முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உடல் எடை குறைப்பதன் மிகப்பெரிய சவால் (1)



எதுவுமே ஆரம்பத்தில் சற்று சுலபமாய் படும். முதல் நாள் பள்ளிக்குப் போவது, காதலியுடன் முதல் நாள் வெளியே சுற்றுவது, ஒரு புதிய டயட்டை பின்பற்றுவது. போகப் போக ஏகப்பட்ட முட்டுக்கட்டைகள் வரும். இடைப்பட்ட உண்ணாநோன்புக்கு (intermittent fasting) இது வெகுவாக பொருந்தி வரும். இடைப்பட்ட உண்ணாநோன்பை பழகினால் எடைகுறைப்பு, உடல் நலத்தை பேணல், நேரத்தை சேமிப்பு என பல பலன்கள் வரும். குறிப்பாய், ஆரம்ப சில மாதங்களுக்கு. சொல்லப் போனால், பேலியோ உணவு முறை, உடற்பயிற்சி ஆகியவற்றை விட உண்ணாநோன்பினால் அதிக பலன்கள் உடனடியாய் கிடைக்கும். என் விசயத்தில், முதல் மூன்று மாதங்களில் மிக சுலபமாய் 16 கிலோ எடை குறைத்தேன். நான் உணவருந்த்தும் போது எந்த கட்டுப்பாட்டையும் பின்பற்றவில்லை. விருப்பப்படி சாப்பிட்டேன். உடற்பயிற்சியையும் ஒழுங்காக தினமும் பண்ணவில்லை. எடை குறைகிற வேகம் எனக்கு வேறெதுவும் தேவையில்லை எனும் நம்பிக்கையை அளித்தது. உண்ணாநோன்பை மிகப்பெரிய வரப்பிரசாதம் என நினைக்கத் தொடங்கினேன். அதன் பிறகே, ஒரு பெரிய சிக்கல் ஆரம்பித்தது - உடல் எடை அப்படியே உறைந்து போனது, கணினி சிலநேரம் அப்படியே உறைந்து போய் நிற்குமே அப்படி


நான் இதன் பிறகு உடற்பயிற்சியை தினமும் செய்தேன். நாளுக்கு ஓருமுறை மட்டும் உணவருந்தும் One Meal a Day (OMAD) உணவு முறையை பின்பற்றி வந்தேன். அந்த உணவை பேலியோவுக்கு மாற்றினேன். மாதத்தில் சில நாட்கள் (சுமார் 6-10 நாட்கள்) நீடித்த உண்ணாநோன்பை பின்பற்றிப் பார்த்தேன். ஆனால் விளைவில் பெரிய மாற்றங்கள் இல்லை. எடை கூடுதலாக ஏறாமல், 75-76இல் நின்றது. ஆனால் எதிர்பாராமல் ஒரு உதிரி பலன் ஏற்பட்டது - கடந்த சில ஆண்டுகளாகவே டிராபிக்கில் பொறுமையின்றி உறுமும் வாகனம் போல தூங்கும் போது குறட்டை விட்டுக் கொண்டிருந்தேன். அருகில் படுத்திருப்போருக்கு பெரும் தொந்தரவு
குறட்டை கேட்காதபடி தடுக்கும் வாயில் பொருத்த வேண்டிய கருவி ஒன்றை வாங்கலாமா என யோசித்தேன். இணையத்தில் இதைக் குறித்து வாசித்தேன். ஒருநாள் ஒரு மருத்துவரைப் பார்த்தேன். அவர் இது மூச்சுப்பிரச்சனையால் ஏற்படலாம் என்றார் அவர். அதாவது உறங்கும் போது தொண்டைக்கும் மூச்சுக் குழாய்க்கும் நடுவே காற்றின் பரிவர்த்தனையில் இடறு வரலாம். அப்போது நாம் குறட்டை விடுவோம். குறிப்பாய், மூச்சுப் பகுதியிலோ தொண்டையிலோ உள்ள தசைகள் பலவீனமாய் இருந்தாலோ கூடுதலாய் அவசியமற்ற தசைகள் வளர்ந்திருந்தாலோ இது ஏற்படலாம். லேசர் சிகிச்சை, சோம்னோபிளாஸ்டி முதல் அறுவை சிகிச்சைகள் வரை மருத்துவ தீர்வுகள் உண்டு. ஒரு குறட்டைக்காக ஒரு போரா என வியந்தபடி வந்து விட்டேன். உண்ணாநோன்பை - குறிப்பாய் நீடித்த நோன்பை - பின்பற்றிய பின் இரவில் நான் மூச்சு விடுவது மேம்பட்டுள்ளதை நானே உணர்ந்த்தேன். முக்கியமாய் குறட்டை அறவே நின்று போனது. கொக்கை குறிவைத்து சுட்டால் காக்காய் விழுந்தது போல இது முடிந்து போனது
குறட்டையை விரட்ட எடைகுறைப்பு உதவியிருக்கலாம் அல்லது உண்ணாநோன்பினால் விளைந்த ஒரு விளங்காத மாற்றத்தினால் இருக்கலாம். எப்படியோ கிடைத்தவரை மகிழ்ச்சி என எண்ணிக் கொண்டேன். கூடுதலாய், நமது இன்றைய உணவுப்பழக்கங்கள் எப்படி குறட்டைப் பிரச்சனையை எல்லாம் ஏற்படுத்தி வாய்ப்பூட்டு போன்ற கருவிகள் முதல் அறுவை சிகிச்சை வரை தேவைப்படும் அளவுக்கு நம்மை தள்ளுகின்றனவே என வியந்தேன். இன்று நாம் எதிர்கொள்ளும் கணிசாமான உடல்நல இடர்களுக்கு எந்த பிரத்யேக சிகிச்சையும் தேவையில்லை. கொஞ்ச நாள் வாயை கட்டுப்படுத்தினாலே போதும்.
சரி, நகர மறுத்த யானையான என் உடல் எடைக்கு மீண்டும் வருவோம்.
 உடலின் இந்த பிடிவாதத்தை எப்படி புரிந்து கொள்வது? இதைக் குறித்து நான் கூடுதலாய் வாசித்தேன். நமது எடை என்பது கொழுப்பால் ஆனது. கொழுப்பு ஆற்றல் சேமிப்பு. சேமிப்பை தக்க வைப்பது உடலுக்கு அவசியம். அதாவது இன்றைய நவீன வாழ்க்கை முறையில் இது தேவையில்லை என்றாலும் நீங்கள் உணவே இல்லாமல்  ஒரு தீவிலோ பாலைவனத்திலோ மாட்டிக் கொண்டால் இந்த சேமிப்பே ஒன்று-ஒன்றரை மாதங்கள் உங்கள் உயிர்வாழ்தாலுக்கான வங்கி இருப்புத் தொகை

நீடித்த உண்ணாநிலை நோன்புகளின் போது இதை நான் உணர்ந்தேன். ஐந்து நாட்கள் துளி கூட கலோரிகள் உட்கொள்ளாத போதும் உடல் பதறுவதில்லை நீங்கள் நீண்ட தூரம் நடக்கலாம், அலையலாம், உடற்பயிற்சி செய்யலாம். களைப்பே இருக்காது என்பது மட்டுமல்ல உணவருந்தும் ஆட்கள் களைத்து அமர்ந்து விட விரதம் இருப்பவரோ துடிப்பாய் இயங்கிக் கொண்டிருப்பார். இது தான் நம் உடம்பு ஆற்றலை பயன்படுத்தும் அதிசயம். இது போன்ற சந்தர்பங்களுக்காகத் தான் உடல் என்றுமே தயாராக இருக்கிறது. .தா., சென்னையிலும் கேரளாவிலும் வெள்ளப்பெருக்கு வந்த போது பல்லாயிரம் பேர் உணவின்றி உறைவிடமின்றி தவித்தனர். இவர்களுக்காக உணவுப்பொட்டலங்கள் ஹெலிகாப்டரில் இருந்து தூக்கிப் போட்டார்கள். லாரி லாரியாய் சமூக சேவகர்கள் ரொட்டியும் பிஸ்கெட்டும் அரிசி மூட்டையும் கொண்டு போய் கொடுத்தார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் மிகவும் வயதானவர்கள் மற்றும் மிகச் சின்ன குழந்தைகள் தவிர பெரும்பாலானோரால் உணவின்றி 10 நாட்கள் சுலபமாய் சமாளித்திருக்க முடியும். பட்டினி என்பது ஒரு பண்பாட்டு கட்டமைப்பு மட்டுமே.

உணவருந்தாத போது உடல் சில ஹார்மோன்களை சுரந்து நமக்கு பசி உணர்வை ஏற்படுத்தும். ஆனால் அப்போது உங்கள் ரத்த சர்க்கரையை சோதித்துப் பார்த்தால் கச்சிதமாய் இருக்கும். தலைசுற்றுவது போல ஒரு உணர்வு வரும், ஆனால் உடம்பு செயல்படுவதற்கான தேவையான கலோரிகளை உடம்பு உற்பத்தி பண்ணிக் கொண்டு தான் இருக்கும். நம்மை உணவைத் தேட வைக்கும் பொருட்டு உடல் இப்படியான பொய்த்தோற்றத்தை அளித்து தவிக்கச் செய்யும். அரைமணிநேரம் தான், அதைக் கடந்து விட்டால் பசி இருக்காது. மீண்டும் 2-3 மணிநேரங்கள் கழித்து பசிக்கும். அப்போது கவனத்தை திருப்பிக் கொண்டால் பசி நடையைக் கட்டும். இது நமது மொபைல் போன் Wi Fi தொடர்பு இல்லாத போது விடாமல் அருகில் உள்ள இணைய தொடர்புகளை தேடி அலசுவதைப் போன்றது. அலசி விட்டு நம் வீட்டு அழைப்பு மணியை அடித்து விளையாடும் அண்டை வீட்டுக்கு குழந்தைகளைப் போல பசி வந்து வந்து நம்மை சீண்டும். அது நம்முடன் விளையாடுகிறது என்பதை உணர்வது அப்போது அவசியம்.

 உணவு என்பது அன்றாடத் தேவை அல்ல - இதை உணர்ந்து கொண்டு தான் உணவற்ற நாட்களுக்காக நம் உடல் மிகவும் தயாராக இருக்கிறது. நம் உடல் எப்போதுமே தேவைக்கு அதிகமான கொழுப்பை சேமித்து வைக்கிறது. வெள்ளப்பெருக்கின் போது அரசாங்கம் உணவுப்பொட்டத்தை வழங்கும் என உடல் எதிர்பார்ப்பதில்லை. 40-50 நாட்களுக்கான ஆற்றல் மிக்க உனவுப் பொட்டலங்களை நம் உடலுக்குள்ளே சதா வைத்திருக்கிறோம். இந்த பொட்டலங்களை நாம் உடம்பிடம் இருந்து பறிக்க முயன்றால் அதை உடம்பு ஏற்காது, முரண்டு பிடிக்கும், மறுக்கும். இதைத் தான் எடை குறைப்பு ஆய்வில் set point (நிர்ணயிக்கப்பட்ட எடை) கோட்பாடு என்கிறார்கள்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...