முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கல்வி பயங்கரவாதிகள்



நம் யுகத்தின் ஆகப்பெரிய மென்-மோசடி கல்விக்கட்டண மோசடி தான்.

அதற்குப் போகும் முன் இன்று விற்கப்படும் கல்வி எனும் பண்டத்தைப் பார்ப்போம்:


 கல்வியை நாம் இரு விதங்களில் புரிந்துகொள்ளலாம் - தகவல் அறிவு + திறன் மேம்பாடு. பள்ளிக் கல்வியின் போது இந்த இரண்டையும் பெறுவதற்கு கல்வித்திட்டம், ஆசிரியர்களை விட அல்லது அவர்களுக்கு இணையாக தகவல்களும் சுயமுயற்சியும் முக்கியம். அதாவது நாம் என்னதான் மறுத்தாலும் தகவலறிவு பொதுவெளியில் இலவசமாகக் கிடைப்பதே. திறனையும் ஒருவர் தர முடியாது, வளர்க்க உதவிடவே முடியும். கல்வி தனியார் வசம் போன போது முதலீட்டாளர்களுக்கு இருந்த பெரிய சவால் இந்த இரண்டையும் பெருமதிப்பு கொண்டவையாக, எளிதில் கிடைக்காதவையாக மாற்றுவதே. அதற்காக அவர்கள் முதலில் அரசு கல்வி நிறுவனங்களின் கல்வித் திட்டத்தில் இருந்து வித்தியாசமான கல்வித்திட்டங்களை, முறைமைகளை தாம் அறிமுகப்படுத்துவதாக சொன்னார்கள். அடுத்து. உள்கட்டமைப்பில் பெரும் பணத்தை முதலீடு பண்ணுவதாகக் காட்டினார்கள். தரமான நீளிருக்கை / இருக்கை, மேஜை, குளிரூட்டப்பட்ட அழகிய வகுப்பறை, திறன் பலகைகள், கணினிமயம், இணைய வசதி, நீச்சற் குளம் எனக் கொண்டு வந்தார்கள். ஆனால் வசதிகளால் கல்வியைப் பெற முடியாதல்லவா? அவர்கள் அதனால் ஒவ்வொரு குழந்தையும் மூன்று ஆண்டுகளுக்கு பிந்திப் படிக்க வேண்டியவற்றை முந்தியே படிக்க வைத்தார்கள். விளைவாக இன்று மூன்றாம் வகுப்பு குழந்தையின் பாடத்தை எல்.கே.ஜியிலே கொடுக்க முயல்கிறார்கள். பன்னிரெண்டாம் வகுப்பில் அவர்களுக்கு கல்லூரி இளங்கலை மூன்றாம் ஆண்டு பாடத்தைக் கொடுக்க முயல்கிறார்கள். அது மட்டுமல்ல மூன்று வயதுக் குழந்தைக்கு கூட கணினி, கணிதம், தர்க்கம், மொழி ஆகியவற்றைப் பயிற்றுவிக்க மையங்களைக் கொண்டு வந்தார்கள். மூன்று மாத குழந்தையை மட்டும் தான் விட்டு வைத்திருக்கிறார்கள். இது கல்வி அல்ல, திணிப்பு என இவர்களோ ஆசிரியர்களோ பெற்றோர்களோ புரிந்துகொள்வதில்லை. அவர்கள் இன்றைய குழந்தைகள் திறமையும் அறிவும் மிக்கவர்களாக வளர்வதாக நம்புகிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில் இன்றைய குழந்தைகள் தமது பௌதீக முதிர்ச்சிக்கு அப்பாலான விசயங்களைக் கற்க வற்புறுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு அதற்கான ஆற்றலோ வளர்ச்சியோ இல்லாமல் போக தம்மை அறிவாளிகளாகக் பாவிக்கத் தலைப்படுகிறார்கள். அதற்காக ஒருவித மென்திறனை (பேச்சு + எழுத்து + தன்னம்பிக்கை) வளர்த்துக்கொள்கிறார்கள்.


நவீன கல்வி இன்னொரு வேடிக்கையையும் பண்ணுகிறது - அது சுய-கற்றல் எனும் பெயரில் ஏகப்பட்ட இடுபணிகளை மாணவர்கள் மீது திணிக்கிறது. இவற்றில் நிகழ்த்துப் பணிகள் ஒருவிதத்தில் மாணவர்களுக்கு பங்களிக்கும் உரிமையையும் ஈகோ திருப்தியையும் அளிப்பதால் அவர்கள் அவற்றை விரும்புகிறார்கள். ஆனால் இவற்றில் இருந்து பெறும் அறிவும் சொற்பமானதே. நீங்கள் அடிப்படை அறிவைப் படிப்பின் மூலம் பெற்ற பின்னரே நிகழ்த்து பணிகள் உங்களுக்கு பயனளிக்கும். விளைவாக மாணவர்கள் இன்று நன்றாகப் பேசவும் நிகழ்த்தவும் திறன்பெற்றவர்களாக மாறுகிறார்கள், ஆனால் தாம் எதைப் பேசுகிறோமோ அது குறித்து அடிப்படையான அறிவு அவர்களுக்கு இருப்பதில்லை. பெற்றோரே இந்த மென்திறனை அறிவெனக் கருதி மயங்குகிறார்கள்.

 கல்லூரிப் பாடங்கள் மாணவர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு முன்பே அறிமுகமாகும் பட்சத்தில் நீங்கள் இன்றுள்ள இளங்கலை மாணவர்களுக்கு முதுகலைப் பாடங்களை எடுக்கவும், முதுகலையில் முனைவர் பட்ட ஆய்வை செய்ய வைக்கவும் முடியவேண்டும் (புதிய கல்விக்கொள்கை அதையே பரிந்துரைக்கிறது.) ஆனால் எதார்த்தம் என்ன? இம்மாணவர்களால் இளங்கலைப் பாடத்திட்டத்தைக் கூட சுயமாகக் கற்க முடிவதில்லை. இவர்களுக்கு எல்லாவற்றையும் மீண்டும் அடிப்படையில் இருந்து போதிக்க வேண்டியுள்ளது என்பதே கல்லூரி ஆசிரியர்களின் பரவலான புகாராக உள்ளது. இவர்கள் படிக்கிறார்கள், ஆனால் படிப்பதில்லை எனும் நூதனமான குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது. என்ன பிரச்சினை என்றால் கல்வி இன்று ஒரு பாவ்லாவாக, பின்நவீன நிகழ்த்துதலாக மாறியுள்ளது. இவ்வளவு சுய-கற்றல் உள்ள சூழலில் நீங்கள் மாணவர்களிடம் சில நூல்களையோ சில சாம்பிள்களைக் கொடுத்து ஆய்வு பண்ணி வரச் சொன்னால் அவர்களால் செய்ய முடிய வேண்டும். ஆனால் முடிவதில்லை. மிகச்சிறந்த மாணவர்கள் என மதிப்பெண்ணுடன் வருகிறவர்களாலும் முடிவதில்லை. மாறாக அவர்கள் கூகிளில் சென்று தேடி அதில் கிடைக்கும் தகவல்களை வைத்து ஒரு பிரசெண்டேஷனை செய்கிறார்கள், அறிக்கையை சமர்ப்பிக்கிறார்கள். ஒரு உயர்கல்வி ஆசிரியனாக நான் இப்பிரச்சினையை தொடர்ந்து எதிர்கொள்கிறேன். சிறந்த தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கும் இலவச அரசுப்பள்ளிகளில் படித்தவர்களுக்கும் (மொழியின் சரளத்தன்மையைத் தாண்டி) நான் பெரிய இடைவெளியைக் காண்பதில்லை: அரசுப்பள்ளி / நடுவாந்திர தனியார் மாணவர்கள் சற்று தன்னம்பிக்கை குன்றியவர்களாகவும், உயர்த்தட்டு தனியார் பள்ளி மாணவர்கள் விராத் கோலியைப் போலடேய் வாடா டேய், தைரியமிருந்தா ஏரியாவுக்கு வாடாஎன்று எகிறுகிறவர்களாகவும் தோன்றுகிறார்கள். ஆனால் தோற்றத்துக்கு அப்பால் இருவருக்குமே ஒரே கல்வித்தகுதிதான் உள்ளது. மதிப்பெண்களிலும் எந்த வித்தியாசத்தையும் நான் காண்பதில்லை. பள்ளியை விட பெற்றோரின் பின்னணியே மாணவர்களின் கல்வித்தகுதியில் அதிக தாக்கம் செலுத்துகிறது என்பது என் கணிப்பு.

 

உயர்கல்வியிலும் இப்பிரச்சினை உண்டு - வேலை தரும் நிறுவனங்கள்இந்த இளைஞர்களுக்கு வேலையாக நிலைமாற்றம் பண்ணும் திறனோ அறிவோ இல்லை, நிறைய பயிற்சி கொடுத்து எங்கள் பொருளையும் நேரத்தையும் வீணடிக்க வேண்டி வருகிறதுஎனப் புகார் சொல்கிறார்கள். இதை சரிசெய்யும் நோக்கில் கல்லூரி மாணவர்களை ஆறு மாதங்கள் நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி ஊழியர்களாகப் பயில செய்கிறார்கள். ஊதியமில்லாமல் கிடைப்பதால் சில நிறுவனங்கள் இத்தகையஇலவசஊழியர்களை விரும்புவார்கள். இன்னொரு பக்கம் ஒரு பெரும் கும்பலாக மாணவர்கள் சில போலி நிறுவனங்களுக்கு சென்று பணம் கொடுத்து சான்றிதழ் வாங்கிக்கொடுத்து பட்டம் பெறுகிறார்கள். இந்த வேலைப் பயிற்சி முறையை ஓராண்டு வரை நீட்டித்து அதற்குப் பட்டமும் கொடுக்கலாம் என்று புதிய தேசியக் கொள்கையில் இன்று பரிந்துரைக்கிறார்கள். இன்னொரு பக்கம் மாணவர்களை கல்வியின் போதே சுயதொழிலில் ஈடுபடச் செய்து அதன் மூலம் அனுபவத்தையும் பொருளையும் ஈட்டச் செய்யும் கல்விமுறை உருவாகி வருகிறது. அதாவது மாணவர்கள் தாமாக வேலை செய்து கற்பதே எதிர்கால கல்விமுறை.

 சரி இதில் கல்வி நிறுவனத்திற்கு எந்த பங்கும் இல்லையே என நாம் கேட்டு விடக்கூடாதென்று இந்த வேலைப்பயிற்சி காலத்தில் அவர்கள் தம் ஆசிரியரின்வழிகாட்டுதலின்கீழ் இயங்குவதாகவும், அறிக்கை சமர்ப்பித்து, அதன் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண் அளிப்பதாகவும் காட்டுகிறார்கள். அதாவது ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் - ஒரு ஆண்டு முழுக்க நீங்கள் கட்டணமும் செலுத்துவீர்கள், ஆனால் கல்லூரிக்குப் போக மாட்டீர்கள், இன்னொரு நிறுவனத்தில் போய் வேலை பார்ப்பீர்கள், அங்கு சம்பளமும் இராது. அண்மையில் என்னுடைய நண்பர் ஒருவர் இதைக் குறித்து குறைப்பட்டுக்கொண்டார். அவரது மகள் கட்டிடவியல் படிப்பில் வேலைப்பயிற்சியில் இருக்க அவர் கல்லூரிக்குப் போகாத ஒரு ஆண்டுக்கு சில லட்சங்கள் கல்விக்கட்டணம் செலுத்த வேண்டி வருகிறது. “என் மகள் கல்வியைப் பெறுவது வேலையிடத்திலா கல்வி நிலையத்திலா? கிடைக்காத கல்விக்கு நான் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும்?” என அவர் கேட்டார். நான் அவரிடம் சொன்னேன், “அவர் ஒருவேளை கல்லூரிக்கு சென்று கற்றாலும் அது மிகையான கட்டணம் தானே?” இதற்கு அடுத்து வருகிறேன்.


கொரோனா காலத்தில் நமது கல்வி நிறுவனங்கள் எவ்வளவு பெரிய மோசடி அமைப்புகள் எனக் கண்டோம் - மாணவர்கள் பள்ளிக்குப் போகாமல், எந்த உள்கட்டமைப்பையும் பயன்படுத்தாமல் தமது சொந்த செலவில் இணையம் வழியாக கற்றுக்கொள்வதற்கு முன்பிருந்த அதே கட்டணத்தை வசூலித்தன இந்நிர்வாகங்கள். இத்தனைக்கும் பாடத்திட்டத்தை உருவாக்கி, அதற்காக தயாரித்து, வேலை செய்து பாடத்தைக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கும் பாதி சம்பளத்தையே பல நிறுவனங்கள் கொடுத்தன. அப்படி நீங்கள் கொடுக்கும் எதற்காக கட்டணத்தை வசூலித்தீர்கள் என எந்த ஊடகமும் கேட்கவில்லை. திறந்தவெளியில் பல கோடி மக்களை நிற்க வைத்து ஜேப்படித்தனர் கல்வி நிர்வாகங்கள். நம் அரசுகளும் அதற்குத் துணை போயின. இவர்கள் திருடர்கள், கொள்ளையர்கள், கூலிப்படையினரை விட கேவலமானவர்கள். இவர்கள் கல்வி பயங்கரவாதிகள்!


இதைப் பற்றி நான் ஏற்கனவே என் கட்டுரைகளில் எழுதியிருக்கிறேன்: கல்விப்புலத்தை சேர்ந்தவர்களுக்கு இது தெரியும் - கல்வி அரூபமான ஒன்று. கல்வியை அளப்பது, மதிப்பிடுவது மிகவும் சிரமம். அதனாலே இன்று புதிய கல்விக்கொள்கை திறன் அடிப்படையிலான, தொழிலறிவுக் கல்வியை பிரதானப்படுத்துகிறது. என்ன பிரச்சினையென்றால் அதை எப்படிச் செய்வதென மானுடவியல் பாடங்களில் உள்ளோருக்குத் தெரியவில்லை. தொழில்நுட்பப் படிப்புகளுக்கு சந்தையில் உடனடியாகத் தேவைப்படும் அறிவு, திறன் என்னவோ அதற்கேற்ப அப்டேட் செய்யும், அறிவை / திறனை உற்பத்தியாக மாற்றும் நெருக்கடியும் உள்ளது. கல்வியின் மதிப்பு போய் விடக் கூடாது எனும் அச்சத்தில் நாம் கண்டுபிடித்த கருவியேமதிப்பெண்”. ஆனால் மதிப்பெண்ணுக்கும் திறன் / அறிவுக்கும் மிகச்சிறிய அளவிலான தொடர்பே உண்டு என கல்விப்புலத்தினருக்கு நன்றாகத் தெரியும்.

நாம் பொதுவாக அரசுப்பள்ளிகளிலேஅனைவரும் தேர்வாக்கப்படும்முறை உள்ளதாகக் கருதுகிறோம். இது தனியாரில் வேறுவிதத்தில் உள்ளதை அறிய மாட்டோம். தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் - குறிப்பாக தனியார் பல்கலைகளில் - ஒரு முக்கிய பிரச்சினை அதிக எண்ணிக்கையில் மக்கள் கல்வி கற்கும் போது அவர்கள்நுகர்வோர்என்பதால் அவர்களை ஒரு கல்வி நிறுவனத்தால்தோற்கடிக்கமுடியாது என்பது. ஏனெனில் 100% தேர்வையே பள்ளிகளும் கல்லூரிகளும் விரும்பும்போது அதைக்கொண்டே மாணவச்சேர்க்கை நடக்கும் போது எப்படி ஒரு தகுதியற்ற மாணவர் தோற்கடிக்கப்பட முடியும்? நூறு பேர்கள் ஒரு போனை வாங்கினால் அது அந்த நூறுவருக்கும் வேலை செய்தாகத் தானே வேண்டும்? அந்த போனின் இடத்தில் கல்வியை வைத்தால் இதன் அபத்தம் புரியும். மதிப்பெண் அளிக்கும் அழுத்தம் இன்றும் நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கும் உள்ளது. ஆசிரியர்களுக்கு இன்று பின்னறிக்கை ஆய்வு மதிப்பீடு (பீட்பேக்) உள்ளது. குறைவாக மதிப்பளிக்கும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் குறைவாக மதிப்பீடு தருவதால் தம்மைப் பாதுகாக்க ஆசிரியர்களும்வளைந்துபோகத் தேவையுள்ளது.


மதிப்பெண் ஆசிரியர்களுக்கு அதிகாரம் அளிப்பதாக புறத்தே தோன்றினாலும் நிஜத்தில் அது ஆசிரியர்களின் இடத்தை காலி செய்யும் ஆயுதமே. பேஸ்புக்கில் ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர் அண்மையில் ஒரு முக்கியமான விசயத்தை, ஒரு அரசு ஆசிரியராக தன் அவலங்களை, பதிவு பண்ணியிருந்தார். குறிப்பாக, பாடத்திட்டத்தில் உள்ள பல நல்ல பாடங்களை சொல்லிக் கொடுக்க அவகாசம் அளிக்கப்படுவதில்லை, அதனிடத்தில் தேர்வுக்கு மாணவர்களை மனப்பாடம் செய்ய வைக்கும்படி நிர்வாகிகளால் தான் அழுத்தத்துக்கு உள்ளாவதாக அவர் சொல்கிறார். என்னுடைய நண்பரின் மனைவி ஒரு அரசிப் பள்ளி ஆசிரியர். அவரை நான் அண்மையில் சந்தித்த போது இரவிலும் உட்கார்ந்து கணினியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். என் நண்பரோ தனியார் பள்ளி ஆசிரியர். அவர் ஜாலியாக குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். என்ன பிரச்சினை என்று நான் விசாரித்த போது கணினிமயமாக்கல், இணையப் பரவலாக்கத்துக்குப் பின்பு இன்று மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கு இடுபணிகள் அதிகரித்து, அதனால் ஓய்வு நாட்களிலும் இரவு பகல் பார்க்காமல் வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பார். சரி அதனால் யாருக்காவது பயனுண்டா என்றால் இல்லை - இன்று அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அதிகமான எண்ணிக்கையில் தேர்வுகளை நடத்தவும், மதிப்பீடுகளை ஆவணப்படுத்தவும், மதிப்பெண்களை அதிகரிக்கும் நோக்கில் பயிற்சி வகுப்பு நடத்தவும் அழுத்தம் வெகுவாக அதிகரித்திருக்கிறது. கணினிமயமாக்கல் எனும் பெயரில் இரவு பகலாக அரசு ஆசிரியர்களை வேலை வாங்குகிறார்கள். வெறுமனே ஆவணத் தயாரிப்புக்காக இன்று மேலதிகாரிகள் ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஒரு சேர அடிமைக்கப்பலின் பணியாளர்களைப் போல வேலை வாங்குவதுடன் கல்வி கற்கவும் கற்பிக்கவும் அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள்.(அவர்களில் ஒரு பகுதியினர் நிரந்தர வேலை கேட்டு போராட்டம் பண்ணினால் - தனியார் ஆசிரியர்களைநீங்களும் போராட்டம் கீராட்டம்னு வந்திராதீங்கஎன எச்சரிக்கும் நோக்கில் - ரௌடிகளைப் போலக் கருதி அடித்து தூக்குகிறார்கள் தமிழக போலிசார். ஒரு பக்கம் நிர்வாகிகளின் துன்புறுத்தல் இன்னொரு பக்கம் அடி!) நீங்கள் ஒன்றை கவனிக்கலாம் - கல்வி தனியார்மயமாகியதன் விளைவாக அது நீர்த்துப் போய் மதிப்பிழந்து, அதன் உபரி விளைவாக அதிக எண்ணிக்கையில் தொடர் தேர்வுகளை நடத்தி மதிப்பீட்டின் வழியாக தாம் இழந்தகல்வி மதிப்பைமீட்டெடுக்க முயல்கிறார்கள் கல்வி முதலாளிகள். அதிக எண்ணிக்கையில் மக்கள் கல்வி கற்கும் போது கல்வியின் தரம் அதிகரித்து விலை குறைய வேண்டுமல்லவா, ஆனால் தரம் குறைந்தும் விலை அதிகரித்துக்கொண்டும் போகிறது. அரசும் தனியாரின் பாதையிலே நடைபோடுகிறது. பைட் பைப்பர் என ஒரு கதை ஐரோப்பிய நாட்டுப்புற மரபில் உண்டு - எலிகளைப் பிடிக்கிறேன் என நகரத்துக்கு வந்த ஒரு மாய வித்தை இசைக்கலைஞன் ஊரின் எல்லா குழந்தைகளையும் தன் இசையால் மயக்கி மலை உச்சிக்கு கொண்டு போய் அழித்துவிடுவான். இன்றைய கல்வி நிறுவனங்கள் அந்த இசைக்கலைஞனைப் போலவே செயல்படுகின்றன. எலிகள் தனியார் மாணவர்கள் எனில் குழந்தைகள் அரசு மாணவர்கள்.

 

 என்ன பிரச்சினை என்றால் பெற்றோர்களுக்கும் இது ஒரு கேலிக்கூத்து எனப் புரியவில்லை. தம் குழந்தைகள் தொடர்ந்து பட தினமும் தேர்வு எழுதிக்கொண்டிருப்பதை நல்லது எனக் கருதி ஏமாறுகிறார்கள். அவர்கள் தமக்காக அல்ல யாரோ ஒருவர் பல நூறு கோடிகளை சம்பாதிக்கவே தேர்வெழுதுகிறார்கள் என அவர்களுக்குப் புரியவில்லை.


இந்த தொடர் தேர்வு நடைமுறை தனியார் பள்ளிகளில் ஆரம்பித்து அப்படியே அரசுப்பள்ளிகள், தனியார் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் எனப் பரவிக்கொண்டிருக்கிறது. இது கடுமையான அழுத்தத்தைப் போட்டு மாணவர்களின் கற்றல் திறனைக் குறைத்து அவர்களுடைய மன, உடல் நலனைச் சூறையாடுகிறது. பல மாணவர்கள் இன்று நடமாடும் மருத்துவமனைகளாக இருப்பதற்கும், தேர்வு மதிப்பெண் வெளியிடப்படும் போது அதிக எண்ணிக்கையில் தற்கொலை பண்ணுவதற்கும் இதுவே பிரதான காரணம். நீட் என்பது இம்மோசடியின் நீட்சி மட்டுமே.


 கபெட்டேரியா மாடல் ஒன்று உள்ளது. அது இன்று உயர்கல்வி நிலையங்களில் பரவலாகி வருகிறது. நீங்கள் முன்வைக்கும் பாடங்களை மாணவர்கள் தம் விருப்பப்படி தேர்வு செய்து சேர்வார்கள். அதிகம் பேர் சேர்ந்தால் ஆசிரியருக்கு வேலையிருக்கும், இல்லாவிடில் வேலை போகும். எந்த வகுப்பில் அதிக மதிப்பெண் கிடைக்குமோ, எது படிக்க சுலபமோ அதில் தானே! ஆக மதிப்பெண் என்பதே விஜய் டிவிசூப்பர் சிங்கர்போல ஒரு கேலிப்பொருள் ஆகிறது. இசைப் போட்டிதான், ஆனால் இசைத்திறன் முக்கியமில்லை. கல்வி மதிப்பீடு தான், ஆனால்கல்விமுக்கியமில்லை. தொழிற்துறை நிர்வாகிகள், முதலாளிகளுக்கும் இது தெரியும். அதனாலே மதிப்பெண்ணுக்கு மேல் தகுதித் தேர்வுகளை முதன்மையாக்குகிறார்கள். மதிப்பெண்ணுக்கு மேல் மதிப்பெண்ணுக்கு மேல் மதிப்பெண் இன்று தேவையாகிறது. இப்படி மதிப்பீடு என்பதே கேலிக்கூத்தாகி எல்லாரையும் பைத்தியம் பிடிக்க வைக்கிறது. அதற்கும் காரணம் தனியார் கல்வி சந்தைக்குகல்விஎன ஒன்று உள்ளதா, அதை நாம் இந்தளவுக்கு விலையேற்றி விற்க முடியுமா எனும் பதற்றமே


யோசித்துப் பாருங்கள் - நீங்கள் ஒரு ஓட்டலுக்குப் போய் சிக்கன் பிரியாணியை உண்கிறீர்கள் - அதன் உள்ளீட்டுப் பொருட்கள் எவை, அவற்றின் விலையென்ன எனத் தெரியும் ஆகையால் விலையை சுவையால் நியாயப்படுத்த முடியும். முக்கியமாக பிரியாணியை நிஜமாகவே உங்கள் புலன்களால் அறிய, சாப்பிட முடியும். யாரும் ஒரு பிரியாணிக்கு ஒரு லட்சம் விலை போடப் போவதில்லை. அதை நியாயப்படுத்துவது சிரமம். ஆனால் கல்வியைப் போன்றஅரூபமான பண்டங்களைநீங்கள் எந்தளவுக்கும் விலையேற்ற முடியும் - அவற்றின் உள்ளீட்டுப் பொருட்களை யாரும் பார்க்க இயலாதே. மாறாக, அரூபப் பண்டங்களின் முக்கியத்துவத்தை நுகர்வோரின் பங்களிப்பைக் கொண்டு, பல விழுமியங்களையும் கற்பனையான கருத்தாக்கங்களைக் கொண்டும் நீங்கள் நியாயப்படுத்தியே அதன் விலையை ஏற்றுகிறீர்கள். (இதை நீங்கள் கடவுளுக்கான் மதிப்பை உற்பத்தி பண்ணுவதுடன் ஒப்பிட்டுப் புரிந்துகொள்ள முடியும்.) கல்வி என்றால் பண்பாடு, கல்வி என்றால் சமூக அந்தஸ்து, கல்வி என்றால் திறன், கல்வி என்றால் அறிவு, கல்வி என்றால் எதிர்கால வளர்ச்சி, கல்வி என்றால் உத்தரவாதம், கல்வி என்றால் பொருளாதார முன்னேற்றம் (கடவுள் என்றால் நிம்மதி, கடவுள் என்றால் பிறவிச்சங்கிலி அறுத்தல், கடவுள் என்றால் சொர்க்கலோகம்.) என்றும், தமிழகத்தில் கல்வி என்றால்சமூகநீதிஎன்றும்மந்திரம் ஓதமுடியும். இந்த வஸ்துக்களை நீங்கள் கல்வி கற்கும் போது பார்க்க முடியாது என்பதால் அவை எங்கே எனக் (பிரியாணியில சிக்கன் பீஸே இல்லையே என்பது போல) கேட்க முடியாது. ஆனாலும் நீங்கள் கேட்டு விடுவீர்களோ எனும் பயம் ஒவ்வொரு முதலாளிக்கும், அவருக்கு கூஜா தூக்கும் அரசாங்கத்துக்கும் உள்ளதால் அவர்கள் மதிப்பீட்டை, தேர்வை, அதிகமான எண்ணிக்கையில் நடத்திக்கொண்டே போகிறார்கள்.

சரி, இதற்கு மாற்றான கல்விமுறை உலகில் உள்ளதா என்று கேட்டால் உலகின் மிக மகிழ்ச்சியான மக்கள் வாழ்வதாக சொல்லப்படும் பின்லாந்தில் உள்ளது. அங்கு 16 வயது வரை மாணவர்களுக்குத் தேர்வே இல்லை. அத்தேர்வும் கட்டாயம் அல்ல. ஆனால் எப்படி வேதமும் தெய்வமும் இன்றி மக்களை அடிமையாக வைத்திருக்க இயலாதோ அவ்வாறே தேர்வு இன்றி, போலியான கல்வி மதிப்பீடுகள் இன்றி தனியாரால் கல்விக்கொள்ளை அடிக்க முடியாது. தனியார் கல்வி முதலாளிகள் நவீன கோயில் தர்ம கர்த்தாக்கள் எனில், கல்வியாளர்கள் அங்கு மந்திரம் ஓதும் பூசாரிகளாக உள்ளனர். அவர்கள் தவறாமல்தேர்வு நடத்தாவிடில் மாணவர்கள் சோம்பேறிகள் ஆகி விடுவார்கள், ஊக்கம் குறைந்துவிடும்என சமஸ்கிருதத்தில் பேசி நம்மை சுற்ற விடுவார்கள். இப்படி நவீன கல்வியே ஒரு நவீன பார்ப்பனியம் ஆகிவிட்டது.


கடைசியாக பள்ளிக் கட்டணத்துக்கு வருவோம் - எனக்குத் தெரிந்த நகரங்களில் தனியார் பள்ளிகளில் 5 வயதுக்குழந்தைக்கே ஓராண்டுக்கு 2 லட்சம் வாங்குகிறார்கள். எனில் அக்குழந்தை 17 வயதாகி கல்லூரிக்கு வரும் போது 24 லட்சங்களை கட்டணமாக செலுத்துகிறது. தனியார் கல்லூரியில் மூன்றாண்டுகளுக்கு இன்னொரு 3-5 லட்சங்கள், முதுகலைக்கு 2-3 லட்சங்கள் எனில் கிட்டத்தட்ட 30 லட்சங்கள். கடைசியில் உங்கள் கையில் கிடைப்பவை சில காகிதங்கள் மட்டுமே. கடைசியில் நாம் பல லட்சங்களை ஜேப்படித்துவிட்டு தெருவில் (அதாவது வேலைச் சந்தையில்) விடுவது சொந்தமாகக் கற்கவோ, ஒன்றை உருவாக்கவோ திறன் அற்ற நிறைய இளைஞர்களையே. கடைசியில் அவர்கள் பெறுவது எந்த ஊதிய உத்தரவாதமும் இல்லாத, ஒருவேளை மிகவும் குறைவான ஊதியத்துக்கும் தம் தகுதிக்கும் குறைவாக வேலை செய்ய நேரிடும் நிலையையே. நான் தனியார், அரசுப் பள்ளிகளில் படித்தேன். பள்ளியில் இருந்து கல்லூரியில் முதுகலைப் படிப்பு வரை முடிக்க எனக்கு 22 ஆண்டுகளில் ஆன செலவே பத்தில் இருந்து பதினைந்தாயிரத்துக்கு உள்ளே தான். நான் மட்டுமல்ல என்னுடைய சக ஊழியர்களான ஆசிரியர்களும் அவ்வளவே செலவழித்தார்கள். அதனாலே எங்களுக்கு முப்பது, நாற்பது லட்சங்களை அதே கல்விக்கு இப்போது கொடுப்பதைப் புரிந்துகொள்ள இயலவில்லை. நீங்கள் கடந்த சில பத்தாண்டுகளின் விலையேற்றத்துக்கும் சேர்த்துக் கணக்குப் போட்டாலும் பத்தாயிரம் ஒரேயடியாக முப்பது லட்சம் ஆக முடியாது. ஒன்றுமே இல்லாத ஒன்றைக் காட்டி அடிக்கப்படும் மிகப்பெரிய கொள்ளை இது. மிகப்பெரிய மோசடி இது.



(இன்று இன்னொரு மோசடி சந்தையும் உருவாகி வருகிறது - அது வெளிநாட்டு கல்லூரி, பல்கலைகளில் படிக்க நம் மாணவர்கள் வங்கிக்கடன் வாங்கி படையெடுத்துப் போவது. அதைப் பற்றி வேறொர் சமயத்தில் எழுதுகிறேன்.) 


இதில் என்ன வேடிக்கை என்றால் கொரோனாவுக்குப் பிறகு நாடு முழுக்க தனியார் பள்ளிகள் கட்டணத்தை 15% வரை உயர்த்தியிருக்கிறார்கள். கர்நாடகாவில் அரசே தனியார் கட்டணத்தை கட்டுப்படுத்த முயன்ற போது ஒருலட்சியவாதநீதிபதி தனியாருக்காக பரிந்து பேசி கட்டணக் கட்டுப்பாடு தனியாரின் சுதந்திரத்துக்கே எதிரானது என்றார். இவர்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லை. இந்த கட்டண உயர்வுக்கு தனியார் பள்ளிகள் சொல்லும் காரணம்செலவுகள்அதிகரித்துவிட்டன என்பது. சரி அப்படி விலை அதிகரிக்க கல்விக்குஇடுபொருட்கள்என ஒன்றும் இல்லையே. தனியார் கல்வித்துறை ஆசிரியர்களின் சம்பளத்தை பல மடங்கு அதிகரித்திருக்கிறதா என்றால் இல்லை; மாறாக குறைத்திருக்கிறது. ஆயிரம் பேர் படிக்கும் பள்ளியில் ஒரு வருடத்திற்கு தலா ஒரு மாணவருக்கு 1-2 லட்சங்கள் வாங்குகிறார்கள் என்றால் 20 கோடிகள் பண வரவாகிறது; அதில் சராசரியாக ரெண்டரையில் இருந்து நான்கு கோடிகளை ஓராண்டுக்கு ஆசிரியர் ஊதியமாகக் கொண்டால், என்னதான் மின்கட்டணம், தூய்மைத் தொழிலாளர்கள், அது இதுவென செலவிருந்தாலும் 3-5 கோடிகளைத் தாண்டாது. மிச்ச பணம் முழுக்க லாபம் தானே? 2016இல் பெங்களூரில் உள்ள 17 தனியார் பள்ளிகளில் பொதுக்கல்வித் துறை செய்த ஆய்வில் அவர்கள் தமது தொடர் செலவில் இருந்து 138% அதிகமாக கட்டணம் வசூலிப்பதாகத் தெரிய வந்தது. (அரசு விதிமுறைப்படி 30% தான் வசூலிக்க வேண்டும்.) அடிப்படையில் இது பேராசையன்றி வேறல்ல. இதே துறையின் மற்றொரு ஆய்வில் 2009-2014 காலகட்டத்தில் தென் மற்றும் வடக்கு பெங்களூரில் 2277 தனியர் பள்ளிகளைத் துவங்கியிருக்கிறார்கள். இவ்வளவு பெரும் லாபம் வந்தால் திறக்காமல் என்ன செய்வார்கள்? தமிழகத்தை எடுத்துக்கொண்டால் 2020-21ஆம் கல்வியாண்டில் 14,763 மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப்பள்ளிகளில் மாறி வந்து சேர்ந்துள்ளார்கள். தமிழக தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் அநியாய கட்டணத்திற்கு சான்று இது. இது வெறுமனே கொரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவல்ல. மக்கள் ஏன் கொரோனாவுக்குப் பின் மளிகைப்பொருட்கள், காய்கறி வாங்குவதைக் குறைக்கவில்லை? மக்கள் ஏன் வேறு நுகர்வுகளை வெகுவாகக் குறைக்கவில்லை? ஏனெனில் வேறெங்கையும் விட கல்வி நிறுவனங்களிலே நம் மக்கள் மிக அதிகமாக அண்டிராயர் உருவப்படுகிறார்கள். கொரோனா காலத்தில் 75% மேல் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனும் அரசின் விதியை தனியார் கல்வி முதலாளிகள் ஏற்கவில்லை, அவர்களுடைய விதிமீறலை அரசு தண்டிக்கவும் இல்லை. “[2018இல்] தமிழக அரசின் கல்விக் கட்டணக் குழு நிர்ணயித்த கட்டண விகிதங்களின்படி தமிழகத்தில் உள்ள வெகுசில பள்ளிகளுக்கு மட்டும் தான் ரூ.50,000 அளவுக்கு கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகள் அதைவிட 3 மடங்கு அளவுக்கு கட்டணம் வசூலிக்கின்றன. தனியார் பள்ளிகள் அரசுக்குத் தெரியாமல் கட்டணக் கொள்ளையை நடத்தவில்லை. ஆட்சியாளர்களின் முழு ஒத்துழைப்புடன் தான் கட்டணக் கொள்ளையை அரங்கேற்றுகின்றன. தமிழக அரசே கட்டணக் கொள்ளைக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது என்பது தான் கொடுமையிலும் கொடுமை ஆகும்.” என அன்புமணி ராமதாஸ் 2018இல் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டது இக்கொள்ளையின் மிகச்சிறு பகுதி மட்டுமே. அது மட்டுமல்ல, ஒரு வருடக் கட்டணத்தை ஒரேயடியாக வகுப்புகள் ஆரம்பிப்பதற்கு முன்பே தனியார் பள்ளிகள் வலியூறுத்தி மிரட்டி வசூலிப்பதும் விதிமீறலாகும். இதையும் அரசு தண்டிப்பதில்லை.

இதை மக்கள் கொரோனாவின் போதே உணர்ந்துகொண்டார்கள். தமிழகத்தில் மொத்தமாக 12, 600க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ள போது எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்படுகிறது யோசியுங்கள்.


 இது ஒரு அமெரிக்க மாடல் - அங்கு கட்டணம் மிகவும் அதிகமான நிலையில் வங்கிக்கடன் பெற்றே கல்லூரியில் படிக்க முடியும் நிலை ஏற்பட்டது. கல்லூரிப் படிப்புக்கு ஏண்டா கடன் வாங்குவீங்க என நான் முன்பு யோசித்ததுண்டு. ஆனால் அதை இங்கும் கொண்டு வந்ததில் கல்விக்கடன் இங்கும் சகஜமாகி விட்டது.


இதற்குத் தீர்வு கல்வியே வேண்டாம் என்பதல்ல. நாம் புரிந்துகொள்ள வேண்டியது கல்வியை இந்தளவுக்கு மிகைப்படுத்தத் தேவையில்லை என்பதே. நாம் புரிந்துகொள்ள வேண்டியது கல்வி, கல்வி என்று பல கல்வித்தந்தைகளை லட்சம் கோடி சம்பாதிக்க வைத்து நாம் போண்டிகளாகிக் கொண்டிருக்கிறோம் என்பதே. நாம் செய்த மிக ஆபாசமான காரியம் கல்வியை ஒரு வியாபாரம் ஆக்கியதே. ஒரு பூசாரி சமஸ்கிருத மந்திரங்கள் ஓதி ஒரு சிலையை கடவுளாக்கி பல்லாயிரம் கோடி மக்களை வரிசையில் நின்று தொழ வைப்பதைப் போல, திருப்பதி உண்டியலில் வருடத்திற்கு பல்லாயிரம் கோடிகளைப் போட வைப்பதைப் போல, வியாபாரிகள் நம்மை கல்வியின் பெயரால் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கடவுள் மனிதனுக்காக, மனிதன் கடவுளுக்காக அல்ல. அதே போல கல்வி மனிதனுக்காக, மனிதன் கல்விக்காக அல்ல. இது தலைகீழானால் நாம் ஏமாற்றப்படுகிறோம் எனப் பொருள்.

நாம் புரிந்து கொள்ள வேண்டியது கல்வியைப் பொறுத்தமட்டில் பெரிய உள்கட்டமைப்பு வசதிகள் மேலதிகமானவை, அவை அவசியமானவை அல்ல என்பதை. ஆசிரியர்களின் தகுதிக்கு உயர் சம்பளம் தர வேண்டும் எனும் பெயரில் மாணவர்களின் பெற்றோர் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை (ஆசிரியர்கள் மிகக்குறைவாகவே சம்பளம் பெறுகிறார்கள்). ஒரு மாணவர் காலையில் இருந்து இரவு வரை மாடு போல உழைக்கத் தேவையில்லாமலே நன்றாகப் படித்து மேம்பட முடியும் என்பதையே. கல்வியால் மட்டுமல்ல திறமை, முயற்சியாலும் தான் நாம் முன்னேறுகிறோம்  ஆசிரியரால் அல்ல மாணவர்களின் பிரதான பங்களிப்பினாலே அறிவு தோன்றுகிறது, ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் (facilitator) மட்டுமே என நவீன கல்வியியல் கோட்பாடுகள் கோருகின்றன. ஆகையால் சொந்த முயற்சியில் நாம் அடையும் ஒன்றிற்கு எவனோ ஒரு முதலாளிக்கு பணத்தை அள்ளிக்கொடுப்பது அபத்தமாகும். மக்களுக்கு கல்வி மீதான மயக்கத்தைக் கொண்டு தான் செய்யும் முதலீட்டுக்கு நூறு மடங்கு அதிக லாபத்தை ஒருவர் சம்பாதிக்க அனுமதிப்பதை நாம் எதிர்க்க வேண்டும்.

எதிர்காலத்தில் சுய அனுபவம், தொழில் / வேலை அனுபவத்தால் பெறும் கல்விக்கு மட்டுமே வேலைச்சந்தையில் மதிப்பிருக்கும். (இதை புதிய கல்விக்கொள்கையும் ஏற்கிறது.)  இதைப் புரிந்துகொண்ட பின், நாம் சில மாற்றங்களை அரசிடம் இருந்து கோர வேண்டும்:


இப்போது வரைக்கும் தனியார் கல்விக் கட்டணத்தைக் கட்டுப்படுத்தும் தேசிய கொள்கையோ சட்டமோ இல்லையோ. இதை தனியார் நிர்வாகங்கள் பயன்படுத்தி கொழிக்கிறார்கள். அரசு சட்டமியற்றவும், தனியார் கல்விக் கட்டணத்தை இப்போதுள்ளதில் இருந்து 30%க்கு குறைக்கவும் வேண்டும்


மதிப்பெண்ணின் அடிப்படையில் அல்லாமல் வேலையின் வழியாக கற்கும் முறைமை வர வேண்டும், அதற்கும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என நாம் அரசை வற்புறுத்த வேண்டும்.


 தினம் தினம் தேர்வு எனும் அடிமை முறைமை ஒழிய வேண்டும்

மாணவர்களின் வயது முதிர்ச்சிக்கும் திறனுக்கும் ஏற்ப பாடங்கள் மட்டுமே ஆழமாக சொல்லித் தரப்பட வேண்டும். பாடத்திட்டத்தை தரமாக்குவதன் பெயரில் புரிந்துகொள்ள முடியாதவற்றை திணிக்கக் கூடாது.


கல்விக்கட்டணத்தை அரசின் வங்கிக்கணக்கில் பெற்றோர் நேரடியாக செலுத்தி அங்கிருந்து அது பரிசீலிக்கப்பட்ட பின்னர் தனியாருக்கு அனுப்பப்படும் நடைமுறை வர வேண்டும். அப்போதே தனியார் கல்வி வியாபாரத்தில் புழங்கும் கறுப்புப்பணமும் அதிக கட்டண வசூலும் ஒழியும்.  


அரசுப் பள்ளிகளும் தனியாரைப் பின்பற்றி மதிப்பெண்ணுக்காக மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஒருசேர வதைப்பதை, போலீசை வைத்து மிதிப்பதை நிறுத்த வேண்டும்.


உயிரெழுத்து, நவம்பர் 2023 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...