முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ராகுல் காந்தி குறித்த ராமசந்திர குஹாவின் கேலிகள்



கேரளாவில் லிட் பெஸ்டிவலில் ராமசந்திர குஹா ராகுல் காந்தி பற்றி சொல்லி உள்ள கருத்துக்கள் பித்துக்குளித்தனமானவை - நடுநிலையாகப் பேச வேண்டும் என முடிவு பண்ணிக் கொண்டு அவர் அறத்தில் இருந்து பிறழ்ந்து பேசி இருக்கிறார்; ராகுலை தேர்தலில் ஜெயிக்க வைத்து நீங்கள் பெரிய தப்பு பண்ணி விட்டீர்கள் என அவர் கேரளத்து மக்களிடம் சொல்லி இருக்கிறார். ராகுல் அறிவுத்திறன் குறைந்தவர், சோம்பேறி, சதா வெளிநாட்டுப் பயணங்களில் இருக்கிறவர் என சாடி இருக்கிறார்
 காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியல் கண்டனத்துக்கு உரியது என குஹா நினைக்கலாம்; ஆனால் அதை விட பாசிசத்தின் பேயாட்டம் நம்மை அழிவை நோக்கி இட்டுச் செல்கிறது என்பதே பெரிய பிரச்சனை. குஹா இப்போது பின்னதற்கு முன்னதை பொறுப்பாக்குகிறார்; குடும்ப அரசியல் எனும் அவலமே நம்மை மோடி எனும் பாசிசஸ்டை நோக்கி இட்டுச் சென்றது என்கிறார்.


 உண்மை அது அல்ல - பாசிச கூறுகள் நமது அரசியல் கடந்த மூன்று பத்தாண்டுகளாகவே இருந்து வந்துள்ளன. இன்று நாம் காணும் இந்துத்துவ பாசிசத்துக்கும் நவதாராளவாத பொருளாதாரத்தின் பெரும் எழுச்சிக்கும் ஒரு கன்ணுக்குப் புலனாகாத தொடர்பு உள்ளது. மக்கள் பெரும் திரளாக நகரங்களை நோக்கி படையெடுக்கும் ஒரு பொருளாதார சூழல் ரெண்டாயிரத்துக்குப் பின்பு ஏற்பட நகரங்களை மையமிட்டு ஒற்றை அடையாள அரசியலை முன்னெடுக்கும் இந்துத்துவம் எழுச்சி பெறுவது ஒரு ஆச்சரியம் அல்ல (ஆஷிஸ் நந்தி இதைப் பற்றி கூறியுள்ளதை நாம் கவனிக்க வேண்டும்). கிராமங்களில் யாருக்காவது கடும் மனச்சோர்வு ஏற்பட்டு விபரீதமாக நடந்து கொண்டால் அவரை பேயடித்து விட்டது என முன்பு சொல்லுவார்கள். அப்படியான ஒரு கற்பனைப் பேயைத் தான் குஹா இப்போது ராகுல் காந்தியின் வடிவில் உருவாக்குகிறார்
இது அவர் நேற்று ஏதோ புதிதாக சொன்ன விசயம் அல்ல; அண்மைக் காலமாக அவர் பத்திரிகைகளிலும் இந்த கோணத்திலே காங்கிரஸை தாக்கி வருகிறார்; குஹா இந்த விமர்சனத்தை சமப்படுத்த காந்திய காங்கிரஸ் யுகத்தின் ஒரு லட்சிய நிலையைப் பற்றி பேச விரும்புவார். நேருவுக்கு இன்று அதிகம் பழி வருவதற்குக் காரணமே அவரது குடும்பத்தினர் வம்சாவளியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி வைத்திருப்பது தான் என அவர் சொல்லுவது இதற்கு ஒரு சான்று. இந்த வாதமே அபத்தமானது. ஏனென்றால் நேரு பழிக்கப்படுவது பொதுமக்களால் அல்ல, வலதுசாரி சங்கிகளால். அவர்கள் நேருவின் உயிருடன் இருந்த போது கூட அவரை வசைபாடித் தான் கொண்டிருந்தார்கள். அவர்கள் காந்தியும் கொல்லப்பட வேண்டியவர் என்றும் தான் கூறினார்கள். அதை நீங்கள் எந்த குடும்ப அரசியலை வைத்து நியாயப்படுத்துவீர்கள் குஹா என கேட்கத் தோன்றுகிறது. காந்தியும் நேருவும் இந்துத்துவ அரசியலின் எதிரிகள் என்பதே அவர்கள் தொடர்ந்து கரித்துக் கொட்டப்படுவதன் காரணமே அன்றி சோனியா காந்தியோ ராகுல் காந்தியோ அல்ல என்பது ஏன் குஹாவுக்குப் புரியவில்லை?
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை காங்கிரஸ் நேரடியாக களத்தில் நின்று வழிநடத்தாதது நல்லதே என இப்போது படுகிறது; அது மக்களின் தன்னிச்சையான எழுச்சியாக அமைந்ததனால் தானே பாஜகவால் அதை எதிர்க்கட்சிகளின் சதி என சுலபத்தில் கடந்து போக முடியாமல் போனது. ஜெ.என்.யூவில் மாணவர்கள் தாக்கப்பட்ட போதும் ராகுலோ சோனியாவோ நேரடியாக களத்தில் இறங்கிப் போராடவில்லை - இது தவறு என அந்த சந்தர்பத்தில் எனக்குத் தோன்றியது என்றாலும் காங்கிரஸ் அப்படி செய்திருந்தால் அதை பாஜக எதிர்க்கட்சியின் தேசவிரோதப் போக்கு என திசை திருப்பி இருப்பார்கள் என்பது எதார்த்தம். (மற்றொரு பக்கம் காங்கிரஸ் தலைவர்கள் பாராளுமன்றத்திலும் வெளியிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பரவலாக பேசியும் எழுதியும் வருகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.)  


பெங்களூரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்த போது குஹா அதில் கலந்து கொண்டு பெற்ற நன்மதிப்பை இப்போது இழந்து விட்டார்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...