முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொஞ்சம் களைப்பான பிறந்தநாள்


 

பிறந்த நாட்களின் போது நான் தன்னியல்பாகவே மகிழ்ச்சியாக இருப்பேன். எனக்குள் இருந்து மகிழ்ச்சி மலர்வதை உணர்வேன். இவ்வருடம் மட்டுமே விதிவிலக்கு - நேற்று பல்லவி என்னை இரவில் அழைத்து வாழ்த்தியபோது மகிழ்ச்சி சில வினாடிகள் சுடர்ந்தது. அதன்பிறகு அது அணைந்தது. நான் ஏன் துயரமாக இருக்கிறேன் என யோசித்துக் கொண்டிருந்தேன். மனம் மீண்டும் பழைய மடிக்கணினித் திரையைப் போல அணைந்து அணைந்து சுடர்ந்தது. நான் சாருவின் பழைய நாவல் ஒன்றை எடுத்துப் படித்து ஏகத்துக்குச் சிரித்து உத்வேகம் ஏற்றிக்கொண்டேன். கடந்த ஓராண்டாகவே மனம் கனத்துப் போகும்போது சாரு தான் கைகொடுக்கிறார். காலையில் ஆடு மாடுகளைப் பட்டியில் இருந்து புல்வெளிக்குத் திறந்துவிடுவதைப் போல என் கவலைகளை அவிழ்த்துவிடுகிறார். சஞ்சலம் குறைந்த பின் யோசித்தேன் - நான் துயரமாக இல்லை, களைப்பாக இருக்கிறேன். களைப்பு மனதைக் கனக்கச் செய்யாது, லகுவாகவும் எடையற்றும் கசப்பாகவும் மாற்றும். அர்த்தமற்று மிதக்கும் பறவை இறகைப் போல.

களைப்பு கடந்த ஓராண்டுக்கு மேலான தொடர்ந்த அலைச்சல், மனப்போராட்டங்கள், காயங்கள், காலக்கெடுக்களை நாய் போல விடாமல் துரத்திக்கொண்டு ஓடுவது, வேலையைத் தக்க வைப்பதற்கான போராடுவது, வேலைக்காகப் படிப்பது, நூற்றுக்கணக்கான இடங்களில் விண்ணப்பிப்பது என அலுத்துவிட்டேன். அந்த அலுப்பு உள்ளிருந்து புற்றுநோயாக அரிக்கிறது. உதைக்கப்பட்ட பந்தைப் போல உருண்டுகொண்டே இருக்கையில் அவ்வலி தெரியாது. கொஞ்சம் நின்று ஓய்வெடுத்தாலே மனம் வலிக்கத் தொடங்கும். எவ்வளவு ஓய்வெடுத்தாலும் தீராத களைப்பு மனதை வாட்டியெடுக்கும். அது களைப்பா அல்லது களைப்பின் நினைவா? களைப்பின் பழிவாங்கலா? இருள் விலகியதும் புலப்படும் நிழலின் திடுக்கிடலா?
சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷ் முதல் காட்சியில் உணவுப் பொருட்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி எடுத்து வருவாரே அதைப் போல ஒரு வாழ்க்கை. இதற்கு இடையில் எழுதவும் படிக்கவும் வேண்டும். அதனால் என் தூக்கம் குறைந்துவிட்டது. பெரும்பாலும் வேலைக்கான ‘வேலைகள்’ தீர்ந்ததும் சாப்பிட்டுவிட்டு இரவு இரண்டு மணிவரை நாவல் எழுதுவேன். அடுத்த நாள் காலையில் ஏழு மணிக்கு எழுந்து ஓட வேண்டும். இந்த தூக்கக் கடன் வேறு கடும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. சரி தூங்கலாம் என நினைத்தால் எழுத்தின் தடம் முறிந்து போகும்.
இதனால் இப்பிறந்த நாள் பிரதமர் மோடியின் “நமஷ்க்கார்” கேட்டதைப் போல இருக்கிறது. கடைசியாக நான் இப்படி உணர்ந்தது விவாகரத்தின்போது முட்டுசந்து முட்டுசந்தாக அடிபட்டு செட்டிமெண்ட் செய்து முடித்துவிட்டு அடுத்தடுத்த மாதங்களில் அதைக் குறித்து யோசிக்கையில் எப்படித்தான் இதையெல்லாம் தாங்கினோம் எனச் சோர்ந்து வீழ்ந்தபோதுதான். அந்த ஆண்டின் பிறந்தநாளும் இப்படித்தான் மகிழ்ச்சியற்றுப் போயிற்று.
ஆனாலும் பிடிவாதமாக மகிழ்ச்சியாக இருக்க முயன்று வருகிறேன். இரவு 12 மணியிலிருந்தே நண்பர்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கத் தொடங்கிவிட்டார்கள். பல்லவி எனக்காக எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் போஸ்டர்களைப் பரிசளித்தாள். அதை என் எழுதும் அறையில் ஒட்ட வேண்டும். காலையில் நான் தூங்கி எழுந்ததும் அம்மா அழைத்து வாழ்த்தினார்கள். நான் தற்போது வேலை செய்யுமிடத்தில் பரிசளித்தார்கள். கேக் வெட்டினார்கள்.
நான் ஊரைவிட்டு வந்ததில் இருந்தே அம்மா கையால் பிறந்தநாளின்போது உண்பதை மிஸ் பண்ணுகிறேன். ஒருநாள் பைக்கிலேயே ஊருக்குச் சென்று அம்மாவைப் பார்க்க வேண்டும். பிறந்த நாளாக இருந்தால் இன்னும் சிறப்பு. இன்று அதற்காக பல்லவியிடம் எனக்குப் பிடித்த சோறும், பருப்பும், அப்பளமும் செய்து தரக் கேட்டிருக்கிறேன். முடிந்தால் கொஞ்சம் பாயசம் (இன்று டயட் இல்லை).
சில விருப்பங்கள்…
வரும் ஆண்டு நிறைய எழுதும் ஆசை உளது. வேலை என்னை உள்ளிர்ந்து கொல்லாமல் இருத்தல் வேண்டும். வேலை என்னை மலைவெள்ளத்தைப் போல அடித்துச் செல்லாதிருத்தல் வேண்டும்.
கடந்த ஆண்டு பைக்கில் சுற்றுவது வரமாக அமைந்தது. என் கட்டுகளை உடைத்துக் கொண்டு பறக்கும் உணர்வு வந்தது. அறுத்துக் கொண்டு போகப்போக வெளியும் என்னைத் துரத்திக்கொண்டு பின்னாலே தொட்டு விளையாடுவதைப் போல வருவது அனுபூதியாக இருந்தது. இந்த ஆண்டு இன்னும் சில நூறு கிலோமீட்டர்கள் கூடுதலாகப் பயணிக்க வேண்டும். முடிந்தால் ஒரு 700-1000 கிலோமீட்டர் பயணத்தை முடிக்க வேண்டும்.
உள்ளுக்குள் சேகரமான அயற்சியால் நான் வீட்டில் ஒரு முசுடாக மாறிவிட்டேன். அதை மாற்றி முகத்தில் ஒரு புன்னகையை ஒட்ட வைத்துக்கொள்ள வேண்டும். என்ன நெருக்கடியிருந்தாலும் சிரித்துப் பேசப் பழக வேண்டும்.
நுண்நிர்வாகம், கடும் கண்காணிப்புக் குறித்தெல்லாம் புகார் சொல்ல முடியாதபடிக்கு கிட்டத்தட்ட எல்லா வேலையிடங்களும் அப்படித்தான் உள்ளன. ஆனால் என்னால் இதையெல்லாம் சமாளிக்க முடியவில்லை. மாலையானால் அந்தத் தலைவலியை வாசிப்பது, எழுதுவது, வெட்டியாய் பொழுதைப் போக்குவது எனச் செலவழிக்க முயன்றேன். சில நாட்களில் வேலையைக் காப்பாற்ற மாலையிலும் உழைக்க வேண்டியிருக்கும். என் வேலை நேரம் முடிய இரவு 12 ஆகிவிடும். இதனால் என்னால் உடற்பயிற்சி நிலையத்துக்குப் போக முடியவில்லை. பெஞ்ச் பிரஸ்ஸில் 80 கிலோ வரைக்கும் தூக்கினேன். நூறு கிலோடை எட்ட வேண்டும் என நினைத்தபோது வேலைப் பூதம் வந்து என்னைப் பிடித்துக்கொண்டது. குத்துச்சண்டைப் பழக இயலவில்லை. வரும் ஆண்டில் விட்ட இடத்தில் இருந்து பிடிக்க வேண்டும்.
டேக் செய்து வாழ்த்திய நண்பர்களுக்கும் தொடர்ந்து வாழ்த்திக்கொண்டிருப்போருக்கும் அழைத்துப் பேசியோருக்கும் நன்றி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...