முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Plop: Notes on Heidegger நூல் வெளியீடு - சில குறிப்புகள் (1)


Plop: Notes on Heidegger நூல் வெளியீடு இன்று கிரைஸ்ட் பல்கலைக்கழக அரங்கு ஒன்றில் நடந்தது. பல்கலைக்கழக பதிவாளர், துறைமுதல்வர், சக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நூலாசிரியர் மூவரான நாங்களும் கலந்து கொண்டோம். நூலை பதிவாளர் திரு. அனில் பிண்டோ வெளியிட துறை முதல்வர் திரு. ஜான் ஜோசப் கென்னடி வாங்கிக் கொண்டார். துறை முதல்வர் சுருக்கமாக வாழ்த்தி பேசி அமர்ந்தார். அடுத்து, தத்துவ அறிஞரும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் விட்ஜென்ஸ்டைன் பற்றி முனைவர் பட்டம் முடித்தவரும் அதே தலைப்பில் முக்கிய தத்துவ நூல் ஒன்றை எழுதியவருமான ஜோஸ் நந்திக்கரா சிறப்புரை வழங்கினார். நூலின் முக்கியத்துவம், அதன் நிறை, குறைகள் அனைத்தையும் விரிவாக சுவாரஸ்யமாக அவர் விவாதித்தது பார்வையாளர்களை கவர்ந்தது. இறுதியாக நூலின் ஆசிரியர்களான நேஹா அகர்வால் மற்றும் ஆயுஷ் தமது எழுத்தனுபவம், நூல் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இறுதியாக நான் அனைவருக்கும் நன்றி தெரிவித்தேன்.


எங்கள் மூவருக்கும் இது உணர்ச்சிகரமான, ஆழமாக நிறைவளிக்கும் ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது. நான் ஏற்கனவே 22 நூல்களை வெளியிட்டிருக்கிறேன். ஆனால் ஆயுஷுக்கும் நேஹாவுக்கும் இது முதல் புத்தகம். அது போக, கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் பல்கலைக்கழகத்திலும் வெளியிலும் தொடர்ந்து சந்தித்து தத்துவ நூல்களை விவாதித்து வந்துள்ளதன் ஒரு உச்சமாக இந்த புத்தகம் அமைந்துள்ளது. உரையாடல், அரட்டை, பரஸ்பர கரிசனம் என வளர்ந்த எங்களது உறவின் சின்னமாகவும் Plop நூல் உள்ளது. கடந்த வருடத்தின் துவக்கத்தில் நான் ஆயுஷிடம்நாம் ஜெர்மனிய தத்துவ அறிஞர் ஹைடெக்கர் குறித்து ஒரு நூல் எழுதுவோம். அதற்காக அவரது நூல்களை மட்டுமே இனி உன்னிப்பாக வாசித்து விவாதிப்போம்என சொன்ன போது என் நோக்கம் எங்களது அறிவார்ந்த பரிவர்த்தனைகளுக்கு ஒரு நினைவுச்சின்னமாக ஒரு புத்தகம் வெளியிட வேண்டும் என்பதாகவே இருந்தது. அது ஆயுஷுக்கு இறுதி வருடம். பல நல்ல நட்புகள் காற்றில் கரைந்து போயுள்ளதை நான் கண்டிருக்கிறேன். நம் நினைவில் ஒரு இனிய அத்தியாயமாக மட்டுமே உறவாடல் இருந்தால் போதாது, அதையும் தாண்டி மக்களுக்கு பயன்படும் ஒன்றாக எங்கள் உறவு அமைய வேண்டும், அதற்கு ஒரு புத்தகம் வெளியிடுவதே சிறந்த வழி என நான் நம்பினேன்.

ஆயுஷை எப்படி முதலில் சந்தித்தேன், எப்படி ஒரு தத்துவ வாசிப்பு குழுவை நாங்கள் தோற்றுவித்தோம், எப்படி நேஹா எங்கள் குழுவில் இணைந்தார், அதில் இருந்து எப்படி இந்த நூல் விளைந்தது என்பதை நான் சுருக்கமாக இங்கே சொல்லியாக வேண்டும்

இயல்பியல், கணிதம் படிக்கும் முதல் வருட மாணவர்களுக்கு நான் ஆங்கிலம் கற்பித்து வந்தேன். அந்த மாணவர்களில் ஒருவனே ஆயுஷ். ஆனால் நான் அவனை வகுப்பில் சரியாக கவனித்ததில்லை; மிக அமைதியாக, கிட்டத்தட்டமறைந்தே”, இருப்பான் அவன். அந்த வகுப்பில் ஒருமுறை எதேச்சையாக நான் சாக்ரடீஸின் Dialogues நூலைப் பற்றி பேசினேன். அன்று வகுப்பு முடிந்த மதிய இடைவேளையின் போது ஆயுஷ் என்னைப் பார்க்க வந்து தனக்கு எழுதுவதில் விருப்பம் என்றான். பின்னர் அடிக்கடி என்னை வந்து பார்க்கும் அவன் எழுதுவதை எனக்கு காண்பிப்பான்
ஆரம்பத்தில் பொதுவான ஏதாவது ஒரு கருத்தை ஒட்டி அவன் எழுதிய குறிப்புகளாக அவை அமைந்திருந்தன. நான் என் பொதுவான கருத்துக்களை தெரிவிப்பேன். என் தரப்பில் இருந்து ஏதாவது ஒரு கேள்வியை எழுப்பி விவாதிப்பேன். .தா., அயன் ராண்ட் ஆயுஷுக்கு அப்போது பிடித்தமான சிந்தனையாளர். என்னால் ராண்டுடன் ஒப்ப முடியாத இடங்களை நான் பின்னர் தீராநதியில் ஒரு கட்டுரையாக வெளியிட காரணம் ஆயுஷுடன் அந்த காலகட்டத்தில் நடந்த தொடர் விவாதங்கள் தாம். அவனுடன் உரையாடும் போதெல்லாம் ஏதாவது ஒரு சவாலை எழுப்புவான். அதற்கு பதில் அளிக்க நான் சிந்திப்பேன், சிந்தித்ததை வைத்து எழுதுவேன். அதன் பிறகு நாங்கள் எங்கள் சந்திப்புகளை ஏதாவது ஒரு தத்துவ நூலை வாசிப்பதற்கு என வைத்துக் கொண்டோம். பெரும்பாலும் ஜெர்மானிய தத்துவ அறிஞர்களையே வாசித்தோம். நீட்சேயில் தொடங்கி ஹைடெக்கரில் வந்து சேர்ந்தோம். இந்திய அறிஞர்களில் ஜெ. கிருஷ்ணமூர்த்தியை படிக்க தொடங்கி அங்கிருந்து பகவத் கீதை, நாகார்ஜுனரின் மூலமத்தியாமிக காரிகை வரை வந்தோம்.
 நாங்கள் எப்போதும் தத்துவ அறிஞர்கள் அல்ல, வெளிநபர்களே என அடிக்கடி எங்களுக்கே நினைவுபடுத்திக் கொள்வோம். அது இந்த வாசிப்ப்பையும் விவாதங்களையும் உற்சாகமாக, நெருக்கடியற்று வைத்திருக்க உதவியது. எங்கள் வாசிப்பும் விவாதமும் இருவரது பொதுவான எழுத்தை வளமாக்கினாலும், தத்துவத்தில் வேரூன்றி நாங்கள் எழுத துவங்கியது ஹைடெக்கர் நூலை திட்டமிட்ட போது தான்
இந்த பருவத்தில் ஆயுஷ் மனதளவில் மிகவும் முதிர்ந்திருந்தான். குறிப்பாக ஒரு ஜெயின் ஆலயத்தில் நடந்த இரு வார பேசாநோன்பு பயிற்சிக்குப் பின் திரும்பிய பின் அவன் மிகவும் மாறிப் போயிருந்தான். அவனது எழுத்திலும் பேச்சிலும் அப்படி ஒரு தீர்க்கம், ஆழம். அவன் இப்போது என்னை விட வேகமாய், தொடர்ச்சியாக ஹைடெக்கர் பற்றி எழுதிட அவனுடன் போட்டியிடும் மும்முரத்தில் நானும் ஆங்கிலத்தில் அதிகமாக எழுத தொடங்கினேன். இந்த எட்டு மாத காலம் தமிழில் என் எழுத்து சற்றே பின்தங்கியது, நான் தமிழில் பிரசுரிப்பதும் குறைந்து போனது; ஆனாலும் நாம் இந்த கட்டத்தை மிகவும் ரசித்தேன்.


இதன் பிறகு பல்கலைக்கழக விவாத நிகழ்வு ஒன்றில் நான் தத்துவம் பற்றி பேசினேன். குறிப்பாக சக்கர நாற்காலியில் பயணிக்கும் என் சுயமும் பைக்கை ஓட்டும் போது தோன்றும் சுயமும் எப்படி இருவேறாக இருக்கிறது, என் இருப்பு அப்போது எவ்வாறு உருமாறுகிறது, சிலநேரம் எப்படி ஒன்றை மற்றொன்றாக கருத நேர்கிறது என ஒரு உளவியல் பார்வையை ஹைடெக்கரின் தத்துவத்தின் அடிப்படையில் முன்வைத்தேன் (இது பின்னர் Plop நூலில் ஒரு அத்தியாயம் ஆனது). இதன் பிறகே தத்துவத் துறையை சேர்ந்த நேஹா என்னை சந்தித்து உரையாடினார். அதன் பிறகு ஒரு நாள் மதிய உணவுக்கு போய்க் கொண்டிருக்கும் போது பல்கலை வளாகத்தில் நேஹாவை எதேச்சையாய் சந்தித்தேன். “நாங்கள் ஹைடெக்கர் வாசிப்பு குழு என ஒன்றை நடத்துகிறோம். நீங்கள் ஏன் அதில் கலந்து கொள்ளக் கூடாது?” எனக் கேட்டேன். அப்படி ஒரு குழுவே நிஜத்தில் இல்லை. நானும் ஆயுஷும் சந்தித்து வாசிப்பதையே நான் போகிற போக்கில் அப்படி பெயரிட்டு அவரிடம் குறிப்பிட்டேன். நேஹா மிகுந்த ஆர்வத்துடன் எங்கள் கூட்டங்களில் கலந்து கொண்டார். தோன்றும் போதெல்லாம் சந்தித்தும் வாசித்தும் வந்த நாங்கள் இப்போது மூவரான பிறகு ஒரு ஒழுங்குக்குள் வந்தோம். மதியம் ஒன்றில் இருந்து இரண்டு வரை தினமும் வாசிப்பது என முடிவெடுத்தோம். நேஹாவின் பங்களிப்பு, கருத்துக்கள், அபரித ஆற்றல் சட்டென ஒரு வெளிச்சத்தை எங்களதுஹைடெக்கர் வாசிப்பு குழுவுக்குகொண்டு வந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...