இதில் மூன்று பிரச்சினைகள் உண்டு:
ஆண்களின் முகமையை முழுக்க மறுத்துவிடுகிறார்கள். "நான் பெற்றுக் கொண்டேன், நான் பெற்றுக் கொண்டேன்" என்கிறார்களே, அதை எப்படித்தான் பெற்றுக் கொண்டார்கள் என அறிந்துகொள்ள விரும்புகிறேன். ஒரு குழந்தையை ஒரு பெண் குந்தி தேவியைப் போல மந்திரம் சொல்லிப் பெற்றுக்கொள்வதில்லை. ஆனால் நிகழ்ச்சியில் பேசிய பெண்கள் எல்லாரும் குந்தி தேவியைப் போலவே நடந்துகொள்கிறார்கள்.
அடுத்து, ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதில் இன்று ஆண்களுக்கும் கடுமையான அழுத்தம் உள்ளது. தாமதமான திருமணம், விந்தணு குறைபாடு, மோசமான உணவுப்பழக்கம், தூக்கமின்மை, மன அழுத்தம், பதற்றம் என ஏகப்பட்ட பிரச்சினைகள் ஆண்களுக்கும் உண்டு. ஆகையால் பெண் அளவுக்கு ஆணும் தான் இன்று குழந்தைப் பேறுக்காக உழைக்கிறான். குழந்தை பிறந்த பின்னரும் அதைப் பார்த்துக்கொள்வது, வளர்ப்பது என எல்லாவற்றிலும் அவன் பங்களிக்கிறான், அந்த எதிர்பார்ப்பை இன்று பெண்களே ஆண்களிடத்து வைக்கிறார்கள். அதை நிகழ்ச்சியில் ஒரு பெண் குறிப்பிடவும் செய்தார் - "எண் கணவர் முதல் குழந்தையைப் பார்த்துக் கொள்ள கஷ்டப்பட்டார். அதனால் அவரை மேலும் துன்புறுத்த விரும்பவில்லை." ஆனால் அந்த கணவர் இதில் தன்னுடைய முகமையை இழந்துவிடுவதை யாரும் கவனிக்கவில்லை. அடுத்து, ஒரு ஆண் தன் வாழ்வில் 18-23 ஆண்டுகள் வரை ஒரு குழந்தைக்காக தியாகம் செய்கிறான். குழந்தைக்காக சம்பாதிப்பது என இதை நாம் மகத்துவப்படுத்தினாலும் இந்த தியாகத்தை நாம் பொருட்படுத்துவதே இல்லை. ஏதோ அப்பாவே குடும்பத்தில் இல்லையென்பதைப் போல நடந்து கொள்கிறோம். "நீயா நானா" போன்ற நிகழ்ச்சிகளும் இதை முன்னெடுப்பது துரதிஷ்டவசமானது.
இரண்டாவதாக, இன்று விந்தணு வங்கிகள் இருந்தும் கூட ஏன் குழந்தைகள் கல்யாணம் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள்? ஏனெனில் ஒரு ஆணிடம் இருந்து மட்டுமே அவர்களுக்கு சாதி அந்தஸ்தும், சொத்தும் கிடைக்கிறது. இம்மாதிரி நிகழ்ச்சிகளில் மட்டுமல்ல பொதுவெளி விவாதங்கள், உரையாடல்களில் எங்குமே இந்த பங்களிப்பை யாரும் குறிப்பிடுவதில்லை. 40-50 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த ஒரு விசயங்களும் குறிப்பிடப்பட்டன என்பதை நாம் சினிமா, கட்டுரைகள் என பல பனுவல்களில் பார்க்க முடியும். ஆனால் இன்றோ கல்யாணம் பண்ணி ஆணின் உடல், சாதி அடையாளம், அது வழியான சமூக அந்தஸ்து, சொத்து / பணம் ஆகியவற்றை பயன்படுத்திக் கொண்டே ஆண்களை மகாபாரத பாண்டுவாக பாவித்துக் கொண்டு "நானே பெத்துக்கிட்டேன், நான் மட்டுமே தாங்க பெத்துக்கிட்டேன்" என கோருகிறார்கள். அதாவது ஆண் வேண்டும், ஆனால் அவனை அங்கீகரிக்க மட்டும் மாட்டோம் எனும் இடத்துக்கு நகர்ந்துவிட்டார்கள்.
மூன்றாவதாக, இந்த கால மத்திய வர்க்க தமிழ் ஆண்களை இந்த நிகழ்ச்சி பிரதிநுத்துவப்படுத்துகிறார்கள் என்றால் நிலைமை ரொம்ப பரிதாபமாக இருக்கிறது. எல்லாரும் "அடிமைப்பெண்" எம்.ஜி.ஆரைப் போல கூனலோடே நடக்கிறார்கள். (குறியீடே தான்) நிமிரவே மாட்டார்கள் போல. நிமிர்ந்தால் திமிர்பிடித்தவன், ஆணாதிக்கவாதி என புடைத்துவிடுவார்கள். வயதான ஆண்கள் மட்டுமே சற்று தன்னம்பிக்கையுடன் பேசுகிறார்கள். இவ்வளவு தன்னம்பிக்கையற்ற, பார்த்ததுமே ரெண்டு அடி பின்னுக்குப் போகிற ஒரு ஆணை ஒரு பெண் எப்படி விருப்பத்துடன் மணம் புரிய முடியும் என்பதும் புரியவில்லை. ஆகையால், வளர்ந்து வரும் நாடுகளில் ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்ளும் பண்பாட்டுக்கும் ஆணின் போதாமை, தகுதியின்மை, தன்னம்பிக்கையின்மைக்கும் ஒரு உளவியல் தொடர்புண்டு என நினைக்கிறேன். பணக்கார ஆணாக இருக்கும் போது இப்பிரச்சினை வருவதில்லை. ஏனெனில் பணம் அந்த ஆணுக்கு ஒரு தன்னம்பிக்கையையும் மதிப்பையும் கொடுத்து விடுகிறது. எண்பதுகள் வரை மரபும் பண்பாடும் அந்த மதிப்பை அவனுக்குக் கொடுத்தது. கடந்த நாற்பதாண்டுகளில் அதை ஆண்கள் இழந்துவிட்டார்கள். பெரும் பணக்கார ஆண்களைத் தவிர பிற ஆண்கள் ஒருவித பாதி ஆண்களாகவே பெண்களால் பார்க்கப்படுகிறார்களோ, அதனால் தான் பொருளாதார நெருக்கடி, வேலை அதிகம் என ஜல்லியடித்து இரண்டாவது குழந்தைக்கு சிவப்புக் கொடி காட்டுகிறார்களோ எனத் தோன்றுகிறது.
இது தானாக நடந்ததாக நான் நினைக்கவில்லை. கடந்த முப்பதாண்டுகளாக குறிப்பாக சந்தை, கல்விப்புலம், ஊடகம், சமூகக் கட்டமைப்பு என எல்லா இடங்களிலும் துணிந்து தன்னம்பிக்கையாக ஒரு பெண் பேசினால் அவனை ஆதிக்கவாதி, முரடன் என அடித்து காலி பண்ணிவிடுகிறார்கள். ஒரு பெண் திமிராக, முரட்டுத்தனமாக நடந்துகொண்டால் அதை தன்னம்பிக்கை, வளர்ச்சி, சமத்துவம் என்கிறார்கள். ஆங்கிலத்தில் தவறாது இதை இரு சொற்கள் வரை குறிப்பிடுகிறார்கள். ஆணின் நடத்தையென வந்துவிட்டால் அதை dominant என்றும், அதே நடத்தையை பெண் காட்டினால் assertive என்றும் சொல்கிறார்கள். இம்மாதிரி சொற்களே இன்று ஏகப்பட்ட அடிமைப்பெண் எம்.ஜி.ஆர்களை உண்டு பண்ணி விட்டன.
இன்னொரு பக்கம் இன்றைய எதற்கு கல்யாணம் பண்ணிக்கொள்கிறார்கள், எதற்கு ஒப்புக்கு சப்பாக கணவனை வைத்துக் கொள்கிறார்கள் என்றே புரியவில்லை.
கருத்துகள்