முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அன்றைய ஆண்களும் இன்றைய ஆண்களும்


நான் இதை முழுக்க முழுக்க தென்னகத்தை சேர்ந்த, நகரங்களில் வாழும் மத்திய, மேல் மத்திய வர்க்க வேலை செய்யும் ஆண்களை - குறிப்பாக 70-80களுக்கு முன்பு பிறந்தவர்கள், 80-90களுக்குப் பிறகு பிறந்தவர்களை - வைத்தே சொல்கிறேன். நான் கல்லூரிகளில் வேலை செய்துள்ளதால் அங்கு அரசு ஊதியம் பெறுகிற  கடந்த இரு பத்தாண்டில் வேலைக்கு வருகிறவர்களை ஐம்பது வயதுக்கு மேலானவர்கள் மற்றும் நாற்பதுகளுக்கு கீழிருக்கும் தனியார் சம்பளம் பெறுகிறவர்களுடைய உடல் மொழியை ஒரே சமயம் பார்த்து ஒப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. அதை வைத்தே இதை சொல்கிறேன். 60-70களின் தலைமுறையை சேர்ந்த ஆண்களிடம் ஒரு ஸ்டைல் உள்ளதாக எனக்கு எப்போதுமே தோன்றியதுண்டு. நான் இதை ஒரு மாணவனாக நாகர்கோயிலிலும் சென்னையிலும் படித்த காலத்திலும் கண்டிருக்கிறேன். பின்னர் நான் இவர்களை அரசு ஊதியம் பெறாத கிராமத்து மனிதர்களுடன் (விவசாயிகள், வியாபாரிகள், வேலையே இல்லாமல் சுற்றி வருபவர்கள்) ஒப்பிடுகையில் அவர்களிடமும் தன்னம்பிக்கை பெருகும் உடல்மொழி, அலட்சியமான தோற்றம், கண்களை நேருக்கு நேராகப் பார்க்கும் பாங்கு உள்ளதை கவனித்தேன். அதன் பின்னரே இது ஸ்டைல் அல்ல, தன்னம்பிக்கையான உடல்மொழி என்று புரிந்தது. ஆனால் இந்த தன்னம்பிக்கையான உடல்மொழியை ஒரு சடங்கைப் போல நிகழ்த்த இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது, அதை நான் 80-90களுக்குப் பிறகு பிறந்தவர்களிடம் காண்பதில்லை, அவர்கள் அரசு ஊதியம் பெற்றாலும் கூட ஒருவித சோம்பலான, ‘நான் ஏன் கவலைப்படணும், ஆனாலும் என்னைப் பார்க்காதே, நான் ஒதுங்கிப் போகிறேன்’, எனும் உடல்மொழியையே வெளிப்படுத்துகிறார்களே ஒழியநான் முக்கியமானவன், என்னை கவனிஎனும் உடல்மொழியை அல்ல.


இங்கு ஏன் ஆண் என்று குறிப்பிடுகிறேன் என்றால் ஒரு மிகையான பணிவை, தயக்கத்தை, அச்சத்தை இன்றைய ஆண்கள் அதிகமாக வெளிப்படுத்துகிறார்கள். மத்திய, மேல்மத்திய வர்க்கத்தை சேர்ந்த, கார்ப்பரேட் உள்ளிட்ட தனியாரில் வேலை பார்க்கும் பெண்களிடம் ஒரு ஸ்டைல், கெத்து உள்ளது. ஆனால் அது ஆண்களிடம் இல்லை.


என்னுடைய நண்பரான சமூகவியல் பேராசிரியரிடம் இதைப் பற்றி பேசும் போது அவர் இது தனியாரில் பலவித பாதுகாப்பின்மைகளையும், கண்காணிப்புகளையும் தம் உடல்மீது உணரும் மனிதர்களின் மொழி அது என்றார். ஒரு புதிய சமூகக் கட்டமைப்புக்குள் வரும் மனிதர்கள் அங்குள்ள எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப தம் உடல்மொழியை தன்னிச்சையாக மாற்றிக் கொள்கிறார்கள், அல்லது தமது சகபணியாளர்களைக் கண்டு அவர்களுடைய உடல்மொழியை போல செய்கிறார்கள் என்றார்


இதில் இன்னொரு விசித்திரமான விசயம் - முன்பு பெண்களிடம் தலையை குனித்துக் கொண்டு நட, தலைமுடியை பறக்க விட்டுக்கொண்டு திரியாதே, அடக்கமாக இரு என அம்மாக்கள் வலியுறுத்துவார்கள். இயல்பிலேயே சுதந்திர விழைவாளர்களான, தன்னம்பிக்கை மிக்கவர்களான பெண்களை ஒரு கட்டுப்பாடான உடல்மொழிக்குள் கொண்டு வர ஆணாதிக்க சமூகம் இப்படி தொடர்ந்து முயல வேண்டி இருந்தது. ஆனால் இன்று அந்த பண்பாடு மெல்ல மெல்ல மாறி வருகிறது - கூண்டைத் திறந்துவிட்ட கிளிகளைப் போல பெண்கள் துணிச்சலையும் தன்னம்பிக்கையும் வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் ஆண்களை யாரும் தலையை குனி, தோளை இறக்கு என்று சொல்லவில்லை என்றாலும் அவர்கள் அதையெல்லாம் செய்வதே இந்த காலத்து ஆணுக்கு அழகு என நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். பெரிதாக மீசை வளர்ப்பது ஒரு சமூகவிலக்கத்தை கோரும் செயலாக மாறிவிட்டது. முகத்தில் சற்றே பெண்மை தொனிக்க அடக்கமாகப் பேசுவதே இன்றைய நகரமய மத்திய மேல்மத்திய தனியார் பணியாளனான ஆணுக்கான உடல்மொழியாகி விட்டது


அது மட்டுமல்ல, இன்றைய நகரத்து இளைஞர்களிடம் ஒரு நீடித்த குழந்தைமையையும், இளம்பெண்களிடம் மிகச்சின்ன வயதிலேயே அபாரமான முதிர்ச்சியையும் காண்கிறேன். அதனாலே இந்த ஆண்களை பெண்கள் ஒருவித குழந்தையாகவே நடத்துகிறார்களோ என தோன்றுகிறது

ஆண்களின் நீடித்த குழந்தைமையை அவர்களுடைய பொறுப்பின்மையாக, தாழ்வுணர்வாக, திறமை குறைவாக, அதிகாரமின்மையாக இச்சமூகம் பார்க்கிறது, அவர்கள் மீதான மரியாதையை அது குறைத்துக் கொண்டே வர அவர்கள் ஒரு பக்கம் மேலும் மேலும் சோர்ந்து போகிறார்கள், மேலும் மேலும் தம்மை ஒடுக்கிக் கொள்கிறார்கள், இன்னொரு பக்கம் மது, போதைப்பழக்கம், சூதாட்டம், தூக்கமின்மை, ஒழுங்கீனம் என்னை தம்மை அழித்து எதிர்ப்பைக் காட்டுகிறார்கள், இருகூறாகப் பிளந்து போகிறார்கள். இதை நான் இந்தியாவுக்கு படிக்க வரும், இந்தியாவில் வேலைக்கு வரும் வெள்ளைக்கார ஆண்களிடம் பார்க்கிறேன். அவர்கள் நம்மை விட நான் நோக்க நிலம் நோக்கும் நங்கர்களாக இருக்கிறார்கள். இதைப் பற்றி பாலின பேத பண்பாட்டுச் சூழல், கல்வியமைப்பு, சமூக அமைப்பின் பின்னணியில் மேலும் விவாதிக்கும் Boys Adrift (Leonard Sax), The War Against Boys (Christina Hoff), The Boy Crisis (Warren Farrel) போன்ற நூல்களைப் படித்தேன். ஆக இது ஒரு உலகுதழுவிய பிரச்சினையே என்று புரிந்து கொண்டேன்


எனக்கு இது பாலின பேதம் சார்ந்த சிக்கல் மட்டுமல்ல எனத் தோன்றுகிறது; இதில் வேறு பல பரிமாணங்கள் உள்ளன - இன்றுள்ள சமூகப்பொருளாதார மாற்றங்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும், இன்றுள்ள பண்பாட்டு அழுத்தங்களால் தம்மை உருமாற்றிக் கொள்ள முயலும் இளைஞர்களின், மத்திய வயதினரின் நெருக்கடியே இது. நவீன முதலீட்டியத்தின் பல ரூபங்களை பெண்கள் சுலபத்தில் கையாள்வதைப் போல இன்றைய ஆண்களால் முடிவதில்லை. பெண்களும் இதே பொருளாதார அமைப்பினுள் இருந்தாலும், அவர்களுக்கு வேறு பல நெருக்கடிகள் இருந்தாலும், தமக்கு அளிக்கப்படும் அத்தனை கருத்தியல் சலுகைகளையும், ஆதரவுகளையும், வலுவையும் பயன்படுத்தி தன்னம்பிக்கையுடன் முன்னேற அவர்களுக்குத் தெரிகிறது. நீங்கள் கடந்த மூன்று பத்தாண்டுகளில் தமிழகத்து பள்ளிக்கூட தேர்வுமுடிவுகளில் ஆண் - பெண் சதவிகிதத்தை பாருங்கள், நான் சொல்வது புரியும். படிப்பை முடிக்க இயலாத ஆண்கள் மெல்ல மெல்ல சமூக உறவுகள், சம்பாத்தியம், காதல், திருமணம் என வேறு எல்லா சமூக அலகுகளின் படியும் வீழ்வார்கள்


இதற்கு தீர்வு ஆண்கள் பெண்களை நோக்கி கற்றுக் கொள்வதே; பெண்களின் அரசியலாக்கத்தை, சமூக அறிவை, சாமர்த்தியத்தை போல செய்வதே. மேலும், நீங்கள் உங்கள் பிள்ளைகளையும் சகோதரர்களையும் இந்த உலக எதார்த்தத்தையும் புரிய வைத்து கடுமையாக உழைக்கவும், தமது குறைகளைக் களையவும் ஊக்கப்படுத்துவதே. அவர்கள் தலையை குனிய போட்டுக்கொண்டால் தலையிலே தட்டி அதைத் திருத்துங்கள். தன்னம்பிக்கை என்றால் ஆதிக்கம் அல்ல, அது கெட்டது அல்ல என்று சொல்லுங்கள். தன் தோழியிடம் பேசும் போது முகத்தில் கூச்சமும் தாழ்வுணர்வும் வெட்கமும் இல்லாமல் பேச சொல்லிக் கொடுங்கள். மனதில் படுவதை சரளமாக உணர்ச்சிபூர்வமாக பேசுவது எப்படி என்று சொல்லிக் கொடுங்கள். இன்னொரு பக்கம், தான்தோன்றியாக, சோம்பேறியாகத் திரியும் இளைஞர்களிடம் நான் சொல்வதை சொல்லுங்கள். ஆரோக்கியமாக, வலுவாக, உழைப்பவர்களாக, துணிச்சலானவர்களாக இருப்பது முக்கியம் என்று சொல்லுங்கள். தம்மை மேலும் மேலும் அடிமையாக கருதி தப்பித்து செல்லாமல், அதனால் தமது சமூக, குடும்ப மரியாதைகளை மொத்தமாக இழக்காமல், துணிந்து முன்னேற சொல்லுங்கள். அப்படி செய்யாதவர்கள் ஒருவித ஒட்டுண்ணிகளாக மாறி நம் சமூகத்தில் பாதாள சாக்கடையில் மட்டுமே நிலைப்பார்கள் என்று சொல்லுங்கள்


அடுத்த முறை உங்களிடம் பேச வரும் இளைஞனின் முகத்தை உற்றுப் பாருங்கள். உங்கள் முகத்தையும் தோள்களையும் கண்ணாடியில் பாருங்கள். நான் சொல்வது புரியும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.