முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரைக்கதைக்கான காலம் இது



நான் திரைத்துறையை சாராமல் வெளியே இருந்து திரைக்கதைக்கு தமிழில் உள்ள இடமென்ன என்று பார்க்கையில் பெரும்பாலான படங்கள் தோல்வியடையவோ பார்வையாளர்களின் மனதைத் தொடாமல் போக காரணம் திரைக்கதையில் உள்ள அடிப்படையான பிழையே என்று தோன்றுகிறது. இதையே வேறு சில நண்பர்களும் கூறி இருக்கிறார்கள். ஆனால் நானும் வெகு சிலருமே இப்படி நம்புகிறோம் என நினைக்கிறேன். ஏனென்றால் வெகுஜன ஊடகங்களில் பலரும் அப்படி நினைப்பதில்லை. அண்மையில் ராஜூ முருகனின்லாலாகுண்டா பொம்மைகள்பார்த்தேன். அது தழுவி உருவாக்கப்பட்ட கதைதான் என்றாலும், தேய்வழக்கான கதையே என்றாலும் அதில் ஒரு நேர்த்தி இருந்தது - கதைக்குள் ஒரு வளர்ச்சி இருந்தது, பாத்திரங்களுக்கு என்று வரையறுக்கப்பட்ட இயல்பு, உடல்மொழி, ஒரு துவக்கம் முடிவு இருந்தது, கதை முடியும் போது நாயகி கற்றுக்கொள்ளும் பாடம் என ஒன்றும் இருந்தது, அது அப்படியே பார்வையாளர்களுக்கும்  ஓரளவுக்கு கடத்தப்படுவதாலே அப்படம் கவனிக்கப்பட்டது. ஒரு கட்டிடத்தை கட்டுமுன் திட்டமொன்றை வரைவதைப் போன்ற எளிய விசயம் தான், ஆனால் அதில் பலரும் மெனெக்கெடுவதில்லை என்பது கண்கூடு.


அண்மையில் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்து, பின்னர் நகைச்சுவை நடிகராக மாறின செம்புலியின் பேட்டியைப் பார்த்தேன். சில படங்களுக்கு திரைக்கதையை முடிக்க ஒரு வருடத்தைக் கூட பாக்யராஜ் எடுத்துக் கொண்டதாகவும், அப்படி எழுதிய கதையிலும் படம் முழுக்க தேவையானபடி திருத்தம் கொண்டே இருப்பதாகவும் சொல்கிறார் செம்புலி. இன்று ஒரு இயக்குநர் அந்த காலத்தில் இரண்டு, மூன்று படங்களை முடித்து விடுவார். பாக்யராஜே இன்று படமெடுக்க வந்தாலும் அந்தளவுக்கு திரைக்கதையில் நேரம் செலவிடுவாரா என்பது சந்தேகமே


நாற்பதுகள் முதல் எழுபதுகள் வரையிலான தமிழ் சினிமாவின் வரலாற்றைக் காணும் போது அன்றைய ஸ்டுடியோ முதலாளிகள், தயாரிப்பாளர்கள் திரைக்கதையை வெகுவாக நம்பியதைக் காண்கிறோம். யார் வேண்டுமானாலும் இயக்கலாம், ஆனால் பிரசித்தமான பாடகர் / நடிகர் முன்னிலை பாத்திரத்தில் வேண்டும், சிறந்த திரைக்கதையும் அவசியம் என நம்பினார்கள். சில படங்களுக்கு திரைக்கதையை எழுதி, நடிகர்களை ஒப்பந்தம் பண்ணிய பிறகு தான் இயக்குநரைப் பிடிப்பார்கள். பாகவதர், எம்.ஜி.ஆரில் இருந்து ரஜினி போன்ற சூப்பர் ஸ்டார்கள் உருவான காலம் வரையிலும் கூட இந்த நிலை இருந்தது. ஒரு கட்டத்தில் சொந்தமாக கதையும் திரைக்கதையும் எழுதி இயக்கும் சாதனையாளர்கள் சிலர் வந்தார்கள். அவர்களால் திரைக்கதையாளர்களிடம் இடம் சற்றே குறையத்தொடங்கியது. அதன் பிறகு நல்ல இயக்குநரும் சூப்பர் ஸ்டார் நடிகர்களும் ஜோடி போட்டு படம் எடுத்தால் ஓடும் எனும் நிலை வந்தது. அப்போதும் திரைக்கதைக்காக மெனெக்கெட்டார்கள். ஆனால் இந்த ஜோடி கூட பிரிந்து சிறந்த இயக்குநர்கள் / நடிகர்கள் எனும் குதிரைகள் மீது மீது தனித்தனியாக பணம் கட்டினால் படம் ஓடும் எனும் எண்ணம் ரெண்டாயிரத்துக்குப் பிறகு பரவலாகியது. நட்சத்திர இயக்குநர்கள் நான்கைந்து பேர் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் வர ஆரம்பிக்க திரைக்கதையாளர்கள் வசனகர்த்தாவானார்கள், பின்னர் விவாதத்துக்கு வருகிறவர்கள் மட்டுமானார்கள். அவர்களிடம் கேட்டால் எழுத்தாளர்களுக்கு திரைக்கதை எழுத வரவில்லை என்கிறார்கள். அதிலும் உண்மை இருக்கலாம் - எங்கோ ஒரு தொடர்பு அறுந்து போய்விட்டது. அதுதான் திரைக்கதை துறையின் வீழ்ச்சிக்கு பிரதான காரணம் என நினைக்கிறேன். ரெண்டாயிரத்தில் சிடியில் வெளிநாட்டுப் படங்களை பார்த்து கதையை உருவக் நினைத்தார்கள் என்றால் இணையம் வந்த பின்னர் பல இடங்களில் இருந்து சுலபத்தில் உருவி கதையைப் போல ஒன்றை உருவாக்கினால் போதும், நட்சத்திரம் பட்டாளம் கூட்டணி சேர்ந்தால் படம் ஓடும் எனும் நிலை உருவாகி விட்டது. சினிமா ஒரு வணிகம், அங்கு வியாபாரம் ஆவது, அவ்வாறு நம்பப்படுவது தான் மதிக்கப்படும்


ஆனால் இந்த விதி வேலை செய்யாத காலம் இன்று தான் - கதை மனதைத் தொடவில்லை என்றாலோ காட்சி அனுபவம் பரபரப்பாக இல்லையென்றாலோ அப்படம் நட்சத்திர நடிகருடையது என்றாலும் நிராகரித்து விடுகிறார்கள். ஆம், தீவிரமாக மார்க்கெட்டிங் செய்து விற்றுவிட முடியும். ஆனால் அதுவும் ஓரளவுக்குத்தான் முடியும். இவ்வளவு நடிகர்களும் ரஹ்மானும் மணிரத்னமும் இருந்தும்பொன்னியின் செல்வன்எனும் உள்ளடக்கம் தேவைப்படவில்லையா? அதை வைத்து தானே (சோழர்களின் காலம், அருண்மொழி வர்மன்) கூவி விற்றார்கள். ஓடிடிகளின் வருகையுடன் இன்று மீண்டும் நல்ல கதைகளுக்கு, திரைக்கதைகளுக்கு ஒரு தேவை உருவாகி வருகிறது

குறிப்பாக சிறிய படங்களை எடுப்பவர்கள் மேலும் திரைக்கதையில் மெனெக்கெட வேண்டும். பெரிய படங்களை போல செய்யாமல் சிறிய பட்ஜெட்டுக்கு ஏற்ற கதையென்ன என யோசிக்க வேண்டும். என்னதான் கிரிஞ்சாக இருந்தாலும்அயோத்தியும், “டாடாவும்இதற்கு சிறந்த உதாரணங்கள். அதே போல திரைக்கதையாளர்களுக்கு நியாயமான சன்மானத்தை, முன் தொகையை அளிக்க வேண்டும். நடிகர் மணிகண்டன் சொல்வதைப் போல ஊடகங்களில் பலரும் திரும்பத் திரும்ப பேச வேண்டும். நல்ல திரைக்கதையுடன் ஒரு படம் வந்தால் நடிகர்களை மட்டும் முன்னிலைப்படுத்தாமல் அதில் கதையின் முக்கியத்துவம், அதன் வடிவம் பற்றி ஊடகங்கள் பேச வேண்டும். திரைக்கதையாளனுக்கு ஒரு பிம்பத்தை ஏற்படுத்தினாலே சந்தை மதிப்பு தோன்றும், சந்தை மதிப்பு வந்தால் ஊதியமும் உயரும் என நம்புகிறேன்.   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...