சாருவின் “அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறு சீராய்வு மனு” நாவலை நான் நீதிமன்றத்துக்கும் அலுவலகத்துக்குமாக அலைந்து கொண்டிருந்த கொடூரமான காலத்தில் வாசித்தேன். அப்போது நான் அனுபவித்த மிகப்பெரிய நெருக்கடியில் இருந்து என்னைக் காப்பாற்றியது அந்நாவலே. எனக்கு ஒரு பழக்கம் - எதைப் படித்தாலும் உடனே எழுதிவிட வேண்டும், அல்லாவிடில் அடுத்தடுத்த புத்தகங்களுக்கு நகர்ந்துவிடுவேன். அப்படித்தான் இதைப் பற்றி எழுதும் வாய்ப்பு விட்டுப் போனது. அதனால் அன்று தோன்றியதை என் நினைவில் இருந்து இப்போது கீழ்வருமாறு எழுதுகிறேன்.
இந்நாவல் என்னைக் கவர்ந்ததற்கு மூன்று காரணங்கள்:
தமிழில் வந்த முழுமுதல் எதிர்-செண்டிமெண்டல் நாவல் இதுதான். பாசம், நேசம் மாதிரியான செண்டிமெண்டுகளுக்கு நாம் அடிமையாகி இருக்கிறோம். அதுவும் இங்குதான் காதலுக்காக அன்றி காதல் பற்றின நம்பிக்கைக்காக நம்மை ஒப்புக் கொடுத்து கைகால்களில் சங்கிலியைப் பிணைத்துக் கொண்டு நம்மையும் அதற்காக வதைத்துக் கொள்கிறோம். இது என் தலைமுறையினருக்கு உள்ள பிரச்சினை மட்டுமல்ல. இன்றைய தலைமுறையினரும் கூட அப்படித்தான். இன்றைய 17 வயதுப் பெண்கள் தம் காதலர்களுக்கு பொதுவெளியில் வைத்து ஒரு வயதுக் குழந்தைக்கு செய்வதைப் போல சோறூட்டுவதைப் பார்க்கிறேன். அவர்கள் தம் காதலர்களின் தோளில் தொங்கியபடியே பயணிப்பதை, அவர்களுடைய போன் கடவுச்சொல்லை வாங்கி வைத்து சதா கண்காணிப்பதைப் பார்க்கிறேன். ஒருவர் என்னென்ன பேசலாம், யோசிக்கலாம், எங்கெங்கு போகலாம், எதை சாப்பிடலாம், எப்போது எப்படி சாப்பிடலாம், எதை அணியலாம் எந்த நேரத்தில் எங்கு இருக்கலாம் என்றெல்லாம் முடிவெடுக்கும் உரிமையை இன்னொருவரிடம் கொடுப்பதே இங்கு நேசம், பாசம், காதல் உறவாக இருக்கிறது. இப்படி சுதந்திரத்தை ஒப்படைப்பதில் ஒரு சுயவதை இன்பம் - ஒரு மசோக்கிஸம் - இருக்கிறது. இதைப் பற்றி தமிழில் சிறந்த படைப்பாளர்கள் எழுதியதில்லை என்பதோடு மட்டுமல்லாமல் நமது 80 ஆண்டுகால நவீன எழுத்துக்களை எடுத்துப் பார்த்தால் அது பெரும்பாலும் இந்த ‘மெசோக்கிஸத்தை’ கொண்டாடுவதாகவே இருக்கிறது. சரி, இது ஏன் இப்படி இருக்கிறது எனப் பார்ப்பதற்காக பின்னால் போனால் நமது பக்தி இலக்கியம் முழுக்கவே இப்படித்தான் இருக்கிறது. அதன் சட்டை பேண்ட் இட்ட வடிவமே பெரும்பாலும் நாம் நவீன இலக்கியம் எனக் கொண்டாடுவது. இந்த செண்டிமெண்டல் பண்பாட்டை சாரு பகடி செய்கிறார் எனபதை அதன் ஒரு பகுதியாக இருந்தே அதைப் பண்ணுகிறார் என்பதே என்னை வெகுவாக கவர்ந்தது.
நீங்கள் சு.ராவின் “ஜெ.ஜெ சில குறிப்புகளை” படித்தால் அதில் வரும் அறிவுஜீவி ஜெ.ஜெ தான் விமர்சிக்கும் பண்பாட்டுக்கு வெளியிலே நின்று கொண்டிருப்பான். ஆனால் இது எதார்த்தம் அல்ல - நிஜத்தில் நாம் எதை விமர்சிக்கிறோமோ நடைமுறையில் அதுவாகவே இருப்போம். சேற்றில் நின்று கொண்டே “அதோ பார், ஊரே சேறாக கிடக்கிறது” என்று கூவுவதே மனித இயல்பு. இதை முதலில் எழுதியவர் ஆதவன் தான். அடுத்து சாரு. ஆதவனிடம் எழுத்தாளன் எனும் ஒரு தன்னிலை இருக்கும். சாருவிடம் அதுவும் இல்லை. சாருவிடம் அந்த தன்னிலையே சேற்றில் மூழ்கி இருக்கும், சேறும் தானும் வேறுவேறல்ல என யோசிக்கும் தன்னிலை தான். அந்த தன்னிலை தன்னையும் உலகையும் இருவேறாகப் பார்ப்பதில்லை.
அடுத்து, இதிலுள்ள அபாரமான பகடியும், நகைச்சுவையும். கடும் துயரில் இருந்த காலத்தில் இது என்னை சிரித்து சிரித்து ஒரு தன்னறிவான பன்றியைப் போல மகிழ்ச்சியின் சேற்றில் ஊறியிருக்க வைத்தது. அந்த நகைச்சுவை தன்னை நோக்கியே செலுத்தப்படுவது, தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டே செய்வது என்பதால் அதன் வலியுடன் கூடிய ஒன்றாக இருந்தது. அதனாலே சிரித்து முடிக்கையில் “என்னடா இப்படி?” எனும் உணர்வையும் தந்தது. இதை ஒரு மெஸோக்கிஸ பகடி நகைச்சுவை என்று பார்க்கிறேன்.
கடைசியாக, இதன் மொழி. சாருவின் இசைநயமும் சரளமும் பெற்ற மொழியை நான் சொல்லவில்லை. இதன் கதைகூறலில் கதைத்தன்மைக்கு எதிரான ஒரு அம்சம் உள்ளது. அம்மொழியையே சொல்கிறேன் - சாருவின் ஏற்கனவே பதிப்பிக்கட்ட புனைவுகளிலும் இது உள்ளது. அப்புனைவுகள் கட்டுரைகளா கதைகளா என்றால் அந்த எல்லைகளை உடைத்த ஒரு கதைகூறல் என்று சொல்வேன். கதையென்று வந்துவிட்டால் அங்கு ஒரு சாராம்சப்படுத்தப்பட்ட தன்னிலை, அதற்கென ஒரு முறைமை, கால ஒழுங்கு, கால ஒழுங்கினோடே மனிதர்களின் இயல்புகளும், உணர்வுகளும், விழுமியங்களும் மாறுகிறது எனக் காட்ட வேண்டும் எனும் கட்டாயம் தோன்றிவிடுகிறது. இது எதார்த்த கதை வடிவின் பிரச்சினை மட்டுமல்ல. பின்நவீன கதைகளில் இந்த கதைச்சரடு அறுக்கப்படுகிறது என்றாலும் அது திட்டமிட்டு நிகழ்த்தப்படுகிறது, ஒரு தொழில்நுட்பமாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. சாரு இந்த விதிகளை உடைக்கிறார். அதற்காக அவர் சாரு நிவேதிதா எனும் ஒரு தன்னிலையை கற்பனை செய்கிறார். அதைக் கொண்டே நம்மிடம் பேசுகிறார், கட்டுரைகள் எழுதுகிறார், அதை கதையாகவும் வெளியிடுகிறார், அடிப்படையில் அந்த தன்னிலையே ஒரு கதையாடலின் பகுதி என்பதால், சாரு நிவேதிதா நமது சங்கப் பாடல்களில் வரும் தலைவன், தலைவியைப் போல ஒரு பாத்திரம் மட்டுமே என எனக்குத் தோன்றுகிறது. அவ்விதத்தில் சாரு நிவேதிதாவின் இருப்பின்மையெ சாரு நிவேதிதாவின் இருப்பு என்பது என் கருதுகோள்.
இந்நாவலை வாசிக்கையில் நான் மிகவும் ரசித்தது அவர் நாவல் அல்லாமல் நாவலை எழுதும், கதையல்லாமல் கதையெழுதும் பாங்கைத் தான், அதன் பின்னுள்ள (தன்னிலையின் சாரம்சத்தை அழிக்கும்) தத்துவத்தை தான்.
கருத்துகள்