2022ஐ விட 2023 மேல், 2021ஐ 2022 விட சற்று குறைவாக கொடுமை தந்த ஆண்டு, இப்படித்தான் ஒப்பீட்டளவில் பார்க்க முடிகிறது. கடந்த ஆண்டு எனக்கு நடந்த நல்ல விசயங்களில் ஒன்று ஆரோக்கியம் - கடந்த ஆண்டு திட்டமிட்டதைப் போல சாப்பிட்டு உடற்பயிற்சி செய்து அதன் பலன்களையும் பெற்றேன். உடல் நலம் பற்றி நிறைய படித்தும் அனுபவித்தும் தெரிந்துகொண்டேன். (என் அனுபவங்களை ஒரு நூலாக எழுதியும் வருகிறேன். அடுத்த ஆண்டு அதை முடிக்க வேண்டும்.)
மற்றொரு சிறப்பு எழுதி முடித்த ஒரு நாவலைத் திருத்தவும் இன்னொரு நாவலை ஆரம்பித்து பாதி எழுதவும் முடிந்தது. எழுதுவது அதிகமானதால் புனைவு எழுத்தின் ஆய்வுக்கு தேவைப்படுவதற்கு மேலாக என்னால் படிக்க முடியவில்லை.
கடந்த ஆண்டிற்கு முந்தின ஆண்டு வங்கிக்கடன் குறித்த நிறைய பயங்கள் இருந்தன. தவணை கட்டிய பிறகு வாடகை கொடுத்து வீட்டு செலவுகளை சமாளிக்க முடியுமா என மிரண்டு போனேன். 2022இல் சில முயற்சிகளை செய்தேன். அவற்றில் இருந்து கிடைக்கும் பணத்தால் செலவை சமாளித்து கடனையும் தீர்க்கலாம் எனக் கற்பனை செய்தேன். ஆனால் என் துரதிஷ்டம், என் முயற்சிகள் மோடிஜி அளிக்கும் வாக்குறுதியைப் போல ஆயின. எதுவும் கைகூடவில்லை. என்னைப் போன்ற எழுத்தாளர்களுக்கு இன்னொரு பிரச்சினை - எல்லா நேரமும் பணத்தைப் பற்றி யோசித்து அதற்காகவே வேலை செய்ய முடியாது. நாவலுக்குள் இறங்கினால் நான் வெளியுலகுக்கு ஒரு பேயைப் போல ஆகிவிடுவேன், இருப்பேன், ஆனால் இருக்க மாட்டேன். 2023இல் சரி வரும் பணம் வரட்டும், அப்போது உழைக்கலாம், அதுவரை நாவலை எழுதி முடிப்போம் என முயற்சிகளை நிறுத்திவிட்டு வண்டியை இந்த பக்கமாக திருப்பினேன்.
ஆனால் ஒரு நெருக்கடி வரும் போது அதற்கு ஏற்ப நம் நடவடிக்கைகள், தேவைகள் மாறிப் போகின்றன. எல்லாவற்றையும் துல்லியமாக கணக்கிட்டு குறைவாக செலவு செய்ய, சேர்த்து வைக்க கற்றுக்கொண்டேன். முன்பு எனக்கு ஒரு ஷூ வாங்க வேண்டுமெனில் பணம் இருக்கிறதா எனப் பார்த்து ஆன்லைனில் ஆர்டர் போட்டுவிடுவேன். இப்போது தினமும் அதற்கு பணம் சேர்த்து மூன்று மாதங்களில் ஒன்று ஷூவை வாங்குகிறேன் அல்லது அப்பணத்தையும் கடனைத் தீர்க்க எடுத்து வைத்து விடுகிறேன். இது எந்தளவுக்கு போயிற்று என்றால் மாதங்கள் கடக்க கடக்க வெளியே சாப்பிடுவது, பொருள் வாங்குவதை முழுக்கவே நிறுத்திவிட்டேன். ஆனால் கொடுமை என்னவென்றால் மாதத்தின் கடைசி மூன்று வாரங்களில் என் கணக்கில் பணம் துடைக்கப்பட்டு விடுவதுதான். அதனால் எங்குமே பயணிக்க முடிவதில்லை. நான் வெளியே போகும் போது இரண்டு நாய்களுக்கும் தங்க ஏற்பாடு, அதற்கான கட்டணம், என் பயணக் கட்டணம் என கணக்குப் போட்டால் பயமாகிறது. அண்மையில் பெங்களூரில் என் வீட்டில் இருந்து தொலைவில் வசிக்கும் எனக்குப் பிடித்த ஒரு மூத்த எழுத்தாளர் என்னை தன் வீட்டுக்கு அழைத்திருந்தார். அதற்கு கூடிப் போனால் ஆயிரம் ரூபாய் செலவாகும். ஆனால் எனக்கு கிறித்துமஸ் விடுமுறை வந்த போது பேயைக் கண்ட ராகவா லாரன்ஸ் போல பணம் வங்கிக்கடனின் இடுப்புக்கு போய்விட்டது. முடியாமல் தள்ளிப்போட்டு விட்டேன். அவர் இரண்டு மூன்று முறைகள் கேட்டுவிட்டார். அவரிடம் கடைசியாக உண்மையை சொல்லிவிட்டேன். அவரால் நம்பியிருக்கவே முடியாது. இம்மாதிரி விசயங்களை யாருக்கும் நம்ப வைப்பது கஷ்டம். முன்பு ஆயிரம் ரூபாயைப் பொருட்படுத்த மாட்டேன். இப்போது நூறு ரூபாயே பெரிதாகத் தெரிகிறது. என் சக ஊழியர்கள் தேநீரும் பஜ்ஜியும் சாப்பிடுவதைப் பார்த்தால் கூட ஒருநாளைக்கு இருவேளை இப்படி சாப்பிட்டால் இவ்வளவு ஆகும், ஒரு மாதம் இவ்வளவு ஆயிரம் ஆகும் என மனம் கணக்குப் போடுகிறது. என் மனம் நான் கற்பனையே செய்யாத அளவுக்கு மாறிவிட்டது.
பட்ட காலில் படும் என்பதைப் போல இந்த ஆண்டு தான் வேலையிடத்திலும் வேலைப்பளுவும் நெருக்கடியும் மிக மிக அதிகம்.
ஒரு துன்பத்துக்கு என்றே சில நற்பலன்கள் இருக்கும் - எனக்கு என் தனிப்பட்ட இழப்புகளை மறப்பதற்கு பண நெருக்கடி நிச்சயமாக உதவியது. ஒரு கூர்மையை, மனக்குவிப்பை அது அளித்தது. அக நெருக்கடியை புறவயமாக்க, துல்லியமான தூலமான இலக்காக மாற்ற உதவியது. பெரிய துன்பம் சின்னத் துன்பங்களை மறக்க உதவியது. ஜெர்மானிய யூத வதைக்கூட கைதிகள் மகிழ்ச்சியாக இருந்ததாக சொல்வார்கள். குறிப்பாக என் நாவலில் கவனம் செலுத்த இது உதவியது.
நாவல் மற்றும் அபுனைவுக்கான இரு ஆன்லைன் வகுப்புகளை வெற்றிகரமாக நடத்தி முடித்தேன். அதற்கும் மேற்சொன்ன கடன் நெருக்கடி தான் காரணம். ஒரு எழுத்தாளராக நான் புதிய வேலைகளை இழுத்துப்போட பொதுவாக விரும்புவதில்லை. வேலை போக கிடைக்கும் நேரமெல்லாம் எழுத்து மட்டும் தான். இந்த ‘தனிமையை’ உடைக்க மேற்சொன்ன வகுப்புகள் உதவின. புதிய நட்புகள் வாய்த்தன. என்னால் யாருக்கோ உதவ முடிந்தது எனும் திருப்தி இருந்தது. அந்த அனுபவத்திலேயே “நாவல் எழுதும் கலை” நூலை எழுத முடிந்தது. அதனால் வரும் ஆண்டிலும் இவ்வகுப்புகளை நடத்தவிருக்கிறேன்.
வேலை, பணம், நீதிமன்றம் போன்ற விடயங்கள் என் கையில், கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் நான் எழுதினால் அதை நான் கட்டுப்படுத்த முடியும். நான் சரியாக சாப்பிட்டால், உண்ணாநோன்பிருந்தால், உடற்பயிற்சி செய்தால் என் உடல் நலன் என் கட்டுப்பாட்டில் இருக்கும். அதனால் இந்த இரண்டிலும் நான் கவனம் செலுத்தினேன். ஒரு பழிவாங்கும் வெறியுடன் செயல்பட்டேன். என் விதியை நோக்கி ‘நீ என்னை இவ்வளவு கொடுமைப்படுத்துகிறாயே, முடிந்தால் என் எழுத்தைத் தடு, முடிந்தால் என் உடல் நலனைக் கெடுத்துக் காட்டு’ என சவால் விட்டேன், செயல்பட்டேன். அந்த இரண்டில் சாதிக்கும் போதும் விதியைத் ‘தோற்கடித்த’ சந்தோஷம் இருந்தது. என் துரதிஷ்டத்தை இப்படி ஒரு உணர்வூக்கமாக்கிக் கொண்டேன். அடுத்த ஆண்டும் விதியை செவுளில் நாலு போடுவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டும் என இருக்கிறேன். 2026இல் நான் திரும்பிப் பார்க்கும் போது என் குழந்தையை பார்க்காது 9 ஆண்டுகள் முடிந்திருக்கும், அது பேரிழப்புதான், ஆனால் அதை என்னால் சரி செய்ய முடியாது, சமூகத்தை, சட்டத்தை என்னால் திருத்த முடியாது, காலத்தை பின்னோக்கி செலுத்த முடியாது, மனிதர்களை மனம் மாற்ற முடியாது, ஆனால் நான் அப்போது நான்கு நாவல்களை முடித்திருந்தால், என் உடல் வலுவாகி நலம் உறுதிப்பட்டிருந்தால் அந்த இரண்டையும் யாரும் என்னிடம் இருந்து பறிக்க முடியாது. எந்த வக்கீலாலும் இதற்காக என்னை நீதிமன்றத்துக்கு இழுத்து வந்து துன்புறுத்த முடியாது. உங்களால் பறிக்க முடியாது ஒன்று என்னிடம் இருந்தால் அது மட்டுமே என்னுடையது. இதை நான் தாமதமாகவே வாழ்க்கையில் புரிந்துகொண்டேன்.
நாவல் எழுதும் நேரத்தை அது எடுத்துவிடுகிறது என்பதாலே குத்துச்சண்டை பயிற்சிக்கு 2023இல் அதிகமாக போக முடியவில்லை. இவ்வாண்டு மீண்டும் செல்ல முடிவெடுத்திருக்கிறேன்.
2024க்கு என்று எனக்கு தனித்திட்டங்கள் இல்லை. 2026 தான் என் இலக்கு. நேற்றைய நீயா நானாவின் இவ்வாண்டு என்னுடைய ராசிக்கு நல்ல முன்னேற்றங்கள் இருக்குமென சொன்னார்கள். கேட்க மகிழ்ச்சியாக இருந்தது என்றாலும் அப்படி நடக்கப் போவதில்லை என்பதே உண்மை. 2024இலும் நிறைய பணப்பிரச்சினைகள் இருக்கும். ஒருவேளை கடந்த ஆண்டை விட கொடுமையான சில புதிய பிரச்சினைகள் கூட வர வாய்ப்பு பிரகாசம். இதில் ஒரு சிறப்பு என்னவெனில் முன்கூட்டியே நமக்குத் தெரிந்திருந்தால் துன்பங்கள் குறைவாகவே நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும். வாடா வா எனத் தயாராகவே இருக்கிறேன். ஆனால் 2026க்குள் என் பொருளாதார பிரச்சினைகளைத் தீர்த்து உடல் நலனையும் பலமடங்கு மேம்படுத்தி விடுவேன். அந்தளவுக்கு நேரம் நிச்சயமாகத் தேவைப்படுகிறது. அதனால் அடுத்த இரு ஆண்டுகளை நான் கணக்கிலே எடுக்கவில்லை. அப்படியே அழிப்பான் வைத்து அழித்துவிடுகிறேன். என்ன நடந்தாலும் அஞ்சாமல் கண்ணைக் கட்டிக்கொண்டு கடந்துவிட வேண்டும்.
எவ்வளவு அவலங்கள் நடந்தாலும் நாமே நம்மை அழிக்காத வரையில், யாராலும் நம்மை அழிக்க முடியாது. இதுவே 2023இல் நான் பெற்ற மிகப்பெரிய படிப்பினை.
எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!
கருத்துகள்