எனக்கு இந்த மதம், மரபு, ஜனநாயகம், பண்பாட்டுக் குறியீடு போன்ற எதன் மீதும் நம்பிக்கை இல்லை. நான் அவற்றிடத்து நம்பிக்கை இழக்கவில்லை. நான் பெரும்பாலான அருவங்களாக சங்கதிகள் மீதும் நம்பிக்கை இழந்து விட்டேன். இதை நான் ஒரு விடுதலையாகப் பார்க்கிறேன். நான் என் இலக்கிய கோட்பாட்டு வகுப்பில் யாராவது அரூபமான விசயங்களை ஒட்டி கேள்வி எழுப்பினால் அதை என்னிடம் காட்டும்படி கேட்பேன். “இதோ இந்த தண்ணீர் புட்டியை உங்களால் பார்க்க முடியும், இதைத் தொட முடியும், வாசனையை அறிய முடியும், நக்கி சுவைக்கவும் முடியும், இதை கீழே போட்டால் சத்தத்தை கேட்கவும் முடியும். நீங்கள் குறிப்பிடும் அந்த சங்கதியை இதில் எந்த வழியிலாவது காண முடியுமா? முடியாதெனில் அது இல்லையெனப் பொருள். இல்லாத ஒன்றைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்?”
ஆரம்பத்தில் அவர்களுக்கு இது வேடிக்கையான கேள்வியாகப் படும். ஆனால் போகப்போக புரிந்து கொள்வார்கள். உ.தா., வரலாற்றில் இலக்கியத்துக்கு இடம் என்ன எனும் கேள்வியின் அடிப்படையிலே அவர்கள் ஒட்டுமொத்த எழுத்துலகையும் புரிந்து கொள்வார்கள். இது ஏன் முக்கியமான படைப்பு, இவர் ஏன் முக்கியமான படைப்பாளி, இவரை ஏன் படிக்க வேண்டும் என்பதே அவர்களுடைய அறிவு கோரும் நிபந்தனை. நான் அவர்களிடம் இலக்கியத்தின் பிரச்சினையே அது இல்லாத ஒன்று எனப் புரிய வைக்க முயல்வேன். இதை அவர்கள் புரிந்து கொண்டால் பின்னாளில் சுலபத்தில் பின்னமைப்பியல் விவாதங்களுக்குள் வந்துவிடுவார்கள் என நம்புகிறேன்.
சரி, இந்த தவறான புரிதல் (அருவத்தை உருவமாகப் பார்ப்பது) அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? பள்ளிக்கூடங்களில் இருந்து, குடும்பத்தில் இருந்து, ஓரளவுக்கு மொழியில் இருந்து. நமது அத்தனை துயரங்களும் நாம் இந்த அரூபங்களிடம் அடிமைப்படுவதில் இருந்து வருகின்றன. ஏனென்றால் நாம் அவற்றுக்காக மனம் வெதும்பி, உடைந்து, கலங்கிப் போகிறோம். ஏனென்றால் நாம் அவற்றுக்காக மகிழ்ந்து, ஆவேசமாகி, மயிர்க்கூச்செறிகிறோம், மனம் மயங்குகிறோம். இந்த அரூபங்கள் இல்லாத உலகில் நாம் இன்னும் சுதந்திரமாக இருக்கலாம் என்பதே உண்மை.
ஆனால் மொழியே அரூபங்களால் ஆன ஒன்று அல்லவா? ஆம், ஆனால் மொழி இந்த அரூபமான கட்டமைப்புகளை உள்முரணுடன் முன்வைக்கின்றன. அரூபத்தின் முதுகெலும்பே தர்க்கத்தில் உள்ளது. மொழி தன் இயல்பில் இந்த முதுகெலும்பை உடைக்கிறது. அப்போது அது கவிதையாகிறது, இசையாகிறது, பிதற்றலாகிறது, விடுதலையாகிறது. ஆனால் கலைக்கு வெளியிலும் நம் சிந்தனைத் தளத்தில் இது சாத்தியமாக நாம் அரூபத்தை ரூபமாக கருதுவதை நிறுத்த வேண்டும். “நான் உன்னிடம் பெரும் அன்பைக் கொண்டிருக்கிறேன்” என்றொருவர் சொன்னால் அந்த அன்பு எங்கு எதன் மீது எப்போது நின்றிருக்கிறது என்று நாம் கேட்க வேண்டும். ஆனால் கேட்க முடியாது. கேட்டால் அந்த தற்காலிக நிம்மதி போய் விடும். தற்காலிக கிளுகிளுப்பு, நம்பிக்கை கைவிட்டு போய் விடும். எப்போதுமே நாம் கண நேர பொய்களுக்காக மகிழ்ச்சியை விட்டுக் கொடுக்கிறோம்.
ஒரு தேநீர் கோப்பையை பார்த்ததும் அது எங்கு எதன் மீது எப்படி நின்றிருக்கிறது என நமக்குத் தெரிகிறது. ஆனால் “அன்பு” எனும் சொல்லை அப்படி பார்க்க முடியாது. அன்பைப் போன்ற அரூப சொற்கள் விழுமியங்கள் (மனிதம், மானுட பிணைப்பு, கடமை, பொறுப்பு, கடவுள்) மீது நின்றிருக்கின்றன. விழுமியங்களே நம்மை அடிமைப்படுத்தும் சங்கிலியின் கண்ணிகள். இந்த கண்ணிகளே நம்மை காப்பாற்றுகின்றன என நாம் நம்ப வைக்கப்படுகிறோம் என்பதே வேடிக்கை. "அன்பு" என்று ஒருவர் சொல்லும் போது அது ஒரு பனிமலையின் முகட்டைப் போல நிற்கிறது. நம்மால் முகட்டைத் தவிர எதையும் பார்க்க இயல்வதில்லை. ஆனால் பெரும் மலையொன்றின் முனையை மட்டும் பார்த்து முழுமையை கற்பித்துக் கொள்கிறோம். நீங்கள் இந்த சொற்களுக்காக உங்களை தியாகம் பண்ணும்படி மயக்கப்படுகிறீர்கள். புலனுலகைத் தவிர வேறெதுவும் நிஜம் இல்லை
எனப் புரியும் முன்பு நம் ஆயுள் கிட்டத்தட்ட முடிந்து போகிறது.
ஒவ்வொரு சொல்லும் நம்மை இப்படி ஜேப்படிகிறது என்பதே உண்மை. அப்படி ஜேப்படிக்கப்படும் நாம் மேலும் மேலும் துயருறுகிறோம். அந்த சொல்லை உண்மையாக்கி காட்டு, காட்டு என இந்த வாழ்விடம் இறைஞ்சுகிறோம். அதற்காக கொந்தளித்துக் கொண்டே இருக்கிறோம். இது நம்மை சிறைப்படுத்துகிறது.
சைவ மடாதிகள் மோடியிடம் செங்கோலை அளித்ததைப் பார்த்து “ஓர் உறுதியான இந்துவாக எனக்கு என் மதத்தின் ஞானாசிரியர்கள் அதிகாரத்தின் முன் கையறுநிலையில் வரிசையாக நிற்கும் காட்சி பெரும்அவமதிப்பாக இருந்தது. உண்மையிலேயே கண்ணீர் மல்கினேன்.” என்று ஒருவர் கூறும் போதோ “ஜனநாயகத்தின் அடிப்படைகள் தகர்க்கப்பட்டு விட்டன, ஐயோ இதைக் காணப் பொறுக்காது என் இதயம் உடைந்து சுக்குநூறாகிறதே” என கொந்தளித்தாலோ எனக்கு “அப்படி ஒன்றும் தோணலையே” என்று நினைக்கிறேன். நான் உண்மையைத் தான் சொல்கிறேன். ஒருவர் இன்னொருவரிடம் ஒரு கோலைக் கொடுக்கிறார். வாங்குபவருக்கும் கொடுப்பவருகும் அதனால் நடைமுறை பயன்கள் உள்ளன. அந்த பயன்களை எப்படி பெறலாம் என யோசிக்கிறார்கள், அதை பணமாகவோ வேறு செல்வமாகவோ அதிகாரமோ பெற்று பொதாமையை உணர்ந்து கொண்டு வாழ்க்கையை இதே போலத் தொடர்வார்கள். இதைத்தாண்டி இதில் என்னால் எதையும் பார்க்க இயலவில்லை. என் நாய் உச்சா போவதை என்னால் பார்க்க முடிகிறது. அதன் மூத்திரத்துக்கு என்று ஒரு நிறம், வாசனை உள்ளது. ஆனால் ‘ஜனநாயகத்தை’ என்னால் இதுவரையிலும் பார்க்க முடிந்ததில்லை. இல்லாத ஒன்றுக்காக நான் ஏன் ஆவேசப்பட வேண்டும்?
எனக்கு மட்டும் தான் என்றில்லை, இங்கு யாருமே ஜனநாயகத்தையோ எந்தவொரு விழுமியத்தையே பார்த்ததில்லை. ஆனால் தமக்கு வீடொன்று இருப்பதை, அணிய ஆடையும், பயணிக்க வாகனமும், சாப்பிட உணவும், புணர ஒரு துணையும் உள்ளதை நல்லவேளையாக அறிவார்கள். எல்லாருடைய வாழ்க்கையையும் அவ்வளவு தான் - அதைத் தாண்டிய கட்டமைப்புகளை நாம் பயன்படுத்துகிறோம் என்றாலும் மக்கள் ஓரளவுக்கு மேல் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. யோசித்துப் பாருங்கள் - முதலிரவு அன்று கணவனோ மனைவியோ “காதலே அற்புதமானது, அதைப் பற்றி பேசிக்கொண்டிருப்போம்” என்றோ பசிக்கும் போது “மனித வரலாற்றில் மகத்துவமானது மனிதர் அனைவரும் சமமானவர் எனும் கண்டுபிடிப்பா அல்லது கடவுள் நம்மைப் படைத்தார் என்பதா?” எனப் பேசிக் கொண்டிருப்பதில்லை. எல்லாருக்கும் தம் உடலின் தூண்டுதலுக்கு ஏற்ப நடக்கத் தெரிகிறது என்பதாலே, அரூப நாட்டங்கள் வெறும் மொழி விளையாட்டுகள் என உள்ளூர தெரிகிறது என்பதாலே இந்த உலகம் நன்கு இயங்கிக் கொண்டிருக்கிறது.
கருத்துகள்