முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இது ஒரு புலம்பல் பதிவு அல்ல

நான் கடந்த 16 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். (இது ஒரு புலம்பல் பதிவு அல்ல.) என்னைப் பற்றி அலசுகிற அல்லது விமர்சிக்கிற அல்லது அறிமுகப்படுத்துகிற சிறுகுறிப்புகளை கூட என் சீனியர்கள் எழுதியதில்லை. என்னைப் பற்றி எழுதியவை 99% வாசகர்களாலும் சக-எழுத்தாளர்களாலும் எழுதப்பட்டவையே. அ. ராமசாமி மட்டுமே இதற்கு விதிவிலக்கு. அவர் மூன்று குறிப்புகள் என்னைப் பற்றி இதுவரை எழுதி இருக்கிறார். இது எனக்கு நேரும் அவலம் மட்டுமல்ல, தமிழில் உள்ள கணிசமான இளம் படைப்பாளிகளின் நிலை இதுதான். முன்பு நிலை இதைவிட மோசமாக இருந்தது. இறந்தால் இரங்கல் குறிப்பு கூட வராது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் புகழின், செல்வாக்கின், அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களைப் பற்றி மட்டுமே புகழுரைகள் வெளியாகும். மற்றவர்கள் மறக்கடிக்கப்படுவார்கள். எனக்கு இது ஏன் என நன்றாகவே தெரியும். இதன் பின்னால் எந்த சதித்திட்டமும் இல்லை. இது முழுக்க முழுக்க ஒரு நடைமுறை பிரச்சினை தான்.

நான் எனக்குப் பிடித்த படைப்புகள், படைப்பாளிகளைப் பற்றி தொடர்ந்து எழுதி வந்திருக்கிறேன். என்னைப் போல செய்து வருகிற சகபடைப்பாளிகள் வேறு சிலரும் உண்டு. நாங்கள் எங்களை விமர்சகர்களாகவும் படைப்பாளிகளாகவும் நினைக்கிறவர்கள். ஆனால் தமிழில் நாங்கள் அரிதானவர்கள். இங்கு கணிசமானவர்கள் முழுமுதல் படைப்பாளிகளே. அவர்களுடைய விமர்சனத்திலும் ஒரு தொடர்ச்சி, கடப்பாடு இருக்காது. பேருந்திலும் மெட்ரோவிலும் அருகில் அமர்வோரை நோக்கி "ஏங்க அண்ணாச்சி, என்ன இந்த பக்கம்?" "என்ன அக்கா, மீன் வாண்டியிட்டு போறியளா?" சொல்வோமே அப்படியான விமர்சனத்தை தான் எழுதுவார்கள். நிறுத்தம் வந்ததும் இறங்கிப் போய் விடுவார்கள். ஏங்க அதற்கு மேல் எழுதல என்று கேட்டால் அது எங்க வேலை அல்ல, நாங்க கவிதை, கதை எழுதணும் என்று சொல்வார்கள்.

 தமிழில் விமர்சகராக இருப்பது ஒரு சாபக்கேடு. யாரும் படிக்கவோ பொருட்படுத்தி விருதளிக்கவோ பிரசுரிக்கவோ மாட்டார்கள். ஆனால் தொழில்முறை விமர்சகனாக தன்னைக் கருதுகிற ஒருவர் மட்டுமே தன் காலத்தில் வெளிவரும் படைப்புகளைப் பற்றி சிரத்தையாகப் படித்து விமர்சித்து அறிமுகப்படுத்தி வருவார்கள். அவர்களுக்கு எல்லா படைப்பாளிகளும் முக்கியம். எந்த புதிய போக்கையும் பதிவு செய்ய வேண்டும் என நினைப்பார்கள். 
 
தமிழில் அ. ராமசாமி அப்படியானவர். நான் அவரிடம் நட்பு பாராட்ட எந்த பிரத்யேக முயற்சியும் எடுத்ததில்லை. (எனக்கு சமூகமாக்கல் திறன் குறைவு என்பதால்) அவருடைய புத்தகத்துக்கு முன்னுரை எழுதும்படி முன்பு கேட்ட போது என்னுடைய நெருக்கடி காரணமாக அவ்வாய்ப்பை தவற விட்டேன். ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பு அவரிடம் முன்பு ஒரு நிகழ்ச்சி சம்மந்தமாக சிறுபஞ்சாயத்து கூட ஏற்பட்டது. ஆனால் அதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டு அல்ல. அவர் அண்மையில் கூட நான் எப்.எம்மில் பேசியதை ஒட்டி ஒரு முக்கியமான குறிப்பை எழுதி இருக்கிறார். இமையம் பற்றி அவர் எழுதிய கட்டுரைகள், நாடகவியல், நடிப்புக்கலை பற்றி விவாதங்கள் குறிப்பிடத்தக்கவை. அவர் தமிழில் வெளியாகும் சிறுகதைகளை கூட படித்து தனியாக கட்டுரைகளை எழுதுவார். அந்த கடப்பாடு மிக முக்கியமானது. தன்னை விமர்சகனாக ஒருவர் அடையாளப்படுத்தும் போதே அது சாத்தியமாகும். ஏன் என்னையும் பிற சக படைப்பாளிகளையும் பற்றி போதுமான அளவுக்கு அறிமுக, விமர்சன குறிப்புகள் வருவதில்லை என்றால் அ. ராமசாமியைப் போன்றோர் போதுமான எண்ணிக்கையில் இங்கு இல்லை என்பதே. இங்கு படைப்பாளிகள் அளவுக்கு அதிகமாக கொண்டாடப்படுகிறார்கள். அளவுக்கு அதிகமாக அவர்களுக்கு மரியாதை கொடுக்கப்படுகிறது. அபுனைவில் விமர்சனம், தத்துவம், கோட்பாடுகள் மிக மிக குறைவாகவே எழுதப்படுகின்றன, படிக்கப்படுகின்றன, இது ஆரோக்கிய கேடான ஒரு போக்கு. இப்படியே தொடர்ந்தால் நம் மொழியும் இலக்கியமும் அழிந்து விடும் எனத் தோன்றுகிறது. 

எதிர்காலத்தில் என்னவாகும் என நினைக்கவே பயமாக இருக்கிறது. எழுத்தாளர்கள் தம்மைப் பற்றி மட்டும் பேசிக்கொண்டு, வாசகர்களின் உதிரிக் கருத்துக்களை மட்டும் கவனித்தபடி செயல்படுவது நம்மை ஒரு மனநல விடுதியைப் போல் ஆக்கிவிடும். இச்சூழல் மாற வேண்டும். திட்டவோ பாராட்டவோ அல்ல, ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியாக இங்கு நடப்பனவற்றை புறவயமாக கவனித்து பதிவு செய்து அலசி ஆராய நமக்கு மேலும் பல விமர்சகர்கள் வேண்டும். அவர்களுக்கு என்று தனியான விருதுகள், நல்கைகளை உருவாக்க வேண்டும். முக்கியமாக இது சாகித்ய் அகாடெமியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அடுத்து தமிழக அரசும் தனியார் அமைப்புகளும் செய்ய வேண்டும். இவர்கள் விமர்சகர்களுக்கு என்று ஒரு விருதை ஆரம்பிக்க வேண்டும். தொடர்ந்து விமர்சகர்களைக் கொண்டாடி இம்மரபை நீட்டிக்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...