முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பின்நவீன விமர்சனத்தின் முரண்கள்


சுரேஷ் குமார் இந்திரஜித்துடனான இந்த சுவாரஸ்யமான, முக்கியமான இலக்கிய உரையாடல் காணொளி இலக்கிய வாசகர்கள் நிச்சயம் காண வேண்டிய ஒன்று


இதன் மையம் என இலக்கிய பிரதிகளை மதிப்பிடுவதன் சிக்கல் என சொல்லலாம். ஒரு அனுபவம் எப்போது இலக்கிய படைப்பாகிறது, ஒரு வரலாற்று இனவரைவியல் பிரதி அதனளவில் இலக்கியமாகுமா, ஆகாதெனில் எது ஒன்றை இலக்கியமாக்குகிறது, ஒரு செவ்வியலக்கிய பிரதியை எப்படி வரையறுப்பது, அதன் அலகுகள் என்ன என்பதான கேள்விகளே மீள மீள எழுந்தன. சுரேஷ்குமார் இந்திரஜித் குறித்து இரு விசயங்கள் தோன்றுகின்றன.

1) அவர் மொழி அளவில் ஒரு பின்நவீன கதைசொல்லியாக இருந்தாலும் ஒரு விமர்சகராக ஒரு நவீனத்துவவாதி. அதுவும் அவரது இலக்கிய கருத்துக்கள் நமக்கு கா..சுவையும் நிச்சயமாக சு.ராவையும் அதிகம் நினைவுபடுத்துகின்றன. உதாரணமாக, .நா.சு ஒரு படைப்பை இலக்கியம் என தன் உள்ளுணர்வின் அடிப்படையில், தன் ரசனையின் தடத்தில் ஓடோடிப் போய் கொடி நாட்டி காண்பிப்பார். அது அவர் மட்டுமே தனித்து ஓட முடிகிற வழித்தடம். அதில் அவரது உலக இலக்கிய வாசிப்பு, புரிதல், ரசனை உணர்வு ஆகியவை தான் அளவுகோல். அதை இன்னொருவர்பார்க்கமுடியாது. ஆகையால் .நா.சு தன் தேர்வை தர்க்கரீதியாக நிறுவாமல் நேரடியாக பிரதியின் பகுதி ஒன்றை அளித்து விட்டு விளக்க முயலாமல் “நீங்களே படிச்சு தெளிடைந்து கொள்ளுங்கள்என பொறுப்பை ஒப்படைத்து விட்டு கழன்று கொள்வார். தமிழில் அபிப்ராயங்கள் விமர்சனமாக, பட்டியலிடுவது இலக்கிய செயலாக இப்படித் தான் உருப்பெற்றது. தமிழ் நவீன இலக்கிய திறனாய்வை பொறுத்தமட்டில் இதுவே ஒரு வலுத்த பாணியாக பின்னர் உருவானது. சி.மோகனையும் சு.ராவையும் உதாரணமாக சொல்லலாம். சு.ரா வண்ணதாசனின் கதைகூறலை விமர்சிக்கும் போது அது ஒரு இலக்கிய அனுபவமாக உருப்பெறவில்லை, எழுத்தாளனின் பார்வையாக மட்டுமே இருக்கிறது எனச் சொன்னார். “இலக்கிய அனுபவம்என்றால் என்னவென நீங்கள் அவரிடம் கேட்டால் துல்லியமாக சொல்ல மாட்டார். நான் தொண்ணூறுகளில் சு.ராவிடம் இத்தகைய கேள்விகளை எனக்கு பிரியமான இலக்கிய பிரதிகளை வைத்து விவாதிக்கிறேன். அவர் எந்த ஒரு நிலைப்பாட்டையும் தர்க்கபூர்வமாக நிறுவ மாட்டார். அவர் தரப்புக்கு நீங்கள் எதிர்தரப்பை எடுத்தால் மௌனம் கொள்வார். அவ்வளவு தான். இந்த பாணியானஉள்ளுணர்வுவிமர்சனத்துக்கு, தன்னிலையை அறிவுத்தரப்பாக நம்பும் பாணிக்கு எதிராகத் தான் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் கோட்பாட்டு விமர்சனம் ஒரு பெரிய அலையாக தோன்றியது. ஆனால் தமிழில் அந்த அலை நிலைக்கவில்லை. நாம் இன்றும் தத்துவார்த்தமாக இலக்கிய விவாதங்களை எடுத்துச் செல்வதை விரும்புகிறவர்கள் இல்லை. தலித் விமர்சனம் போன்ற அரசியல் இலக்கிய விமர்சகர்கள் மட்டும் தான் இலக்கியத்தை அறிவார்த்தமாய் எதிர்கொள்ள விரும்பினார்கள்; அவ்வாறு விமர்சன முறையை வகுத்தார்கள். ஆனால் இலக்கிய விமர்சனத்தின் மையத்தில் இன்றும் எரிவது ரசனை விமர்சனம் எனும் ஜோதி தான்

(2) பின்நவீனத்துவத்தை பொறுத்தமட்டில் பிரேம், ரமேஷ் போன்றோர் கோட்பாட்டு மொழியில் இலக்கியத்தை எதிர்கொள்ள, சாரு நிவேதிதிதாவும் சுரேஷ் குமார் இந்திரஜித்தும் .நா.சுவின், சு.ராவின் ரசனை விமர்சன பாணியிலே பின்நவீன படைப்புகளை விமர்சிக்க முயல்கிறார்கள். சாருவிடம் நீங்கள் எது இலக்கிய பிரதி எனக் கேட்டால் சில லத்தீன் அமெரிக்க படைப்புகளை பட்டியலிட்டு இதன் அடிப்படையில் என பதிலிறுப்பார். சாரு கலைத்துப் போடுதலை கலாச்சார அடிப்படையில் பார்த்தால் சுரேஷ்குமார் இந்திரஜித் (வெகு சிக்கலாக) ரசனை விமர்சன பாணியில் ஆனால் பின்நவீன நம்பிக்கைகளை கலந்து இதைப் பேசுகிறார். ஒரு நல்ல படைப்பு கலை அனுபவமாக அமைய வேண்டும் என அவர் சொல்லும் போதே கலை என்றால் என்ன என்பதான கேள்விகளை தன்னிடம் எழுப்பக் கூடாது என கோருகிறார். கலையை விளக்க முடியாது, அதை அனுபவ ரீதியாக உணரவே முடியும் என்பது வெறும் ரசனை விமர்சன நிலைப்பாடு மட்டும் அல்ல, அதுவே நமது ஆன்மீக மரபும். பாம்பு கயிறாகலாம், கயிறு பாம்பாகலாம், ஆனால் கயிறுகடித்துயாரும் சாக முடியாது என அத்வைதிகள் சொல்வார்கள். ஆக வாழும் அனுபவம் என்பதே இறையை உணரும் ஒரே மார்க்கம், வாழ்தலை முழுக்க துறக்க முடியாது என அவர்கள் மாயை கோட்பாடு பற்றின நீண்ட தத்துவ சர்ச்சைகளின் போது கோரினார்கள். .நா.சுவைப் போன்றவர்கள் இந்த வாழ்தலை வாசித்தலாக மாற்றி பார்த்தார்கள்; இறையை அடைவதை கலையனுவத்தை அடைவதாக இடமாற்றி வைத்தார்கள். பல நூறு வருடங்களுக்குப் பிறகு நாம் ஒரு பின்நவீன விமர்சகரின் மொழியிலும் இந்த அத்வைத தரப்பையே பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. மாட்டுவண்டியில் போனாலும் சரி புல்லட்டில் போனாலும் சரி நம்வழித்தடம்ஒன்றே தான்

வெறும் வரலாறு இலக்கியமாகுமா என ஒரு வாசகர் கேட்கும் போது அதில் எதிரொலிப்பது கயிற்றை பாம்பென ஒருவர் பார்த்தால் அது நிஜமா பொய்யா எனும் அதே கேள்வி தான். அதை மிதித்தால் மட்டுமே (கடிபட்டதும்) அறிந்து கொள்ளலாம் என சுரேஷ்குமார் இந்திரஜித் சொல்கிறார்.

செவ்வியல் பிரதியின் அலகுகள் எவை, ஏன் கி.ராவை பின்நவீன படைப்பாளியாக காண முடியவில்லை, அவரை இலக்கிய வரிசையில் வைத்துக் காண்பதில் உள்ள தனது சிக்கல்கள் என்ன என்பதை அவர் இன்னும் தெளிவாக கோட்பாட்டு ரீதியாக விளக்கியிருக்க முடியும் என்றே தோன்றுகிறது. பதில்களை அவர் உணர்கிறார், ஆனால் அதை தத்துவார்த்தமாக முன்வைக்கும் மொழியை அவர் இன்னும் பயிலவில்லை என்பதால் சொல்லாமலே முடித்து விடுகிறார்.

பபாசி இத்தகைய இலக்கிய பேச்சுகளை ஒருங்கிணைக்கும் போது அதை ஒரு சினிமாத்தனமான ஆரவாரமாக மாற்றி சீர்குலைத்து விடுகிறது. நாம் பபாசியுடன் மோதுவதில் அர்த்தமில்லை. இன்றைய இணைய சமூக வலைதள தொடர்பாக்கத்தை பயன்படுத்தி பல்லாயிரம் வாசகர்களுக்கு இலக்கிய உரையாடல்களை, பெரிய உள்கட்டமைப்புகள் எதுவும் இன்றியே, கொண்டு சேர்க்க முடியும் என மனுஷ்யபுத்திரன் நிரூபித்திருக்கிறார். இதை ஏற்கனவே வாசக சாலை போன்ற அமைப்புகள் தொடர்ந்து நிகழ்ச்சி நேரலைகளில் செய்திருந்தாலும், ஒரு புத்தக கண்காட்சி அரங்கில் மனுஷ் இதை தொடர்ந்து செய்வது பாராட்டத்தக்கது. இந்த விவாதத்திலும் அவரது குறும்புத்தனமான கேள்விகள் நல்ல குறுக்கீடுகளாக இருந்தன.

தொடர்ந்து செய்யுங்கள்! சில இலக்கியவாதிகளைப் போல லாபி செய்தும் அரசியல் பண்ணியும், நிஜத்தில், இலக்கியத்தை காப்பாற்ற முடியாது. இத்தகைய உரையாடல்களே தீவிர இலக்கியம் எனும் தழலை தொடர்ந்து அணையாமல் வைத்திருக்கும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...