முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரவிசுப்பிரமணியன் கவிதைகள்

ப்டம்: அய்யப்ப மாதவன்

ரவிசுப்பிரமணியனின் புதிய தொகுப்பான “விதானத்து சித்திரம்” படித்த போது அதில் ஒரு விசயம் வித்தியாசமாக தோன்றியது. வழக்கமாக, நம் கவிகள் உள்ளூர்ச் சூழலை சித்தரித்தாலும் அதில் ஒலிப்பது ஒரு ஐரோப்பிய குரலாக இருக்கும். தனித்து, விடுபட்ட, சுயமாய் சிந்திக்கிற, சிறிய ஐயத்துடன், விலகலுடன் எதையும் கவனிக்கிற, பெண்கள் முந்தானையை சரி செய்வது போல் பிரக்ஞை நழுவி விடாதிருக்கும் கவனத்துடன், உணர்ச்சிவயப்பட்டு நம்மை இழந்து விடாதிருக்க விரும்பும் ஒரு ஐரோப்பிய மனமே நமது கணிசமான சமகால கவிதைகளில் கூட வாசகனை வரவேற்கிறது. ரவிசுப்பிரமணியனிடம் ஒரு அசலான தமிழ் மனம் வெளிப்படுகிறது; அவரிடம் சராசரி இந்தியத்தனம் தெரிகிறது. குறிப்பாய், தி.ஜாவை வெகுவாய் நினைவுபடுத்துகிறார்.
 இசையில் லயித்து தோயும் மனம், அந்த மனத்தின் இன்னொரு பக்கம் தெரியும் வன்மமும் பொறுப்பின்மையும், எதிலும் தன்னை இழந்து வெல்லக்கட்டி போல் கரையும் மனப்போக்கு, சிலாகிப்பு, சிலாகிப்பு, சிலாகிப்பு….

 அனைத்தும் சிறந்த, கச்சிதமான, முழுமை பெற்ற கவிதைகள் அல்ல. ஆனால் எனக்கு அது ஒரு பிரச்சனை அல்ல. அந்த மொழிக்காகவே அவரை முழுக்க புன்னகை மாறாது வாசித்தேன். மிகச்சிறிய தொகுப்பு. எளிய நேரடியான கவிதைகள். நேற்று எங்கள் பல்கலையின் தபால் பிரிவுக்கு சென்று நூலை வாங்கி மின்தூக்கியிடம் வந்து காத்தி்ருந்தேன். அதன் பிறகு மின்தூக்கி என்னை தப்பான ஒரு தளத்துக்கு எடுத்துச் சென்றது. அங்கிருந்து மீண்டும் காத்திருந்து ஏறி கீழ்த்தளத்துக்கு வந்து காப்பி குடித்து, மீண்டும் ஏறி மேல்தளத்தில் நூலகம் போகும் முன் மொத்த தொகுப்பையும் படித்து முடித்து விட்டேன்.
எனக்குப் பிடித்த இரு கவிதைகளை கீழே தருகிறேன்.

அப்படித்தானே அமிர்தா
பகல் நேரத்துப்
பொரிகளின் ஞாபகத்தில்
நியான் விளக்கொளியில்
படிக்கட்டுப் பக்கமாய்
வந்து வந்து மீள்கின்றன
மீன்கள்

எப்போதாவது
மரங்களிலிருந்து உதிரும்
சருகுகள் கண்டு ஏமாந்து
விடியலின் பொழுதுக்காய்
குளமெல்லாம் சுற்றி வருகின்றன

இதில்
மீன்களுக்கும்
எனக்கும்
பொரி தூவும் விரல்களுக்கும்
உனக்கும்
யாதொரு சம்பந்தமும் இல்லை தானே
அமிர்தா

வால் முளைத்த அன்பு
அணிலாய்
உருவெடுத்த அன்பு
மரம் தாவி சுவரேறி
தயங்கித் தயங்கி வருகுது வீட்டுக்குள்

இரு கையால்
வணக்கம் சொல்வதான பாவனை

பயந்தபடி ஒரு பார்வை
வாலசைத்து வரையும் குதூகலம்
ஓடத் துடிக்கும் பரபரப்பு

சர சரவென்று ஓடி

திரும்ப வந்து பார்த்து நிற்கிறது அன்பு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...