முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மலரினும் மெல்லிது காமம்

மலரினும் மெல்லிது காமம்
சிலர்அதன் செவ்வி தலைப்படு வார்

நண்பர் ஹமீர் முஸ்தபா பார்க்க கோபமான மார்க்ஸியவாதி போல் தோன்றினாலும் அவர் ஒரு தமிழ் பேராசிரியரும் கூட. அவர் தான் மேற்குறிப்பிட்ட குறளை எனக்கு அறிமுகப்படுத்தினார். விளக்கினார். எனக்கு அப்போது பதினாறு வயதிருக்கும். “வள்ளுவன் கூறுவது போல் காதல் அப்படி புலப்படாத ஒரு சூட்சுமப் பொருளா என்ன?” எனக்குத் தோன்றியது. அழகான பெண்களை பார்த்தால் காதல் வருகிறது. ஆக காதல் அழகான பெண்ணுடலில் இருக்கிறது. இப்படித் தான் நான் புரிந்து வைத்திருந்தேன். முஸ்தபா எனக்கு விளக்கினார். “அப்படி இல்லப்போ. மலரின் மென்மை மலரில் இல்லை. காதலின் அழகு மலரின் மென்மையை விட மாயமானது.”

மாநகரம் வந்த பின் தம்மை சுலபத்தில் அழகாய் காட்டத் தெரிந்த ஏகப்பட்ட பெண்களை கண்டேன். ஒருவரோடு ஒப்பிடுகையில் இன்னொருவர் அழகில்லை எனத் தோன்றும். பிறகு மொத்தமாய் பார்க்கையில் யாருமே அழகில்லை எனத் தோன்றும்.
 சில பெண்கள் தூரத்தில் இருந்து பார்த்தால் அழகு. சிலர் சிரித்தால் மட்டுமே அழகு. சிலர் அமர்ந்திருக்கும் நெளிவில் மட்டும், சிலர் நடக்கும் விதத்தில், சிலருக்கு குரலில், சிலருக்கு கண்களின் ஒளியில், சிலருக்கு மச்சத்தில்… இப்படி அழகு துண்டுபட்டு தெரிந்தது. இதில் ஒன்றை பெரிது படுத்தி பார்த்தால் அப்பெண் அழகி என ஆணுக்கு படுகிறது. தனியாக பார்த்தால் தோன்றாது. கல்லூரியில் படிக்கையில் ஒருமுறை விளையாட்டு தினம் நடந்தது. நானும் ஒரு நண்பனுமாய் போய்க் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண் யாரையோ சீட்டியடித்து அழைத்தாள். நண்பன் சட்டென திரும்பி அவளிடம் சென்றான். அவள் அப்படி சீட்டியடித்ததில் அவன் மயங்கி விட்டான். ஆறு மாதங்கள் அவள் பின்னால் அதற்காகவே திரிந்தான்.
 நிரந்தர அழகிகள் தமக்குள் உள்ள துண்டு துண்டான அழகை அவ்வப்போது மட்டும் வெளிப்படுத்துவார்கள். எப்போதும் ஆணை வியப்பிலாழ்ந்த ஒரு புது விசயத்தை வைத்திருப்பார்கள். ஆனாலும் ஒரு கட்டத்தில் இந்த பெண்ணை அழகி என நினைத்தது தன் பார்வைக் கோளாறினால் தான் என ஆண் புரிந்து கொள்வான். இது காதல் முறிவில் கொண்டு போகும். புத்திசாலி ஆண்கள் கற்பனை மூலம் இந்த வறட்சி நிலையை தவிர்ப்பார்கள். அவர்களால் ஒரு பெண்ணின் அழகை பெருக்கி கொண்டே போக முடியும்.
ஆக பெண்ணின் அழகு முழுக்க ஆணின் பார்வையில், கற்பனையில் இருந்து தான் வருகிறது. இது ஒரு கருத்துமுதல்வாதம், அகவயபார்வை. திருவள்ளுவர் காமத்துப்பாலில் மீளமீள இதையே முன்வைக்கிறார்.
எனக்கு “ஆயிரத்தில் ஒருவன்” படத்தின் “நாணமோ” பாடலில் இந்த வரிகளை கேட்டதும் மேற்சொன்ன விசயங்கள் நினைவு வந்தன:
“தோட்டத்து பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
ஆடையில் ஆடுது வாடையில் வாடுது
ஆனந்த வெள்ளத்தில் நீராடுது”


அந்த ”அது” அதைக் கண்டு வியப்பவரின் மனதில் தான் இருக்கிறது. அது எது என அவருக்கு முழுக்க புலப்படாதவரையில் ”அது” இருந்து கொண்டே இருக்கும்.

கருத்துகள்

Nagendra Bharathi இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...