முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எவ்வளவோ செய்யலாம்


 

பன்னாட்டு புத்தகக் கண்காட்சிக்கு ஆன செலவு 6 கோடி என்கிறார்கள். அப்பணத்தில் ஒரு கோடி இருந்தால் 200 எழுத்தாளர்கள் தலா ஒரு புத்தகம் பிரசுரிக்க நிதியளிக்கலாம். ஒன்றரை கோடி இருந்தால் எல்லா மாநிலங்களிலும் தலா 3-4 எழுத்தாளர்கள் மூன்று மாதங்கள் தங்கி நூலெழுதும் உறைவிடத் திட்டமொன்றை நிறைவேற்றலாம். தமிழ் மொழிக்கு இதனால் நிறைய பலன் கிடைக்கும், நாவல்களும் கட்டுரை நூல்களும் அதிகமாகத் தோன்றும். பன்னாட்டுக் கண்காட்சியின் பிரம்மாண்டமான விளம்பரம் கிடைக்காது, ஆனால் விளம்பரத்தால் இலக்கியத்துக்கு, இலக்கியவாதிகளுக்கு என்ன பயன்?

அரசு இன்னும் அதிகமாக நிதியைச் செலவிட வேண்டும் என்பதே என் அவா. ஆனால் அதை நேரடியாக வாசகர்கள் (புத்தகம்) மற்றும் எழுத்தாளர்களுக்குப் (எழுதும் நேரம், இடம், நிதியுதவி) போய்ச் சேரும்படிச் செய்ய வேண்டும். உலகம் முழுக்க இதுவே நடக்கிறது. நாம்தான் இன்னொரு திசையில் போய்க்கொண்டிருக்கிறோம். அரசின் நோக்கம் பாராட்டத்தக்கது, ஆனால் போக்கு, முறைமை தவறானது. அரசிடம் நெருக்கமாக உள்ள படைப்பாளிகளும் அறிவுஜீவிகளும் இந்த உண்மையை இடித்துரைப்பவர்கள் அல்லர். அதனாலே அரசுக்கு பன்னாட்டுக் கண்காட்சி, மாவட்டம் தோறும் நடக்கும் கண்காட்சிகள், விழாக்கள் நேர, நிதி வீணடிப்பு, பயனற்ற காரியம் எனப் புரியவில்லை. அரசு இதையெல்லாம் மிகவும் சரியான நடவடிக்கை என நம்புகிறது. அடப்போங்கப்பா என்றிருக்கிறது.
பி.கு: துரதிஷ்டவசமாக, இம்மாதிரி முடிவுகளை எடுக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அமைச்சர்களுடன் எனக்குத் தொடர்பில்லை. அவர்களுக்கும் என்னைத் தெரியாது. அவர்களிடம் நான் போய் நேரடியாக கருத்தைப் பகிரவோ பரிந்துரைகளை வைக்கவோ முடியாது. இங்கு இப்படித்தான் சொல்ல முடியும்.

கருத்துகள்