முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய தலித் இலக்கியம் - ஒரு விவாதம் (1)


ஆஸ்திகர் அப்போது பதிலளித்தார், “எனக்கு பொன்னோ, வெள்ளியோ கால்நடைகளோ வேண்டாம் மன்னா! இந்த யாகத்தை நிறுத்தி என் தாய்வழி உறவினர்களை காப்பாற்றினால் மட்டும் போதும்.”

மன்னர் தன் சதஸ்யர்களிடம் சொன்னார், “‘இந்த ஆஸ்திகர் சொல்லுவது போலவே ஆகட்டும். யாகத்தை நிறுத்துங்கள், நாகங்கள் பாதுகாப்பாய் இருக்கட்டும், ஆஸ்திகரின் விருப்பம் நிறைவேறட்டும்.”

இதையெல்லாம் கேட்டு நாகர்கள் மிகவும் மகிழ்ந்தனர், அவர்களுடைய பயங்கள் இல்லாமல் ஆகின. ஆஸ்திகரிடத்து மிகவும் திருப்தியான அவர்கள் அவரிடம் உமக்கு என்ன வரம் வேண்டும் எனக் கேட்டனர். அதற்கு ஆஸ்திகர்காலையிலும் மாலையிலும் எனது இந்த செயலைக் குறித்த புனித பனுவலை வாசிக்கும் பிராமணர்களுக்கு உங்களால் எந்த அச்சமும் ஏற்படக் கூடாது.” என்று கேட்டார். “மருமகனாரே, நீர் கேட்டதுபடி வரம் அளிக்கப்படுகிறது. நீர் கேட்டதுபடியே நாங்கள் உற்சாகத்துடன் செய்கிறோம். மேலும் தம் மனதுக்குள் ஆஸ்திகர், அர்த்திமானர், சுனிதர் ஆகியோரை இரவோ பகலோ தியானிக்கிறவர்களையும் நாங்கள் நாகங்கள் இனிமேல் தீண்ட மாட்டோம்.” 

- ஆஸ்திக பர்வம், மகாபாரதம்

*****

தலித் இலக்கியத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று அதற்குள்ள நெடிய தத்துவ மரபு, அம்மரபை அது நாட்டார் வழக்காற்றியல், அனுபவ அறிவு வழியாக இன்றுள்ள இலக்கிய பனுவல்களிலும் நீட்டித்து கொண்டு வந்திருப்பது. அம்மரபு ஒரு அரசியல் போராட்ட வரலாறாகவும் இருப்பது. இதைப் புரிந்து கொண்டால் தலித் இலக்கியம் மீதுள்ள எதிர்ப்பு, குற்றச்சாட்டுகள் இலக்கிய தரம் சார்ந்தவை அல்ல, நீண்ட மரபுள்ள அரசியல் மற்றும் தத்துவ முரண் சார்ந்ததே எனப் புரியும்.


தலித் இலக்கியத்தின் வரலாற்றுப் போக்குகள்


தலித் எனும் சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியது பத்தொன்பதாம் நூற்றாண்டு சீர்திருத்தவாதியான ஜோதிபா பூலே என்று சொல்கிறார்கள். தலித் எழுத்து உருவாவதற்கு முன்பே பாபுராவ் பாகுல், பாந்து மாதவ், ஷங்கர்ராவ் காரத், நாராயண் சுர்வெ, அன்னா பாவு சாதே ஆகியோரின் படைப்புகளில் தலித் அக்கறைகள் வெளிப்பட்டாலும், நவீன தலித் இலக்கிய இயக்கங்கள் 1960களில் மகாராஷ்டிராவில் தலித் சாஹித்ய சங்கம் அமைக்கப்பட்ட போதே துவங்குகின்றன. பாபுராவ் பாகுலையே மராத்திய தலித் இலக்கியத்தின் தந்தை என கருதுகிறார்கள் என்றால், தலித் பாந்தர் இயக்கத்தை தோற்றுவித்த நாம்தியோ தாஸல் இந்திய அளவில் தலித் இலக்கியம் பரவி நிலைப்பெறத்தக்க பங்களிப்பை செய்கிறார். மராத்திய தலித் இலக்கியத்தில் லஷ்மண் கெயிக்வாட், லஷ்மண் பவார், தயா பவார், வாமன் நிம்பல்கர், தராயாம்பக் சாப்கலே, அருள் தாங்கலே, உமாகாந்த் நான்திர், ஜெ.வி பவார், தாராசந்திர காந்தெக்கர், யோகிராஜ் வாஹ்மரே, அவினாஷ் தோலஸ், கிஷோர் ஷாந்தாபாய் காலெ, நரேந்திர ஜாதவ், யோகேந்திர மேஷ்ராம், பீம்ராவ் ஷிர்வாலே ஆகியோர் கவனிக்கத்தக்க ஊடுருவல்களை செய்கிறார்கள். அதன் பிறகே தலித் எழுத்தானது இந்தி, குஜராத்தி, கன்னடா, பஞ்சாபி, வங்காளம், தமிழ், தெலுங்கு, மலையாளம் என வேர்பிடித்து தழைக்கிறது


குஜராத்தி தலித் இலக்கியத்தில் நீரவ் பட்டேல், ஜோசப் மாக்வான், தலத் சௌஹான், ஹரீஷ் மங்கலம், மோஹன் பார்மர், பி.என் வங்கர், யஷ்வந்த் வகேலா, சந்து மகேரியா ஆகியோரும், இந்தியில் வெகு பிரசித்தமானஎச்சில்நூலை எழுதிய ஓம்பிரகாஷ் வால்மீகியும், கௌசல்யா பௌசாந்திரி, மோகன் தாஸ் நமிஷ்ரேய், சூரஜ் பாத்தியா, அஜய் நவாரியா ஆகியோரும், கன்னடாவில் சித்தலிங்கையா, பி. கிருஷ்ணப்பா, தேவநூரு மகாதேவா, அரவிந்தா மலாகட்டி, மனஜா, முனிவெங்கடப்பா, முல்லுரு நாகராஜா, இந்துதாரா ஹொன்னபூரா, கு. வேரபாதிரப்பா, கெ. நாராயண ஸ்வாமி, கெ. ராமையா, ராவதேவரக்கி, மா.நா ஜாவரய்யா, மொகல்லி கணேஷ் ஆகியோரும், மலையாளத்தில் கவியூர் முரளி, பொய்கயில் யோஹன்னன், எம். தாசன், கெ. சத்யநாராயணா, எம்.ஆர் ரேணுகுமார், பால் சிரகோடு, விஜிலா சிறப்பாடு, கெ.கெ கொச்சு, பாம்பாடி ஜான் ஜோசப், சனல் மோகன், ஜானி எம்.எல் ஆகியோரும், தெலுங்கில் குர்ரம் ஜோஷ்வா, காலேகுரி பிரசாத், உன்னவ லஷ்மிநாராயணா, என்.ஜி ரங்கா, முப்பல ரங்கநாயகம்மா, அருணா, ராமமோகன் ராவ், சிலுகுரி தேவபுத்ரா, போயா ஜங்கய்யா, வெமுல எல்லய்யா, கல்யாணராவ், ஜுபக்கா சுபத்ரா, கோகு ஷியாமளா, ஜாஜுல கௌரி, யெந்துலுரி சுதாகர் போன்றோரும், தமிழில் பாமா, ராஜ்கௌதமன், பூமணி, தேவிபாரதி, சுகிர்தராணி, அழகிய பெரியவன், என்.டி ராஜ்குமார், நட. சிவகுமார் உள்ளிட்டோரும் இந்திய தலித் (படைப்பிலக்கிய) எழுத்தின் முகங்களாக உள்ளனர் (இமையம் தன்னை இப்பட்டியலில் இணைக்க விரும்பாததால், அவ்வாறான அடையாளம் அவரது எழுத்துக் கொள்கைக்கும் நம்பிக்கைக்கும் எதிரானது என்பதால் அவரை இங்கு குறிப்பிடவில்லை.) தமிழிலும் பிற மொழிகளிலும் அம்பேத்கரின் கருத்துக்களும், ஆளுமையும் அரசியல் பங்களிப்பும் தலித் இலக்கியத்துக்கு ஒரு அடித்தளத்தை அமைத்துள்ளன; ஆனால் தமிழில் குறிப்பாக அயோத்திதாச பண்டிதரின் ஆய்வுகளும் எழுத்துமுறைமையும் தொண்ணூறுகளில் பிரசுரமாகி அறிமுகான போது பெரும் திருப்புமுனையாக மாறியது - எழுத்தை எதிர்-வரலாற்றெழுத்தியலாக பார்க்கும் ஒரு மரபும், தமிழ் பௌத்த ஓர்மையும் வலுப்பெற்றது. ஆனால் இதன் தாக்கத்தை படைப்பிலக்கியத்தில் அல்லாமல் நாம் தமிழ் தலித் சினிமாவிலும் ஆய்வுகளிலுமே அதிகம் பார்க்கிறோம். (அதே நேரத்தில், நாட்டார் வழக்காற்றியல் சார்ந்து மற்றொரு பௌத்த ஓர்மை எப்படி தமிழ் தலித் படைப்புகளில் தொழில்படுகிறது என பின்னர் பார்க்கப் போகிறோம்.)


11ஆம் நூற்றாண்டை சேர்ந்த கவிஞர் மாதர சென்னையா, கலாவீ, கபீர், இன்னொரு பக்கம் தமிழில் நாம் 8-12 ஆம் நூற்றாண்டு பக்தி இலக்கியத்தில் ஆழ்வார்கள், நாயன்மார்களாக சில தலித் பாத்திரங்கள் அடையாளப்படுத்தப்பட்டாலும் இவர்களை நாம்தலித்துகள்என்று துல்லியமாக வகைப்படுத்த இயலாது. ஏனென்றால் தலித் என்பது ஒரு சாதி அடையாளம் அல்ல. தலித் என்பது ஒரு அரசியல் குறிப்பான். தலித் என்பது ஒரு அரசியல் சமூக தத்துவ விடுதலையைக் கோரும் கருத்தியல். தலித் என்பது சமத்துவத்துக்கான அறைகூவல். இது என்னுடைய பார்வை மட்டுமல்ல, உலகம் முழுக்க ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கல்விப்புல வரையறையும் இதுவே. வெங்கட் சாமிநாதன் உள்ளிட்ட ரசனை விமர்சகர்கள் தலித் இலக்கியத்தின் துவக்கத்தை பக்தி இலக்கியத்திலும், அரசியலற்ற பனுவல்களிலும் காண முயன்ற, இன்றும் முயலும் ஆபத்து இருப்பதாலே இதை வலியுறுத்தி கூற வேண்டி உள்ளது.

தலித் இலக்கியம் பற்றி இந்திய அளவிலான முக்கிய சிந்தனையாளர்களும் படைப்பாளிகளும் சொல்வதென்ன என முதலில் பார்ப்போம்.


விவாதங்கள்


ஓம் பிரகாஷ் வால்மீகியைப் பொறுத்தவரையில் தலித் இலக்கியத்தின் நோக்கம் பிராமணிய இந்து மதத்தை எதிர்ப்பதும், இந்த எதிர்ப்பரசியல் இயக்கமாக வளர்வதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்பதுமே. அம்பேத்கரிய-மார்க்ஸிய சிந்தனையாளரான ஷரன்குமார் லிம்பாலே தலித் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைச் சூழலை மாற்றுவதே தலித் இலக்கியத்தின் கொள்கை என்கிறார். இந்தி தலித் இலக்கியத்தின் முகமாக கருதப்படும் துள்சி ராம் எந்தவொரு இலக்கியத்தின் வளர்ச்சியும் அது பிரதிநுத்துவப்படுத்தும் சமூகங்களின் சமூக அரசியல் பொருளாதார அதிகாரத்தை பிரதிபலிக்கும் என்கிறார். அவருடைய கருத்துப்படி இன்று இந்தியாவை செலுத்துவது நால்வர்ண அடிப்படையிலான சமூக அமைப்பு என்பதால் இங்கு முன்னிலையில் உள்ளதும் சனாதன இலக்கியமே. இதை நாம் சற்று சிக்கலான கருத்தாகவே பார்க்க வேண்டி உள்ளது - கடந்த இரு பத்தாண்டுகளில் இலக்கியத்திலும், பின்னர் சினிமாவிலும் தலித் அரசியல் ஒரு முக்கிய பேசுபொருளாக மாறி உள்ளது; இது தமிழக தலித்துகளின் சமூகப்பொருளாதார வளர்ச்சியின் வெளிப்பாடு என்று நாம் பொருள்படுத்த முடியாது தானே? அதே நேரத்தில் இங்குள்ள ஆதிக்க சமூகங்களின் உளவியல் ஒரு விசையாக நமது இலக்கியங்களில் உள்ளதையும் மறுக்க முடியாது


வடஇந்திய மொழிகளில் தலித் இலக்கியம் எதிர்மறையான வரலாற்றை தேவையில்லாமல் திரும்ப சொல்கிறது, கசப்பையும் வெறுப்பையும் ஊட்டுகிறது, இலக்கிய மதிப்போ அழகியல்தன்மையோ இல்லை என்பதான குற்றச்சாட்டுகள் வைக்கப்படும் போது லிம்பாலே, ஷர்மிளா ரகே போன்றோர் தலித் இலக்கியத்தின் அழகியலை வழக்கமான இலக்கியத்தின் எழுத்துமுறைமையுடன் ஒப்பிடலாகாது, அது தனித்துவமானது என்றும், சாதிய ஒடுக்குமுறைகளின், அநீதிகளின் வரலாறுகளை மறப்பது மேற்சாதி எழுத்தின் இலக்காக இருக்கும் போது, அதை நினைவுபடுத்துவதே தலித் இலக்கியத்தின் நோக்கம் என்கிறார்கள். லிம்பாலே, வால்மீகி ஆகியோர் தலித் இலக்கியத்தை சமூகவியல் ரீதியாகவே மதிப்பிட வேண்டும் என்கிறார்கள். ஷரன்குமார் லிம்பாலே தலித் இலக்கியத்தின் நோக்கம் ஒடுக்கப்பட்டோர் காலங்காலமாக அனுபவித்த துன்பங்கள், அவமதிப்புகள், அடிமைத்தனங்களை அம்பலப்படுத்துவது மட்டுமே என்கிறார்


தலித் சுயசரிதைகளே ஒருவிதத்தில் இந்திய தலித் இலக்கியத்தின் செலுத்துவிசைகளாக, பாதிக்கப்பட்ட தரப்பின், மறுக்கப்பட்ட தன்னிலையின் மறுகதையாடல் பனுவலாக இருந்தன. ஆனால் இந்நூல்கள் ஒரு தனிமனிதரின் கதையை சொல்லும் அதே நேரம் அவருடைய சமூகம், அதிலுள்ள பல்வேறு ஊடுபாவல்களை பின்னுக்குத் தள்ளிவிடுகின்றன, ஒருவிதக்யூட்டான பொன்சாய் மரங்களாகதலித் தன்கதைகள் உள்ளதாக டி.ஆர் நாகராஜ் குற்றம் சாட்டுகிறார். இதை ஏற்றுக்கொள்ளும் சாரா பேத் தலித் தன்கதைகளில் வரும் தன்னிலையானது தான் சார்ந்த எளிய ஒடுக்கப்பட்ட மக்களை மொத்தமாக பிரதிநுத்துவப்படுத்துவதாக உத்தேசிக்கப்பட்டாலும், சில இடங்களில் அதற்கான சாத்தியங்களை அந்த வடிவமே மறுத்துவிடுகிறது என்கிறார்.


தமிழ் தலித் இலக்கியத்தின் பேசுபொருள், அது பெறும் கவனம், விமர்சனம் ஆகியவை இவ்விதத்தில் வேறு மொழிகளில் இருந்து வேறானது, தனித்துவமானது என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஆனால் தலித் இலக்கியத்தின் புலனறிவாத இயல்பும், எதிர்த்து கேள்வி எழுப்பும் அரசியல் குணமும் அனேகமாக எல்லா மொழிகளிலும் ஒன்றாக உள்ளது.


(தொடரும்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...