த அக்கறைகளுக்காக நேரத்தை அளந்து பயன்படுத்த வேண்டும், முழு இதயத்துடன் எழுத்துக்கு நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும், ஒப்புக்கொடுத்த பின் நம் எழுத்தின் தரத்தை, முக்கியத்துவத்தை முழுமையாக நம்ப வேண்டும், இளம்பிரயாயத்தில் ஒரு அழகியை நேசித்து பித்தாவதைப் போல எழுத்தின் பின்னே சுற்ற வேண்டும் என்று அடிக்கடி நினைத்துக்கொள்வேன். நாம் நினைப்பது நடக்கவில்லையா? அதை நாமே நிகழ்த்திப் பார்க்க வேண்டும். அதற்காக எதையும் பயன்படுத்த, செய்ய தயங்கக் கூடாது என்பது ஒரு எழுத்தாளனாக அவர் வாழ்வின் முக்கியமான சேதி.

ஒரு எழுத்தாளனாக என்னுடைய அர்ப்பணிப்பு, கடப்பாடு, பித்து முழுக்க நான் அவரிடம் இருந்து பெற்றுக்கொண்டதே. கீதையில் கிருஷ்ணர் சொல்வார், போர் என்று வந்துவிட்டால், நீயும் போரும் வேறுவேறல்ல, நீ அதுவாக ஆகிட வேண்டும், நீ ஆயுதத்தை பயன்படுத்தவில்லை, நீதே அந்த ஆயுதம், அதன் பிறகு செயலே உன் பொறுப்பு, செயலுக்கு நீ பொறுப்பல்ல (என் மொழியில் கருத்தைக் கொடுத்திருக்கிறேன்.) ஜெயமோகனைப் பார்க்கையில் எனக்கு இந்த பார்வையே நினைவு வரும். தன் சுவடுகளைத் திரும்பிப் பார்த்து அவர் விசனிப்பதில்லை. புனைவு வெளியில் அவர் செய்வது ஒரு யுத்தம். பிணங்கள் அல்ல, அடுத்தடுத்து நம்மை நோக்கி வரும் தலைகளைக் கொய்வதே முக்கியம். அதுவே நம் கடமை. ரத்தவெள்ளத்தில் குளித்தெழுந்து வருவதே ஒரு எழுத்தாளனின் தர்மம். அதன் காரணகாரியங்களை, நியாய தர்மங்களை அலசுவது அல்ல. இத்தனைக் காலமும் அவர் அப்படித்தான் எழுதி இருக்கிறார். ஒரு குருச்சேத்திரத்தையே நிகழ்த்தி இருக்கிறார்.
ஜெயமோகனிடம் இருந்து கற்றுக்கொள்ள எத்தனையோ நல்ல விசயங்கள் உள்ள போது நாம் அவரது கருத்துக்கள் எனும் லீசா விலாசங்களின் பின்னால் போய் நேரத்தை தொலைக்கிறோம் என்பது இச்சூழல் குறித்த என் வருத்தங்களில் ஒன்று. ஒருவர் அவருடன் இருக்கும் போதும் அவர் சொல்வதைக் கேட்காமல் அவர் செய்வதை மட்டும் பார்க்க வேண்டும், அவர் முழுமையாக எப்படி தன்னைக் கொடுக்கிறார், திரும்பிப் பார்க்காமல் எப்படி நடந்துகொண்டே இருக்கிறார் எனப் பார்க்க வேண்டும் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் அவர் சிந்தனையாளரோ தத்துவவாதியோ அல்ல, செயலில் தன்னைக் காணும் ஒரு எழுத்தாளன். அதை மட்டும் அடியொற்றி செய்தாலே நாம் நம் வாழ்வில் பெரும் வெற்றிகளை எட்டலாம்.
ஜெயமோகனை நான் என் இளமையில் சந்திக்காவிடில் நான் முழுக்க வேறொரு மனிதனாக இருந்திருப்பேன் என ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன். அதையே அவரது பிறந்த நாளுக்கும் சொல்கிறேன்.
ஜெயமோகன் நீடூழி வாழ வேண்டும். அவரது உடலில் இருந்தும், உடலின் இருத்தலில் இருந்து தன்னை விலக்காது ஒன்றிப் போய் விட்ட அவரது காண்டீபத்துக்கும் இலக்கில் இருந்து கண்ணெடுக்காத அம்புகளுக்கும் என் முத்தங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...