Skip to main content

தமிழில் ஏன் இத்தனை கவிதைகள் எழுதப்படுகின்றன?


 விசிட்டிங் கார்டுகளுக்கு அடுத்தபடியாய் தமிழில் அவசரமாய் பிரசுரம் ஆவது கவிதைத் தொகுப்புகள் என்று நமக்குத் தெரியும். தமிழ்க்கவிதையின் நோய்மை இது என்று தீர்ப்பளித்து பேனாமுனை உடைப்பதும் எளிது. கவிதைக்கான் ஆதார நுட்பமோ சொல்வதற்கு ஏதாவது சங்கதியோ இல்லாதவர்கள் இப்படி மானாவரியாய் எழுதி அழகான அட்டை வடிவமைப்புடன் வழவழ தாள்களில் முன்னணி பதிப்பக முத்திரையுடன் புத்தகமாக்குவதன் உத்தேசம் என்னவாக இருக்கும்? இன்று ஒரு பதிப்பகம் சென்று 2010இல் அவர்கள் வெளியிட்ட எட்டு தொகுப்புகளை புரட்டி படித்தபின் ஒரு குமட்டல் போல் இந்த கேள்வி மீளமீள தோன்றிக் கொண்டிருந்தது. ஏன் கட்டுரைகள் அல்லது கதைத் தொகுப்புகளை விட கவிதைகள் அதிகம் தொகுப்புகளாகின்றன?
வெளிப்படையான காரணங்கள்: தமிழனுக்கு கவிதை எழுதுவது அவன் ரெண்டாயிரமாண்டு மரபின் தொடர்ச்சியாக இருக்கலாம். சில ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் மந்தையை ஒழுங்கி படுத்தின முன்னோடி நினைவில் மனிதர்களின் உள்ளங்காலைக் கடித்து வழிப்படுத்துவது போல். அல்லது வீட்டுப் பூனை பல்லி பிடிப்பது போல். குருதியில் ரெண்டறக் கலந்த ஒன்றாக கவிதை நமக்கு இருக்கிறது. அதைப் போன்றே வாசகர் மற்றும் பொதுமக்கள் இடத்து இன்றும் எழுத்தாளன் என்றால் கவிஞன் தான். கவிதைக்கு அடுத்தபடியாய் இங்கு மதிப்புள்ளது மேடைப் பேச்சுக்கு. உரை அறிவுஜீவுகளின் பரப்பாகவே இன்றும் உள்ளது.
கவிதை எழுதி பழகித் தான் பலரும் உரைக்கு வருகிறோம். இது உலகம் முற்றும் காணப்படுகிற பழக்கம் தான். நீட்சேவும் மார்க்வெஸும் சுராவும் ஜெயகாந்தனும் இந்த நீண்ட பட்டியலில் வருகிறவர்கள் தாம். மொழி விளையாட்டின், அதன் சங்கீதத்தின் மயக்கத்தில் இருந்து தான் வாசிப்பின் பின்னர் எழுத்தின் ஆரம்பம். ஓசையின் கிளர்ச்சி தான் மொழியின் முதல் படி. இப்படி கவிதை எழுதி தனக்கான அசல் திறமையை கண்டறிந்து கிளைபிரிந்து செல்பவர்கள் சமர்த்துகள். சிலர் கவிதைதான் தனது காண்டிப வில் என்று நம்பி ஊக்கத்துடன் நாணைப் பூட்டுகின்றனர். மிகப்பலர் ஹ்ட்லைட் வெளிச்சத்தில் உறைந்து நின்ற முயலைப் போல் ஒரு குழப்பத்தில் கவிதையிலேயே தங்கி விடுகின்றனர். அவர்களுக்கு மொழியுடனும் பண்பாட்டுடனுன் தங்கி நிற்பதற்கு கவிதையை எழுத வேண்டும். ஒருவித காலைக்கடன்.


அடுத்து வளவளவெனும் உணர்ச்சிகர கவிதை எழுதுவது ஆற்றல் சிக்கனமுள்ள செயல். ஒரு உந்துதலில் கொட்டித் தள்ளி இறுதியாய் புள்ளிகளை இணைத்து சீராக்கினால் கவிதை வடிவில் ஒன்று உருவாகி விடும். ஒரு கட்டுரைக்கு அல்லது நாவலுக்கு போல் மணிக்கணக்காய் உழைக்க வேண்டாம். அதிகமான பத்திரிகையில் பரவலாய் பிரசுரிக்கவும் கவிதைகள் எழுதுவது தான் உசிதம்.
கவிதை எழுதுவது நீத்தார் சடங்கு போல் ஒரு புனிதச் செயலாகவும் உள்ளது. மோசமான கட்டுரைகள் மற்றும் அசட்டுத்தனமான கதைகளுக்கு நிச்சயம் எதிர்மறை விமர்சனங்கள் வரும். கவிதையின் வடிவத்துக்குள் அபத்தமாக என்ன உளறி பிரசுரித்தாலும் அது அதிக கண்டனத்துக்கு உள்ளாகாது. தமிழ் சமூகம் கவிஞனை மரித்தவர்கள், முதியோர்கள், குழந்தைகள் என்ற வரிசையில் கடைசியாய் வைத்திருக்கிறது. மிகுந்த அனுசரணை மற்றும் காருண்யத்துடன் கவிஞர்கள் நடத்தப்படுகிறார்கள்.
கடைசியாகவும் முக்கியமாகவும் ஒன்று சொல்லலாம். கவிதைத் தொகுப்புகள் வெளியிடுவது காதலை சொல்வது போல், பட்டாசு கொளுத்துவது போல், தற்கொலை முயற்சி போல் தள்ளிப் போடக் கூடாதது. என் முதல் கவிதைத் தொகுப்பை பிரசுரிக்க நான் தயங்கிய போது நண்பரும் இதழாசிரியருமான ஹமீம் முஸ்தபா
இப்படி சொன்னார்: “நீ இப்போது இக்கவிதைகளை வெளியிடுவது போல் பின்னெப்போதுமே சாத்தியப்படாது. தொகுப்பின் தரம், எதிர்வினை என்பதை விட வாழ்வின் இந்த ஒரு பருவத்தில் நீ விட்டு போகிற ஒரு அடையாளமாக இது இருக்கும். நாம் வேடிக்கையாய் அசட்டுத்தனமாய் எத்தனையோ செய்கிறோம் இல்லையா அது போல். ஆக கவிதைத் தொகுப்புகள் வெளியிடுவது ஒரு கொண்டாட்டம். பிறந்த நாள், பூப்படைதல், சாந்திமுகூர்த்தம் போல். எண்ணற்று வெளியாகும் கவிதைத் தொகுப்புகளுக்கு பதில் சொல்லாமல் நாம் வாசகர்களும் விமர்சகர்களும் மௌனம் காப்பதன் கண்ணியம் புரிகிறதில்லையா?

Comments

கவிதைப் பற்றிய உங்கள் எண்ணவோட்டமும், எழுத்துப் பற்றிய உங்கள் அபிமானமும் முரண்பட்டு நிற்கிறது. இந்த சமூகம் கவிஞனை எந்த இடத்தில் வைத்திருக்கிறது என்கிற உங்கள் பார்வை மிகவும் தவறு. எவருடைய எழுத்தையும் அலசிப் பார்த்து கருத்து சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு. அதை சரியாக பயன்படுத்துங்கள். ஒட்டு மொத்தமாய் கவிதை எழுதுவது ஒரு விபத்து என்பது போல் தாங்கள் எழுதுவது வருந்த தக்கது. வந்து போங்கள். ( ithayasaaral.blogspot.com )
தமிழ்க்காதலன் அவர்களே, தமிழ்சமூகம் பொதுவாக எழுத்தாளனை ஒரு ஆபத்தான குப்பைப் பொருளாகத் தான் கருதுகிறது. அது மக்களின் தவறல்ல. அப்படியான ஒரு பண்பாட்டில் தான் வளர்க்கப்பட்டுள்ளோம். இதில் கவிஞன் நிலைமை சற்று விசேசம். அவன் எழுத்தாளனை விட சற்று மேலாகத் தான் கருதப்படுகிறான். எந்த அளவுக்கு மேல் என்றால் பேசும் படத்தில் கமல் கழிவை ஜிகினா பேப்பரில் சுற்றி மதில் மேல் வைப்பாரே, அந்த அளவு உயரத்தில். அது கூட ஒரு மதிப்பு தான். இல்லையென்று சொல்ல வரவில்லை. நான் கேரளாவில் கண்ணூர் போயிருந்த போது பேப்பூரை கடந்து கொண்டிருந்தேன். அப்போது இலக்கியத்துடன் தொடர்பே இல்லாத ஒரு மத்தியதர குடும்பத் தலைவரிடம் இது பஷீர் ஊர்தானே என்றதற்கு மகிழ்ச்சியாக தலையாட்டினார். நம்மூர் திருவல்லிக்கேணிக்காரர்களில் எத்தனை பேருக்கு பாரதி வீடு தெரியும்.
Sai Ram said…
திருவல்லிக்கேணியில் முக்கால்வாசிக்கும் மேற்பட்டவர்களுக்கு கட்டாயம் பாரதி வீடு தெரிந்து இருக்கும். நானும் ஒரு காலத்தில் அங்கே வசித்ததால் சொல்கிறேன். இந்த கட்டுரை ஜே ஜே எழுதிய குறிப்புகள் மாதிரியே இருக்கு. படிப்பறிவு குறைவு; படித்தவர்களில் பெரும்பாலானோருக்கு குமுதம், விகடன் மாதிரியான இதழ்கள் படிக்க கூட பிடிப்பதில்லை; இச்சூழலில் காலைக்கடனாகவோ ஃபிளாஷ் லைட் வெளிச்சத்தில் திணறி நிற்கும் முயலாகவோ (!) கவிதை எழுதுபவர்களை கேலி செய்து என்ன நடந்து விட போகிறது. இந்த கேலி தொனி வந்து விடக்கூடாது என நீங்கள் பிரயத்தனப்பட்டிருந்தாலும் இந்த கட்டுரையில் ஜேஜேத்தனம் வந்து விட்டது. உங்கள் வலைப்பதிவை ஆர்வத்தோடு வாசிக்கும் வாசகனாக ஓர் ஆரோக்கியமான விமர்சனமாக இதை சொல்கிறேன்.
சாய் நான் கேலிக்காக சொல்லவில்லை. இங்கு தொகுப்புகள் வெளியிடப்படுவதன் அவசரத்தை நீங்க கவனித்திருக்கக் கூடும். அது ஏன் என்ற கேள்வியே என்னை இதை எழுத வைத்தது. கவிஞர்களின் தரம் என் பிரச்சனையே அல்ல. பாதிக்கு மேல் இங்கே பிரசுரம் செய்பவர்களை அவர்களின் தேடல் செலுத்தவில்லை. இடைநிலை மற்றும் அறிமுகக் கவிஞர்களை கேலி பண்ணுவது என் நோக்கமல்ல. நானும் ஒரு குட்டிக் கவிஞன் தானே! அப்புறம், ஒரு நல்ல கவிதை எழுத முயன்று தோற்பது உயர்வான விஷயம். ஆனால் கவிதைகளை பாசாங்கான உணர்ச்சிகளுடன் போலியாக உற்பத்தி செய்வது, அதை மறைக்க வேண்டுமென்றே மொழியை சிக்கலாக்குவது, அதற்கு டோப்பா அணிந்து விடுவது எல்லாம் கரியமில வாயுவை நம் பரப்பில் அதிகமாக்குகின்றன. ஜெ.ஜெ குறிப்புகளில் உள்ள அறிவார்ந்த கேலி எனது அல்ல அன்பரே; நான் அறிவுஜீவியோ பண்டிதனோ அல்ல. ஒரு கவனிப்பாளனாகவே இத்தனையையும் எழுதினேன். மற்றபடி தமிழக மக்கள் படிக்கிறார்களா என்பது ஒரு பிரச்சனையா என்ன? நமது ஜனம் வெறும் புறநிலை பார்வையாளர்கள் தானே.
இம்முறை காலச்சுவடு வெளியிட்டுள்ள தொகுப்புகளில் ஒருவர் விவிலிய மொழியை பிரதியெடுத்து பொத்தலான கவிதைகளை எழுதியுள்ளார். அப்பக்கங்களை புரட்டிப் பார்க்க ஆரம்பிக்கையில் நிச்சயம் சற்று வியந்து வீடுவோம். ஆனால் ஊன்றிப் படிக்கையில் அத்தனையும் பாசாங்கு என்று புரிகிறது. மற்றொரு தொகுப்பில் ஒருவர் பிரமிள் பாணியில் ஒருவர் உருட்டி பிரட்டி எழுதியிருந்தார். இந்த செப்படி வித்தை தான் நிஜமாகவே என்னை இக்கட்டுரையை எழுதிய அன்று எரிச்சலைடைய வைத்தது. காலச்சுவடை மட்டும் சுட்டுகிறேன் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அனைத்துப் பதிப்பகங்களிலும் வைரஸ் உள்ளது.
இதில் கேலி இருந்தாலும் தவறில்லை...சாய்! இன்றைய சூழ்நிலையில் நோகாமல் நோன்பு கும்பிடுவது போல்தான் கவிதை எழுதுவதும். கவிதைக்கான உழைப்பும் ரசனையும் எத்தனை பேரிடம் இருக்கிறது? குமுதத்திலும் விகடனிலும் வெளிவரும் கவிதைகளை எத்தனை பேர் படிக்கிறார்கள் என நினைக்கிறீர்கள்? கவிதைகள் என்பது பரவசம் தரக்கூடியது. பல லட்சம் கவிதைகள் எழுதப்பட்டாலும் இன்னும் ஏன் ஆத்மாநாமும் விக்ரமாதித்யனும் நம்மை வசீகரிக்க வேண்டும்? காதல், நிலா, வன்புணர்ச்சி ஆகியனவற்றைக் கழித்துப் பார்த்தால் சிலது தேறும். அதை வாசித்து திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான் !
Sai Ram said…
அபிலாஷ், எல்லா காலங்களிலும் எல்லா துறைகளிலும் இப்படியான உறுத்தல்கள் இருக்க தானே செய்கிறது?

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...