முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரிஷப் பண்டின் முதிர்ச்சி


Rishabh Pant

நான் ரிஷ்ப பண்டின் விசிறி. இதற்கு முன் என்னை இந்தளவுக்கு கவர்ந்த ஒரு கீப்பர் பேட்ஸ்மேன், இடதுகை அதிரடிக்காரர் என்றால் ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட். அவருக்குப் பின் சிறிது காலம் யுவ்ராஜ் சிங்.


ரிஷப் பண்ட் உள்ளூர் ஆட்டங்கள் ஆடும் காலத்தில் இருந்தே சூப்பர் ஸ்டார் தான். சில வீரர்கள் டெஸ்ட் போட்டியை ஒருநாள் ஆட்டத்தின் வேகத்தில் ஆடுவர். பண்டோ டி-20 தாளத்தில் டெஸ்டில் மேளம் அடிப்பவர். பத்து பவுண்டரிகள் அடிக்கும் நீளத்தில் விழும் பந்துகளை ஏன் வீணடிக்க வேண்டும் என பத்து சிக்ஸர்கள் அடிப்பார் அவர். ஒரு பேட்ஸ்மேன் 20 சிக்ஸர்கள் அடித்தால் 160-200 ரன்களை நான்கு நாள் போட்டிகளில் அடிக்கலாம் என உள்ளூர் கிரிக்கெட்டில் நிரூபித்தவர். அப்படித் தான் அவர் தேர்வாளர்கள் மற்றும் ரசிகர்களின் பரவலான கவனத்தை பெற்றார்.

 தில்லி அணிக்காக இரண்டாவது வருடம் ரஞ்சி கோப்பை ஆடிய போது பண்ட 48 பந்துகளில் ஜார்கண்டுக்கு எதிராக சதம் அடித்தார் - ரஞ்சி கோப்பை வரலாற்றிலேயே மிக வேகமான சதம் அது. அதே ஆண்டில் அவர் மகாராஷ்டிராவுக்கு எதிராய் 326 பந்துகளில் முச்சதம் அடித்தார். இத்தனையும் செய்து பண்ட் அதிர்வுகளை ஏற்படுத்திய போது அவருக்கு வயது 18 மட்டுமே. அதன் பின்னர் பண்ட் இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டாலும் அது நிகழவில்லை. தோனி அப்போது மோசமான பார்மில் இருந்தார் - ஆகையால் அப்போது தோனிக்கு ஓய்வளித்து பண்டு உள்ளே கொண்டு வரப்படுவது தோனிக்கு தேவையற்ற சிக்கலை, நெருக்கடியை ஏற்படுத்தும் என கருதப்பட்டது. ஆனால் டெஸ்ட் கீப்பர் சாஹா காயப்பட, எதிர்பாராத விதமாய் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் அயல்மண்ணில் ஆடினார்.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் நேரடியாய் ஆடக் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திய பண்ட் ஒன்பது போட்டிகளில் 2 சதங்களும் 2 அரை சதங்களும் அடித்தார். ஆகையால், அவர் ஒருநாள் உலகக்கோப்பையில் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டு அது நிகழாத போது இந்தியா முழுக்க மட்டுமல்ல உலக அளவில் கூட ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இங்கிலாந்தின் முன்னாள் வீரர் வாஹ்ன், ஆஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பாண்டிங் போன்றோர் பண்ட் தேர்வாகாதது குறித்து ஆச்சரியம் தெரிவித்தனர். பண்ட் நிச்சயம் தன் ஆட்டவாழ்வில் மூன்று உலகக்கோப்பைகளாவது ஆடுவார் என பாண்டிங் ஆருடம் கூறியுள்ளார். முன்னாள் தேர்வாளர் வெங்க்சார்க்கர் மற்றும் முன்னாள் அணித்தலைவர் அசருதீன் ஆகியோரும் பண்ட் நிச்சயம் உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று கருத்து கூறினர். இந்த கருத்துக்களின், எதிர்பார்ப்பின் நெருக்கடி காரணமாய் பண்ட் உலகக்கோப்பை அணிக்கான மாற்று வீரர்களில் ஒருவராய் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் இவ்வளவு ஆதரவு இருந்தும் ரிஷப் பண்டின் சில குறைகள் குறித்த விமர்சனங்களையும் மறுக்க முடியாது. அவருக்கு ஆட்டச் சூழல் குறித்த புரிந்துணர்வு இல்லை, பொறுமையோ முதிர்ச்சியோ இல்லை, தேவையான நேரத்தில் அபத்தமாய் ஆடி அவசியமற்று வெளியேறுகிறார் என தொடர்ந்து சுட்டிக் காட்டப்பட்டது. 2019 ஐ.பி.எல்லில் கூட இதற்கு பல உதாரணங்களை நாம் கண்டோம். ஆக, 22-04-19 அன்று தில்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ராஜஸ்தானுக்கு எதிராய் ஆடிய பண்ட் 36 பந்துகளில் 78 அடித்து தன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அது ஒரு சாதாரண இன்னிங்ஸ் அல்ல. பண்ட் ஒரு நிதானமான பொறுப்பான பேட்ஸ்மேனாக முதிர்ந்து விட்டார் என நமக்கு சொல்கிற இன்னிங்ஸ் அது.

192 எனும் இலக்கு அந்த சற்றே மெத்தனமான ஆடுதளத்தில் சற்று சிரமமானது. பண்ட் உடனடியாய் அவசரகதியில் வெளியேறி இருந்தால் தில்லி நிச்சயம் தோற்றிருக்கும். ஆனால் பண்ட் இம்முறை பொறுமையாய் இறுதி ஓவர் வரை நின்று, தோனி ஸ்டைலில், ஆடினார். வந்த உடனே சிக்ஸர்களை இலக்காக்காமல் பவுண்டரிகள், ஒற்றை, இரட்டை ரன்கள குறி வைத்தார். முப்பது பந்துகளில் முப்பது ரன்கள் எனும் நிலை வந்த போதும் ஓவருக்கு ஒரு சிகஸர் போதுமென புரிந்து ஆடினார். சிக்ஸர் அடித்து விட்டு அடுத்து ஒற்றை ரன் எடுத்தார். கடைசி ஓவரில் ஆறு ரன்கள் தேவைப்பட்ட போது அவர் ஒற்றை ரன்கள் எடுத்து ஆட்டத்தை தேவையின்றி சிக்கலாக்கவில்லை. ஏனென்றால் இறுதி ஓவர்களில் சிங்கிள்ஸ் எடுப்பது ஆபத்தானது. ஆக இரண்டாவது பந்தில் அவர் ஒரு தட்டையான சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.


எதிரணி தலைவர் ஸ்மித் குறிப்பிட்டது போல பண்டின் ஒரு சிறப்பு அவர் எதிர்பாராத இடங்களில் ரன்களை அடிப்பார் என்பது. குறிப்பாய் கால்பக்கமாய் அவரது ஷாட்கள் தனித்துவமானவை. முன்பு off பக்கமாய் பந்தை வீசி பண்டின் பொறுமையை சோதிப்பார்கள். அவரும் வைடான பந்துகளை கால்பக்கம் அடிக்க முயன்று வெளியேறுவார். ஆனால் இன்றோ அவர் பவுலர்கள் ஓரளவு நேராய் வீசும் படி பொறுமை காத்தார்.



ரிஷப் பண்ட் முதிர்ந்து விட்டார். இதே கதியில் தொடர்ந்தால் அடுத்தடுத்த ஆண்டுகளில் தோனியை நாம் அதிகம் மிஸ் பண்ணாமல் பார்த்துக் கொள்வார் அவர். அதுவே ஒரு மிகப்பெரிய சாதனையாக இருக்கும்!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.