முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆர்.ஸி.பி: வெற்றிக்குத் தகுதியான அணி

Virat Kohli couldn't hold his tears back after the win, Royal Challengers Bengaluru vs Punjab Kings, IPL, final, Ahmedabad, June 3, 2025


இந்த ஆண்டு ஐ.பி.எல்லின் கட்டுறுதியான அணிகளாக எனக்குத் தோன்றியவை மும்பையும் ஆர்.ஸி.பியும்தாம். குறிப்பாக ஆர்.ஸி.பி அணியின் தேர்வு சிறப்பாக இருந்தது - நல்ல வலுவான பந்து வீச்சு வரிசை, கீழ்வரிசை மட்டையாட்டம், சுழல் பந்து, ஆல்ரவுண்டர் என எல்லா அலகுகளிலும் சரியான ஆளை வைத்திருந்தார்கள். பழைய தென்னாப்பிரிக்க அணியைப் போல கடுமையாகப் போராடினார்கள். அனேகமாக எல்லா ஆடுதளங்களுக்கும் ஏற்ற அணி. இன்றைய போட்டியில் அவர்கள் முதலில் ஆடி 20 ரன்களாவது குறைவாக எடுத்ததாகவே நினைத்தேன். ஆனால் அடுத்தாடிய பஞ்சாப் அணி முதல் 4 ஓவர்களில் ரிஸ்க் எடுத்து அடிக்கத் தயங்கினார்கள். அவர்கள் அடிக்க ஆரம்பித்த போது ஐந்தாவது ஓவராகியது, ஒரு விக்கெட்டும் கொடுத்தார்கள். கடைசி 6 ஓவர்களில் பந்துகளுக்கும் ரன்களுக்கும் இடையில் இருந்த 20-30 ரன்கள் இடைவெளி முதல் ஆறு ஓவர்களில் ஏற்பட்ட சுணக்கத்தினால் விளைந்ததே. ஆர்.ஸி.பி கூட ஒன்றும் சிறப்பாக ஆரம்பிக்கவில்லை. பத்தாவது ஓவரை எட்டும்போது இரண்டு அணிகளுக்கும் இடையில் கிட்டத்தட்ட 5 ரன்கள் இடைவெளியே. ஆனால் பட்டிதாருக்குப் பிறகு வந்த லிவிங்ஸ்டோன் தான் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அவர் அடுத்தடுத்து அடித்த சிக்ஸர்கள், கோலி சரியான நேரத்தில் அவுட் ஆகி ஜித்தேஷ் ஷர்மாவும் லிவிங்ஸ்டோனுமாக ஜேமிஸன் ஓவரில் அடித்த பெரிய சிக்ஸர்கள் முக்கியமான திருப்புமுனை. அதனாலே 15வது ஓவரில் ஆர்.ஸி.பி 132 எடுத்திருக்க, பஞ்சாப் நான்கு விக்கெட்டுகளுக்கு 119க்கு மட்டுமே எடுத்தது. 17வது ஓவரில் பஞ்சாப் 144க்கு 6 விக்கெட்டுகள். ஆனால் ஆர்.ஸி.பியோ 17வது ஓவரில் 5 விக்கெட்டுகளுக்கு 168 ரன்கள். அதாவது 15வது ஓவரில் 13 ரன்கள் வித்தியாசம் எனில், 17வது ஓவரில் 24 ரன்கள் வித்தியாசம். ஆர்.ஸி.பி இன்னும் சற்று சுதாரித்து ஆடியிருந்தால் 200 எடுத்திருக்க முடியும். ஆனால் பஞ்சாப் எவ்வளவு நன்றாக ஆடினாலும் 190ஐத் தாண்டியிருக்காது. ஏனென்றால் 10வது ஓவருக்குப் பிறகு அவர்களால் ஆர்.ஸி.பி பந்துவீச்சை சிக்ஸர் அடிக்க முடியவில்லை. குறிப்பாக குரனால் பாண்டியாவின் பந்து வீச்சை அடிக்க சிரமப்பட்டார்கள். (இந்தப் போட்டியில் மட்டுமல்ல இத்தொடர் முழுக்கவே குரனால் பாண்டியா தான் ஆர்.ஸி.பியின் துருப்புச்சீட்டு.) லிவிங்ஸ்டோனும், ஜித்தேஷும் செய்ததை வதேராவால் முடியவில்லை. அவர் 18 பந்துகளில் அடித்த 15 ரன்கள் ஆட்டத்தை மாற்றின. அவருக்கு ஆர்.ஸி.பி வீச்சாளர்கள் குறைநீளத்தில் வைடாக வீசியது நல்ல உத்தி. ஷஷாங் சிங் தோனி ஸ்டைலில் கடைசி வரை ஆட்டத்தைக் கொண்டு போக முயன்றதும் தவறாகியது. அவரது ஒற்றை ரன்னெடுக்கும் தடுப்பாட்ட பாணி பஞ்சாபை ஆட்டத்தில் இருந்து விரைவில் வெளியேற்றியது. ஆட்டம் முடிந்த நிலையில் அவர் அடித்த சிக்ஸர்கள் ஏதோ பாடையைச் சுற்றி நின்று டான்ஸ் ஆடுவதைப் போல இருந்தது. இவர்களுடைய கூட்டணியில் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடித்திருந்தால் அல்லது வதேரா தான் ஆடிய முதல் ஐந்து பந்துகளுக்குள் வெளியேறி ஸ்டாயினிஸ் அப்போது வந்து வேகமாக அடித்திருந்தாலோ 17வது ஓவரில் ஆட்டம் இன்னும் நெருக்கமாக இருந்திருக்கும். ரிக்கி பாண்டிங் துணிச்சலாக வதேராவை ரிட்டையர்ட் அவுட் ஆக்கியிருக்கலாமோ? ஒருவேளை ஆட்டத்தின் முக்கியான திருப்புமுனையாக அது அமைந்திருக்கலாம். ஆனால் அவர்கள் ரிஸ்க் எடுக்கத் தயங்கினார்கள்.

இன்னொரு பக்கம், இதைச் சாத்தியமாக்கியது ஆர்.ஸி.பியும் அற்புதமான பந்துவீச்சும்தான். ஒருவேளை அவர்கள் ஸ்குவாடை அமைக்கும்போது பந்துவீச்சை அலட்சியமாக கருதியிருந்தால் இந்த கட்டத்தில் போட்டியில் பின்வாங்கியிருப்பார்கள். கையை விட்டுப் போயிருக்கும்.

பஞ்சாபுக்கு வதேராவின் திணறல், ஆர்.ஸி.பிக்கு அவரைவிட சற்று மேலாக ஆடினாலும் பவுண்டரி கிடைக்காமல் திணறிக் கொண்டிருந்த கோலி சரியான சமயத்தில் வெளியேறியது, குரனாலின் காயத்துக்கு தையல் போடுவதைப் போன்ற பந்துவீச்சு, இம்மாதிரி சின்னச்சின்ன விசயங்களே இறுதிப் போட்டியின் வெற்றியைத் தீர்மானித்தன.

சொல்லப்போனால் ஆர்.ஸி.பிக்கு சாதகமாக இல்லாத ஆடுதளம் இது - ஆனால் இதற்கும் ஏற்ப தகவமைத்துக்கொண்டு அவர்கள் போராடியது, உத்தியை மாற்றிக் கொண்டது பாராட்டத்தக்கது. இம்முறை கோப்பையை வெல்ல முழுமையான தகுதி கொண்ட அணிதான் ஆர்.ஸி.பி. இத்தொடர் முழுக்க விராத் கோலி மத்திய ஓவர்களில் சுழல் பந்தை ஸ்லாக் ஸ்வீப்பிலும் இறங்கி வந்தும் தொடர்ந்து சிக்ஸர்கள் விளாசி 144 ஸ்டிரைக் ரேட்டில் ஆடியது, 657 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தகுந்தது - 2024இல் அவர் கூடுதலான ரன்களை இன்னும் மேலான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்திருந்தாலும் மத்திய ஓவர்களில் அவரால் சுழலர்களை விளாச முடியவில்லை, இம்முறை இந்த வயதில் அவர் தன் ஆட்டத்தை மாற்றிக் காட்டியது அபாரமானது. அவரது ஆட்டம் கொடுத்த உத்தரவாதம் முதல் பத்து ஓவர்களுக்குள் பட்டிதாரும், அதற்குப்பின் டேவிட், லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ், ஷெப்பர்ட் ஆகியோரும் ரெண்டு கைகளிலும் மத்தாப்பு கொளுத்தி வாயில் சரவெடி வெடிப்பதைப் போல ஆட உதவியது. ஆர்.ஸி.பி யாரையும் சார்ந்திருக்கவில்லை. 11 பேர்களும் நல்ல ஆட்டநிலையில் தொடர்ச்சியாக அதிரடியாக ஆடினார்கள். எல்லா சவால்களுக்கும் யாராவது ஒருவர் எழுந்து நின்று தீர்வைக் கண்டடைந்தார்கள். பட்டிதார் அணித்தலைவராக நல்ல தேர்வல்ல என்று நான் துவக்கத்தில் நினைத்தேன். ஆனால் அது தவறான கணிப்பு என்பதை அவரது புத்திசாலித்தனத்தையும் நிதானத்தையும் பார்த்தபோது உணர்ந்தேன். தலைமையால் அவரது ஆட்டமும் மேம்பட்டது. காயமிருந்தும் கூட தயங்காமல் அதிரடியாக ஆடினார். சுயநலமற்ற ஆட்டம். பாதி தொடரில் பட்டிதார் காயமுற்றபோதும் கூட அவர்களால் பின்வாங்காமல் தளராமல் ஆட முடிந்ததைப் பார்க்கையில் அணியின் வலுவான கட்டமைப்புப் புலப்பட்டது. மயங்க் அகர்வால் பாதி தொடரில் அணிக்குள் வந்து நன்றாக ஆடினார். இதையெல்லாம் பார்க்கையில் அடிப்படையில் அவர்கள் மகிழ்ச்சியான நிம்மதியான அணியாக இருந்தார்கள் என்பது தெரிகிறது - உள்ளார்ந்த மகிழ்ச்சியும் தன்னிறைவும் தரும் தன்னம்பிக்கை அவர்களைச் செலுத்தியது. இவ்வெற்றியில் அவர்களுடைய நிர்வாகமும் பயிற்சியாளர்களின் அணியும் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள். இன்னொரு முறை இப்படி எல்லாம் அமைந்து வருமா எனத் தெரியவில்லை.

ஆர்.ஸி.பிக்கு வாழ்த்துகள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...