முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏன் என்ற கேள்வி…


நேற்று எங்கள் பல்கலையின் இன்குபேஷன் செல்லின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்து மருத்துவரும் மக்கள் பிரதிநிதியுமான எழிலன் ஆற்றிய உரை ஒரு பெரிய தாக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்தியதை என்னால் நேற்று காண முடிந்தது. உரை முடிந்த பின்னரும் மாணவர்கள் அவர் பேசிய கருத்துக்களைப் பற்றி தம்மிடையே விவாதித்தபடி சென்றனர். அவரிடம் கேள்வி எழுப்பி விவாதிப்பதில் மாணவர்கள் மிக ஆர்வமாக இருந்தனர். நேரம் அனுமதித்திருந்தால் ஒரு மணிநேரம் கூட கேள்வி-பதில் நீண்டிருக்கும். எழிலன் நகரமயமாக்கல் கட்டமைப்பு சார்ந்த சமூக நீதித்திட்டங்கள் பற்றி பேசினார். குறிப்பாக தமிழகத்தில் திமுக அரசு கொண்டு வந்துள்ள முக்கியமான நகரமயமாக்கல் திட்டங்களை விளக்கினார். முடிவில் ஜி.எஸ்.டி, இந்தியா மாநிலங்களின் கூட்டமைப்பு எனும் புரிதல் அற்று மத்திய அரசு செயல்படுவதாக கூறி, மக்கள் தொகையின் அடிப்படையில் மாநிலங்களுக்கான நிதியைப் பிரித்தளிப்பதன் அநீதியைப் பற்றி குறிப்பிட்டார். இந்த கருத்துக்கள் பெரும் வரவேற்பைப் பெற்றதை கரகோஷத்தில் இருந்து பார்க்க முடிந்தது. அவர் குறிப்பிடாத ஒரு முக்கிய பிரச்சினை மக்கள் தொகையின் அடிப்படையில் மாநிலங்களுக்கான மக்களை இடங்களைத் தீர்மானிக்கும் நடைமுறை. இந்தியாவில் ஜனநாயகம் ஒரு கேலிக்கூத்தாக முடிவதன் ஒரு பிரதான காரணம் இதுவாகும்.

 அதிக மக்கள் தொகை கொண்ட குறைவாக பொருளாதார பங்களிப்பு செய்யும் மாநிலங்களுக்கு அதிக மக்களை இடங்கள் தரப்படும் போது அவர்களிடம் செல்வாக்கு மிக்க கட்சிகள் மட்டுமே மத்தியில் ஆட்சியமைக்கும் தகுதியைப் பெறும். அப்போது மற்ற மாநிலங்கள் கைவிடப்படுகிறன. இந்தி பெல்ட்டே இந்தியாவின் மையமாகிறது. சமமான பிரதிநுத்துவம் இல்லாமல் போகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநுத்துவம் அளித்தால் தென்னகம் புறக்கணிக்கப்படுவது துவங்கி காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கலவரங்களும், பிரிவினைவாதமும் காணாமல் போகும். இப்போதுள்ள நடைமுறையானது ஒரு சில மாநிலங்களுக்காக மட்டுமே அவர்களுடைய பிரதிநிதிகள் ஒட்டுமொத்த தேசத்தையும் ஆள்கிறேன் பேர்வழி எனும் பெயரில் மற்ற மாநிலங்களை ஒன்றும் தம்முடன் ஒத்துப்போகும் படி வற்புறுத்துவது அல்லது அவர்களை புறக்கணிப்பது என இருக்கிறது


பார்வையாளர்கள் எல்லாரும் எழிலனுடன் ஒத்துப் போகவில்லை. மாணவர்களில் ஒரு பகுதியினர் (வலதுசாரிகள் / கார்ப்பரேட் வளர்ச்சி கருத்தாளர்கள்) அவரைத் தொடர்ந்து விமர்சித்தபடியும் கலாய்த்தபடியும் தான் இருந்தனர். ஆனால் அதுவும் சேர்ந்ததுதானே விவாதம். நான் இங்கு வந்த இத்தனை ஆண்டுகளில் இப்படியொரு சமூக அரசியல் விவாத நிகழ்வை இதுவரைக் கண்டதில்லை என்பதாலே சற்று திகைத்துப் போனேன்


எழிலன்  மற்ற திமுக பேச்சாளர்களைப் போல திராவிட மாடல், பகுத்தறிவாதம், பெரியாரியம் பற்றி பேசி அப்படியே கலைஞரின் சாதனைகளை விளக்கி அவரைத் திருவுருவாக்கினார். இதுவும் முக்கியம் தான் என நினைக்கிறேன் - இத்தனைக் காலமும் காங்கிரஸ் ஒரு பக்கம் நேரு, இந்திரா என திருவுருக்களைத் தோற்றுவித்து எல்லா ஊர்களிலும் தமது சித்தாந்தத்தைப் பரப்பியது; பின்னர் அவர்களுடைய இடத்தில் பாஜக வந்து இந்துத்துவாவை பரப்பி, மோடியை திருவுருவாக்கினார்கள். இவர்கள் பேசுவதற்கும் நமக்கும் எந்த சம்மந்தமும் இல்லையே என்றே தென்னகத்து மாநிலங்களுக்கு அப்போது தோன்றியது. இப்போது முதன்முறையாக திமுக பிற மாநிலங்களுக்கு சென்றும் தேசிய அளவிலும் திராவிட மாடல், சித்தாந்தம், கலைஞர் எனும் ஒரு எதிர்-கதையாடலை பரப்புவது ஒரு சிறந்த அரசியலாக உள்ளது. இப்போது இதைக் கேட்கும் பிற மாநிலத்தவர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இது இருக்கும். ஆனால் இது கூடுதலாக அவர்களுடைய மாநில அரசியலிலும் தாக்கம் செலுத்தும் என நான் நம்புகிறேன். எல்லா மாநிலங்களிலும் சாதித் திரட்சியின் வலிமையைக் கொண்டு நிதியைக் கூடுதலாகப் பெற்று தமக்கு சார்பான திட்டங்களை நிறைவேற்றுவது தான் நடக்கிறது என்றாலும் ஒடுக்கப்பட்டவர்களின் பார்வையில் இருந்து நலத்திட்டங்களைப் பார்ப்பதும், பகுத்தறிவுவாதத்தை முன்வைப்பதும் ஒரு நல்ல மாற்றத்தை இந்தியா முழுக்க கொண்டு வரும். அதனாலே திமுகவின் பேச்சாளர்கள் இந்தியா முழுக்க கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி ஆங்கிலத்தில் இந்த கதையாடலைக் கொண்டு செல்ல வேண்டும், நூல்களை வெளியிட வேண்டும், தம் சித்தாந்தத்தின் அடிப்படையில் சினிமாக்களை எடுக்க வேண்டும், முடிந்தால் இந்தியிலும் இந்தி பெல்ட்டுக்கு சென்று உரையாற்ற வேண்டும். திராவிடம் இரு அகில இந்திய சித்தாந்தமாக வேண்டும்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...