முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இருவகை ஊழல்கள் - சாக்ரடீஸும் காந்தியும்

 Gandhi and the Socratic art of dying - The Hindu



என் நண்பர் ஒருவர். பெயர் சண்முகம். வயது 62. தமிழ்நாட்டில் பொதுப்பணித் துறையில் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவில் பணியாற்றுகிறார். அவர் எதாவது ஒரு விசயத்தை சொல்லி அடிக்கடி என்னை ஆச்சர்யப்படுத்துவார். ஒருநாள் அவர் என்னிடம் தனியாருக்கு வந்தபிறகே தான் மகிழ்ச்சியாக இருப்பதாக சொன்னார். என்னால் நம்ப முடியவில்லை. தனியார் ஒரு எதேச்சதிகார நடைமுறை கொண்டது, அங்கு சுதந்திரமே கிடையாது அல்லவா என்றேன். அவர் அதற்கு அரசுத் துறைகள், குறிப்பாக பொதுப்பணி துறை, ஊழல் மலிந்தவை, அங்கு நிலைப்பதற்கு ஒன்று ஊழல் செய்ய வேண்டும் அல்லது ஒதுங்கி நிற்க வேண்டும். ஒதுங்கி நிற்பவர்களை ஊழலில் பருத்த உயரதிகாரிகளும் அவர்களுடைய ஊதுகுழல்களும் தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டிருப்பார்கள் என்றார். சரி, ஊழல் செய்வோரும் நிம்மதியாக இருக்க முடியாது, அவர்களுக்கு ஒரு அரசியல்வாதியுடன் உடன்படிக்கை இருக்கும், அவருக்காக இவர் ஊழல் செய்து தொகையையும் குறிப்பிட்ட சதவீதம் பகிர்வார், அவர் தன்னைக் காப்பாற்றுவார் என்று நம்புவார், ஒருநாள் அவர் அதிகாரம் இழந்ததும் இவர் மாட்டிக் கொள்வார், எப்போதும் விசாரணை வருமெனும் திகிலேயே வாழ்வார்கள் என்றார். எனக்கு இது ஆபத்தை விட அறம் சார்ந்த பிரச்சினை எனத் தோன்றியது.


ஒழுங்காக, தவறின்றி வாழ்வது ஒரு கொடுப்பினை, அதிலொரு நிம்மதியுண்டு, அது அகத்தே இருந்து வருகிறது, நாம் யாரையும் துன்புறுத்தவோ ஏமாற்றவோ இல்லை எனும்போது அகத்தே ஒருவித நிமிர்வை உணர்கிறோம். இதை நான் சொல்லவில்லை - பிளேட்டோவின் "ரிபப்ளிக்" நூலின் இரண்டாவது பகுப்பில் மனிதர்கள் தண்டனையை பயந்து தவறு செய்யாமல் இருக்கிறார்களா அல்லது தன்னியல்பாகவே ஒழுங்காக இருக்க நினைக்கிறார்களா எனும் கேள்வியை விவாதிக்கிறார்கள். அப்போது சாக்ரடீஸ் இதைச் சொல்கிறார் - "மனிதர்கள் தவறு செய்யாதபோதே மகிழ்ச்சியாக இருப்பார்கள், ஏனென்றால் தவறு அறியாமையை அதிகப்படுத்துகிறது, அறியாமையில் இருந்தே தவறுகளும் பிறக்கின்றன, அறியாமையில் உள்ளவர்கள் துன்பப்படுவர், அதனால் அதை அறிவுள்ளோர் விரும்ப மாட்டார்கள், அவர்கள் மகிழ்சிக்காக தவறுகளை, குற்றங்களைத் தவிர்ப்பார்கள்". எனக்கு என் இளமையில் இதைப் படித்தபோது இது ஒரு மிகப்பழமையான போலியான சிந்தனை எனத் தோன்றியது. பின்னர் அனுபவம் கூடக்கூட சாக்ரடீஸ் சொன்னதே சரியெனப் பட்டது. அறியாமையே தேவையில்லாதவற்றை நம் மீது சுமத்துகிறது, அவை அடிப்படையில் நம் நிம்மதியை, மகிழ்ச்சியைக் கொன்றுவிடுகின்றன. உ.தா., தவறு என்பது ஒரு மொழிக்கட்டமைப்பு எனப் புரிந்ததென்றால் தன் மீது மற்றொருவர் தவறு இழைத்ததை ஒருவர் மன்னிப்பாரா, புறக்கணிப்பாரா அல்லது அதை வைத்து உள்ளுக்குள் வருந்துவாரா? இப்படித்தான் நமது பல்வேறு விழுமியங்கள் நம்மைத் துன்புறுத்தும்போதும் ஆழமாகச் சிந்தித்து நம்மால் உதறிவிட முடியுமா? இதுவே சாக்ரடீஸைப் பொறுத்தமட்டில் அறிவு. இச்சிந்தனைப் பாணியை தத்துவத்தில் கருத்துமுதல்வாதம் என்பார்கள்.

புறவயமான ஊழலுக்கு ஆட்படவில்லை, அதனுடன் போராட வேண்டியிராத போதும் நாம் அகவயமான ஊழலுக்கு ஆட்படுவோம். அது இன்னும் சிரமமானது. நம்மையே துன்புறுத்திக் கொண்டு அடுத்தவர்களையும் படுத்திக் கொண்டு வாழ்வோம். நமக்குத் தகுதியில்லாத ஒன்றைப் பெறுவதற்கான தவறான முனைப்பு எனும் பொருளிலேயே இதையும் 'ஊழல்' என்கிறேன். எனக்கு காந்தியைப் படிக்கும்போதெல்லாம் அவர் இத்தகைய அகவய ஊழலை ஒழிப்பதற்காக முயன்று கொண்டே அதைத் தனக்குள் நிகழ்த்திக் கொண்டும் இருந்தார் என்று தோன்றும். அவரது "சத்திய சோதனையின்" ஒரு அத்தியாயத்தை மாணவர்களுக்காக விளக்கும்போது உண்மையாக, நேர்மையாக இருப்பதற்கும், பொய் சொல்வதற்குமான தொடர்பைப் பற்றி அவர் பேசுவதைச் சுட்டிக் காட்டினேன் (அவர் மாணவராக இருக்கும்போது ஆசிரியர் அவரைக் காப்பி அடிக்கத் தூண்டும் இடம்). காந்தி ஒரு பக்கம் தன் நேர்மையைக் கட்டமைத்துக் கொண்டே உலகில் மக்கள் பொய்யை எப்படி உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறார்கள் என்றும் அதில் காட்டுகிறார். ஏன் காந்தி தன்னை நேர்மையாளராக, களங்கமற்றவராகக் காட்டிக் கொள்ள அவ்வளவு தவிக்கிறார்? அவரைச் செலுத்துவது எது? எனக்கு காந்தியை விட நேர்மையான சுயபரிசீலனை சாக்ரடீஸிடம் உள்ளதாகத் தோன்றுகிறது - சாக்ரடீஸ் எப்போதுமே ஒரு நகைமுரணுடனே பேசுகிறார். அவர் காந்தியைப் போல தான் இப்படியானவர், தன்னிடம் இவ்விவ் தகுதிகள் உள்ளன எனப் பேசுவதற்கு ஒழுக்கவாதத்தைப் பயன்படுத்துவதில்லை. நகைமுரணனானது தொடர்ந்து தன் சாராம்சத்தைக் கேள்விக்குள்ளாக்கி தனக்குள் தேடுவதற்கு அவருக்கு உதவுகிறது. காந்தியோ மாறாக தன் மீது எதாவது ஒரு விழுமியம் சார்ந்த ஒளியைச் சுமத்திக் கொண்டே இருக்கிறார். தன் கடைசிக் காலம் வரை அவர் அதைக் கொண்டு துன்பப்பட்டுக் கொண்டே வந்தார். காந்தி ஒரு புனிதராக மாறினார். அவரைக் குறித்து இன்றும் சிறு குற்றச்சாட்டு வந்தாலும் அதைப் பெரிதுபடுத்தி சர்ச்சைக்குள்ளாக்க ஒரு பக்கமும் அவரை நியாயபடுத்தி புனிதராக்க இன்னொரு பக்கமும் மக்கள் முயல்கிறார்கள். ஆனால் சாக்ரடீஸ் இதில் இருந்து விடுபட்டு எல்லா கட்டமைப்புகள் இருந்தும் வெளியேறுகிறார் (கருத்து முதல்வாத சாராம்சவாதத்தைத் தவிர). அவரைப் படிக்கையில் அவரத் கலகத்தன்மை என்னை ஈர்க்கிறது. அவரைக் கடைசி வரைக்கும் அவரது சமூகம் ஏற்கவில்லை. மரண தண்டனை விதித்தது. அக-ஊழலையும் சடங்காச்சாரமான கடவுளையும் அவர் அம்பலப்படுத்தியதை அவரது காலத்து கிரேக்க சமூகம் பயந்தது. காந்தி மதம் சார்ந்து ஊழல்களை அனுமதித்தார். அவற்றை அவர் கேள்விக்குட்படுத்தவில்லை. அதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார். அதனால் சமூகம் அவரை ஏற்றுக் கொண்டு அவரைப் புனிதராக்கி விட்டது. மக்கல் எப்போதும் பொய்யின் போதைக்கு ஆட்பட்டு அதையே வழிபடுகிறார்கள்.

இதுவும் இல்லாமல் வாழ முடிவது ஒரு கொடுப்பினை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...