முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“வரதட்சிணை கொடுமை”


அண்மையில் வந்த சட்டத்திருத்தத்தின் படி பெற்றோர்கள் தம் மகளுக்கு வரதட்சிணையைக் கொடுக்கலாம், அதன் பெயர் பரிசு. ஆனால் அதையே அவர்கள் பின்னர் தம்மை வற்புறுத்தி வாங்கினார்கள் என்று சொல்லிவிட்டால் அது ‘வரதட்சிணை’ ஆகிவிடும். இது சிக்கலான சட்டம், பாலின பாரபட்சம் கொண்ட சட்டம் - ஏனென்றால் நாம் நீயா நானா போன்ற ரியாலிட்டி ஷோக்களிலேயே இளம்பெண்கள் தம்முடைய திருமணத்தின் போது எவ்வளவு பணம், நகை, வாகனங்கள், வீடு போன்றவை அசையும், அசையா சொத்துக்களாக தம் பெற்றோர் அளிக்க வேண்டும் எனக் கோருவதைப் பார்த்திருக்கிறோம். நேரிலும் இத்தகைய காட்சிகளை இன்று காண்கிறோம். இதற்கு இப்பெண்கள் சொல்லும் சல்ஜாப்பு தாம் மணமாகி மற்றொரு வீட்டுக்குப் போகிறோம் என்பது. ஆனால் ‘ஆணுக்கு அசையா சொத்து, பெண்ணுக்கு அசையும் சொத்து’ எனும் பழைய நடைமுறையின் நீட்சியே இது என்பது வெளிப்படையானது. நம் சட்டம் என்ன பண்ணிவிட்டது என்றால் ஒரே நேரத்தில் பெண்ணுக்கு அசையும் சொத்து (“பரிசு”) மற்றும் அசையா சொத்து (“சொத்துரிமை”) இருக்கலாம் என்பதை சட்டபூர்வமாக்கிவிட்டது. அத்துடன் நின்றிருந்தால் கூட பிரச்சினையில்லை - இந்த “பரிசை” எந்நேரம் வேண்டுமெனிலும் பெண்ணின் பெற்றோரும் மணப்பெண்ணுமாக ஒரு “வரதட்சிணையாகக்” கருதி வழக்குத்தொடுக்கலாம், பின்னர் சிறைவாசம் எனும் அச்சத்தை பயன்படுத்தி ஒரு பெரும் தொகையை ஆண் வீட்டில் இருந்து பறித்துவிடலாம் எனும் ஒரு ஆயுதத்தையும் வழங்கியது. அதாவது ஒரே விசயம் இன்று மூன்றாக இருக்கிறது, அந்தந்த நேரத்திற்கு ஏற்ப அதை அவர்கள் அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.
இந்த மோசமான சட்டம் ஆண்களை மட்டுமல்ல கணிசமான பெண்களையும் தான் பாதிக்கிறது. இப்போது வண்டிவண்டியாக அசையும் சொத்துக்களை கொண்டு செல்லும், பின்னர் அதையே ‘வரதட்சிணையாக்கி’ வழக்குத்தொடுத்து மிரட்டி பணம் பறிக்கும் சில பெண்களுக்கு நாளை வரும் ‘சில’ மருமகள்களும் இவர்களுக்கே நாளை இதை திரும்ப செய்வார்கள்.
இரு நாட்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஒரு தோழி என்னிடம் புலம்பினார். அவருடைய மகனுக்கு கல்யாணமாகி 18 நாட்களில் அப்பெண் தன் வீட்டுக்கு கிளம்பிப் போய்விட்டார். இங்கே அவருக்கு எந்த வீட்டு வேலைகளும் இல்லை. சும்மா போனும் கையுமாக திரிவதே வேலை. போனை கொஞ்ச நேரம் கீழே வையேம்மா என்று மாமியார் சொன்னதற்கு போய்விட்டார். போனவர் சும்மா போகவில்லை, தான் கொண்டு வந்த சிறிது நகைகளையும் (இவர் சற்று ஏழையான குடும்பம், ஆனால் மணமகன் சற்று வசதியானவர்), தன் மாமியார் தனக்குப் போட்ட நகைகளையும் தன் பெற்றோரை வற்புறுத்தி வாங்கப்பட்ட வரதட்சிணை, மேலும் பணம் கேட்டு தன்னைத் துன்புறுத்தி வீட்டைவிட்டு துரத்திவிட்டார்கள் என தன் ஊரில் உள்ள காவல் நிலையத்தில் 498Aவில் புகார் அளித்திருக்கிறார். தோழி நடுங்கிப் போய்விட்டார். இந்த சட்டத்தில் என்ன பிரச்சினை என்றால் - என்னதான் காவலர்கள் தீரவிசாரித்தே வழக்கைப் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் இன்று சொல்லி இருந்தாலும் - பெண் தரப்பில் சற்று அழுத்தம் போட்டால் புகாரை எடுத்துக் கொள்வார்கள், அத்துடன் இந்த பிரிவின் படி பெண் வீட்டார் தம்மிடம் ஆண் வீட்டார் வரதட்சிணையை வலியுறுத்துகிறார்கள் என்பதற்கு எந்த ஆடியோ, வீடியோ ஆதாரமோ காட்டத் தேவையில்லை, அவர்களுடைய சொல்லே ஆதாரம் அங்கு. மாமியார் அடித்தார் என்பதற்கும் நேரடி ஆதாரம் தேவையில்லை. “என்னை முறைச்சு முறைச்சுப் பார்த்தாங்க, வார்த்தையால் என்னைப் புண்படுத்தீட்டாங்க, ஒழுங்கா வரதட்சிணை கொண்டு வாடீன்னு கண்ணை உருட்டி உருட்டி காமிச்சாங்க” என்று சொன்னால் போதும். 2 ஆண்டுகள் பிணை இல்லாத சிறை. இன்றுள்ள வசதிகளின் படி 5000 ரூ இருந்தால் ஒரு ரகசிய படக்கருவியை வைத்து பதிவு பண்ணலாம், போனில் ஆடியோ வீடியோவாக பதிவு பண்ணலாம், ஆனால் சட்டம் இன்றும் நள தமயந்தி காலத்திலே இருப்பதால் ஒரு பெண்ணால் தனக்கு நடக்கும் வன்முறைக்கு ஆதாரமெல்லாம் சேமிக்க முடியாது என்று நம்புவதால் இப்படி ஒரு ஆபத்தான வழிமுறையை கொண்டு வந்துள்ளது. இதில் சிக்கினால் எந்த மாமனார், மாமியாரும் தப்ப முடியாது. வரதட்சிணை கேட்கும் நாங்கள் ஏன் இருபது, முப்பது சவரன் நகையை எங்கள் மருமகளுக்கு பரிசாக கொடுக்கப் போகிறோம் என்றெல்லாம் திரும்பக் கேட்க முடியாது. ஏனென்றால் சட்டத்துக்கு கண்கள் இல்லை அல்லவா. சட்டத்தின்படி பெண்களுக்கு “உன்னை எனக்குப் பிடிக்காவிட்டால் அது வரதட்சிணை, பிடித்தால் அது பரிசு.”
சரி, ஆரம்பித்த கதைக்கே வருகிறேன். இத்தோழி மணமகளை தனக்கு பரிந்துரைத்த நண்பர் ஒருவரிடம் கேட்டிருக்கிறார். “அவர் எனக்குத் தெரியாமல் சொல்லிவிட்டேன்மா” என்கிறார். இதுவரை அமைதியாக இருந்த ஊர்க்காரர்கள் இப்போது தோழியிடம் வந்து அந்த குடும்பத்தின் வழக்கமே இதுதான், அக்குடும்பத்தில் உள்ள மூன்று பெண்களில் முதல் இருவருக்கும் இதுவே நடந்தது, அவர்களுக்கு ஏற்கனவே ஒரு காதல் இருந்தது, அதை அவர்கள் ஸ்லீப் மோடில் போட்டுவிட்டு கல்யாணமாகி பண்ணிக்கொண்டார்கள், பின்னர் அறுத்துக்கொண்டு வந்து, காவல் நிலையம் போவது, பிறகு பேசி பஞ்சாயத்து பண்ணி ஒரு பெருந்தொகையை பறித்தார்கள், இப்போது அதையே மூன்றாவது பெண்ணுக்கும் பண்ணுகிறார்கள், இது அவர்களுக்கு “பேமிலி பிஸினஸ்” என்றிருக்கிறார்கள்.
முன்பெல்லாம் எங்கள் ஊரில் பக்கத்து ஊர்க்காரர்கள் பெண் கேட்டு வந்தால் அங்குள்ளவர்களே ஆண் வீட்டாரை அழைத்து பெண்ணின் மொத்த வரலாற்றையும் புட்டு வைத்துவிடுவார்கள். அதனால் இப்படி தெரியாத்தனமாக சில கிட்னி திருடும் கும்பல்களிடம் வெளியூர்க்காரர்கள் மாட்டுவது நடைபெறாமல் இருக்கும் (நான் மொத்த மணப்பெண் குடும்பங்களையும் அப்படி சொல்லிவிட்டேன் என ஒப்பாரி வைக்கக் கூடாது என்றே ஒவ்வொரு இடத்திலும் ‘சில’ சேர்க்கிறேன்.). ஆனால் இன்று ஊர்க்காரரக்ள் நமக்கு ஏன் வம்பு என அமைதியாக இருந்து கொண்டு பந்தியில் சாப்பிட்டு “கைகழுவி” விடுகிறார்கள். பிரச்சினை ஆரம்பித்த பின் “அதாவது இது இவங்களுக்கு பேமிலி பிஸினஸுங்க” என்று ஆண் விட்டாரிடம் வந்து சொல்வார்கள்.
நான் அத்தோழியிடம் “உங்கள் துரதிஷ்டம் ஒரு கிட்னி திருடும் கும்பலிடம் மாட்டிக்கொண்டீர்கள். பெரும் பெண்ணிய எழுத்தாளரும் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியுமான ஒருவரே ஒரு கிட்னி திருடும் கும்பலிடம் இருந்து தன் மகனுக்கு பெண்ணெடுத்து பிறகு அவர்கள் அவர் மீதே போலி 498Aயில் புகார் அளித்து உள்ளே தள்ள பார்த்தார்கள். நீங்கள் எல்லாம் எம்மாத்திரம், அதனால் பேச்சுவார்த்தை நடத்தி பணம் கொடுத்து தப்பியுங்கள்” என்று கூறினேன்.
என்னுடைய கோரிக்கை:
ஒன்றிய அரசே, சட்ட அமைச்சகமே, பாராளுமன்ற உறுப்பினர்களே, இந்த வரதட்சிணையை “பெண்ணுக்கு முன்கூறாக அளிக்கப்படும் அசையும் சொத்து” என்று சட்டபூர்வமாக்குங்கள், அதை “பரிசு” என்றும், கிட்னி திருடும் மூட் வரும் போது அதுவே வரதட்சிணை என்றும் சட்டத்துக்குள்ளேயே மழுப்பாதீர்கள்.
எதற்கு இப்படி ஒரு பாசாங்கு? வரதட்சிணை எனும் சொல்லையே ஒழித்து அதை “அசையும் சொத்து” என்று அழையுங்கள்.
திருமணத்துக்குப் பின்னர் அதே அசையும் சொத்தை புகுந்த வீட்டில் கூடுதலாக கேட்கிறார்கள் என்றால் அதை சான்றுடன் கொண்டு வந்தால் மட்டுமே வழக்குப் பதிவு பண்ண முடியும் என சட்டத்தை திருத்துங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...