முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Metooவும் மத-ஒழுக்கவாதிகளும்: அப்பாலே போ சாத்தானே! (1)


Related image

வலதுசாரிகளுக்கும், மதவாதிகளுக்கும் செக்ஸ் என்றால் பாவம், அசுத்தம், தீமை. இன்று முழுக்க வேறொரு காரணத்துக்காக, metooவுக்காக போராடும் தீவிர பெண்ணியவாதிகளும் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள்.
 வலதுசாரிகளுக்கு பாலியல் இச்சையின் மீதான ஒவ்வாமை பெண்ணுடலை கட்டுக்குள் வைக்கும், குடும்பத்தின் வழி நிலப்புரத்துவ ஆதிக்கத்தை தக்க வைக்கும், மரபான விழுமியங்களை பாதுகாக்கும் ஒரு மிகப்பெரிய செயல்திட்டத்தின் விளைவாய் உருவானது. பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இந்த பாலியல் ஒழுக்க விழைவு மதவாத தேசியமாய் உருப்பெற்றது. இன்றைய இந்துத்துவா கட்சிகளின் தாய்க் கட்சியான இந்து மகா சபையை தோற்றுவித்தவர்கள் ஆங்கிலேய ஆட்சியில் மேற்கத்திய கல்வி பெற்றவர்கள். மேற்கிலிருந்து தான் இவர்கள் தேசியம் எனும் கருத்துருவைப் பெறுகிறார்கள். இதே பிரித்தானிய கல்வியிலிருந்து தான் விக்டோரியா மகாராணியின் காலத்தைய பாலியல் ஒழுக்கவாதத்தையும் இவர்கள் பெறுகிறார்கள். இதை விக்டோரிய ஒழுக்கவாதம் என்கிறார்கள்.
பல்வேறு காலனிகளை சுரண்டி இங்கிலாந்து ஒரு மிகப் பெரிய தேசமாய் மாறின காலகட்டமே பத்தொன்பதாம் நூற்றாண்டின் விக்டோரிய காலகட்டம். எல்லா வகையான மீறல்கள், வன்முறை, இச்சை வெளிப்பாடு ஒடுக்கப்பட்டு, மனதுக்குள ஆழமாய் புதைக்கப்பட்டு ஒருவித கண்ணியமான போலியான பகட்டான நடுத்தர வர்க்க, மேல்தட்டு குடும்ப வாழ்க்கை மேலெடுக்கப்பட்ட காலகட்டம் இது. இங்கிலாந்து முழுக்க பாலியல் தொழிலாளிகள் களையடுக்கப்பட்டு சீர்திருத்த இல்லங்களில் அடைக்கப்பட்டனர். ஓரின சேர்க்கையாளர்களை விரட்டி சிறையிலடைப்பதே காவல் துறையினர் பிரதான பணியாயிற்று. குடும்பப் பெண் × விபச்சாரி எனும் இருமை சமூகத்தின் எல்லா தளங்களிலும் பிரதான கவனம் பெற்றது. தாய்மை எனும் கருத்துருவாக்கம் பரவலாக முன்னெடுக்கப்பட்டதும் இந்த நூற்றாண்டில் தான். ஒரு தாய் தன் குழந்தைக்கு தானே முலையூட்ட வேண்டிய அவசியம் குறித்த நிறைய ஆய்வுகள் நடந்தன. மிஷல் பூக்கோ தனது History of Sexuality நூலில் எழுதும் போது இது பெண்ணுடலை அரசதிகாரம் தன் கண்காணிப்புக்குள் கொண்டு வருதற்கான உத்தியாக அமைந்தது என்கிறார்.

அக்காலத்தில் தான் ஒரு மணமான பெண் கள்ள உறவு கொண்டால் அவளை கணவன் விவாகரத்து செய்யலாம் எனும் சட்டம் முதன்முறையாய் பிரிட்டனில் ஏற்பட்டது (ஆனால் கணவன் கள்ள உறவு கொள்ளலாம்). இதற்கு முன் அத்தகைய நேரடியான ஒழுக்க நிர்பந்தம் திருமண பந்தத்தில் இருக்கவில்லை. நேரடியாய் செக்ஸைப் பற்றி பேசுவது ஒழுக்க குற்றமாய் காணப்பட்டது. விளைவாய் காதலர்கள் தமது விருப்பங்களை மறைமுகமாய் சித்திரங்கள், மலர்கள் மூலம் வெளிப்படுத்தினர். இதன் எதிர்விளைவாக பாலியல் எழுத்துக்களும் ரகசியமாய் மிகுந்த விருப்பத்துடன் படிக்கப்பட்டன. முழுக்க முழுக்க பெண்ணுடல் மீதான பிரேமையும் அச்சமும் ஆங்கிலேய சமூகத்தை பீடித்திருந்த காலகட்டம் இது.
இனி இந்தியாவுக்கு வருவோம். விக்டோரிய ஒழுக்கவாதம் இந்தியாவையும் உருமாற்றியது.
 கஜூராஹு கோயிலை கட்டிய, ஒவ்வொரு கோயிலிலும் அரை / முழு நிர்வாண சிற்பங்களை படைத்த நம் முன்னோர்கள், நிர்வாணத்தை ஒரு அழகியலாக கருதிய நம் முன்னோர்கள், பாலியல் விழைவுகளை ஒரு அன்றாட மனப்பாங்காக, ஒரு கலைநோக்காக கண்ட நம் முன்னோர்கள் செக்ஸை ஒரு கட்டுப்படுத்த வேண்டிய பிரச்சனையாக கருதவில்லை. பாலுறவு இச்சை ஒரு அசிங்கம், ஒரு பாவம், ஒரு சமூகப் பிரச்சனை என அறியப்பட்டது பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பின்னரே. ஆடை ஒழுக்கம், கற்பு, ஒரு தார மணம் ஆகியவை பிரதானப்பட்டன. இன்னொரு பக்கம், பாலியல் குறித்த விவாதங்கள் பொதுவெளியில் பிரதானப்படுத்துவதும் பத்தொன்பதாம்-இருபதாம் நூற்றாண்டின் போது தான். காந்தியின் பிரம்மச்சரிய பரிசோதனைகள் ஒரு உதாரணம். ஆணும் பெண்ணும் நிர்வாணமாய் உறங்குவது பண்டைய இந்தியாவில் ஒரு பேசுபொருளாகவே இருந்திருக்காது. ஆனால் இப்போது அது சர்ச்சையானது. காந்தியை இச்சோதனையை கைவிடுமாறு பலரும் வேண்டினர். இன்னொரு பக்கம் இந்து தேசியவாதிகள் பிரிவினையின் போது இந்துப் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதை, பாகிஸ்தானுக்கு கட்த்தப்பட்டதை இந்து ஆண்கள் கொல்லப்பட்டதை விட பிரதானப்படுத்தினர். இந்துப் பெண்கள் மீதான இந்த அத்துமீறலுக்கு வரலாற்று சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தவர் என்கிற காரணத்துக்காகவே கோட்ஸே காந்தியை படுகொலை செய்தார்.
ஏன் இந்த இரு தேசங்களிலும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் பாலியல் ஒழுக்கம் பிரதானமாகிறது?
முதலில் இங்கிலாந்தை எடுத்துக் கொள்வோம்.
 இங்கிலாந்தைப் பொறுத்தமட்டில் பாலியல் ஒழுக்க முனைப்புக்கு ஒரு வெளிப்படையான காரணம் அப்போதே இங்கிலாந்து ஒரு வலுவான தேசிய பிம்பத்தைப் பெற்றிருந்தது, ஒரு உலகை ஆளும் சாம்ராஜ்யமாய் அது உருப்பெற்றிருந்தது என்பது. இந்த பிரித்தானிய சாம்ராஜியம் இரண்டாம் உலகப்போருடன் சிதையத் துடங்கியது. அப்போது பிரித்தானிய முன்னாள் காலனிகள் இறையாண்மை வாய்ந்த தேசமாய் மேலெழுந்து வந்தன. இந்தியக் காலனியில் ஒரு பக்கம் காந்தியின் நெகிழ்வான தேசியவாதமும் இன்னொரு பக்கம் இந்துத்துவர்களின் மூர்க்கமான இறுக்கமான தேசியவாதமும் வலுவான குரல்களாய் ஒலித்தன.
தேசியவாத எழுச்சிக்கும் பாலியல் ஒழுக்கவாதத்துக்கும் பின்னிப்பிணைந்த உறவு உண்டு.
தேசியவாதம் ஆண்-மையவாதத்தை முன்னெடுப்பது. ஆகையால் பெண்ணியம் நேரடியாய் இதனோடு கைகோர்ப்பதில்லை. ஆனால் தேசியவாதத்தின் செல்லப்பிள்ளையான பாலியல் ஒழுக்கவாதத்துடன் பெண்ணியத்துக்கு ஒரு மறைமுக அன்பு உண்டு.
மட்டுமீறிய பாலியல் பெண்ணுடலை கட்டுடைத்து எழச் செய்கிறது, இது உடலை கண்காணித்து அடக்கி மக்கள் சமூகத்தை ஒரு கட்டுக்குள் வைக்க விடாமல் செய்வது. இதனாலே உலகம் முழுக்க அரசாங்கங்கள் குடும்ப ஒழுக்கத்தை பிரதானமாய் முன்னெடுக்கின்றன. குடும்ப ஒழுக்கம் வழி பெண் உடலை கட்டுக்குள் வைத்து, பெண் உடல் வழி மக்கள் பெருந்தொகையை ஒருங்கிணைக்க முயல்கின்றன தேசிய அரசுகள்.
இதனாலே செக்ஸ் மீது ஒவ்வாமையில்லாத அதிகார மையங்களே இல்லை எனலாம். இதே காரணத்துக்காகவே மத நிறுவங்களும் ஆன்மீகத்தில் பிரம்மச்சரியத்தை பிரதானப்படுத்தி, குடும்பத்துக்குள் செக்ஸ் ஒழுக்கத்தை போதிக்கின்றன.
ஆகையால், தேச அரசியலுக்கு அருகாமையில் செல்ல விரும்பும் எந்த தரப்பினரும் பாலியல் ஒழுக்கத்தை கையில் எடுத்தாக வேண்டும். இதுவரையில் ஆண்கள் அதை கையில் எடுத்தனர் என்றால், ஐரோப்பாவில் பெண்கள் எல்லா தளங்களிலும் முன்னேறி விட்ட நவீன காலத்தில் அவர்களின் கருத்தியலும் அதிகாரத்தை நோக்கி நகர்ந்தது. பெண் விடுதலை பேசிய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் பாலியல் ஒழுக்கத்தை மறைமுகமாய் கையில் செங்கோலாய் ஏந்திக் கொண்டன.
ஆனால் இவ்விசயம் இவ்வளவு எளிதாய் நேரடியானதாய் இல்லை. இவர்களின் பாலியல் ஒழுக்கவாதம் மிக மிக சிக்கலான ஒன்றானது.
ஐரோப்பிய பெண்ணியவாதிகளில் முதல் தலைமுறையினர் ஒருவித மூர்க்கமான வெட்டு-ஒன்று-துண்டு-ரெண்டு போராளிகளாய் இருந்தனர். இந்த ரேடிக்கல் பெண்ணியவாதிகள் ஆண் உடலை அதிகார மையமாய் கண்டனர். ஆணுக்கு பெண்ணுடனான அடிப்படையான பிணைப்பு செக்ஸால் ஆனது. ஆக செக்ஸே குடும்பத் தேவையை, குடும்ப விழுமியங்களை, அதன் வழி பெண்ணடிமைத்தனத்தை தோற்றுவிக்கிறது. ஆணின் பாலுறவு இச்சை அவர்களுக்கு அதிகார விழைவாகப் பட்டது. ஆணை வேட்டைக்காரனாகவும் பெண்ணை வேட்டையாடப்படும் மிருகமாகவும் அவர்கள் கண்டனர். ஆக, பாலுறவில் விக்டோரிய ஒழுக்கவாதிகளுக்கு இருந்த ஒவ்வாமை ஆரம்பகால பெண்ணியவாதிகளுக்கும் ஏற்பட்டது. ஆண்களுடன் இணைந்து உலகை சீர்திருத்துவதை விட ஆண்கள் இன்றி பெண்கள் சகோதரத்துவத்துடன் பணியாற்றுவதே சாலச்சிறந்தது என அவர்கள் நம்பினர். இதனாலே ஆண்-பெண் பாலுறவு பிர்தானப்படுத்தப்படும் எந்த அதிகார வர்க்கத்துக்கு எதிரான போராட்டங்களுக்கும் பெண்ணியவாதிகளும் வெளிப்படையாய் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள். 2014இல் நிகழ்ந்த முத்தப் போராட்டங்கள் ஒரு உதாரணம். முத்தம் என்பதே ஒரு ஆணடிமை உத்தி அல்லவா? குடும்ப அமைப்பு பெண்களை ஒடுக்குகிறது. ஆனால் குடும்ப அமைப்பை உடைத்து திறந்த நிலை பாலுறவில் ஈடுபடலாமே என பெண்ணியவாதிகள் கோரிக்கை விடுக்க மாட்டார்கள்.
இது ஏன்?

(தொடரும்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...