
ஒரு சின்ன பிளாஸ்டிக் பையில் சூயுங் கம்களை எண்ணிப் போட்டிருந்தான். போன மாதம் 18 ஆம் தேதி வாங்கினது. இப்போதெல்லாம் தேதிகள் எவ்வளவு துல்லியமாய் நினைவிருக்கிறது என அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஒவ்வொரு நாட்களாய் எண்ணி நகர்த்த வேண்டி இருந்தது. இவ்வளவு நாட்கள் கையிருப்பு பணத்துடன் வாழ்வதென்றால் என்னவெல்லாம் செய்ய முடியாது, எதையெல்லாம் கைவிட வேண்டும் என திட்டமிட்டுக் கொண்டிருந்தான்.
எப்படியோ சற்று ஆசுவாசம் கிடைத்து விடுகிறது. விரல்களும் உதடுகளும் சிகரெட்டை தேடாமல் நிதானம் கொண்டு சலனமற்று இருக்கும். அது போல் மெல்ல மெல்ல பசியும்
அடங்கி விடுகிறது.
ஆனாலும் அவன் முழுக்க மாறி விடவில்லை தான். அன்று பேருந்தில் சிகரெட் வாசமடிக்கும் ஒருவர் அருகில் போய் உட்கார்ந்து கொண்டான். அறிமுகம் கூட செய்யாமல் அவரிடம் சிகரெட் கடன் கேட்டான். அவர் எழுந்து பக்கத்து காலி இருக்கையில் அமர்ந்து கொண்டார். அவரிடம் இல்லையாக இருக்கலாம். ஆனாலும் அவனுக்கு அவமானமாய் தோன்றவில்லை. சிகரெட் கேட்பதில் ஒரு சகோதரத்துவம் உள்ளது.
அன்று பேருந்து பாதிக்கு மேல் காலியாக இருந்தது. அவன் ஏறினதும் சோர்ந்து போனான். எதிர்காலம் பற்றி கவலைப்படத் தொடங்கினான். ஒரு சூயிங்கம்மை எடுத்து வாயில் போட்டான். தன்னுடைய நிறுத்தம் வரும் வரை மெல்லக் கூடாது என நினைத்துக் கொண்டான். அது அன்றைய நாளுக்கு மட்டுமானது. ஐம்பது சூயிங்கம்களில் ஒவ்வொன்றாய் குறைந்து வருவது அவனுக்கு உற்சாகமாய் இருந்தது. கடைசியை மெல்லும் முன் நிச்சயம் வேலை கிடைத்து விடும்.
வாயில் உமிழ்நீர் நிறைய அவன் முகபாவனை மாறியிருக்க வேண்டும். அவனுக்கு குறுக்காய் புஷ்டியாய், வயலெட் நைலான் சேலை அணிந்து நின்றிருந்த பெண் லேசாய் அவனை ஒருமுறை முறைத்து விட்டு தன் செல்போனில் மீண்டும் பார்வையை தாழ்த்தினாள். அவன் உடனே ஜன்னலுக்கு வெளியே எச்சில் துப்பி விட்டு சகஜமானான். அந்த மெல்லிய இனிப்பும், இளமைத்துள்ளலான வாசனையும் அவனுக்கு ஒத்துக் கொள்வதில்லை. கண்கள் மேயத் தொடங்குகின்றன.
பாலத்துக்கு கீழே பேருந்து முரட்டுத்தனமாய் திரும்பி சேற்றை ஒரு சைக்கிள்காரர் மீது வாரி அடித்து விட்டு சிக்னலில் கோணலாய் நின்று கொண்டது. அவன் மெதுவாய் மெல்லத் தொடங்கினான். சுவை குறைந்து சற்று கெட்டியாய் இருந்தது. மாட்டின் உறைந்த தசைத்துண்டு போல்.
தொழில்பேட்டையை நெருங்கினதும் ஏதோ ஆறரை மணி போல இருண்டு விட்டது. எது சேறு எது மண் எது சாலை எனத் தெரியாமல் குதித்தான். மேலிருந்து பெரிய பெரிய கறுப்புத் துளிகள் விழுந்தன. டீக்கடைகளில் கூட்டங்கூட்டமாய் மழையில் ஒதுங்கியவர்கள். ஒருவர் நிற்க இடமில்லாமல் சாலை விளிம்பில் மழையில் நனைந்தபடி நின்று டீ குடித்தார். ஒவ்வொரு துளியும் விழுந்து கரைய டீ மேலும் மேலும் அடர்பழுப்பாய் மாறிக் கொண்டிருந்தது. கண்ணை கசக்கி விட்டு பார்த்தான். கருந்துளி விழுந்து கண்ணாடி கோப்பைக்குள் பயணித்து அடிவரை போவது துல்லியமாய் தெரிந்தது. ஆனால் அவர் எதையும் பொருட்படுத்தாமல் நனைந்தபடி சூடாய் அருந்திக் கொண்டுருந்தார்.
சாலை ஓரங்களில் நிற்பவர்களின் முகங்கள் தாரை ஊற்றியது போல் தோன்ற சிகரெட் கங்குகள் மட்டும் ஒற்றை சிறு கண்கள் போல் மினுங்கின. மழையில் அவனைக் கடந்து செல்பவர்களின் உதடுகளிலும் கைகளிலும் கூட சிகரெட்டுகள் சுடர்ந்தன.
ஒரு தொலைதொடர்பு நிறுவனத்தின் அருகில் நின்ற கார்களின் மறைவில் ஒருவர் சுகமாய் மூத்திரம் பெய்து கொண்டிருந்தார். கடினமான சரிவான தரை என்பதால் அது பெய்கிறவரின் கால்கள் இடையே வழிந்து ஓடியது. தன் மீது படக் கூடாது என சற்று தள்ளியே நடந்தான்.
கடந்த சில தினங்களாய் தூய்மை பற்றி மிக அதிகமாகவே கவலைப்படுகிறான். ஆனால் இயல்பில் அவன் சுத்தம் பற்றி அக்கறைப்படுகிறவன் அல்ல. அறையில் அதிக பொருட்களும் புழக்கமும் தனக்கென அவனுக்கு வேலையும் இருந்த காலத்தில் பெருக்குவது, துடைப்பதை எல்லாம் மாதம் ஒருமுறையே வைத்துக் கொள்வான். கடந்த சில வாரங்களாய் அறை கிட்டத்தட்ட காலி. குப்பையே சேர்வதில்லை. ஆனாலும் அவன் தினமும் மேஜை, அலமாரியை துடைக்கிறான். சமையலறையில் வெற்று பாத்திரங்களை வெறும் தண்ணீரில் அலம்பி துடைத்து வைக்கிறான். இருக்கிற ரெண்டே சட்டைகளை தினமும் துவைத்து கரி இஸ்திரிப் பெட்டியால் இஸ்திரி போடுகிறான். எங்காவது சற்று ஈரப்பதம் இருந்தாலே சிறுபூச்சிகள் அந்து அம்மிக் கொள்கின்றன. பாத்திரத்தின் மீதோ நாற்காலி பிடியின் மீதோ அவை கும்பலாய் பற்றிக் கொண்டிருப்பது பார்க்க கம்பளிப்பூச்சிகள் ஒட்டிக்கிடப்பது போல் உள்ளது. ஈரம் மட்டுமே உள்ள இடத்தில் எவ்வளவு விரட்டினாலும் போகாமல் அவை ஒட்டிக் கிடக்கின்றன.
தொலைதொடர்பு நிறுவன வாயிற்கதவு அருகே சிலர் விலையுயர்ந்த ஆடையணிந்து நின்றார்கள். அவர்கள் அங்குள்ள உயர் அதிகாரிகளாய் இருக்கலாம். இவை அவர்களின் கார்களாகவும் இருக்கலாம். அவர்களிடம் மூத்திரம் பெய்பவர் பற்றி புகார் தெரிவிக்கலாமா என நினைத்து அருகில் சென்றான். அவர்கள் அவனை கவனிக்கவில்லை. பக்கத்தில் போய் நின்று கொண்டான். அவர்கள் திரும்பி தமக்குள் இந்தியில் பேசிக் கொண்டார்கள். அவன் சாலையில் இறங்கி நடக்கத் தொடங்கினான்.
தொலைதொடர்பு நிறுவனம் கடந்ததும் அரிவாள், நட்சத்திரம் தாங்கிய ஒரு சிவப்புக்கொடி கம்பம் ஒன்றில் படபடத்து பறந்தது. அதன் அருகே விளக்குக் கம்பம். விளக்கு பகலிலும் எரிந்து கொண்டிருந்தது. அதன் மஞ்சள் ஒளி பட்டு சிவப்பு கொடி சற்று ஊதாவாக அவனுக்குப் பட்டது. ஊசி ஊசியாய் நீர்த்துளிகள் ஒளிவட்டத்துக்குள் சொரிய அதன் மத்தியில் கொடி ஒரு சுடரைப் போல் நெளிந்து அசைந்தது. கொடிக்கம்பத்தின் கீழ் சற்று நேரம் நின்று போக வேண்டிய வழியை நினைவில் தொகுக்க முயன்றான். தன்னைப் போன்ற வேலையில்லாதவர்களுக்கு, யூனியன் அற்றவர்களுக்கு என ஒரு கொடி இருக்க முடியுமா என சம்மந்தமில்லாமல் தோன்றியது.
கொடிக்கம்பம் கடந்ததும் இருபது அடிக்கு கட்டிடங்களே இல்லை. ஒரு உடைந்த சாலை. அதை ஒட்டி ஒரு சாக்கடை கால்வாய். அது நிரம்பி அடர்பழுப்பு நிறத்தில் ஓடியது. கரையில் சில குடிசைகள்.
அதை அடுத்து பேருந்து வழித்தடம் வந்தது. வலது பக்கம் பேருந்து நிலையம். அதைத் தாண்டி மேற்கே சென்றால் டா வடிவில் ஒரு கட்டிடங்களின் தொகுப்பு. கொத்துக் கொத்தாய் வெளியே நிற்கும் ஊழியர்கள் தள்ளுவண்டிகளில் சிகரெட்டும் பாக்கும் வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
அவனுக்கு அங்கு வந்ததும் இடம் நினைவு வந்து விட்டது. முட்டி கடுமையாய் வலித்தது. ஒரு கடை முன்பு போட்டிருந்த ஸ்டூலில் அமர்ந்தான். கடைக்காரர் பஜ்ஜி வேண்டுமா என்றார். அவன் எழுந்து சற்று தூரம் நடந்தான்.
ஒரு அடி கூட இதற்கு மேல் எடுத்து வைக்க முடியாது என்றாகியதும் நடைபாதையில் ஒரு போஸ்டரை விரித்து உட்கார்ந்தான். சுற்றுமுள்ள அசுத்தம் குமட்ட வைக்க கண்களை மூடிக் கொண்டான். முட்டியை சுற்றி சூடாய் ரத்தம் பாயும் எரிச்சல்.
அவன் அருகே ஒரு கறுப்பு பேண்டும் வெள்ளை சட்டையும் அணிந்து மிடுக்காய் தெரிந்த ஒருவர் வந்து நின்று ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு பொறுமையாய் புகை வளையங்களை ஊதினார். இடையிடையே கைகடிகாரத்தை பார்த்தார். இவ்வளவு நிமிடங்களுக்குள் அந்த சிகரெட்டை சரியாய் புகைத்து தீர்க்க வேண்டும் என அவருக்கு ஒரு கணக்கு இருக்கலாம். அவனையும் அவன் இடதுகையில் இருந்த கோப்பையும் பார்த்து விட்டு அவனை கணித்து விட்டவரைப் போல் ஒரு பாவனை காட்டி விட்டு தன் பணியில் மெய்மறந்து மீண்டும் ஈடுபட்டார். அவன் வாயைத் திறந்து அவரது சிகரெட் நுனியின் சாம்பலை பார்த்துக் கொண்டிருந்தான். அவர் சாம்பல் அவன் மீது படாத படி ஆனால் அவனுக்கு வெகுஅருகில் விழும்படி கவனமாய் தட்டி விட்டார். அதன் பின் அவனை பார்த்து திருப்தி கண்டவராய் மீண்டும் சிகரெட்டை இழுத்தார். அவனுக்கு மூக்கு அடைத்திருக்க வேண்டும். சற்றும் வாசனை தெரியவில்லை. ஆனால் சிகரெட்டின் மூக்கு கனன்று சிவந்து புகை கசிந்து சாம்பல் தள்ளுவது பார்க்க சிலாக்கியமாய் பட்டது. மொத்த சிகரெட்டும் சாம்பலாவது வரை ரசித்து நொடி நொடியாய் கவனிக்க ஆசை கொண்டான். எதேச்சையாய் அவன் வாயில் மென்றிருந்த சூயிங் கம்மை உள்ளங்கையில் துப்பினான். அதை அவர் உடனே கவனித்து விட்டார். அவன் அதை ஒரு நொடி பார்த்து விட்டு வாயில் போட்டு மீண்டும் மென்றான். அடிக்கடி இதை செய்தான். ஒருமுறை சூயிங் கம்மை பிதுக்கி கையில் உருட்டவும் செய்தான். அவர் பாதி சிகரெட்டிலேயே அவனிடம் இருந்து அகன்று நடந்து கொண்டே புகைத்தார். தான் ஏன் அப்படி செய்தோம் என தன்னையே நொந்து கொண்டான். துப்பி விடலாமா என்று கூட யோசித்து விட்டு பிறகு மீண்டும் வாயிலிட்டுக் கொண்டான்.
எழுந்து நின்ற போது வலியில்லை. ஆனால் இரண்டு அடிகள் எடுத்து வைத்த போது உள்ளே காலுக்குள் ஏதோ முறிந்தது போன்று ஒரு மெல்லிய ஒலியை கேட்டான். அப்படியே உட்கார்ந்து விடத் தோன்றினாலும் தடுமாறியபடி நடந்தான். அத்துடன் அவன் முன்பை விட அதிகமாய் விந்தியபடி சற்று சாய்ந்து சாய்ந்து ஒரு கால் ஒடிந்த வாத்தை போல் நடந்தான். அவனருகே நடந்து சென்றவர்கள் அவன் மீது மோதி விடக் கூடாது என அக்கறையாய் விலகி நடந்தனர். ஒரு ஆட்டோக்காரர் மெதுவாக வந்து அவனருகே வளைத்து நின்றார். “எங்கே போகணும்?”. அவன் “இதோ பக்கத்தில தாங்க” என எதிரில் உள்ள கட்டிடத்தை காட்டினான். அவரும் சரியென தலையாட்டி விட்டு சென்றார். ஆனால் அந்த இருபது அடிகளும் நூறு அடிகள் போல் தோன்றின. ஒரு பக்கம் கால் துவண்டு சரிந்து விழுந்து விடுவோமா என பயந்தான்.
கட்டிடத்தின் வாயில் படிகள் மூன்று பக்கமிருந்து செல்லும்படி அழகாய் வடிவமைக்கப்பட்டிருந்தன. ஒரு முக்கோண பீட்சா துண்டு போல் அவை அகலமாய் ஆரம்பித்து மையம் நோக்கு குறுகலாய் சென்று ஒரு அகலமான தரைப்பகுதியில் சென்று முடிந்தன. இடது பக்க பாதை மற்றொரு பக்கமுள்ள வாயிலுக்கும் வலது பக்க பாதை உணவகத்துக்கும் மைய பாதை பிரதான வாயிலுக்கும் சென்றது. அவன் பக்க சுவரை பிடித்து ஏற வசதியாய் இடது பக்க படிக்கட்டை தேர்ந்தெடுத்தது எவ்வளவு தப்பு என ஏறிய பின்னரே உணர்ந்தான்.
மையத்துக்கு செல்ல ஒன்று மீண்டும் கீழே இறங்கி ஏற வேண்டும். அல்லது படிக்கட்டுகளை பிரிக்கும் குறுஞ்சுவரை தாண்டி குதிக்க வேண்டும். அவன் முதலில் கீழே சில அடிகள் கீழே இறங்க முயன்று விட்டு மீண்டும் மேலே வந்து குறுஞ்சுவரை தாண்ட முயன்று அதுவும் முடியாது என உணர்ந்தான். மூச்சு வாங்கியது. முட்டியில் யாரோ பழுத்த கம்பியை நுழைத்த உணர்வு. அவனை அவ்வளவு நேரமும் ஒரு சீருடையும் தொப்பியும் அணிந்த கறுத்து ஒல்லியான மீசையில்லாத காவலாளி பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது அவர் “இன்னா வேணும்பா?” என்றார்.
போக வேண்டிய நிறுவனத்தின் பெயரைச் சொன்னான். அவர் அவனை வரும்படி சைகை செய்தார். அவன் இம்முறை துணிச்சலாய் குறுஞ்சுவர் மீது உட்கார்ந்து கால்களை தூக்கிப் போட்டு மறுபக்கம் தாண்டி விட்டான். வலியை பல்லைக் கடித்து பொறுத்துக் கொண்டு அவரிடம் சென்றான். “இன்னாப்பா சொன்னே கேட்கல?”. அவன் மீண்டும் சொன்னான். “அந்த கம்பெனி இந்த பேஸ் இல்லப்பா. இந்தாண்ட திரும்பி நடந்து போனேன்னா கேட் வரும். அது வழியா உள்ளே போனேன்னா ரெண்டாவது மாடியில போய் கேட்டுப் பாரு.” மீண்டும் சுவரைக் கடந்து அதே பாதைக்கு சென்று நடக்க வேண்டும் என நினைத்ததும் தலைசுற்றியது. ஆனால் அவன் திரும்பி போகும் முன் அவர் கேட்டார் “காலில என்னப்பா?”. அது சின்ன வயதில் இருந்து ஏற்பட்ட பிரச்சனை என்றான். நோய் வந்த கதை, அவன் செய்த சிகிச்சைகள் என ஒவ்வொன்றாய் கேட்டு தெரிந்து கொண்டார். உச்சு கொட்டினார் ”ரொம்ப பாவம்பா. நீ அந்தாண்ட இருந்து வரச்சேயே கவனிச்சேன். சரி நீயே ஏறி வந்துடுவே போல கேட்டுக்கலாமுன்னு நெனச்சேம்பா. பார்த்து போப்பா”.
அவன் தலையாட்டி விட்டு நடக்க தொடங்கினான். அவர் அப்போது அவன் கையைப் பற்றிக் கொண்டார். அவன் பெற்றோர் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லையா என்று கேட்டார். அவன் பதில் சொல்ல அவர் கோபமாய் தலையாட்டினார். “அதெப்பிடி பண்ணாம இருக்கலாம்? இப்போ யாரு சிரமப்படுறது சொல்லு?”. அவன் அவரது மேஜையை பற்றிக் கொண்டு நின்றான். உடல் நடுங்கியது. எப்போதுமே நடக்க சிரமமா என்றார். இல்லை, சிலநேரம் இது போல் முட்டி தசை பிடித்துக் கொள்ளும். அப்போது ஒவ்வொரு அடி வைக்கையிலும் வலிக்கும் என்றான். அவர் முகம் இறுகி கண்கள் இடுகின. தலையில் கனத்த பொருளை வைத்திருப்பது போல் மெதுவாக அசைத்தார். அவன் கையை மெதுவாக விட்டார். அவன் மெல்ல திரும்பி மெல்ல நடக்கத் துவங்க அவர் சொன்னார் “நானே உன்னை கூட்டியாந்து போய் விடவாப்பா?”. அவன் வேண்டாம் என்றான்.
அவர் எழுந்து நின்ற போது அவர் சட்டைப்பாக்கெட்டில் இரு சிகரெட்டுகள் அவன் கவனத்தை பறித்தன. அவர் உதவிக்கு பதிலாய் அந்த சிகரெட்டுகளைக் கேட்கலாமா என யோசித்தான். அல்லது ஒரே ஒரு சிகரெட்டை வாங்கி முகர்ந்து பார்த்து விட்டு கொடுத்து விடலாம். ஆனால் அவர் அதற்கு அவகாசம் அளிக்கவில்லை.
”ஆனா இதை விட்டுட்டு நான் உங்கூட வர முடியாது. சப்ஸ்டிடுயூட் யாரும் இல்லியே. நீ மட்டும் என் தம்பியா பொறந்திருந்தா உன்னைய என் தோளில தூக்கி சுமந்திருந்திருந்தேம்பா” என்றார். அதைச் சொன்ன போது அவரது சிவப்பேறிய கண்கள் கலங்கின. அவன் ஒரு அடி பின்னகர்ந்தான். அவர் அவன் கையை பற்றிக் கொண்டார். மேலும் கீழுமாய் அவனை உரிமையாய் பார்த்தார். சூயிங் கம்மை கீழ்வாய்க்குள் அதக்கிக் கொண்டான்.
அவர் அவன் சட்டைப் பாக்கெட்டில் பார்த்தார். ”பேனா இருக்கா?”. இல்லையென தலையாட்டினான். பேனா இல்லாமல் நேர்முகத் தேர்வுக்கு வந்ததற்காய் அவனை கடிந்து கொண்டார். தனது பதிவு வருகையேட்டில் சொருகி இருந்த பேனாவை கத்தியைப் போல் உருவியை அவனிடம் நீட்டினார். அவன் அதை பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். அவன் நன்றி சொல்லி விட்டு நடந்தான்.
சுவரை தாண்டுவது இம்முறை எளிதாய் இருந்தது. அவனைத் தாண்டி சில நவீன ஆடையணிந்த இளம்பெண்கள் சென்றனர். ஒருத்தி கையில் பர்க்கரை பிடித்திருந்தாள். பாதி கடித்த பர்க்கர் பார்க்க யாரோ நாற்காலியில் அதன் மீது தவறுதலாய் ஏறி அமர்ந்தது போல் தோன்றியது.
(தொடரும்)
கருத்துகள்