Skip to main content

கவிஞர்களை யாரும் கண்டுகொள்வதில்லையா? -


போன வருடம் திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.வி பள்ளியில் உள்ள எட்டில் இருந்து பத்தாம் வகுப்பு உள்ள தேர்ந்தெடுத்த மாணவ, மாணவிகளிடம் நவீன கவிதையை அறிமுகப்படுத்தி பேசினேன். அவர்களுக்கு பல கவிதைகள் புரிந்தன. நகுலன் கவிதை கூட. அதிலுள்ள கசப்பான சுயபகடியை ரசித்தார்கள். விக்கிரமாதித்யனின் மற்றொரு ஒரு சுயபகடிக் கவிதைக்கு அப்படி சிரித்தார்கள். சில்வியா பிளாத்தின் தற்கொலை பற்றி பேசி அப்படியே ஆத்மாநாமுக்கு வந்த போது மிகுந்த ஆர்வத்தோடு கண்கள் பளபளக்க கேட்டார்கள். மூன்று மணிநேரத்துக்கு மேல் நவீன கவிதை பற்றி மட்டுமே பேசினேன். யாரும் ஆர்வம் இழக்கவில்லை. 


இதற்கு ரெண்டு காரணங்கள். ஒன்று நம் மொழி கவிதையின் மொழி. இங்குள்ள பல சிறந்த நவீன கவிதைகளின் தொனியும் அனுபவமும் அவர்களுக்கு தொப்புள் கொடி வழியாக ஏற்கனவே பரிச்சயமாகி இருக்கிறது. தமிழர்கள் எல்லாராலும் கவிதை ரசிக்க முடியும். அடுத்து இந்த குழந்தைகளிடம் முன்னரே சில எழுத்தாளர்கள் நவீன இலக்கியம் பற்றி பேசி இருக்கிறார்கள். அவர்கள் சரியாக பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறார்கள். மேலும் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த மாணவர்கள். எந்த வகுப்பிலும் கூட்டத்திலும் நேரடியான ஒரு நல்ல நவீன கவிதையை வாசித்து பாருங்கள். சட்டென கவனிப்பார்கள்.
தமிழ்க் கவிதை என்னதான் நமக்கு நெருக்கமாய் இருந்தாலும் இன்னொரு பக்கம் விலகியே இருக்கிறது. கவிதை நூல்களை பிரசுரிக்க யாரும் தயாரில்லை (புது எழுத்து, உயிர்மை, காலசுவடு போன்ற மிகச்சில பதிப்பகங்கள் தவிர). வாசகர்களும் கவிதை நூல் வாங்க தயாராக இல்லை (தமக்கு தெரிந்த சக கவிஞர்களின் நூலை ஒரு பரஸ்பர புரிதலின் அடிப்படையில் வாங்கும் மிகச் சிலரை தவிர). பொதுவாக கவிதை நூல் பிரசுர போக்கு இப்படி. 

நீங்கள் ஒன்று பதிப்புக்கான மொத்த காசையும் கொடுப்பீர்கள். அல்லது பிரசுரமான பின் ஐநூறு பிரதிகளை வாங்கி இலவசமாய் நண்பர்களுக்கு அனுப்பிவீர்கள். அல்லது பணம் கோராத பதிப்பாளர் கிடைத்தாலும் கூட உங்கள் தொகுப்பை பரவலாக கொண்டு சேர்க்க நூற்றுக்கும் மேல் இலவச பிரதிகளை அனுப்ப வேண்டும். நாவல், சிறுகதைகளுக்கு மதிப்புரைகள் மூலம் கிடைக்கிற குறைந்தபட்ச கவனம் கூட கவிதைத் தொகுப்புகளுக்கு இல்லை. அதனால் இப்படி இலவச பிரதிகள் மூலம் கவிஞர்கள் ஒரு மறைமுக வலைதொடர்பு உருவாக்குகிறார்கள். நிறைய சின்ன சின்ன கூட்டங்கள் நடத்துவார்கள். நாவலாசிரியனுக்கு நூல் வெளியீடு என்றால் அங்கு கவிஞர்கள், கட்டுரையாளர்கள் எல்லாரும் வருவார்கள். ஆனால் கவிஞர்களின் விமர்சன கூட்டத்தில் சக கவிஞர்கள் மட்டுமே வருவார்கள். பத்து நூல்களுக்கு கூட்டம் வைப்பார்கள். அதில் பத்து கவிஞர்கள் வருவார்கள். அதில் அவர்களது பத்து தொகுப்புகள் பற்றி அவர்களே மாறி மாறி பேசுவார்கள். புத்தக சந்தையை ஒட்டி ஜனவரியில் இருந்து மார்ச் வரை ஒரு புத்தகத்துக்கு பத்து கூட்டங்களேனும் பல மாவட்டங்களிலாய் நடக்கும். அதாவது பத்து புத்தகங்களைப் பற்றி பத்து எழுத்தாளர்கள் பத்து கூட்டங்களில் பத்து மாவட்டங்களில் பேசுவார்கள். போட்டோ எடுத்துக் கொண்டு கலைந்து போய் விடுவார்கள்.

இதையெல்லாம் யோசிக்கையில் கவிஞர்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை என்பது உண்மை தான். அவர்கள் இலக்கிய நகரத்தின் புறநகர் “செம்மாஞ்சேரிகளில்” தமக்குள் உரையாடி வாழ்கிறார்கள். இந்த இலக்கிய தீண்டாமை ஒருவிதத்தில் வாசகனுடன் கவிதைக்கு ஏற்பட்ட ஒரு துண்டுபடலின் விளைவு தான்.

நவீன கவிதை அதன் இயல்பிலேயே கொஞ்சம் பூச்சாண்டி காட்டுவது தான். நவீன கவிதை என்றில்லை தமிழின் சிறந்த சிறுகதைகள், “தண்ணீர்” போன்ற சில நாவல்கள் கூட பூடகத் தன்மை கொண்டவையே. நீண்ட கூந்தல் கொண்ட பெண்கள் வாசற்படியில் உட்கார்ந்து சிக்கு களைந்து தலை பொறுமையாய் வாருவதை பார்த்திருப்பீர்கள். அந்த பொறுமையும் நுணுக்கமும் கவிதை வாசிக்கவும் வேண்டும். மெல்ல மெல்ல இழைகளை பிரித்து ஒரு வரிக்குள் புதைந்திருக்கும் பத்து வரிகளை வெளிக்கொணர ஒரு கற்பனையும் வேண்டும். இதெல்லாம் பயிற்சியில் வரும். எப்படி வண்டி ஓட்ட பயிற்சி தேவையோ அது போல் கவிதை படிக்கவும் பயிற்சி தேவை. ஆனால் கோடிக்கணக்கான கவிஞர்கள் உள்ள நம் நாட்டில் கவிதை எழுதவே தெரியும் எனக்கு வாசிக்க எதற்கு பயிற்சி என கேட்கிறார்கள். நாம் இந்த மூளைச் சோம்பலை முதலில் களைய வேண்டும்.
 எஸ்.ஆர்.வி பள்ளியில் நான் பேசிய பின் பள்ளி தலைமை ஆசிரியர் என்னிடம் அவர்களது ஆசிரியர்களுக்கும் இது போல் பயிற்சி அளிக்க முடியுமா எனக் கேட்டார். இங்கு மற்றொரு சிக்கல் வருகிறது. பள்ளி பாடத்திட்டத்தில் போதுமான நவீன கவிதைகள் இல்லை. ஆசிரியர்களுக்கு நவீன கவிதை தெரிவதில்லை. நமது சங்கக் கவிதைகள் கூட ஆழமாக கற்பிக்கப்படுவதில்லை. ஆக பள்ளிக் கல்வியில் உள்ள சில பிரச்சனைகளை களைந்து நவீன கவிதையை பன்னிரெண்டு வயதில் இருந்து கற்பிக்க தொடங்கினால் கவிதையின் எதிர்காலம் பிரகாசமாகும்.
சின்ன வயதில் நிறைய வானம்பாடி கவிஞர்களை டி.வி., வெகுஜன பத்திரிகைகள் மூலம் தான் தெரிந்து கொண்டேன். முன்னர் ராஜ் டிவியில் வைரமுத்துவின் கவிதைகளை காணொளியாக எடுத்து அவர் பின்னணி குரலுடன் காட்டுவார்கள். வசீகரமாக இருந்தது. இன்று விகடனில் வரும் கவிதைகளில் நவீன கவிதையின் தாக்கம் வெகுவாக உள்ளது. ஆனால் அவர்கள் நவீன கவிஞர்களை பிரசுரிக்க மாட்டார்கள். அவர்களைப் போல் எழுதுபவர்களை பிரசுரிப்பார்கள். இது மிமிக்றி போல. மார்க்கெட் இல்லாத நடிகர்களை ரசிக்க மாட்டோம். ஆனால் அவர்களை யாராவது மிமிக்றி செய்தால் ரசிப்போம். நவீன கவிதையை முன்னெடுப்பதில் வணிக இதழ்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. மலையாளத்தில் செய்கிறார்கள். நாமும் செய்யலாம். ஒரு காலத்தில் சுஜாதா எத்தனையோ சிறந்த நவீன கவிஞர்களை தன் பத்தி மூலம் அறிமுகம் செய்தார். நமக்கு இன்னும் நூறு சுஜாதாக்கள் வெகுஜன மீடியாவில் வேண்டும்.

நம்முடைய தீவிர இலக்கிய பத்திரிகைகளில் விமர்சனம் எழுதும் பாணியையும் மாற்ற வேண்டும். ஜிலேபி சுற்றுவது போல் கவிதை பற்றி எதையெதையோ எழுதி விட்டு தொகுப்பில் இருந்து கவிதை வரிகளை மேற்கோள் பண்ணி முடித்து விடுகிறோம். இது ஏதோ “வாம்மா மின்னல்” போல் இருக்கிறது. எளிமையாக நேரடியாக எழுதி கவிதையை எப்படி கற்பனையில் விரித்தெடுப்பது என விளக்க வேண்டும். அப்படித் தான் நல்ல வாசகர்களை உருவாக்க முடியும்.

கவிஞர்கள் பொதுவாக ஒரே மாதம் நான்கைந்து பத்திரிகைகளில் பிரசுரிப்பதை பார்க்கலாம். அதற்கான இடத்தை எடிட்டர்கள் அளிக்கிறார்கள். ஏதோ ரெண்டு பக்கம் என்றாலும் கொடுக்கிறார்களே! பிரச்சனை தமிழில் எழுதப்படுகிற ஆயிரமாயிரம் குப்பைக் கவிதைகள் சில நல்ல கவிதைகளை மறைத்து விடுகின்றன. அதிலும் தன்னைத் தானே காறித் துப்புகிற “சுயபுலம்பல்” கவிதைகள் ஒரு அரூப மொழியில் வாசகனின் தொண்டைக்குள் விரலை நுழைத்து கிளறுகின்றன. இவற்றை தொடர்ந்து படித்தால் ஜன்னி நோய்க்கு உண்டான எல்லா அறிகுறிகளூம் ஏற்படும். அடிப்படையில் இவை போலிக் கவிதைகள். வாழ்க்கையில் ஒரு பக்கம் எந்த சுயதேடுதலும் இல்லாதவர்கள் தாம் சுயம் பற்றி அழுகாச்சியாய் எழுதுகிறார்கள். அவர்களின் சுயபச்சாதாபத்திற்கு ஒரு வடிகாலாய் கவிதையை மாற்றுகிறார்கள். இன்று கவிதை நேரடியாக தகவல்பூர்வமாக சுயபகடியாக கதைகளாக வேறு விதமாய் மாறி வருகிறது. நாங்கள் இன்மையிலும் முடிந்தவரை தன்னைத் தானே துப்பிக் கொள்ளும் கவிதைகளை தவிர்க்கிறோம். இவை தான் வாசகனை கவிதையை வெறுக்க செய்கின்றன. கவிதை ஒன்றை சொல்ல வேண்டும். ஒரு வெளிச்சம் பாய்ச்ச வேண்டும். இன்று எழுதப்படும் அரூபக் கவிதைகள் நாய் தன் வாலைப் பிடிக்க முயல்வது போல் தம்மையே துரத்துகின்றன. சுயம் பற்றி தேடல் உள்ளவர்களே இக்கவிதைகளை எழுத வேண்டும். ஆனால் இப்போது போலிகளே எழுதுகிறார்கள்.
உலகம் பூரா கவிஞர்கள் தனிமைப்படுகிறார்கள். கவிதை நூல்கள் குறைவாக விற்கின்றன. கவிஞர் சல்மா ஒரு ஐரோப்பிய நாட்டில் நடந்த கவிதை வாசிப்புக்கு சென்ற அனுபவத்தை பற்றி எழுதியிருந்தார். ஒரு கிராமத்தில் ஒரு சின்ன அரங்கில் நான்கு கவிஞர்கள் சந்தித்து கவிதைகளை பரிமாறிக் கொள்கிறார்கள். அதனால் நம் கவிஞர்கள் களைப்படைய வேண்டியதில்லை. புவி வெப்பமடைதல் போல் இது ஒரு உலகு தழுவிய நிலை.

இப்போது நாம் செய்ய வேண்டியது நிறைய மொழி பெயர்ப்புகள் மூலம் உலக கவிதைகளை இங்கே அறிமுகப்படுத்துவது, பள்ளி கல்லூரிகளில் சென்று கவிதை பற்றி பேசுவது, பத்திரிகை விமர்சனங்களில் தர்க்கபூர்வமாய் எளிமையாய் கவிதையை அலசி எழுதுவது ஆகியவை தான்.
இறுதியாக கவிஞன் தன்னைப் பற்றி மட்டும் அல்லாமல் தன்னை சூழ்ந்திருக்கவர்கள் பற்றியும் ஆர்வம் கொள்ள வேண்டும். சமூகம், அரசியல், அன்றாட வாழ்வின் நெருக்கடிகள், பொருளாதாரம் பற்றி எவ்வளவு கவிதைகள் வருகின்றன? மிகச் சில தான். ஒரு மீபொருண்மை (metaphysical) போக்கு நம் கவிதையை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துகிறது. கட்டுரை, கதைகளிலும் பயிலும் எல்லா விசயங்களையும் நாம் கவிதைக்குள்ளும் பரிசீலிக்க வேண்டும். அப்போது கவிதை மீண்டும் மக்களுக்கு நெருக்கமாகும்.

ஒன்று சாகவில்லை என்றால் அதை உயிருடன் வைத்திருக்க முடிந்ததை செய்ய வேண்டும். நவீன கவிதையை தக்க வைப்போம்!

Comments

கவிதை வாசிப்பு பயிற்சி யை சிற்றிதழ்கள், இணையத்தில் நீங்கள் துவங்கலாம்

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...