
ஊரில் என் வீட்டின் அருகில் ஒரு சரிவு உண்டு. அந்த இடத்தை ஆலம்பாறை என்பார்கள் (அங்கே பாறை ஏதும் இல்லை என்றாலும்). அந்த இறக்கத்தில் இருந்து பார்த்தால் இடதுபக்கமாய் தேவசோம் அலுவலகமும் அதைக் கடந்து என் வீடும் தெரியும். நான் பைக்கிலோ ஆட்டோவிலோ அல்லது நடந்தோ அந்த சரிவில் இறங்கி வரும் போது வீட்டைப் பார்த்துக் கொண்டே வருவேன். கிட்டத்தட்ட அந்த சரிவு என் வீட்டின் வாயிலைப் போன்றது. அதாவது இறங்கி பின் திரும்பி வீட்டை சென்றடைய சற்று தொலைவு உண்டு என்றாலும் குறுக்குவெட்டாய் பார்த்தால் அது என் வீட்டின் துவக்கம் போல் ஒரு தோற்றம் கொடுக்கும். அதற்கு அந்த மரங்கள் அடர்ந்த ஊடுவெளி மட்டுமல்ல காரணம், என் அம்மாவின் குரலும் தான். நான் கல்லூரியில் படிக்கையில் இறக்கத்தில் வரும் போதே அம்மா வீட்டுக்குள் அங்குமிங்கும் நடந்தபடி அப்பாவிடம் “சாயாவுக்கு வெள்ளம் வைக்கட்டுமா?” என்றோ என் பெயரைக் குறிப்பிட்டு “அவனை காணலியே, வர வேளை தானே?” என்று சொல்வது எனக்கு துல்லியமாய் கேட்கும். நான் வீட்டுக்குள் நுழையும் போதே “நீ என்னைப் பற்றி விசாரிக்கிறதை கேட்டுக்கிட்டே தாம்மா வரேன்; என்ன ஒரு சத்தம், கொஞ்சம் மெல்ல பேசேன். நீ தொண்டையை திறந்து கத்துறது ஆலம்பாறை முனையிலிருந்தே கேட்குது!” என்பேன். அதற்கு அம்மா “ம்க்கும்” என்று விட்டு முகத்தை தூக்கி வைத்துக் கொள்வார்.
அம்மாவின் குரல் வீட்டு சுவர்களையும் அக்கம் பக்க வீடுகளையும் தேவசோம் அலுவலக மதிற்சுவர்களையும் மரங்களையும் தாண்டி அவ்வளவு தொலைவு வந்தடைய காரணங்கள் மூன்று:
1) அந்த பகுதியில் நெருக்கமான வீடுகள் இல்லை; அந்த இடம் திறந்தவெளியானது
2) அம்மாவின் மைக்முழுங்கி குரல்
3) எங்கள் பகுதியின் நிரந்தர அமைதி
பக்கத்து வீட்டுப் பாட்டி ஒரு மணிக்கு எவ்வளவு முறை லொக்குலொக்கென்று இருமுவார் என, குடிபோதையில் ஹாலில் மல்லாந்து கிடந்து தூங்கும் என் அப்பாவிடம் துல்லியமான கணக்கு இருக்கும். இருமல் ஒலிக்காவிடில் அவர் எழுந்து போய் பாட்டி உயிருடன் இருக்கிறாரா என பார்த்து விட்டு தள்ளாடிபடியே மீண்டும் வந்து வீட்டு ஹாலில் படுத்துக் கொள்வார்.
ஊரில் இருந்து வந்த பின் சென்னையில் 18 ஆண்டுகள் வசித்தேன். ஒப்பிடுகையில் சென்னை நூறு மடங்கு இரைச்சலான நகரம். அதுவும் நான் வசித்த வீட்டின் அருகே ரயில் தடமும், ரயில் கிராசிங் தடுப்புக் கதவும் உண்டு. ஆகையால் இரவில் நான்கு முறை 12, 2:30, 4, 5:15 என கடந்து போகும் ரயில்கள் எனக்கு அத்துப்படி. ரயில் சத்தம் இல்லையேல் எனக்கு சரியாய் உறக்கம் கொள்ளாது. பகலானாலும் கிராசிங்கில் இருந்து வரும் வாகனங்களின் உறுமல், ஹாரன், மற்றும் சைரன் சத்தம். அருகே ஒரு அம்மன் கோயில் மற்றும் பாபா கோயில். அதை ஒட்டி ஒரு ரைஸ் மில். ஒருவர் விட்டு ஒருவர் அரவை எந்திரம், பக்திப் பாடல்கள், மந்திர உச்சாடனம், குடிகாரர்களின் கூப்பாடுகள், கீழிருந்து வரும் ஒவ்வொரு ஒலி சவாலுக்கும் என் மூன்றாவது மாடி வீட்டில் இருந்து ஓயாது பதில் அளிக்கும் என் குட்டி நாய் … (சிலநேரம் அது ஒரு மணி நேரம் கூட சளைக்காது குரைக்கும்; நான் அதட்டினால், குரைத்தபடியே கூடுதலாய் பத்து நிமிடம் என்னை கண்டிக்கும்.) அமைதி விரும்பிகள் என் வீட்டில் பத்து நொடிகள் இருந்தால் அவர்களின் சித்தம் கலங்கி விடும்.
ஆனால் சென்னை வந்த சில மாதங்களில் இங்குள்ள ஒலி மாசு எனக்கு இனிய சங்கீதம் ஆகி விட்டது. ஓசையில்லாத இடங்களே என்னை துன்புறுத்தும்; ஓசையில்லாத இடங்களே என்னை துன்புறுத்தும்; நான் அமைதியை வெறுத்து ஒலி மாசை நாடிச் செல்பவன் ஆனேன்.
அதற்கு ஒரு காரணம் எனக்கு சிந்தனையிலோ எழுத்திலோ மனத்தை கூர்மையாய் ஒருமுகப்படுத்த மக்கள் என்னை சூழ்ந்திருக்க வேண்டும். ஆனால் சென்னை எந்தளவு மக்கள் நெருக்கடி மிக்க ஊரோ அந்தளவு தனிமையான உலகமும் தான். மக்கள் நம்மைச் சுற்றி இருப்பார்கள்; ஆனால் நகர்ந்தபடி சதா கலைந்தபடி. அவர்கள் எழுப்பும் ஓசைகள் மட்டுமே நமக்கு ஒரே துணை. எனக்கு நன்றாய் எழுத வேண்டுமெனில் ஒன்று இணக்கமான நண்பர்கள் குழாமிலோ ஒரு கருத்தரங்கிலோ போய் அமர்ந்து கொள்வேன். மனதுக்குள் ஒரு ஸ்விட்சை இயக்கியது போல எழுத வேண்டிய விசயங்கள் எனக்கு உடனே வெளிச்சமாகும். வீட்டில் தனிமையில் இருந்து எழுதுகையில் நான் மேலே குறிப்பிட்ட ஓசை மாசு தான் என் பிரதான துணை. அதுவும் போதாது எனில், கணினியில் சன்னமாய் இசையை ஒலிக்க விடுவேன். ரயில் போவதும் கேட்க வேண்டும், கீழே பரோட்டா அடிக்கும் மாஸ்டர் கரகரவென கத்துவதும் கேட்க வேண்டும், ரஹ்மானின் மெல்லிசையும் என்னை நெகிழ வைக்க வேண்டும். நான் எழுதிக் கொண்டிருக்கையில், யாராவது அழைப்பு மணியை அடித்தால் குஷியாகி விடுவேன். அவர்களை வரவேற்று அமர வைத்து பேசிக் கொண்டிருக்கையில் அடுத்து என்ன எழுத வேண்டும் என மனம் இன்னொரு பக்கம் உருப்போடும்; எனக்கு மிகத் தெளிவாய் யோசிக்க முடிவதும், அடுத்து எழுதுவதற்கான ஆற்றல் தோன்றுவதும் இந்த இடையூறுகளின் போது தான்.
சென்னை கிறித்துவக் கல்லூரியில் நான் முதுகலைப் பட்டம் படித்தேன். அது சென்னையில் இருந்தாலும் அசலான சென்னை அடையாளங்கள் அற்ற இடம்; முழுக்க குறுவனம் ஒன்றின் மத்தியில் அமைந்த கல்லூரி. அந்த இடத்தை நான் நேசித்த அளவு அதைக் கண்டு பதற்றமும் கொண்டிருக்கிறேன். வனத்தின் அடிப்படையான குணம் மௌனம். அக்கல்லூரியில் எங்கு போனாலும், குழந்தையை திருடும் ஒரு பெண்ணைப் போல ஒரு அமைதி நம்மைத் துரத்தும். ஒரு பக்கம் மாணவர்களின் பேச்சரவம், மறுபக்கம் கன்னி வனத்தின் மோனத் தவம். அங்கிருந்த காலத்தில் என் சித்தம் கிட்டத்தட்ட கலங்கியதுண்டு. அதன் பிறகு கிட்டத்தட்ட அத்தகைய அமைதியின் கனத்தை நான் பெங்களூரில் கண்டேன்.
பெங்களூரில் என்னை முதலில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஒளி மாறுதல்களோ கால நகர்வோ தெரியாத வண்ணம் இருளில் மூழ்கிய வீடுகள். விடிந்து விட்டதா என ஒவ்வொரு முறையும் எழுந்து பார்ப்பேன். விடிந்து விட்டது ஆனால் ஏன் விடிந்தது போல் இல்லை என வியப்பேன். மதியம் வரை தூங்கினாலும் இரவு கலையாது; அதன் பிறகு தூறல் போடத் துவங்கும். மேலும், பக்கத்து வீட்டில் மனிதர்கள் இருக்கிறார்களா என குழம்பிப் போகும் படி ஒலிகள் சுத்தமாய் சவரம் செய்யப்பட்ட வெளி. வீட்டுக்குள்
மொபைல் சிக்னல் கிடைக்காது; யாரும் என்னையும் அழைக்க முடியாது; நானும் யாரையும் அழைத்து வெட்டியாய் பேசிக் கொண்டிருக்க முடியாது.
எனக்கு இது இன்னொரு பிரச்சனையை கொணர்ந்தது – பேய் பயம். அவ்வளவு கடும் அமைதியில் ஏதோ ஒரு ஒலி கேட்கப் போவது போன்ற எதிர்பார்ப்பு, லேசாய் திரை அசைந்தாலே திடுக்கிடும் அளவு பதற்றமான நான், ராத்திரி எல்லாம் தூங்காமலே எண்ணங்களை அசைபோட்டுக் கிடப்பேன். என் தோழி ஒருவரிடம் இதைக் குறிப்பிட்ட போது அவர் தனக்கு அமெரிக்காவில் இருக்கையில் இந்த சிக்கல் எழுந்ததாய் சொன்னார். “ஒரு டிவி வாங்கிக்குங்க. வீட்டுக்கு வந்ததுமே அதை ஆன் பண்ணி விட்டு வேலைகள் பாருங்கள்.” அமெரிக்காவில் பல வீடுகளில் டிவியின் பிரதான பணியே தொணதொணவென பேசி, நமக்கு ஒரு துணை இருப்பதான தோற்றத்தைக் கொடுப்பது தான் என்றார்.
“அங்கே யாரும் டிவி பார்ப்பதில்லை; டிவி ஒரு ஒலித்துணையாக இருக்கிறது.”
”அதுக்கு ரேடியோ போதுமே?”
“ஆனால் ரேடியோவுக்கு முகம் இல்லை; அது ஒரு ஒலிகடத்தி, அது நம்முடன் அசலாய் இல்லை எனும் தோரணை அதற்கு உண்டு. ஆனால் டிவி அப்படி இல்லை; அதை ஒரு மேஜையில் வைத்ததுமே விக்கிரமாதித்யனின் சிம்மாசனம் போல் ஆகி விடுகிறது.”
நான் டிவி வாங்கினேன். இந்த ஓசையின்மை என்னை ஒரு ஒலிக்குடுக்கையும் ஆக்கியது. கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நிறைய நண்பர்களை உருவாக்கி அரட்டைகளில் மூழ்கினேன். வாட்ஸ் ஆப் போன்ற தொடர்புறுத்தல் சாத்தியங்களை அதிகம் பயன்படுத்தியதும் பெங்களூர் வந்த பிறகு தான்.
பெங்களூர் இப்படி முணுமுணுவெனப் பேசும் ஊர் என்றால் எங்கள் பல்கலைக்கழக வளாகம் பெரும் இரைச்சல் வெளி. சுமார் 20,000 மாணவர்கள் ஒரு சின்ன வளாகத்தில் இருப்பதால், அவர்கள் ஒரே இடத்தில் இசை நடனம் நாடகம் என பயிற்சி செய்வதாலும் சென்னையை விடவும் இந்த வளாகத்தில் இங்கு ஒலி மாசு அதிகம். இப்படி ஒலி பலமுனைகளில் இருந்து ஸ்னைப்பர் கன்களுடன் தாக்குதல் தொடுக்கையில் மக்கள் அதற்கு எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள்?
ஒன்று, இங்குள்ள இளைஞர்கள் அதிக நேரம் ஹெட்போன் மாட்டிக் கொண்டு எல்லா இடங்களுக்கும் போகிறார்கள். சிலர் நண்பர்களுடன் அரட்டை அடிக்கையில் ஒரு காதில் இயர்போன் மாட்டி இருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு முனைவர் பட்ட நேர்முகத் தேர்வு நடந்தது. ஆய்வுத் தலைப்பு “இசையும் வெளியும்”. அதில் ஒரு மாணவர் ஒரு சுவாரஸ்யமான அவதானிப்பை செய்தார்: அவர் காதில் ஹெட்போன் மாட்டியபடி பல்கலை வளாகத்துள் வருகையில் அந்த ஒலிகளின் பிரதேசம் ஒரு மாற்றுவெளியாக தெரிகிறது. அவர் அப்படி காதில் ஹெட்போனுடன் வருகையில் எதிரில் வருபவர்கள் தாமாகவே விலகிப் போகிறார்கள். இவரிடம் கத்திச் சொன்னாலோ தாம் எதிரில் வருகிறோம் என்பதை சைகையால் காட்டினாலோ பலனில்லை என எதிரே வருவோர் நினைக்கிறார்கள். ஆனால் அப்போது அவர்கள் இவர் மற்றொரு உலகில் நடந்து போகிறார் என்பதையும் உள்ளூர ஏற்கிறார்கள். அப்போது அவருக்கு எதிராய் இன்னொருவர் அதே போல ஹெட்போன் மாட்டிக் கொண்டு நடந்து வருகிறார். இருவரும் பரஸ்பரம் ஒரு மாற்றுப் பாதையில் நடந்து வருகிறார்கள். எதிரெதிரே வந்ததும் இதை ஏற்றுக் கொண்டு எந்த இடையூறும் இன்றி விலகிப் போகிறார்கள். ஆக, அந்த பாதையில் ஒரே சமயத்தில் மூன்று வெளிகள் தோன்றுகின்றன; இவ்வெளிகளில் பயணிப்போர் பௌதிக வெளியிலும் தாம் இருக்கிறார்கள்; அந்த பிரக்ஞையுடனே நடக்கிறார்கள், அதனால் தான் பரஸ்பரம் மோதிக் கொள்ளாமல் விலகிப் போகிறார்கள்; ஆகையால் இவர்கள் ஒரே சமயம் 6 பாதைகளில் நடக்கிறார்கள்.
இந்த வளாகத்தில் நான் காணும் மற்றொரு சுபாவம் ஒருவித பிரக்ஞைபூர்வ செவிட்டுத்தனம். கூட்டமாய் கடை வாயிலிலோ அல்லது ஒரு அரங்கிலோ இளைஞர்கள் நிற்கையில் அவர்களிடம் நீங்கள் சென்று எதையாவது கேட்டால் அது அவர்கள் காதில் விழாது. கேட்கும் ஆனால் கேட்காது. மிதமிஞ்சிய இரைச்சல் அவர்களை ஒலிக்கு உணர்வற்று போகச் செய்கிறது. இவர்கள் அச்சமயம் என்ன தான் கேட்கிறார்கள் என்று நான் வியப்புறாத நாள் இல்லை.
இன்னொரு ஒலிமாசு எதிர்வினை இது: மாணவர்கள் வகுப்பில் மூன்று நான்கு விசயங்களில் ஒரே சமயத்தில் ஈடுபடுகிறவர்களாய் மாறுகிறார்கள். ஓவியம் தீட்டியபடி, ஆசிரியர் உரையாற்றுவதை ஒரு பக்கம் கவனித்தபடி, இடையிடையே இயர்போனில் பாட்டுக் கேட்டபடி, சகமாணவரின் அரட்டைக்கு காதுகொடுத்தபடி இருக்கிறார்கள். இவ்வளவு கவனச்சிதறல்கள் மத்தியில் இவர்கள் வகுப்பை கூர்மையாய் இவ்வாறு கவனிப்பதே ஆச்சரியம். இவர்களை வேறு கவனச்சிதறல்களை விடுத்து வகுப்பை மட்டும் கவனிக்கக் கேட்டால் ஒரு சொல் கூட இவர்கள் மனதில் ஏறாது என்பதை கவனித்திருக்கிறேன்.
மனதை குவிய விடாமல்
சிதறடிக்கும் இந்த ஒலிகளின் உலகில் மனக்குவிப்புக்கு சிறந்த மார்க்கம் அதே கவனச்சிதறலே. அதாவது நம் மனம் பலவிதமாய் சிதறியபடியே ஒன்றில் மையம் கொள்கிறது. நம் இயல்பு அப்படி ஆகி விட்டது. ஒலியே ஒலிக்கான தீர்வு எனும் முடிவுக்கு நான் வந்து சேர்ந்திருக்கிறேன். நீங்கள் மிக சன்னமாய், ஏதோ பூ விரிவது போல பேசுகிறவர் என்றால் நீங்கள் சொல்லும் ஒரு சொல் கூட என் மூளையில் ஏறாது. அதனால் நான் சொல்வேன், “சத்தமாய் பேசுங்க ப்ளீஸ்!”
நன்றி: உயிர்மை, அக்டோபர் 2018
கருத்துகள்